Monday, 26 January 2015

வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்
அதிகாரம் 14 - அயோக்கியன்

அப்பாவையும் அம்மாவையும், மற்றும் மூன்று குடும்பங்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.அச்சட்டம் நீதிமன்ற பாரம்பரிய சட்டங்களை எல்லாம் விழுங்கி வைத்துக்கொண்டு சர்வாதிகார கொடுங்கோலாட்சி புரிந்தது.

தமிழ் இளைஞர்கள் இயக்கங்கள் உருவாக்கி, சுதந்திர தமிழ் ஈழம் எழுச்சிகாண ஆயுதம் ஏந்தினர். அவர்களை ஒழித்துக் கட்ட 1979ஆம் ஆண்டு தற்காலிகமாக அச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. மூன்றாண்டுகளின்; பின்னர் நிரந்தரமாகி தொடர்ந்து கொடுமைகள் புரிந்தது.

அப்பாவையும் அம்மாவையும் கொழும்புக்குக் கொண்டு சென்றனர். சட்டத்தரணிகளை வைத்து அவர்களை வெளியே பிணையில் எடுக்கவோ, அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்துக்கு அழைக்கவோ பயங்கரவாத சட்டம் தடையாக அமைந்தது.

அப்பா அம்மா நாலாம் மாடியை அடைந்ததும், வௌ;வேறு அறைகளில் அடைத்தனர். இருபது மணி நேரம் கடந்து அம்மாவின் அறையை ஒருவன் திறந்தான். வாயில் நிலையில் நிற்கும் அவனை அம்மா பார்த்தார். ஐம்பது வயதிருக்கும். வெளியே தள்ளிய மஞ்சற்பற்கள். ஊதிய கால்களும், கைகளும் காக்கி காற்சட்டை-சேட்டை உதைத்துக்கொண்டு நின்றன. அவன்தான். இரவு வந்த பொடிசிங்கோ.
'தண்ணி" அம்மா இரந்து கேட்டார்.
'தரலாம். என்னோடு வா." பிரகாசமான விளக்குள் எரியும் ஓடைவழியே அழைத்துப் போய் இரு பொலிஸ் அதிகாரிகள் எதிர்பார்த்திருக்கும் ஒரு அறையில் விட்டான். அம்மா கண்களை ஓடவிட்டார். கதிரையில் பன்றி மூஞ்சித் தலையன், தடியன். இமைகள் அடிக்கடி மூடித்திறக்கிற சின்னக் கண்கள். சின்ன மேசை ஓரம் கதிரையில் இருந்தான். அவனது பொலிஸ் உடையில் குந்தியிருந்து மின்னும் பித்தளைப் பட்டிகள் பொலிஸ் சுப்பிரீன்ரன்டன், எஸ்.பி., என்பதை விளம்பரப்படுத்தின. அவனின் பின்னே இன்னொரு தடியன் நின்றான். இன்ஸ் பெக்டர் அமரசேகர என்பது புரிந்தது. ஆயிலடியில் முதுகில் ஓங்கிக் குத்தியவன். இருவரது பார்வைகளும் அம்மாவை அச்சுறுத்தின. கால்கள் உதறின. மயக்கமாக இருந்தது.

கதிரையில் இருந்த எஸ்.பி. விசாரித்தான்.
உன்டை பேரு?"
ராசதேவி."
பிறந்த திகதி?"
ஜனவரி 14, 1950."
பிள்ளைகள்?"
'ஆறு
எத்தனை புலியில் இருக்கிறான்"
ஒன்று"

'ப்ளடி லையர்" என்று கத்தியபடி பின்னே நின்ற இன்ஸ்பெக்டர் அமரசேகர காட்டெருமை போலப் பாய்ந்து சென்று முதுகில் கைமுஷ்டியால் குத்தினான். அம்மா 'ஐயோ!" என்றுஅபயம் எழுப்பியபடி விழுந்து கிடந்தார். 'எழும்பெடி கொட்டியா" என்று காலால் உதைத்தான். அம்மா மயங்கி யிருப்பதை அவன் பொருட்படுத்தவில்லை.
பொடிசிங்கோ போத்தலில் இருந்து சொற்ப நீர் உள்ளங்கையில் எடுத்து மூன்று தடவைகள் முகத்தில் வீசினான். அம்மா மெல்லிதாய் கண்களைத் திறந்தார். இரக்கங்கொண்ட பொடிசிங்கோ சிறியளவு நீரை வாயில் ஊற்றினான்.
இன்ஸ்பெக்டர் அமரசேகரவிற்கு அதைப் பொறுக்க முடியவில்லை. பொடிசிங்கோவை வெறித்துப் பார்த்து பல்லை நெருமி, 'நாயைத் தூக்கி நிறுத்து" என்றான். பொடிசிங்கோ அம்மாவைக் வாரி அணைத்து உயர்த்தி நிறுத்தினான். அவன் வாரி அணைத்த வேளை அம்மாவின் வதனம் கறுத்துக் கொண்டிருந்தது.

எஸ்.பி. உணர்ச்சி இல்லாத மண்ணாலான பன்றி போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'நீ பொய் சொல்லுறாள்.உண்மைபேசு ராச தேவி."
அம்மாவுக்கு எஸ்.பியின் எண்ணம் விளங்கியது.
'புலி ஒன்று. புளட் ஒன்று. ஈ.பி.ஆர். எல்.எப். ஒன்று"

எஸ்.பி. அம்மாவை உற்றுப் பார்த்தான். தலையை மேலும் கீழும் ஆட்டினான். அவனுக்கு கைதாகிய ஏனைய குடும்பங்களில் உள்ள எவரோ மூன்று பேரும் புலியில் என்று தவறாகச் சொல்லி இருந்தனர்.
'புலி யார்?"
'புலியில் வீரக்கோன். புளட்டில் யோகன். ஈ.பி.ஆர்.எல்.எப். சங்கிலி."
இப்போ எங்கே இருக்கிறாங்கள்?"
இந்தியா என்று சனம் கதைக்குது. அதன் பிறகு எங்களுக்கு அவர்கள் பற்றி எந்தச் செய்தியும் தெரியாது."

'சனசமூக நிலையம் உங்க வீட்டுக்கு முன்னே உள்ளது. மூன்றுகொலை நடந்திருக் குது. என்ன தெரியும்?"
ஒன்றும் தெரியாது."
அங்கே ஆட்கள் நடமாட்டம் பார்க்க வில்லை?"
இல்லை."
உன்னுடையபுருசன் பார்க்கவில்லை?"
'அவர் கைது செய்ய முந்திய ஐந்து நாட்கள் வயலில் விதைப்பு. வாடியில்தான்.வீட்டுக்கு வரவில்லை."

'ராசதேவி. சனசமூக நிலையத்தில் ஆட்கள் பார்த்தது சொல்லு. உன்னை உடனே வீடு போக விடுகிறேன்."

ராசதேவிக்கு உள்ளூர அவன் நோக்கம் விளங்கியது. குழந்தைப் பிள்ளை என்று நினைத்துப் பேசுகிறான் என்று எண்ணினார். மேலும் சிந்திக்க முடியவில்லை. மயங்கி நிலத்தில் விழுந்தார்.
பொடிசிங்கோவின் கண்கள் அம்மாவை மேய்ந்தன.
முகத்தில் தண்ணீர் தெளிக்க அம்மா கண் விழித்தார். சிறைவைக்கப்பட்ட நேரம் தொடக்கம் பொடிசிங்கோவை அம்மாவுக்குத் தெரியும். முகம் மளமளவென்று வாடி வதங்கி இருண்டது.
'லக்சண நோநா எழும்பு" என்று சொல்லி இரு கைகளாலும் வாரி அணைத்து தூக்கினான். அம்மாவின் கண்கள் நீர் சொரிந்தன. உள்மனதின் ஊழிகாலக் கூச்சல் வெளியே கேட்கவில்லை. அதிலும் மோசமான கண்ணீரை முதல் நாள் இரவு கொட்டியிருந்தார்.
அம்மாவை அவரின் சிறைக்கு பொடி சிங்கோ அழைத்துப் போனான். அம்மாவின் மனம் பேசியது. பொடிசிங்கோவிடம் அவரைக் காட்டச் சொல்லிக் கேட்பமோ? நிட்சயமாகக் காட்டுவான். மறுக்க மாட்டான். மனம் துடித்தது. போக்கிலி. குட்டை நாய். உவனட்டை உதவி கேட்டால் ...... வேண்டாம். மனம் கோபம் பொங்கி எழக் கூறியது.
நடை பாதை வழியாக அழைத்துச் சென் றான். 'நோநா. உந்த அறையில்தான் உங்க கணவன்" என்றான்.
பார்க்கலாமா?"
இப்ப பெரியவன் வருகிற நேரம்."

பொடிசிங்கோ கூறியது பொய். அந்த அறையில் அப்பாவின் கணுக்கால்களில் சுருக்குப் போட்டு தலை கீழாகத் தூக்கியிருந்தனர். மயக்கமுற் றிருந்தார். ராசதேவி பார்த்தால் கதறுவார். காவலர்  ஓடிவருவர். வேலைக்கே ஆபத்து என்று பயந்தான்.
'நான் வயலில் நின்றேன். எனக்கு எதுவுமே தெரியாது." அப்பா விசாரணையின் போது மீண்டும் மீண்டும் கூறினார். 'சரி ஐயா போவென்று" விட்டு வைப்பார்களா நாடே அஞ்சும் நாலாம்மாடி உளவுத் துறை சிங்களப் பொலிசார்? அவரது அறைக்கு அழைத்துப் போய் அடி உதை போட்டு தூக்கில் போட்டுள்ளனர்.

மூன்று மாதங்கள் முடிய வருவார்கள் என்று பேச்சு ஆயிலடியில் அடிபட்டது. காத்திருந் தனர். வரவில்லை.

மூன்று மாதம் முடிய அப்பா, அம்மா தவிர்ந்த மூன்று குடும்பங்கள் விடுதலையாகி வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒவ்வொரு பிள்ளை மட்டும் விடுதலை இயக்கங்களில். என்ன சொல்லித் தப்பினார்களோ தெரியாது. பஞ்சத்துள் வாழ்ந்து துன்பப்பட்டு வந்தவர்களைப் போல கவலை சுமந்து கொண்டு வந்து சேர்ந்தனர்.

அவர்களிடம் அப்பா அம்மா பற்றி, அம்மாவின் ஒன்றவிட்ட சகோதரம் சடகோபன் மாமா விசாரித்தார். 'காண வில்லை" என்ற பதிலே கிடைத்தது.

அவர்கள் விடுதலையாகிய கையோடு சடகோபன் மாமா கொழும்பு சென்றார். நாலாம் மாடிப் பக்கம் எவரும் தலைகாட்ட அநுமதி இல்லை. சட்டத்தரணிகள் பற்றி விசாரித்தார்.
டேவிட் கமரன் நிறுவனம் பயங்கரவாத சட்டம் தொடர்பான வழக்குகளில் பிரபலமானது என்று அறிந்தார். வெள்ளவத்தையில் அமைந்த அதன் தலைமைக் கந்தோருக்குச் சென்றார்.
மேசையின் மறுபக்கத்தில் வெள்ளை சேட் கறுத்த கழுத்துப்பட்டி அணிந்த சட்டத்தரணி டேவிட்டைப் பார்த்தார். காதோரமாகவும் அடிமண் டையிலும் மயிர் கத்தையாகச் சுருண்டு நெழிந்தது. கறுப்பு மயிரிடையே வெள்ளிக்கம்பிகள் மின்னின. மேல் மண்டை பளபளவென ஒளி வீசியது.
'மிஸ்ரர் சடகோபன். இது மிக சிக்கலான வழக்கு.அவருடைய மூன்று பிள்ளைகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கிறார்கள். ராசா ராம் என்ன வாக்கு மூலம் கொடுத்துள்ளார்? ராசாதேவி என்ன வாக்கு மூலம் கொடுத்துள்ளார்? இரண்டு பேரையும் தனித்தனி விசாரித்திருப்பார்கள். சின்ன முரண் கிடைத்தாலே போதும். பலூனாக ஊதிப் பெருப்பிப்பார்கள். இன்னும் அவர்கள் தமக்கு விரும்பியபடி வாக்குமூலத்தை எழுதிப் பெற்றிருந்தால் வெற்றி பெறுவது சுலபம் இல்லை. மேலும் மூன்று குடம்பங்கள் இவர்களோடு கைதாகி விடுதலையாகி உள்ளன. அவர்கள் தாம் வெளியே வருவதற்காக ராசா ராம் பற்றி கூடக்குறைய சொல்லியிருந்தால் மேலும் சிக்கல். உடைத்து வெல்ல நிரம்ப நிரம்ப உழைக்க வேணும். நிரம்பச் செலவாகும்."
என்ன ஐயா சொல்கிறீங்கள்?"
நிரம்ப நிரம்ப செலவாகும். அதுதான் யோசிக்கிறேன்."

ராசா ராமின் சொத்து விபரங்களை சட்டத் தரணி டேவிட் அறிந்தவுடன் நிரம்ப கறக்கக்கூடிய பசு வாய்த்திருக்கிறது என்று ஏலவே திட்டம் போட்டிருந்தார்.
'ஐயா பணம் எவ்வளவு வரும்."
'பெரிதாக இல்லை. மூன்று இலட்சம் வரை வரலாம். சிலசமயம் கொஞ்சம்குறையலாம்கூடலாம்."
சடகோபன் வதனத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் நெழிவதை சட்டத்தரணி டேவிட் அவதானித்தார். சடகோபன் பத்து பதினைந்துடன் ஒழுங்கு செய்யலாம் என நம்பி வந்தவர். மீண்டும் யோசித்தார். அப்பாவிடம் வங்கியில் இருபது லட்சத்துக்கு மேல் இருப்பது தெரியும்.மூன்று இலட்சம் கொடுக்க முடிவு செய்தார்.
என்ன யோசிக்கிறீர்கள்?"
அத்தான் ராசா ராம் பெயரில் வங்கியில் பணம் இருக்குது. கையில் அவ்வளவு இல்லை."
'பறுவாய் இல்லை. செக் புத்தகம் வீட்டில் இருக்குந்தானே? ஒரு தாள் எடுத்துவாரும். நான் அவரிடம் கையெழுத்துப் பெறுகிறேன்."
'வெளியே கொண்டுவருவீங்களே?"
'நிட்சயம். உழைப்பு நிரம்ப செய்ய வேணும். மற்றவர்களால் முடியாத பலவழக்குகளைசிம்பிளாகஉடைத் திருக்கிறேன்."

பயங்கரவாதச் சட்டப் பிரகாரம் கைது செய்யப்பட்டவரை அமைச்சர் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்கலாம். மூன்று மாதமுடிவில் மேலும் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்கலாம். அவ்வாறு பதினெட்டு மாதங்களுக்கு நீதிமன்றம் கொண்டு செல்லாமலே தடுத்து வைத்து விசாரணை செய்யலாம். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காட முடியாது.

சட்டத்தரணி டேவிட்டின் திட்டம் சாட்டின் மேல் சாட்டுச் சொல்லி இழுத்துச் சென்று பதினெட்டு மாத முடிவில் வழக்கை நீதிமன்றம் எடுத்துச் செல்வதே. இதில் டேவிட் செய்ய ஏதுமில்லை. மிஸ்டர் டேவிட்டைப் பொறுத்தவரை வழக்கின் முடிவு முக்கியமில்லை. எவ்வளவு காலத்துக்கு நீட்டலாம் என்பதே அவரின் பெருங் கவலை.

படுபாவி. போற வழிக்குப் பாவம் சேர்க்கும் பச்சோந்தி. நரகலோகத்தில் கொதிக்கும் வேப்பெண் ணெயில் பொரியப்போகும் அயோக்கியன்.

எங்கள் வீடு. முல்லைக்கும் பாவலனுக்கும் உதவியாக வீடு நிறைந்த உறவினர். மூன்று மாதத்துள் வருவார்கள் என்று எதிர்பார்த்தனர். வரவில்லை. மூன்று மாதங்கள் முடிவில் பாவலன் பாடசாலை போகத் தொடங்கியிருந்தான்.
மாமா சடகோபனும், மற்றும் உறவினர்களும் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் முல்லை பாடசாலை போக மறுத்துவிட்டாள். எந்த நேரமும் முகட்டைப் பார்த்து யோசிப்பதும் அழுவதுமாக விருந்தாள்.
ஒரு தினம் மாலை வேளை. வரவேற்பறையில் மாமா சடகோபன், மற்றும் பல உறவினர் இருந்தனர். தனது அறைக்குள் இருந்து வெளியே வந்த முல்லை 'நான் நாளைக்கு கொழும்பு போகிறேன்" என்றாள்.
யாவரும் திகைத்துப் போனார்கள். அவளின் குணம் அவர்களுக்குத் தெரியும். அவளை இனி நிறுத்த முடியாது என்பதும் தெரியும். எல்லோர் கண்களும் அவளின் வாயில் நிலைத்து நின்றன. அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று பயந்தனர்.
தம்பி பாவலனையும் அழைத்துப் போகி றேன்."
'அங்கே போய் என்ன பிள்ளை செய்யப் போறாய்?" சடகோபன் மனைவி செல்லம்மா வினாவினாள்.
அங்கு போய்த்தான் யோசிக்க வேணும், மாமி."
பிள்ளை முல்லை. உனக்கு வயது பதினொன்று. உன்னாலைஎன்ன செய்ய முடியும்?"
'மாமி, என்னால் முடியக்கூடியது ஒன்று உள்ளது. முயற்சித்துப் பார்க்க விரும்புகிறன். தோல்வி என்றால் நட்டமில்லை. வெற்றி என்றால் அப்பா, அம்மா விடுதலையாவர். நாளைக்கு மெயில் புகையிரதத்தில் போகிறேன்."
தனித்தா போகிறாய்?"
அப்படியா அனுப்பப் பார்க்கிறீர்கள். சடகோபன் மாமாவைக் கூட்டிக்கொண்டு போக விரும்புகிறன்."
'நான் வர ஆயத்தம். என்ன அங்கே செய்யப் போறாய்?"
'மாமா, புகையிரதத்தில பிரயாணிக்கிற வேளை சொல்கிறன். முதலே சொன்னால் என் திட்டம் கசிந்து கெட்டுப் கெட்டுப்போம்."

அடுத்த தினம்.
கொழும்பு மெயில் புகையிரதம் அநுராதபுரத்தைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. புதன்கிழமை. பிரயாணிகள் குறைவு. இருக்கைகளில் மூவரும்குறட்டைவிட்டு நல்ல தூக்கம்.
கொழும்புக்கு அண்மையில் றாகம புகையிரதநிலையம். இன்னும் அரை மணி நேரத்துள் புகையிரதம் கொழும்பு கோட்டைபுகையிரத நிலையத்தை அடைந்துவிடும்.

'மாமா" என்று சடகோபனை முல்லை தட்டி எழுப்பினாள்.
'றாகம." என்றாள்.
சடகோபன் கண்விழித்து வினாவினார்.
'முல்லை,உனதுதிட்டம் என்ன?"
எங்கே தங்கப் போகிறோம்?"
ஹோட்டலில்."
ஹோட்டலில் இருந்து பத்து மணிக்கு புறப்படுகிறோம்."
'நாலாம் மாடிக்கா?"
இல்லை. அங்கு அப்பா அம்மா வென்றாலும் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்."
'யாராவது சட்டத் தரணியின் விலாசம் வைத்திருக்கிறாயா?"
'மாமா பதட்டப் படாதையுங்கள். பத்து மணிக்கு பார்ப்பம்."

பத்து மணி. ராக்சி வந்து ஹோட்டல் முன் நின்றது.. சடகோபன் முன் ஆசனத்தில். பின் ஆசனத்தில் முல்லை, பாவலன். காலையில் குளித்து அழகாக உடை அணிந்திருந்தனர். முல்லை சாரதியின் முதுகில் சுரண்டி 'அங்கிள் ரெசறி பிளீஸ்." என்றாள்.
சடகோபன் நடப்பதைப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்தார். திறைச்சேரி வாசலில் இறங்கினர். உள்ளே போனதும் முல்லை ஆரியரத்தினவைச் சந்திக்க அநுமதி கேட்டு துண்டு எழுதி அனுப்பினாள்.

'மாமா ஞாபகமா? சித்தப்பாவின் அஸ்தியோடு ஆயிலடிக்கு ஒருவர் வந்தார். மிஸ்டர் ஆரியரத்தின. அவரைப் பார்க்கப் போகிறேன்."
சடகோபன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று சிறிது நேரம் முல்லையைப் பார்த்தார். உள்ளம் பூரித்து மலர்ந்தது.
'மாமா நீங்கள் இங்கேயே இருங்கள். நாங்கள் இருவரும் போய்ப் பேசுகிறோம்."
சடகோபன் சற்றுத் தூரத்தில் அமைந்த கதிரையில் அமர்ந்தார்.

துண்டு கிடைத்ததும் ஆரியரத்தினவே ஓட்டமாக வந்தார். அவரால் நம்ப முடியவில்லை. இருவரையும் கட்டி அணைத்து 'அப்பா எங்கே? அம்மா வரவில்லையா? அண்ணமார் வரவில்லையா? சிவகாமி எங்கே? மிஸ்டர் சடகோபன் எப்படிச் சுகம்?"
'யாரும் வரவில்லை." முல்லை.

அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு நேரே தனது அறைக்கு சென்றார். பியோனைக் கூப்பிட்டு கோப்பி கேக் வாங்கிவரக் கட்டளை யிட்டார்.
'யாரும் வரவில்லை?"
எல்லோரும் இருக்கிறார்கள். எவரும் எங்களுடன் இல்லை."
என்ன மகளே பேசுகிறாய்?"
அங்கிள் நீண்ட கதை. சித்தப்பா குடும்பம் எரிந்து இறந்ததோடு சகோதரங்கள் படிப்பை நிறுத்தி விடுதலை இயக்கங்களில் சேர்ந்து விட்டார்கள். பழிக்குப் பழி வாங்க."
அப்பா அம்மா ...?"
அவர்கள் நாலாம் மாடியில்?"

ஆரியரத்தின கதிரையால் தன்னை அறியாமலே எழுந்தார். தொலை பேசியில் கைவைத்தார். பின்னர் ஏதோ மனதில் சுட்டிருக்க வேணும். தொலை பேசியை பயன்படுத்த வில்லை.
'ஏன் நாலாம் மாடியில்?"
நீங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை கோஷ்டி கொலை.ஆயிலடியிலே நடந்தது. அதனால் ஆயிலடியில் நாலு குடும்ப பெற்றாரை நாலாம் மாடிக்கு கொண்டு வந்தவர்கள். மூன்று மாத முடிவில் மூன்று குடும்பங்கள் விடுதலையாகி வந்துவிட்டன"
'ஏன் பாகுபாடு."
அந்தக் குடும்பங்களில் ஒவ்வொருத்தர் மட்டும் இயக்கத்தில். எங்கள் குடும்பத்தில் மூன்று அண்ணன்மாரும் விடுதலை இயக்கங்களில்."
சிவகாமி?"
முல்லை உசாரானாள். 'அப்பா அம்மா கைதான வேளை வேம்படி பாடசாலை விடுதியில் இருந்தவர். பின்னர் காணாமல் போய்விட்டார். இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக மாணவிகள் பேசுகிறார்கள்."

'அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்?"
'தெரியாது. எங்களோடு இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இந்தியாவில் பயிற்சி பெறுவதாகக் கேள்வி."

ஆரியரத்தின தலையை மேசையில் கவிழ்த்து வைத்தபடி நிரம்ப நேரம் யோசித்தார். அண்ணன் நாணயக்காரதான் நாலாம்மாடி பொறுப்பாளர். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக உளவுத் துறை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டவர். அவர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்த கொடுமைகளையும் செய்யத் துடிக்கும் அதிகாரி.


பிள்ளைகள் வெளியேறிய பின்னர் திரும்பிக் கிணற்றுக்கு அப்பால் பார்த்தேன். சுசீலா அக்கா கொடியில் காய்ந்து தொங்கும் எனது உடைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். நண்பகல் வந்து அவர்தான்எனதுஅழுக்கு உடுப்புகளை எடுத்துச் சென்று தோய்த்துக் காயப்போட்டவர்.

*** தொடரும்... ****

No comments:

Post a comment