

இந்தப்பாடசாலையின் அமெரிக்க வெள்ளை முதல்வர்களை அடுத்து வந்த முதல் சுதேச அதிபர் ஐ.பி.துரைரத்தினம். நான்காவது அதிபர் கதிர்.பாலசுந்தரம்.
இவர் ‘Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த அரசாங்க பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டவர். யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், அறுபதுகளின் நடுப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைப் பட்டதாரியானார். லண்டன் பல்கலைக்கழக இடைக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இலங்கையின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தொழில்கள் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்.
பல்கலைக்கழக வாழ்க்கைக்குப்பின் சிறுகதைப்படைப்பு
முயற்சியிலே ஈடுபட்டார். எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது படைப்புகள் சிரித்திரன்,
றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின. இவரது சிறுகதைகளில் ‘மனித தெய்வம்’, ‘முட்டைப்பொரியலும் முழங்கையும்’ சிரித்திரன் நடத்திய சிறுகதைப்போட்டிகளில்
பரிசு பெற்றவை. சிறுகதை, வானொலி நாடகம், மேடை நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு
என்று பல்துறையிலும் தடம் பதித்த எழுத்தாளர். இவர் எழுதி நெறிப்படுத்திய
நாடகங்களில் ‘விஞ்ஞானி என்ன கடவுளா?’, ’சாம்பல் மேடு’, ‘விழிப்பு’ என்பவை வித்தியாசமான சமூகப்பார்வை கொண்டவை. ‘விஞ்ஞானி
என்ன கடவுளா?’, ‘விழிப்பு’ என்ற நாடகங்கள்
வானொலி நாடகங்களாக வந்து பாராட்டுப் பெற்றவை.
ஆங்கிலமொழியிலும் எழுதும் இவர் ‘அந்நிய விருந்தாளி’ சிறுகதைத் தொகுப்பு, ‘மறைவில்
ஐந்து முகங்கள்’, ‘கனடாவில் ஒரு நவீன சாவித்திரி’, ‘சிவப்பு நரி’ நாவல்கள்,
‘அமிர்தலிங்கம் சகாப்தம்’, ‘சாணக்கியன்’ வாழ்க்கைச் சரிதைகள் , ’சத்தியங்களின் சாட்சியம்’ ஆய்வு நூல் மற்றும்
‘The Five Hidden Faces’, ’His Royal Highness, The Tamil Tiger’ என்ற ஆங்கிலநாவல்களையும் படைத்துள்ளார்.



கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) தனது ‘ஈழத்துச் சிறுகதை
வரலாறு’ என்னும் நூலில் இவரது ‘அந்நிய
விருந்தாளி’ என்னும் சிறுகதைத்தொகுப்பில்
உள்ள ‘உயர உயரும் அன்ரனாக்கள்’ (அமிர்தகங்கை சஞ்சிகையில் வெளிவந்தது) என்னும் சிறுகதை, 1961 – 1983 காலகட்டத்தில்
வெளிவந்த ஆயிரக்கணக்கான சிறுகதைகளுள் – தெரிவு செய்யப்பட்ட சிறந்த
பதினெட்டுக்கதைகளுள் – ஒன்றெனக் குறிப்பிட்டுள்ளார். யாழ் இலக்கியவட்ட வெளியீடாக
வந்த ‘அந்நிய விருந்தாளி’ என்ற சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர்
கலாநிதி சு.வித்தியானந்தன் ---இவரது கதைகளை வாசிக்கும் ஒருவருக்குச் சமகால
யாழ்ப்பாண மண்ணின் மணம் நன்கு புலனாகும். நாம் மண்ணில் அன்றாடம் சந்திக்கும் மாந்தரைக்
கதாபாத்திரமாக்கி ஆசிரியர் நடமாடவிட்டுள்ளார். பிரதேசப் பேச்சுவழக்கு ஆசிரியருக்கு
நன்கு கைகொடுத்து உதவியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. கதைகளை அமைக்கும்
முறையிலே வெவ்வேறுவகை உத்திகளை ஆசிரியர் கையாண்டுள்ளார். பெரும்பாலும்
ஒவ்வொருகதையும் ஒவ்வொரு உத்தியில் அமைந்துள்ளது--- என்கின்றார்.
’மறைவில் ஐந்து முகங்கள்’ நாவலைப் பற்றி பேராசிரியர் க.பஞ்சாங்கம் இப்படிக்
கூறுகின்றார் ---இது ஓர் அரசியல் நாவல். வழி தவறிய போராளிகளை முன்னிருத்தி இயக்கச்
செயல்பாடுகளை விமர்சிப்பதைக் கலையாக்கமாக வடிவமைக்கிற முயற்சி. நாவல் வடிவத்தைக்
கட்டமைக்கும் படைப்பாக்கப் போராட்டத்தில் நாவலின் உயிரை வடிவமைக்க முடியாமலே
போய்விடக்கூடிய சாத்தியப்பாடுகள் அரசியல் நாவல் எழுதும்போது அதிகம். உயிரைப்
பிடிக்க முடியாமல் போகும் போது, நாவல் வெறுமனே விவரணைகளாக, ஒரு பக்கப் பார்வை
கொண்டதாக, பிரச்சனைகளின் பன்முகப்பட்ட முகம் மறைந்து, ஒற்றை முகம் மட்டும் துருத்திக்
கொண்டு நாவலின் ஒட்டுமொத்த வடிவத்தையே அருவருப்பாகிவிடும் ஆபத்து நிகழ்ந்துவிடும்.
கதிர்.பாலசுந்தரம் இத்தகைய விபத்துகள் குறித்த விழிப்புணர்வோடு இந்த நாவலெனும்
மொழியாலான புனைவுலகத்திற்குள் வினைபுரிந்து வெற்றி பெற்றுள்ளார்--- என்கின்றார்.
தமிழ்
அரசுக்கட்சியின் முன்னைநாள் அபிமானியாகிய இவர், ’அமிர்தலிங்கம்
சகாப்தம்’, ‘சாணக்கியன்’ என்ற புத்தகங்களின் மூலம்
இரு
அரசியல் தலைவர்களது சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். ’சாணக்கியன்’ என்னும் நூல் – தமிழ்
அரசுக்கட்சியின் ஆரம்பகால வரலாற்றைச் சொல்லும் – தமிழ் அரசுக்கட்சியை வளர்த்த
வன்னியசிங்கம் அவர்களைப் பற்றிப் பேசும் நூல்.
’சிவப்பு நரி’ என்ற நாவல்
விடுதலைப்புலிகளின் வரி வசூலிப்பைப் பற்றிப் பேசும் நாவல். இதன் மையக்கருவே ‘His Royal Highness, The Tamil Tiger’ என்ற நாவலிலும் அமைகின்றது.
முக்கிய வேறுபாடாக சிவப்பு நரியில் மிருகங்கள் பாத்திரமாக வருகின்றன. மற்றயதில்
மனிதர்கள் பாத்திரங்களாக உள்ளனர். சிவப்பு நரி யுத்தம் முடியாத காலத்தில்
“ஆலடிச்சித்தர்’ என்ற
புனைபெயரில் எழுதப்பட்டது. ஆங்கிலநாவல் உள்நாட்டுப்போர் முடிந்த பின்னர் அவரது
சொந்தப்பெயரில் எழுதப்பட்டது.
அயராமல்
இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தலைமுறை எழுத்தாளரான இவர் தற்போது கனடாவில்
இருக்கின்றார். மனித உரிமைவாதி (Human Rights Defender) என்ற அளவில் அமையும் இவரது நூல்கள் இலக்கிய
உலகில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.
No comments:
Post a Comment