நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு குடியிருக்கும் எலிகள், புதிதாக வந்திருந்த எம்மை வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.
பகல் முழுவதும் வீடு மாறிய களைப்பில் இருந்த எங்களுக்கு,
அவர்களின் ஆரவாரம் எரிச்சலைத் தந்தது. இரவு முழுவதும் உறங்கவிடாமல் அவர்களின் கொண்டாட்டம்
நடந்தது.
எங்களுக்கும் அவர்களுக்குமிடையே இருந்த பொதுவான சுவரைத் தட்டி,
அவர்களைக் கொஞ்சம் சத்தம் போடாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். சிறிது நேரம் அமைதி
காத்த அவர்கள், `கறக்… கறக்’ என்று சுவரைச் சுரண்டி தங்கள் இருப்பை நிலைநாட்டினார்கள்.
மனைவி அவர்களின் பாணியில், தானும் சுவரை விறாண்டி, உள்ளே மூன்று பெரிய எலிகள் இருக்கின்றோம்
எனச் சமிக்கை செய்தார். கொஞ்ச நேரம் பயந்துபோய் இருந்தார்கள். பின்னர் மீண்டும் அவர்கள்
தமது விளையாட்டைத் தொடங்கினார்கள். இரு பகுதியினருக்குமிடையே உக்கிரமான போர் விடியும்
வரை தொடர்ந்தது.
மறுநாள் காலையில், மெல்ரன் கவுன்சிலில் வேலை செய்பவர்களிடம்
தொடர்பு கொண்டு இது பற்றி முறையிட்டேன்.
“மெல்ரன் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்து வந்திருக்கும் உங்களுக்கு
முதலில் எமது வணக்கத்தையும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று ஆரம்பித்த
ஒரு பெண்மணி, “நீங்கள் குடிபெயர்ந்து வந்த இந்தப் பிரதேசம் கங்காருக்கள், எலிகள் போன்றவற்றின்
வாழ்விடம் ஆகும். அந்த விலங்குகளைத் துரத்தி, அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட
நகரம் இது. ஆகையால் நாங்கள் உங்கள் பிரச்சினைக்கு ஒன்றும் செய்வதற்கில்லை” என்று தமது
ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். அவரின் கூற்று, எலிகளுடன் ஒத்து வாழுங்கள் என்று சொல்லுவதுமாப்போல்
இருந்தது.
அன்று பணிங்ஸ் என்ற கடைக்குச் சென்று, பொறிகளையும் எலிகளைக்
கொல்லும் சில விஷ மருந்துகளையும் வாங்கி வந்தோம். அவற்றை எலிகள் நடமாடும் இடங்களில்
பரப்பி வைத்துவிட்டு அன்றிரவு உறக்கத்திற்குச் சென்றோம்.
முதல் நாளைப் போல இரவு ஆரம்பித்ததும் கொண்டாட்டம் தொடங்கியது.
சிறிது நேரத்தில் பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலிகளின் `குய்யோ முறையோ’ சத்தங்கள் கேட்கத்
தொடங்கின. இரவு முழுவதும் எம்மைத் திட்டியபடி அவை அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
சத்தம் கேட்டது.
இரண்டு வாரங்களில் அவை கொத்துக் கொத்தாக பொறிகளில் மாட்டியும்,
விஷ மருந்தை உட்கொண்டுவிட்டு விழுந்து கிடந்ததையும் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
அவற்றைப் பொறுக்கி எறியும்போது மனம் கனத்தது.
அவற்றைக் கொல்லாமல் துரத்துவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா
என மந்திராலோசனை செய்தோம். பூனைதான் ஒரே வழி என நான் சொன்னேன்.
“பூனையா? அடுத்தடுத்த வீடுகளில் தான் நிறையப் பூனைகள் இருக்கின்றனவே”
பூனை வளர்ப்பதில் பிரியமில்லாத மனைவி பதில் தந்தார்.
“இங்கே இருக்கின்ற எலிகள் பூனைகளுக்குப் பயப்படுவதில்லை”
என்று சொன்ன மகன், எங்களைக் கூட்டிச் சென்று முன்வீட்டின் முற்றத்தைக் காண்பித்தான்.
முன்வீட்டு முற்றத்தில் ஒரு கொழுத்த பூனை ஒன்று உறங்கிக் கொண்டிருப்பதையும், அதுக்கு
அண்மையாக சில எலிகள் ஓடித்திரிவதையும் கண்டோம்.
ஒருநாள் இரவு, பூனை போல் மெதுவாகப் பதுங்கி சுற்றுப்புறத்தை
நோட்டம் பார்த்தேன். இரண்டு பக்கத்து வீடுகளில் இருந்தும், வேலிகளுக்குக் கீழாக எலிகள்
எங்கள் வீட்டை நோக்கி படையெடுத்து வருவதையும், எமது வீடுகளில் இருந்த ஒருசிலர் அவர்களுக்குக்
கைலாகு குடுத்து வரவேற்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை
என முடிவெடுத்து, சளைக்காமல் பொறிகளையும் மருந்துகளையும் தொடர்ந்து வைத்து வந்தோம்.
நாளாக எலிகளின் இருப்பு குறைந்ததேயொழிய முற்றாக நின்றுவிடவில்லை.
வீடு மாறி வந்து, பெட்டிகளில் அடிக்கிக் கொண்டு வந்த பொருட்களை
எடுத்து மறுபடியும் அடிக்கி வைக்க இரண்டு மாதங்களாகி விட்டன.
“இதைத் தூக்கி மூண்டுதரம் தலையைச் சுத்திப்போட்டு எறிஞ்சு
விடுங்கோ” என்று சொல்லியபடியே ஒரு நறுமணப் போத்தலைத் (lancome la) தந்தார் மனைவி.
“லங்கம் லா வாசனைத் திரவியம் அது. அட… 150 டொலர்கள் குடுத்து
வாங்கியதல்லவா?”
“உங்களை ஒரு சின்னப் போத்தலாத்தான் நான் வாங்கித் தரச் சொல்லிக்
கேட்டனான். நீங்கள் என்னண்டா வருஷம் முழுக்க வைச்சுப் பூசலாம் எண்டு சொல்லி பெரிசா
வாங்கித் தந்தியள். இது ஒரு பொல்லாத நஞ்சு. இதை அடிச்சுப்போட்டுப் போனா மூச்சுத் திணறுது.
ஆக்கள் எல்லாம் கிட்ட வராமல் ஓடினம்.”
“25 மில்லி லீட்டர் போத்தல் 70 டொலர். 100 மில்லி லீட்டர்
போத்தல் 150 டொலர். பெரிசா எடுத்தா மலிவு எண்டுதான் வாங்கித் தந்தனான். சென்ரை ஒரு
எப்பன் தொட்டு கையிலை ஒரு எல்லுப்போல வைக்க வேணும். நுளம்புக்கு அடிக்கிற மருந்தைப்
போல அடிச்சா மூச்சுத் திணறாம என்ன செய்யும்?”
“உங்கட வேலையிடத்திலை உங்கட நண்பி பூசிக்கொண்டு வாறாள் எண்டு
சொல்லித்தான் எனக்கும் வாங்கித் தந்தனியள். உங்கட பியூட்டி குவீன் ஏன் பூசிக்கொண்டு
வாறவள் எண்டது தெரியுமோ? ஆம்பிளையள் தொல்லை தாங்காமல், நீங்கள் எல்லாம் கிட்ட வரக்கூடாது
எண்டுதான்…”
“எட… நல்ல ஐடியா ஒண்டு சொல்லியிருக்கிறீர். இதை நாங்கள் எலி
வந்து போற இடங்களுக்கு அடிச்சா எப்பிடி இருக்கும்?”
உடனே அந்த திட்டத்தை நிறைவேற்றினேன். `எலிகளின் ராஜ்ஜியத்தில்
லங்கம் லா லா’ என்று பாடிக்கொண்டே, கராஜ் கார்டன்செட் முழுவதும் அந்த பெர்வியூமை சிவிறிவிட்டு
அவற்றின் கதவுகளை உடனே இறுகப் பூட்டிக் கொண்டேன்.
“உதென்னப்பா உங்கட உடம்பு முழுக்க இவ்வளவு நாத்தம் நாறுது.
முதலிலை உங்கட உடுப்புகளைத் தோய்ச்சுப் போட்டு, குளிச்சு முழுகி வீட்டுக்குள்ளை வாருங்கோ.”
சன்னதம் கொண்டார் மனைவி.
இரவானதும் எலிகள் எல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என வீட்டைக்
காலி செய்துவிட்டுக் கிழம்பிப் போவது போன்ற சத்தம் கேட்டது. இரவு பத்து மணிக்குப் பின்னர்
வீடு மயான அமைதி கொண்டது.
காலையில் பார்த்தபோது ஒரு எலி தன்னும் இறந்து கிடந்ததைக்
காணவில்லை. அன்று முதல் எலிகளின் கொட்டம் அடங்கியது.
அடுத்த வாரம் வேலைக்குப் புறப்பட்டபோது, பக்கத்து வீட்டுக்காரர்
புன்முறுவலுடன் என்னை நோக்கி வந்தார். நாங்கள் வீட்டுக்குக் குடியேறிய பின்னர் முதன்முதலாக
சந்திக்கின்றார்.
“என்ன உங்கள் வீடு ஒரே வாசமா மணக்குது?”
வாசம் என்ற சொல்லைக் கொஞ்சம் அழுத்திச் சொன்னது போல் இருந்தது.
அவரிடம் நான் நடந்த கதையைச் சொன்னேன்.
“ஓ… ஹாம்லின் நகரத்து பைபர் கதைபோல் இருக்கின்றதே! அவர் எலிகளைக்
கூட்டிச் சென்று ஒரு ஆற்றுக்குள் இறக்கி விட்டார். நீங்கள் எலிகளை வீட்டை விட்டே துரத்தி
விட்டீர்கள்.”
“நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?”
“நாலைந்து நாட்களாக எங்கள் வீட்டில் ஒரு எலிகளையும் காணவில்லை.
இருபது வருஷத்து தொல்லை நீங்கியது” சொன்ன அவர் அந்த வாசனைத் திரவியத்தின் பெயரை ஒரு
பேப்பரில் எழுதிக் கொண்டார்.
“இனி அந்த வாசனைத்திரவியத்தின் விற்பனை இன்னும் கூடப்போகின்றது”
எனச் சிரித்தபடி, தன்னுடைய வீட்டுக்குச் செல்லாமல் முன் வீடு நோக்கிச் சென்றார் அவர்.
•
No comments:
Post a Comment