Monday, 5 January 2026

சொல்லி வருவது பாதி - முன்னுரை

     



சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டியில் இந்த நாவல் தேர்வாகியிருக்கின்றது. இதுவே அச்சில் வெளிவரும் எனது முதல் நாவல். ஏற்கனவே மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் ஒரு குறுநாவலும் அச்சில் வந்திருக்கின்றன.

`ஒற்றுமையே பலம்’ என்பது ஒரு பழங்கால நீதிக்கதை. அதில் வரும் குச்சிகள் போல இன்று நாம் எல்லாரும் தனித்தனியே பிரிந்து கிடக்கின்றோம். எத்தனையோ வருடங்கள் நாம் அடிமைப்பட்டிருந்தும், அதிலிருந்து பாடம் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. சிலர் பட்டுத்தெளிந்து கண் விழித்தாலும் செய்வதற்கு வழி தெரியாது திகைத்துக் கிடக்கின்றார்கள். நல்லது செய்வதைத் தடுப்பவரும் நம்மவரே. குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை உடைக்க முடியாதபடி வலிமையாக்குவது எப்போது?

இந்தக் கதை,1970/1995 காலப் போர்ச்சூழலில், இலங்கையின் வடபுறத்தேயுள்ள எல்லைக்கிராமமொன்றில் நிகழ்கின்றது. அரச அட்டூழியங்கள், இயக்கங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி இங்கே விலாவாரியாகச் சொல்லப்படவில்லை. நாவலின் நோக்கமும் அதுவல்ல. அதன் பின்னணியில் – கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, சில குடும்பங்களுக்கிடையேயான ஊடாட்டம், குறிப்பாக பெண்களின் கோபதாபங்கள் பிடிவாதம் சூழ்ச்சிகள் என்பவற்றை இணைத்து ஒரு திருமணத்தை சஸ்பென்ஸ் ஆக்கியிருக்கின்றேன். குண்டு வெடிப்பைவிட உறவினர்களிடையே நிகழும் குழப்பத்தின் தாக்குதலை நீங்கள் கடுமையாக உணரக்கூடும். மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவல், மணம் முடித்த தம்பதியினர் புலம்பெயர்ந்து செல்வதோடு முடிந்து விடுகின்றது. வருங்காலத்தில், அதன் நீட்சியாக புலம்பெயர்ந்த நாட்டை மையமாகக் கொண்டு இன்னொரு நாவலும் எழுதும் எண்ணமுண்டு.

நடுவராக இருந்து இந்த நாவலைத் தேர்வு செய்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கும், சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா மற்றும் ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,

கே.எஸ்.சுதாகர்

(அவுஸ்திரேலியா)

kssutha@hotmail.com

https://shuruthy.blogspot.com/

No comments:

Post a Comment