Spring, Summer, Fall, Winter... and Spring – Kim Ki-Duk
உலகப் புகழ் பெற்ற தென்கொரிய இயக்குநர் கிம் கி-துக் இன் புகழ்பெற்ற திரைப்படங்களில்
இதுவும் ஒன்று. 2003 ஆம் ஆண்டு அவரே எழுதித் தயாரித்து நடித்தும் இருந்தார். படத்தின்
தலைப்பு போலவே, திரைப்படத்தின் காட்சிகள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கதை
வெவ்வேறு கால இடைவெளிகளில் நடக்கின்றது.
வசந்தகாலம்
திரை விலகுகின்றது. அமைதியான ஒரு ஏரியின் நடுவே மிதக்கும் ஒரு பெளத்த மடாலயம். வசந்தகாலத்தில் மரங்கள் துளிர்த்து நிற்கின்றன. ஒரு வயது முதிர்ந்த பெளத்த துறவி, மரத்தால் செய்யப்பட்ட மீன்போன்ற வாத்தியக்கருவியை (மொக்தாக்) சிறிய குச்சியினால் தட்டியபடி புத்தபிரானைக் குனிந்து வணங்குகின்றார். பின்னர் உறக்கத்தில் இருக்கும் குழந்தைத் துறவியை எழுப்புகின்றார். சிறுவனும் துயில் கலைந்து, முழந்தாளிட்டு புத்தபிரானை வணங்குகின்றான். பின்னர் இருவருமாக, மருந்துக்கான மூலிகைகள் தேடி, ஒரு படகில் தண்டு வலித்துச் செல்கின்றார்கள். இந்த வசந்த காலத்தின் ஆரம்பக் காட்சியுடன் - வயது முதிர்ந்த துறவியாக வரும் ஓ யங்-சுவும் (O Yeong-su), குழந்தை துறவியாக வரும் ஜோங்-ஹோ கிம்மும் (Jong-ho Kim) நம் மனதில் இடம்பிடித்து விடுகின்றார்கள்.
சிறுவன், காடுகள் நிறைந்த மலையில் இருக்கும் புத்தபிரானின் சிலையின் தோள்மீது ஏறி நின்று அற்புதமான இயற்கையை இரசிக்கும் போது, ஒளிப்பதிவாளர் நம்மையும் அங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றார்.சிறுவன், பாம்புகளைத் தூக்கி சுழற்றி எறிகின்றான். நாயுடன் விளையாடுகின்றான். தானே துடுப்பு வலித்து படகோட்டவும் கற்றுக் கொள்கின்றான். அவனின் குறும்புகள் எம்மை மட்டுமல்ல, முதிர்ந்த துறவியையும் கவர்ந்து கொள்கின்றன. இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதும் புன்னகை கொள்வதுமாக இருக்கின்றார்கள். முதிர்ந்த துறவி சிறுவனை மிகவும் பொறுப்புடனும் அவதானத்துடனும் வளர்க்கின்றார்.
சிறுவன் மீன் தவளை பாம்பு என்பவற்றைக் கல்லுடன் கட்டி நீரில் விட்டு இரசிக்கின்றான்.
அதைக் கண்டுவிட்ட துறவி, அவை படும் வேதனையை சிறுவனும் புரிந்துகொள்ளத்தக்க வகையில்,
அவன் உறங்கும்போது அவனின் முதுகில் ஒரு கல்லைக் கட்டிவிடுகின்றார். சிறுவன் அந்தச்
சுமையுடன் மலையில் ஏறி, மீன் தவளை பாம்பு என்பவற்றின்மீது தான் கட்டிய கயிற்றை அவிழ்த்து,
அவற்றை விடுதலை செய்வதற்காகச் செல்கின்றான். மீனும் பாம்பும் இறந்துவிட தவளை தப்பித்துக்
கொள்கிறது. தன் தவறை உணர்ந்து விம்மி விம்மி அழுகின்றான் அவன்.
கோடைகாலம்
ஒரு கோடை காலம் (அடுத்து வந்த கோடை காலம் அல்ல), சிறுவன் வளர்ந்து இளைஞன் (Seo
Jae-kyung) ஆகிவிட்டான். பூனைக்குப் பதிலாக கோழி வந்து சேர்ந்திருக்கின்றது. ஒருநாள்
இளைஞன் மலையின் மீதுள்ள புத்தர் சிலையை நோக்கிப் போகும்போது, இரண்டு பாம்புகள் இணைந்து
கொள்வதைக் கண்டு அதிர்ச்சி கொள்கின்றான். பின்னர் சிலையின் தோள்மீது ஏறி நின்று இயற்கையை
இரசித்துக் கொண்டிருக்கும்போது, தூரத்தில் இரண்டு பெண்கள்---தாயும் மகளும்--- மடம்
நோக்கி வருவதைக் கண்டு கொள்கின்றான். பின்னர் அவனே அவர்களைப் படகில் ஏற்றி மடத்திற்கு
அழைத்துச் செல்கின்றான். ம்களை படகிற்குள் ஏற்றும்போதே தன் மனதை அவளிடம் பறிகொடுத்து
விடுகின்றான்.
மகளிற்கு (ha yeo-jin) ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் காரணமாக அவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.
தாய் மகளை அங்கே விட்டுச் செல்கின்றார். இளம் துறவிக்கும் அவளுக்குமிடையே காதல் அரும்புகின்றது.
முதன்முதலாக அவளின் மார்பகத்தைத் தொட்டு, அடிவாங்கும்போது, அவனின் கைகள் தானாகவே நடுங்கி
கும்பிட்டுக் கொள்கின்றது. அவள் அவனைத் தடவிக் கொடுத்து மன்னிக்கின்றாள். அந்தக் காட்சியை
மூத்த துறவி கண்டுகொள்கின்றார். தவறை உணர்ந்த இளைஞன், உடனே மொக்தாக் கருவியை குச்சியினால்
தட்டிக்கொள்கின்றான்.
பின்னர் அவர்கள் இருவரும் காடு மலையெல்லாம் சுற்றுகின்றார்கள். நீரில் கைகளினால் மீன்
பிடித்து விளயாடுகின்றார்கள். பச்சிலையில் கசாயம் செய்து அவளுக்குக் குடுக்கின்றான்.
இரவில் மூத்ததுறவியைக் கடந்து சென்று, அவளின் படுக்கையில் புகுந்து கொள்கின்றான். இறுதியில்
காமத்தில் திளைத்து கலவியும் கொள்கின்றார்கள்.
மெது மெதுவாக அவர்களை அவதானித்து வந்த மூத்த துறவியிடம், ஒருதடவை அவர்கள் இருவரும் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுக் கொள்கின்றார்கள்.
அவள் நோயிலிருந்து சுகப்பட்டுவிட்டாள் எனக் கேட்டறிந்த துறவி அவளை மடத்திலிருந்து அனுப்பி விடுகின்றார். அதன் பின்னர் இருப்புக் கொள்ளாத இளம் துறவி, மூத்த துறவி உறக்கத்தில் இருக்கும் சமயமாகப் பார்த்து, அங்கிருக்கும் புத்தர் சிலையையும் சேவலையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டுக் கொள்கின்றான். கோழியை காட்டுக்குள் விட்டுவிட்டு, சிலையுடன் தன் காதலியைத் தேடிப் போகின்றான். ஆசையே துக்கத்திற்கு மூலாகாரணம் என்பது இங்கிருந்து ஆரம்பிக்கின்றது.
மூத்த துறவி மொக்தாக்தை குச்சியினால் தட்டிக்கொள்கின்றார்.
படத்தில் குருவின் ஆன்மிக ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் முக்கிய இடங்களில் எல்லாம் மொக்தாக் ஒலிச்சின்னமாக மீண்டும் மீண்டும் தோன்றுகிறது.
•
வாசகர்களாகிய உங்களை, இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டுவதே கட்டுரையின் நோக்கம் என்பதால் மிகுதியை சுருக்கமாகத் தருகின்றேன்.
மூன்றாம் பாகமான இலையுதிர்காலத்தில், மடத்தை விட்டுச் சென்ற அந்த இளைஞன் திருமணம் செய்துகொள்வதாகவும், பின்னர் மனைவி வேறொருவருடன் தொடர்பு கொண்டதாகக் கருதி அவளைக் கொலை செய்வதாகவும் காட்டப்படுகின்றது. காதலித்து மடத்தை விட்டுச் சென்ற அதே பெண்ணைத்தான் அவன் திருமணம் செய்ததாக தெளிவாகச் சொல்லப்படவிலை. ஆனாலும் அந்தப்பெண் அதே காதலிதான் என்பது தெளிவாகின்றது. அவன் (Seo Jae-kyeong) மீண்டும் ஒளிந்து கொள்வதற்காக, புத்தர் சிலையுடனும் மனைவியைக் கொன்ற கத்தியுடனும், மடத்திற்கு வருகின்றான். துறவி அவனைத் திருத்திவிடலாம் என்னும் மனநிலையில் ஏற்றுக் கொள்கின்றார்.
அவன் மடத்திலிருக்கும் காலங்களில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பின்னர் இரண்டு துப்பறிவாளர்கள் மடத்திற்கு வந்து அவனைக் கைது செய்து கூட்டிச் செல்கின்றார்கள். அந்தக்காலத்தில் அங்கேயிருந்த பூனையும் அவர்களுடன் படகில் செல்கின்றது.
பின்னர் மூத்த துறவியானவர் தன் வாழ்வின் இறுதிக்காலத்தை உணர்ந்து, படகில் சிதை மூட்டி தியானம் செய்கின்றார். தீப்பிழம்புகள் சூழ்ந்து, மூச்சுத் திணறி இறந்து போகின்றார். அந்நேரத்தில் படகிலிருந்து பாம்பு ஒன்று நீந்தி மடத்திற்குச் செல்கின்றது.
பனிபடர்ந்து மரங்களெல்லாம் இலையுதிர்த்து, குளிர்காலம் ஆரம்பிக்கும் ஒரு காலத்தில், அந்த இளைஞன் தனது தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் மடத்துக்கு வருகின்றான். அவனது குரு இறந்துவிட்டதால், இப்போது அவன் தான் மடாலயத்தின் புதிய துறவி.
குளிர்காலம், மீண்டும் வசந்தம் ஆகிய இறுதிப்பகுதிகளில் இயக்குநர் கிம் கி-துக் முதிர்ந்த துறவியாக படத்தில் தோன்றுகின்றார். அவர் அங்கிருக்கும் காலத்தில், ஒருநாள் முகத்திரையிட்ட பெண் ஒருத்தி வந்து தனது கைக்குழந்தையை அங்கு விட்டுவிட்டு இருளில் மறைகின்றாள். துறவியானவர் தன் வாழ்நாளில் செய்த பாவங்களுக்காக, தன் இடுப்பில் ஒரு கனமான வட்டவடிவக் கல்லைக் கட்டி பின்புறமாக இழுத்துக்கொண்டு, புத்தர் சிலையையும் கையில் பிடித்தவாறு மலை முகடு எல்லாம் ஏறிச் செல்கின்றார். தவளையும் மீனும் பாம்பும் அவர் நினைவில் வருகின்றன.
•
300 வருடங்கள் பழமை வாய்ந்த மரம், ஏரிக்கரையின் ஆன்மீக வாயில், மலைமீது தவழும் முகில்கூட்டம்,
தூரத்தே கேட்கும் பறவைகளின் கீச்சொலிகள், காற்று அடிக்கும்போது தூபியின் உச்சியில்
தொங்கவிடப்பட்டிருக்கும் மணி (wind bell) எழுப்பும் ஓசையும் அதன் கீழே துடிதுடிக்கும்
மீன் தகடும் - அடிக்கடி நம்மைச் சந்திக்கும் காட்சிகள். இயக்குநர் கிம் கி-துக் இந்தக்
காட்சிகள் மூலம் மனித வாழ்வின் மனநிலைகளை நுட்பமாகப் பதிவு செய்கின்றார். திரைப்படத்தில்
ஒவ்வொரு பருவ காலத்திற்கும் வெவ்வேறு விலங்கினங்கள்---நாய் (வசந்த காலம்), கோழி (கோடை),
பூனை (இலையுதிர்காலம்), பாம்பு (குளிர்காலம்), ஆமை (மீண்டும் வசந்தகாலம்)--- என வந்து
போகின்றன. பெளத்த மதத்திற்கும் இந்த விலங்குகளுக்கும் இடையே பொருள் மிகுந்த அர்த்தங்கள்
இருப்பதைக் காணலாம்..
பேக் டோங்-ஹியூன் (Baek Dong-hyun) ஒளிப்பதிவும், பார்க் ஜி-வூங்கின் (Park Ji-woong)
பின்னணி இசையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு படத்துடன் நம்மை ஒன்றிவிடச் செய்கின்றன.
படத்தில் முதிர்ந்த துறவி மலையேறும் காட்சியில், கொரியாவின் பாரம்பரிய நாட்டுப்புறப்
பாடலான `ஜியோங்சான் அரிராங்’கின் (Jeongseon Arirang) மெட்டு பாவிக்கப்பட்டுள்ளது.
இது மனித வாழ்வின் சோகம், ஏக்கம், அமைதி என்பவற்றை பார்வையாளருக்கு உணர்ச்சிகரமாகக்
கடத்துகின்றது.
முதிய துறவியானவர் - உணவையும் பூனையையும் ஒரு பொதியினில் சுமந்து வருவதும், பூனையின்
வாலில் கருப்பு மையைத் தோய்த்து மடத்து வாசல் எங்கும் எழுதுவதும், தன்னைத் தானே தீயில்
அழித்துக் கொள்வதும் – என்னை நெருடிய காட்சிகள். தவிர இந்தப் படத்தில் தேவையில்லாத
காட்சிகள் என்று எதுவுமே எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அர்த்தத்தை
வைத்து, நமது கவனத்தைச் சிதறவிடாமல், படத்துடன் ஒன்றிவிடச் செய்கின்றார் இயங்குநர்.
கூகிளில் - Spring, Summer, Fall, Winter... and Spring – என்று தேடும்போது
youtube இலும் dailymotion.com (https://www.dailymotion.com/video/x8japow) இலும் இந்தப் படத்தை ஆங்கில துணைத்தலைப்புகள் மூலம் பார்வையிடலாம்.
•
இயக்குநர் கிம் கி-துக் பற்றி
கிம் கி-துக் 1960 இல் கியோங்சாங் மாகாணத்தின் போங்வாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். வறுமை காரணமாக
இளமையிலே பள்ளிப்படிப்பை விட்டு, தொழிற்சாலைகளில் வேலை செய்தார். தனது 20வது வயதில்
கடற்படையில் சேர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றினார்.
நுண்கலை பயில்வதற்காக பாரிஸ் சென்ற அவர், அங்கு முறைப்படி கல்வி பயிலாமல், தெருவோரங்களில்
ஓவியங்கள் வரைந்து பிழைப்பு நடத்தினார். பின் தென் கொரியா திரும்பியவர், முதலில் திரைக்கதை
எழுத்தாளராகவும் பின்னர் `குரோக்கோடைல்’ (Crocodile/1996) என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும்
அறிமுகமானார்.
3 ஐரன் (3-Iron/2004), பியேட்டா (Pieta/2012), தி ஐல் (The Isle/2000), சமாரிடன் கேர்ள்
(Samaritan Girl/2004), அரிராங் (Arirang/2011) போன்ற திரைப்படங்கள், திரைப்பட விழாக்களில்
பல விருதுகளையும் சிறப்புக்களையும் பெற்றன.
பல சர்ச்சைகள் காரணமாக லாட்வியா நாட்டிற்குச் சென்ற அவர், கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக
2020 இல் காலமானார். தென்கொரிய சினிமாவை நம்முன் நிறுத்தியதில் இவருக்கு மிகப்பெரிய
பங்கு உண்டு.


நன்றி : காற்றுவெளி (ஆவணி, 2026)





No comments:
Post a Comment