Sunday, 19 July 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-17)

யாருக்கு எழுதுகின்றீர்கள்?

எனது புத்தக வெளியீட்டுவிழாவிற்கு வருகை தருமாறு சொல்வதற்காக - சிட்னியில் எனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனது முதல் புத்தக வெளியீடு. அந்தப் பெண் எனது முயற்சி பற்றி பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளின் கணவன் ஒரு பொறியியலாளர். அருகேயிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர், "நீங்கள் யாருக்குக் கதை எழுதுகிறீர்கள்? குழந்தைப் பிள்ளைகளுக்கா?" என்றார்.

"இல்லை! இல்லை!! வளர்ந்தவர்களுக்குத்தான்" என்றேன் நான். அவர் என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

Saturday, 18 July 2015

இராஜகாந்தன் கவிதைகள் – 6


அகிலமே காத்திருக்கும்

வான் வெளியில் விண்மீன்கள்
     இருளுக்காய் காத்திருக்கும்.

தேய்ந்து வரும் வெண்ணிலவு
     பௌர்ணமிக்காய் காத்திருக்கும்.

ஆழ்ந் துறங்கும் ஆதவனோ
     விடியலுக்காய் காத்திருக்கும்.

காய்ந்திருக்கும் கானகமோ
     கடுமழைக்காய் காதிருக்கும்.

Friday, 17 July 2015

எங்கே போகிறோம்? - சிறுகதை


கொழும்பிலிருந்து புறப்பட்ட சொகுசு பஸ், நீர்கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

புறப்பட்ட நேரத்திலிருந்தே செல்வராசா முகத்தை 'உம்' என்று வைத்திருந்தான். உயர்ந்த தோற்றமும், ஒடிந்து விழுமாப் போன்ற மெல்லிய தேக அமைப்பும் கொண்டவன் அவன். ஆங்காங்கே தலை நரைக்கத் தொடங்கியிருந்த போதிலும் வயது ஐம்பதிற்குள்தான் இருக்கும். எண்ணெய் பூசி தலையை ஒழுங்காக வாரி விட்டிருந்தான்.

அவனுக்குப் பக்கத்து ஆசனத்தில் சந்திரன். சந்திரன் செல்வராசாவிற்கு நேர் எதிரான தோற்றம் கொண்டவன். கொழுத்த உடலமைப்பு. சுருள் சுருளான கன்னங்கரேலென்ற கேசம். கலகலப்பான பேர்வழி. அவன் செல்வராசாவுடன் கதைத்துவிடத் துடித்தான்.

அவர்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் - ஒரு சிறுமி. அக்காமீது சாய்ந்திருந்த சிறுவன், ஏதோ குறும்பு செய்திருக்க வேண்டும். 'கிளுக்' என அவள் சிரிக்க, அந்தச் சிரிப்போடு அவள் கன்னங்களும் சிவந்து போயின. அழுக்குப் படாத சிரிப்பு என்றுமே அழகானது தான்.

Sunday, 12 July 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 5 - கரி பூசிய கறுப்பு நரி


                கில்லாடி ஆனந்தத் தேன் மழையில் நீராடினான். பொலிசிலிருந்து மீண்ட மூத்தானைத்; தாவியணைத்து வரவேற்பு அறைக்குக் கூட்டிச் சென்ற பொழுது, “கில்லாடி அண்ணை, நாய்ப் பொலிஸ்காரன் வழக்குத் தொடுக்கப் போகிறானாம்" என்று பொரிந்தான் மூத்தான்.
“பயப்படாதே மூத்தான். வழக்கு வெல்கிறது இந்தக் கில்லாடிக்குச் சின்ன விடயம். நல்ல வெள்ளைக்கார பரிஸ்ரராகப் பிடிப்பம். அது சரி, என்ன நடந்தது?"
“கோட்டானோ ஊத்தைவாளியோ சைகை தந்திருந்தால் பொட்டலங்களை தூக்கி  வீசி எறிந்துபோட்டு மாயமாக மறைந்திருப்பேன்."
“இரண்டு பேரும் என்ன செய்தவன்கள்?"
“கோட்டான் வழமையைப் போலத்தான். வெள்ளைப் பெட்டையளிலே சொக்கிப் போய் நின்றான். ஊத்தைவாளி கண்ணிலேயே படவில்லை."
“வரட்டும் அவைக்கு நல்ல பாடம் படிப்பிக்கிறன். உவன்களை இனி எங்கள் கூட்டத்தாலே கலைக்கவேணும்."
“கில்லாடி அண்ணை. அப்படிச் செய்து போடாதையுங்கோ. அவன்கள் போய் எங்களின் தொழிலை பொலிசுக்குக் காட்டிக் கொடுத்துப் போடுவான்கள்."
“பொலிசுக்குக் காட்டிக் கொடுத்தால், பிறகுதான் இந்தக் கில்லாடியைப் பற்றி அவைக்கு விளங்கும். அவைக்கு விளங்கயில்லை நான், கழுதைப்புலி, எத்தனை பேரைச் சுட்டுப் பொசுக்கி வீமன்காமம் கொலனிக்குள்ளே வீசினனான் என்று." இவ்வாறு கத்திய கில்லாடியின் கண்களில் கொலை வெறி தெறித்தது.
“அவன்களும் யாழ்ப்பாணத்தில் உந்தத் தொழில் செய்துபோட்டுத்தான் லண்டனுக்கு வந்தவன்கள். அவன்களோடு கொளுவ வேண்டாம் அண்ணை."