Wednesday, 1 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (3/14)

 

அதிகாரம் 3 : போரின் குழந்தை

பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.

”உனது பெயர் லோம் தானே?”

அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.

“இல்லை!”

அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

“அப்ப உனது அப்பாவின் பெயரா அது?”

“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது?”

“வான் மான் நூஜ்ஜின்.”

“அவன் சொல்லுற எதனையும் கணக்கில் எடுக்காதே! அவன் உனக்கு கெட்ட வார்த்தைகள் சொல்லித் தருகின்றான்.”

சிறிது நேரம் இருவருக்குமிடையில் உரையாடல் நடக்கவில்லை. பின் அவளே பேச்சைத் தொடக்கினாள். புதியதோர் அறிமுகம் அவர்களுக்கிடையே நிகழ்ந்தது.

அவள் நந்தனுக்கு தனது பிறப்பின் இரகசியம் ஒன்றையும் சொன்னாள். 1972 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி பிறந்த அவளின் பதிவு, போர்ச்சூழல் காரணமாக 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதியப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அவள் ஆறுமாதம் பின்னாடி பிறந்திருக்கின்றாள். போரினால் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் மாற்றப்பட்ட சாதகம் அவளுடையது.

“அப்போ நீ போரின் குழந்தை” என்றான் நந்தன். அவள் ‘யா’ என்று சிரித்தாள்.

மறுநாள் நூஜ்ஜின் சிரித்தபடி நந்தனிடம் வந்தான். புங் தன்னைச் சந்தித்ததையும், கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொன்னான். போகும்போது நந்தனின் காதிற்குள் மெதுவாக ‘பூலோம்’ என்ற கெட்ட வார்த்தையைச் சொல்லிவிட்டுப் போனான். தூரத்தே நந்தனும் நூஜ்ஜினும் கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றாள் புங்.

‘பூலோம்’ என்றால் வியட்நாம் மொழியில் பெண்களின் ஒரு உறுப்பைக் குறிக்கும் (vaginal orifice -  l âm đạo) கெட்ட வார்த்தை.

கெட்ட வார்த்தைகள் அத்தனைக்கும், ஒருசில நல்ல வார்த்தைகளுக்கும் -அங்குள்ள அத்தனை மொழிகளிலும் எல்லோருக்கும் அத்துப்படி தெரியும். ஒவ்வொரு மனிதருக்கும் பொருத்தமாக அவரவர் மொழிகளில் ‘ஐ லவ் யு’, ‘நீ வடிவாக இருக்கின்றாய்’ போன்ற சொற்களைச் சொல்லி ‘ஐஸ்’ வைக்கும் விளையாட்டும் அங்கு நடக்கும்.

நிறைய வியட்நாமியர்கள் அங்கு வேலை செய்வதால், அவளுக்கு அவர்களுடன் கதைப்பதற்கே நேரம் போதாது. நந்தனுடன் வேலை செய்யும்போது மாத்திரம் கதைப்பாள். ஒரு கிழமைக்குள்ளாகவே அவளின் பூர்வீகம், அவளின் கணவனின் பூர்வீகம் எல்லாம் அறிந்து கொண்டான் நந்தன். கூடவே நந்தனைப் பற்றியும் அவள் கிழறி எடுத்துக் கொண்டாள்.

அவள் நந்தனுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாள்.

மெல்லிய பூனைக் கண்கள். பழுப்பு நிறக் கூந்தல் இரண்டு பாம்புகள் போல கீழே இறங்கி மார்புகளைத் தழுவிக் கிடக்கும். காலில் சக்கரம். சும்மா ஒரு இடத்தில் நிற்க மாட்டாள். ஒரு அழகிப் போட்டியில் பங்குபற்றக் கூடியளவிற்கு அழகி அல்ல என்றாலும் அழகிதான். அவளின் இயற்கை அழகைவிட அவள் காட்டும் செயற்கை நளினம் பேரழகு.

அவர்களின் சாப்பாட்டு அறைக்குள் இரண்டு மைக்ரோவேவ்கள் இருந்தன. குறூப்பில் இருக்கும் 18 பேருக்கும் அவை போதாமல் இருந்தன. அரைமணி நேரம் மதியபோசனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஒருநாள் நந்தனுடைய உணவையும் சேர்த்து, தன்னுடையதுடன் கூடவே சூடுகாட்ட வைத்தாள் புங்.

“இல்லாட்டி லஞ் முடியத்தான் நீ சாப்பிடத் தொடங்குவாய்” என்று சொன்னாள் புங். அவளின் இந்த விவேகத்தை நந்தனின் மனம் மெச்சியது. அது ஏன் அடுத்தவரின் உணவுடன் இல்லாமல் தன்னுடன் விளையாடுகின்றாள்? இந்த விளையாட்டு பின்னர் தினமும் தொடர்ந்தது. விட்டால் சாப்பாட்டையும் நந்தனுக்கு ஊட்டிவிடுவாளோ?

மெல்ல மெல்ல நட்புடன் அவளுடன் பழகத் தொடங்கினான் நந்தன்.

அவர்கள் குறூப்பில் ஆச்சிமா என்றொரு கிறீக் நாட்டுப்பெண் இருந்தாள். அவள் போட்டி, பொறாமையின் மொத்த உருவம். அவளுக்கு புங்கும் நந்தனும் ஒன்றாகப் பழகுவது விருப்பம் இல்லை. ஆச்சிமா அங்கு பத்து வருடங்களாக வேலை செய்கின்றாள். அங்கு அவள் சேர்ந்த நாளில் இருந்து அல்பேற்றோவுடன் கள்ளத் தொடர்பில் இருக்கின்றாள். அல்பேற்றோ ‘பிறைமர்’ பகுதியில் ரீம் லீடராக இருக்கின்றான். ஆச்சிமா கிட்ட வந்தால் கூவம் தோற்று ஓடிப் போய்விடும். அப்படிப்பட்ட ஆச்சிமாவைத் தேடி ஆலாய்ப் பறக்கின்றான் அல்பேற்றோ. ஆச்சிமாவும் அல்பேற்றோவும் திருமணம் செய்து தத்தமது குடும்பம், பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டு, இப்படியான திருவிளையாடல்களும் செய்கின்றார்கள்.

புங்கிடம் ஒரு கெட்ட பழக்கவழக்கம் உண்டு. ஒருபோதும் நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டாள். கடைசி நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க வந்து நிற்பாள். ஆனாலும் உடனடியாகவே தனது வேலையை ஆரம்பித்து விடுவாள். கால அவகாசம் அவளுக்குத் தேவைப்படுவது கிடையாது. அரைமணி நேரம் முன்பதாகவே வேலைக்கு வந்தவர்கள் ஆடி அசைந்து வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவள் பாதி வேலையை முடித்துவிடுவாள்.

பிறைமர் குறூப்லீடர் மக்காறியோவிற்கு 35 வயதிருக்கும். அவன் பிறைமரில் 18 வயதாக இருக்கும்போதே சேர்ந்து கொண்டவன். அவன் ஒரு பெண் பிரியன். முறுக்கேறிய உடம்பு. புங் பிந்தி வருவதைப் பார்த்து, அவளை ‘சைல்ட் கயர்’ என்று நக்கல் அடிப்பான். குழந்தைகளைப் பராமரித்து, பகல்வேலை செய்யும் கணவன் வீடு வந்ததும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு வரும் அவளைப் பார்க்க அவனுக்குச் சிரிப்பு வரும். அவனுக்கு புங் மீது ஒரு கண் இருந்தது. கொக்கு மாதிரிக் காத்திருந்தான்.

புங் எப்போதும் சினிமாவிற்கு அல்லது கொண்டாட்டங்களுக்குப் போவது போல வெளிக்கிட்டு வருவாள். ஒருநாள் போட்ட உடுப்பை மறுநாள் காணமுடியாது. சிலநாட்களில் அவளின் உடுப்பைப் பார்க்க வேடிக்கையாகவும் இருக்கும். வேட்டைத்திருவிழாவில் வரும் உருவங்கள் போல, நாடகத்தில் வரும் பபூன் கோமாளி போல அவள் உடைகள் இருக்கும். ஆனால் தொழிற்சாலைக்குள் எல்லோரும் ஒரேவிதமான ஓவரோல் தான் அணிய வேண்டும். பதவிக்குத் தகுந்தமாதிரி வெவ்வேறு நிறத்தில் எல்லாம் இங்கே ஓவரோல் கிடையாது. எல்லோருக்கும் ஒரே நிறம் தான்.

புங் தினமும் விதம்விதமான வாசனைத் திரவியங்கள் பூசி வருவாள். அவளைப் பார்த்து ‘அழகாய் இருக்கின்றாய்!’ என்று சொல்லிவிட்டால் போதும். அவளுக்குப் புளுகம் வந்துவிடும். அவளின் தோடுகள், கண்ணிமைகள், முகம் என்பவற்றைத் தினமும் பார்த்துச் சொல்லிவிடுவான் நந்தன். சொல்லாவிட்டால் சிலமணி நேரம் கழித்து அவளே கேட்டு வைப்பாள்.

“என்னிலை ஏதாவது மாறுதல் தெரியுதா பார்?”

தானே தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கி விடுவாள்.

வேலைத் தலத்தில் இரண்டு தேநீர் இடைவேளைகள், ஒரு மதிய உணவு இடைவேளை உண்டு. இடைவேளைகள் முடிந்து மீண்டும் வேலை தொடங்கும்போது, புதிதாக முகப்பூச்சு, லிப்ஸ்ரிக், வாசனை கொண்டு புத்தம்புது மலராக சில பெண்கள் காட்சி தருவார்கள்.

இலகுவில் எல்லோருடனும் தோழமையுடன் பழகும் புங், அடிக்கடி குறூப்லீடரின் அறைக்குள் சென்று அங்கிருக்கும் ரெலிபோனைப் பாவித்து வந்தாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு சென்று உறவினர்களுடன் நண்பர்களுடன் ரெலிபோன் கதைத்தாள். குறூப் லீடர் அதைப்பற்றி ஒன்றும் சொல்வதில்லை. இரையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாகம் போல காத்திருந்தான் மக்காறியோ.

ஒருநாள் அவள் ரெலிபோன் கதைத்துக் கொண்டிருக்கும்போது, அவளின் பின்புறமாகச் சென்று, அவளின் மார்புகளை அமுக்கிக் கொண்டான் மக்காறியோ. அவள் பாய்ந்து விழுந்து அறையை விட்டு வெளியேறினாள். நேராக யூனியனிடம் சென்று முறையிட்டாள்.

“எங்கே புங்?” என்றபடி அறையைவிட்டு வெளியே வந்தான் மக்காறியோ. அவள் யூனியனிடம் முறையிடச் சென்ற செய்தியை ரீம்லீடர் அல்பேற்றோ சொன்னான். மக்காறியோ அதையொன்றும் பெரிதாய் எடுக்கவில்லை. சிரித்துக் கொண்டே,

“சரியான சின்னன். எறும்பு கடிச்சு வீங்கினமாதிரி இருக்கு” என்றான்.

தொடரும்….

No comments:

Post a Comment