Monday, 12 January 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-9)

நான் கவிஞன்

புதிதாக வேலைக்கு வந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். முதற் சந்திப்பிலேயே அவர் தன்னைக் கவிஞன் என்றார்.

"அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் எங்கே வேலை செய்தீர்கள்?" என்ற எனது கேள்விக்கு "சூரியன் FM இல் ஒரு அறிவிப்பாளனாக வேலை செய்தேன்" என்றார்.

"நீங்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, நீலாவணன் முருகையன் போன்றவர்களின் கவிதைகளைப் படித்திருக்கின்றீர்களா?"

அவர் முகம் சுருங்கியது.

"சேரன் வ.ஐ.ச.ஜெயபாலன் சோலைக்கிளி ..." எனத் தொடர்ந்த எனக்கு அவரின் தலையாட்டுதல் வியப்பைத் தந்தது. 

விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞரைத் தெரியாதவர்கள் யார் இருக்க முடியும்?
"சரி இவரைத் தெரிகின்றதா பார்ப்போம். புதுவை இரத்தினதுரை!" என்று கொக்கி போடுகையில், "எனக்குத் தெரிந்தவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து, கலீல் ஜிப்ரான்" என்றார்.

தெரியும் என்றுவிட்டு 'பே! பே!' என்று விழிப்பவர்கள் மத்தியில், தெரியாது என்று உண்மையைச் சொல்லும் அவரின் "வெள்ளை" உள்ளம் என்னைக் கவர்ந்தது.

"உங்களுக்கு ஒன்று சொல்வேன். தினமும் கலில் ஜிப்ரானின் கவிதையில் ஒன்றைப் பருகிவிட்டுத்தான் நான் உறக்கத்திற்குப் போவேன். அப்படியென்றால்தான் எனக்கு ஆழ்ந்த உறக்கம் வரும்" என்று கம்பீரமாகச் சொன்னார் அவர்.

ஒருதடவை வேலை செய்யுமிடத்தில் உள்ள ரொயிலற் பாத் றூமிற்குள் உள்ள கண்ணாடி முன் நின்று, கைகளை உயர்த்தி கவிதை பாடிப் பழகுகின்றார் 'இந்தக் கவிஞன்' என எனது நண்பர் ஒருவர் சொன்னார். தான் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடப் போவதாகவும், வைரமுத்துவின் அணிந்துரைக்காக காத்திருப்பதாகவும் சொன்னார். தான் எழுதிய கவிதைகளில் சிலவற்றை வாசிப்புக்காக எனக்குத் தந்தார். அப்படியே வைரமுத்துவின் கவிதைகளை நகல் எடுத்தது போன்றிருந்தது. வைரமுத்து அணிந்துரை குடுப்பதற்குப் பதிலாக ஏதாவது வழக்குத் தாக்கல் செய்து விடுவாரோ எனப் பயந்தேன்.

அவரைச் சந்தித்து ஒருவருடம் கழிந்திருக்கையில், இரண்டு அங்குல தடிப்பம் கொண்ட புத்தகமொன்றைக் கையில் ஏந்தியபடி என்னிடம் வந்தார்.

"வாற சனிக்கிழமை நீங்கள் பிறீயா இருப்பீர்களா? நான் 'பூவரசம் வேலிகளும் புலுனிக் குஞ்சுகளும்' எண்ட புத்தகத்திற்கு விமர்சனம் செய்ய இருக்கின்றேன். உங்களுக்கு புதுவை இரத்தினதுரையைத் தெரியுமா? அவர்தான் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர்" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அடிரா சக்கை!

இப்படித்தான் புலம்பெயர்ந்த நாட்டில் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் உருவாகி இருக்கின்றார்கள்.

(குறிப்பு : 2009 இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை பற்றிய தகவல் ஏதும் இற்றைவரை இல்லை. அவர் முருகப்பெருமான் மீது பாடிய பாடல் ஒன்றின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றது. 'நீ ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு, எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா'. )


No comments:

Post a comment