கார்த்திகை, 2024
காத்தப்ப பூலித்தேவன் – துரை அறிவழகன்
பூலித்தேவனின் வீர வரலாற்றுக் காலத்துக்கு எங்களை இழுத்துச்
செல்கின்றது. 1700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாழ்க்கை, பொருநை ஆறு, வாசுதேவ நல்லூர்க்
கோட்டை, யுத்தகளக் காட்சிகள் களிப்பூட்டும் வர்ணனைகள்.
சூப்பர் மார்க்கெட் – கல்பனா சன்யாசி
நகைச்சுவைக் கதை ஒன்றை வாசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஒருவர் தான் செய்தது பிழை என்று உணர்ந்து, திருந்திய போதும் தண்டனை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. துயரமான முடிவு.
மார்கழி, 2024
கொரியர் – எஸ்.எல்.நாணு
இரண்டு கதைகளை ஒன்றுக்குள்
ஒன்றாக முடிச்சாக்கி வைத்திருக்கும் வித்தியாசமான கதை வடிவம். சுந்தரமூர்த்தியும் சாரதாவும்,
மாறி மாறி ஒவ்வொரு அத்தியாயங்களாக வந்து முடிச்சை அவிழ்த்துச் செல்கின்றார்கள்.
பூமரப்பாவை – இராஜலட்சுமி
இதுவும் இரண்டு தடங்களில்
பயணிக்கும் கதைதான். சகாயம் என்ற கெட்டவன் முடிவைத் தீர்மானிக்கும் பாத்திரமாகின்றான்.
ஆசிரியர், வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாத வகைகையில் கதையை நகர்த்திச் செல்கின்றார்.
தை, 2025
குமாரசாமியின் பகல் பொழுது – பிரபஞ்சன் (வைத்தியலிங்கம்)
தனது நண்பர் அடைக்கலசாமியின் இறப்பில் கிடைத்த லீவில், தனது
வாழ்வைத் திருப்பிப் பார்க்கின்றார் குமாரசாமி. பிறந்தவர் சாவது இயற்கை. ஆனால் வாழ்ந்தவர்
சாவதுதானே நியாயம். அந்தக் கோபத்தில் அடைக்கலசாமியின் செத்தவீட்டிற்குப் போவதில்லை
என முடிவெடுக்கின்றார் அவர். வார்த்தைக்கு வார்த்தை அற்புத வர்ணனையில், குமாரசாமியின்
எளிமையான வாழ்க்கை சொல்லப்படுகின்றது.
தாழம் – பாலஜோதி ராமச்சந்திரன்
தாழம் என்ற அரியவகை சுறா ஒன்றினைப் பிடிக்கும் மாலி என்பவனின்
மனவோட்டம் அற்புதம். அப்புறம் அவனின் மனநிலை தடம் மாற, கதை வேறு திசையில் பயணித்து
இன்னொரு தாழத்துடன் இணைகின்றது. வித்தியாசமான கதை.
மாசி, 2025
வீடு – கலைச்செல்வி
காடு, அதுவே அவனுக்கு வீடு.
பெண்டாட்டி, பிள்ளை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். காட்டுக்குள் புதைந்திருக்கும் மாயங்களை
அவிழ்க்கின்றது கதை. அதனால் காடு பற்றிய வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை.
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் – இலக்குவனார் திருவள்ளுவன்
தற்போதைய தொலைக்காட்சித்
தொடரின் போக்குகள் குறித்து நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ள கதை. `திரைக்கதை எழுதுவது
எப்படி?’ என்ற புத்தகத்தை எழுதியவருக்கே திரைக்கதை குறித்து பாடம் எடுப்பது வேடிக்கை.
எதிர்பாராதது – கெளரிசங்கர்
ஏற்கனவே மனைவிமீது கணவன்
சந்தேகம் கொள்கையில், எதிர்பாராத விதமாக அவளது பழைய நண்பன்/காதலன் அவர்களது வீட்டுக்கு
வந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? பெயருக்கேற்றவாறு பல எதிர்பாராததுகள் கொண்ட கதை.
இறுதிப் பகுதி மேஜிக்கல் ரியலிசம்.
ஓவியங்கள் - கிறிஸ்டி நல்லெரத்தினம்
No comments:
Post a Comment