Monday, 19 January 2015

வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 13 - நாய் வேட்டை

வவுனியா நகர பொலிசுக்கு எவரோ ஜீப் எரிந்த செய்தியை சொல்லியிருக்க வேணும். ஜீப் எரித்தது ஞாயிற்றுகிழமை. திங்கள் இரவுதான் அவர்களுக்குப் புதினம் எட்டியிருக்க வேணும். அதுவும் ஜீப் என்று சொல்லாமல் வாகனம் என்று சொல்லியிருக்கலாம்.

செவ்வாய் நண்பகல் பொலிஸ் ஜீப் ஒன்று எரிந்த களத்தைஅடைந்தது. ஒரு சாஜன். ஒரு கொன்ஸரபிள். சாரதி. சும்மா பார்த்துப்போக வந்தார்கள். ஏதோ ஒரு இயக்கத்துக்கு வாகனம் கொடுக்க மறுத்ததால் கடத்தி வந்து எரித்திருக்கிறார்கள் என்று எண்ணி அவசரப்படாமல் வந்திருந்தனர்.

பொலிசார் எரிந்த வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். திடீரென கொன்ஸ்ரபிள் சொன்னான் 'இன்ஸ்பெக்டர் மாத்தையா, பொலிஸ் ஜீப் மாதிரி இருக்குது." சமரவீர திடுக்கிட்டு சட்டைப்பையிலிருந்து எடுத்த கண்ணாடியை மூக்குமேல் மாட்டிவிட்டு உற்று உற்றுப் பார்த்தார். 'ஓம் பொலிஸ்ஜீப்தான்" என்றார்.

 உவாக்கி ரோக்கியில் இன்ஸ்பெக்டர் சமரவீர பேசினர். வவுனியா பொலிஸ் எஸ்.பி. காமினியுடன். (எஸ்.பி.---சுப்பிரீன்ரென்டன்). 'மாத்தையா ஜீப் எரிந்திருக்குது. பொலிஸ் ஜீப். எங்கள் ஜீப் எதுவாதல் பயங்கரவாதிகள் கடத்தியிருக்கிறார்களா என்று பார்க்கவும்?"
'சமரவீர, நீலைனில் நில். கொழும்பு கோல்வந்திருக்குது."
'ஓம் மாத்தையா."
'வவுனியா எஸ்.பி. காமினி பேசுகிறேன்."
'கொழும்பு நாலாம் மடாடியிலிருந்து பேசுகிறோம். ஒரு
தீவுதழுவிய சுற்று நிருபம் வாசிக்கிறேன்: துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை, சாஜன் கமலநாதன், சாரதி சுபசிங்க பற்றிய செய்தி இல்லை. காணவில்லை. அவர்கள் சென்ற ஜீப் பற்றிய செய்தியும் இல்லை. விசாரித்து உடன் பதில் தரவும். விடுதலைப் புலி பெண்லீடரைத்தொடர்ந்து சென்றனர். இறுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை கனகராயன் குளத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்."
'ஜீப் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.எனதுஅதிகார எல்லைக்குள் நயினாமடு சந்திக்கு அண்மையில் எரிக்கப்பட்டுள்ளது மேலதிக விபரத்துக்குக் காத்திருக்கிறேன்."


செவ்வாய் மாலை. வவுனியா, முல்லைத்தீவு எஸ்.பிக்கள், நாற்பது வரையான பொலிசார் ஜீப் எரிந்த களத்தில். ஓடிஓடி ஆராய்ந்தார்கள். சற்றுத் தள்ளி காட்டுள் பெண்கள் கைக்குட்டை. மாதவியினுடையது. மேலே பேப்பர்போட்டு எடுத்து பையில் பத்திரப்படுத்தினர்.
கொழும்பு நாலாம் மாடிக்கு எஸ்.பி. காமினியின் அவசர செய்தி பறந்தது. 'ஜோன்பிள்ளை குழு பற்றிய செய்தி எதுவும் கிடைக்கவில்லை. துப்புப் பொருள் கிடைத்துள்ளது. பொலிஸ் நாயுடன் வரவும்."
புதன்கிழமை கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் புறப்பட்டது. அதில் இருநாய்கள். பல களங்கள் கண்ட அனுபவசாலிகள்.ஒருநாய் விரைவில் ஓய்வு பெற இருந்தது. அவற்றின் பயிற்சியாளர்கள் இருவர் அவற்றின் கழுத்துக் கொடியை பிடித்திருந்தனர். வேறும் ஐந்து பொலிசார். துப்பறியும் பிரிவுத் தலைவர் உதவி பொலிஸ் மாஅதிபர் நாணயக்கார உட்பட.
ஹெலி வனத்தின் மேலே சுற்றிச் சுற்றி வந்தது. விபத்து மைய அருகில் இறக்க முடியவில்லை. சூழ எங்கும் பச்சைக் காடு. ஆயிலடி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இறங்கியது,
பாடசாலை நேரம். மாணவர்கள் குய்யோ என்று கத்தியபடி வகுப்பறைகளை விட்டு வெளியேறினர். ஆசிரியர்கள், 'நில்லுங்கள், போகாதீர்கள். போகாதீர்கள்" என்று கத்தியபடி அவர்கள் பின்னே குடுகுடுவென விரைந்தனர். விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வளைத்தனர். அதிபர் கறுப்புத் துவரந்தடியை ஆட்டியபடி ஓடிஓடி மாணவர்களை அதட்டினார். அவர்கள் அதிபரின் எச்சரிக்கையை அவ்வளவாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஹெலியின் அருகே யாரும் செல்லாமல் அதிபர் கவனித்தார். காற்றாடியின் இராட்சத தகடுகளின் பயங்கரச் சுழற்சியின் வேகத்தில் சற்றே தள்ளி உள்ள வாழைகளின் இலைகள் மடிந்து மடிந்து விழுந்தன. நிலத்தில் தரித்த பின்னரும்அதுமெல்ல மெல்லச் சுழன்று கொண்டிருந்தது.
ஹெலி இறங்கியதை அடுத்து, வவுனியா எஸ்.பி காமினியின் வாகனங்கள் இரண்டு வந்தன. ஹெலியில் வந்தவர்களையும் நாய்களையும் ஏற்றிச் சென்றன.

ஜீப் எரிந்த மையத்தைச் சூழ்ந்து ஐம்பதுக்கு மேற்பட்ட பொலிசார். காட்டை ஊடறுக்கும் கிறவல் வீதி. சைக்கிலில் ஐந்து வயது மகனை நெடுங்கேணி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல சின்னப்பூவரசங் குளத்திலிருந்து அவ்வழியே ஒருவர் வந்தார். சுமார் நாற்பது வயது பார்க்கலாம். வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார். சந்தேகம் விழுந்தது. புலி ஆள் தம்மை வேவு பார்க்க வந்துள்ளதாகச் சந்தேகித்தனர். மறித்து நிறுத்தி ஒரு மணித்தியாலம் விசாரணை செய்தனர். பின்னர் ஜிப்பின் பின் பகுதிக்குள் ஏற்றி வைத்திருந்தனர். அந்த மனிதனின் காதில் நாலாம்மாடி என்ற வார்த்தைகள் விழுந்தன.

பொலிசார் புலிகள்தான் மூவரையும் கடத்தியுள்ளனர் என்ற முடிவிற்கு வந்தனர்.
நாய்கள் ஜேர்மன் செப்பட் இனத்தவை. கே-9" என அழைக்கப்படும். பெரிய விளைந்த கறுப்பு நாய்கள். கால்கள் கொஞ்சம் கட்டை. குத்தி நிற்கும் செவிகள். குறுக வெட்டிய வால்கள். கண்களை உருட்டி அங்கும் இங்கும் பார்த்தன. நாய்களைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை கோஷ்டியைக் கண்டு பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் யாவரும் உற்சாகமாய்த் தொழிற்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அவசரப்பட்டுக் கொல்ல மாட்டார்கள். புலிகள் பற்றிய பொலிஸ் திட்டங்களைக் கறப்பதற்காக மறைத்து வைத்திருப்பார்கள். நாய்கள் கண்டு பிடித்துவிடும். சாதனைகள் பல புரிந்த நாய்கள். உதவியாகக் கிறவல் வீதியில் வைத்து முப்பத்திநான்கு பொலிசார் தயார் படுத்தப்பட்டனர். சகலரதும் கைகளில் துப்பாக்கி. விடுதலைப் புலிகளுக்கு இரக்கம் காட்டாது சுடும்படி நாணயக்கார உத்தர வழங்கினார்.

கைப்பற்றிய கைக்குட்டையை, நாய் பயிற்றுனர் நாய்களிடம் முகர்ந்து பார்க்கக் கொடுத்தனர். வாள் வாள் என்று குரைத்தன.துள்ளிப் பாய்ந்து காட்டுள் ஓடின. பொலிசார் தொடர்தனர்.
நாய்கள் குரைத்த சத்தத்தில் வானரங்கள் பகைவர்கள் வந்திருப்பதாக எண்ணி கிளைவிட்டு கிளைக்குப் பாய்ந்து பாய்ந்து ஆர்ப்பாட்டம் செய்தன.
நாய்கள் குரைத்து குரைத்து ஒடின. பொலிசார் உற்சாகத்தில் தொடர்ந்தனர். கால் மைல் தூரம் தாண்டி விட்டனர்.
பெரும் வெடிச் சத்தம். மரக் கிளைகள் குலுங்கின. தரையை மூடிய காய்ந்த உக்கிய இலைக் குவியல்கள் எழுந்து பறந்தன. கரும்புகை மண்டலம். முன்னே சென்ற நாய் மேலே பறந்து சென்று கீழே வந்து தொம்மென நிலத்தில் விழுந்தது. உடல் சிதறியிருந்தது.
நாயோடு ஓடியவரின் கால் முழங்காலோடு சதையாகப் பிரிந்து விழுந்து தொங்கியது.
தனது நண்பன் பிணமாக விழுந்ததைக் கண்ட மற்ற நாய் ஆவேசம் கொண்டது. உரத்துக் குரைத்து வனத்தை அதிரச் செய்து தரையை முகர்ந்து முகர்ந்து பாய்ந்து பாய்ந்து சென்றது. நூறு யார் செல்லவில்லை. வெடி ஒசை அதிர்ந்தது. முன்னங்கால்கள் இரண்டையும் இழந்து வாள்வாள் என்று கத்தியது.

பொலிஸ் அதிகாரிகள் யாவரும், எரிந்த வாகனத்தின் அருகே கிறவல் வீதியில் கூடி ஆலோசனை செய்தனர். உதவி பொலிஸ் மாஅதிபர், இரண்டு எஸ்.பிகள். ஐந்து இன்ஸ் பெக்டர்கள்.

தேடல் குழுவை வழிநடத்திய உதவிப் பொலிஸ் மாஅதிபர் நாணயக்கார பிரகடனம் செய்தார். 'தேடல் தொடராது. மேலும் பெரும் இழப்புகள் ஏற்படும். எல்லோரும்வீதிக்குத் திரும்புங்கள்."
காயப்பட்ட நாயை காவிக்கொண்டு வந்தனர். அதனை உடனடியாக ஹெலியில் ஏற்றி கொழும்பு கொண்டு சென்றனர், வைத்தியம் செய்ய.
'செத்த நாயின் சடலம் சிதறியிருக்குது. என்ன செய்வோம்?" என்று பயிற்சி வழங்குபவர் வினாவினார்.
'நாங்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்கின்றோம். பதினைந்து ஆண்டுகள் சேவை செய்த தோழன். கடமை நேரத்தில் மரணம் நிகழ்ந்தால், மனித பொலிசாருக்கு வழங்கும் அதே இறுதி மரியாதை செய்வதே வழமை. தெரியாதா? வழமையான சடல ஊர்வல மரியாதையோடு---பொலிஸ் பான்ட் வாத்தியம் இசைக்க---அடக்கம் செய்ய வேண்டும்." நாணயக்கார.
நிலக்கண்ணி வெடிகள் எங்கேயும் வெடிக்கலாம் என்ற அச்சம். இறந்த தோழனின் உடலைச் சேகரிக்க ஒரு மணி நேரம். ஆயிலடி பாடசாலையில் தரித்து நிற்கும் ஹெலிக்கு எடுத்துச் சென்றனர்.
'தேடுதலைத் தொடராமல் போனால் பிரதமர் கோபிப்பார். பிரதமருக்கு என்ன பதில் சொல்வது?" நாணயக்கார.
'மாத்தையா, தேடுதலை கைவிட்டது என்று ஏன் சொல்ல வேண்டும். காடெல்லாம் சல்லடை போட்டுத் தேடினோம். புலிகள் அடையாளம் எதுவும் கிடைக்க வில்லை. இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை. பொலிஸ் சாஜன் கமலநாதன், பொலிஸ் சாரதி சுபசிங்காவைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். நாங்கள் வெகு விரைவில் அவர்களை மீட்போம். அப்படி பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவோம்." காமினி.


வியாழக்கிழமை ஆயிலடி அரசினர் பாடசாலை தொடங்கிவிட்டது.
'என்ன கெட்ட நாற்றம்?" அதிபர்.
'என்ன கெட்ட நாற்றம்?" ஆசிரியர்கள்.
'என்ன கெட்ட நாற்றம்?" மாணவர்கள்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் சனசமூக நிலையத்தின் முன் நின்று 'ஓடி வாங்கோ! ஓடி வாங்கோ! கொலை! முன்றுபேர் கொலை!" என்று அவலக் குரல் எழுப்பினர்.

ஆள்மாறி ஆள் மூக்கைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தனர்.

அதிபர் நடுங்கினார். சூழ்ந்து ஆசிரியர்கள். 'பொலிஸ் வருவான் சேர். பயமாக இருக்கிறது," ஓர் இளம் ஆசிரியர் அழுதழுது பேசினார். அதிபர் பதில் பேசவில்லை. முழுசிக்கொண்டு நின்றார். தெய்வானை ரீச்சர் தொங்கலை இழுத்து இறுக்கியபடி, 'சேர், பாடசாலையை உடனே மூடுங்கள். நீங்கள் றெயினைப் பிடித்து யாழ்ப்பாணம் ஓடுங்கோ." என்றார்.
சுணக்கமில்லாது பாடசாலையை மூடினார். பொலிஸ் வருவான். கிண்டுவான். அள்ளிக்கொண்டு போவான். பயத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் யாவரும் மாயமாய் மறைந்து போயினர்.


அம்மா நடந்த, நடக்கின்ற எல்லாக் கதைகளையும் கோர்வைப் படுத்திப் பார்த்தார். ராச வம்சங்களில் இடம் பெற்ற சூதுவாதுகள் கொலைகள் பற்றிச் சிந்தித்தார். நடந்தவற்றை அவரால் ஊகிக்க முடிந்தது. நல்லவேளை. சிவகாமியும் மற்றும் இருவரும் சனசமூகநிலையத்தில் தங்கியது அவருக்கு---கணவனுக்கு---தெரியாது.சொல்லாமல் விட்டது நல்லதாய்ப் போய்விட்டது. அதிட்டம் எம் பக்கம் உள்ளது என்று ஓசை வெளியே கேளாது மனதுள் சொல்லிக் கொண்டார்.

முல்லையும், பாவலனும் பாடசாலையால் வந்தனர். அவர்களுக்கு அம்மா சொல்லி வைத்தார், 'கவனம், யார் கேட்டாலும் சிவகாமி வேம்படி விடுதியில் என்று சொல்லவும். அப்பாவுக்கும் அதே பதில்தான்.வேறுஒன்றும் தெரியாது. கவனம். கவனம்."


அடுத்த தினம் பிற்பகல். ஆயிலடி பாடசாலையில் பொலிசார் குவிந்தனர். நூறுபேர் வரை. பத்திரிகையாளர் வேறு. இரண்டு ஹெலிகள் அடுத்தடுத்து விளையாட்டு மைதானத்தை அடைந்தன. துப்பறியும் இலாகாத் தலைவர் நாணயக்கார, வவுனியா எஸ்.பி.காமினி. வேறும் பொலிஸ் அதிகாரிகள்.

பாடசாலைக்குள் இருந்து ஆலோசனை நடாத்தினர்.

'யார் முதலில் கண்டது?" உதவிப் பொலிஸ் மாஅதிபர் வினாவினார்.
'தெரியவில்லை. அங்கே சடலங்கள் இருப்பதாக பேச்சு அடிபடுவதாக எவரோ தொலை பேசியில் சொன்னார்." வவுனியா எஸ்.பி காமினி.
'பெயர் கேட்டியா?"
'போனைக் கற் பண்ணியிட்டார்."

உதவிப் பொலிஸ் மாஅதிபர் ஆலோசனைப்படி சடலங்கள், சமாதான நீதிமானின் பிரேத விசாரணையை அடுத்து, அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்து, பொலிஸ் மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நடாத்த ஏற்பாடுகள் நடந்தன.
பொலிசார் ஆயிலடியைச் சுற்றி வளைத்து, வளர்ந்த பிள்ளைகளின் பெற்றாரை ஆயிலடி பாடசாலைக்குச் சாய்த்து வந்தனர். மொத்தம் நாற்பத்தி ரண்டு பேர். கணவன் மனைவியாக இருப்பத்தியொரு சோடிகள். தனித்தனியே விசாரித்தனர்.
ஆயிலடியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றார் இருபது பேரை விடுவித்தனர்.
ஏனையவர்களை மூன்று மறைப்புகளில் வைத்து விசாரித்தனர். அதட்டி வெருட்டி ஓரளவுக்கு உண்மையைக் கறந்தனர். எட்டுப் பெற்றார்---நான்கு குடும்பம்---தவிர்ந்தவர்களை விடுவித்தனர். விடுவிக்கப்படாத பெற்றார்களின் பிள்ளைகள் தமிழ் ஈழவிடுதலை அமைப்புகளில் இருந்தனர்.
விசாரணையில்அப்பாவின், ராசா ராம்குடும்பத்தின்மூன்று ஆண்கள்---வீரக்கோன், யோகன், சங்கிலி---விடுதலை அமைப்புகளில் உள்ளமை தெரியவந்தது.
அம்மாவைக் கைது செய்து கொண்டு வந்தனர். 'எங்கே ஒளித்திட்டான் உன் புருசன்?" என்று அதட்டி விசாரித்தான் இன்ஸ்பெக்டர்அமரசேகர..
'ஒளிக்கவில்லை. வயலில் விதைப்பு. ஐந்து நாட்களாக நடக்குது. வாடியில்தான் விதைப்பு முடியும்வரை தங்குகிறவர்."
'எங்கே வயல்?" எஸ்.பி. காமினி வினாவினான்.

அவரைக் கைது செய்ய காமினியின் ஜீப் கரடியன் குளக்கட்டு மேலால் விரைந்தது.

அப்பா கைவிலங்கோடு பாடசாலைக்குள் நுழைந்தார்.
அவருக்கு எதுவுமே புரியவில்லை. மூன்று பிள்ளைகள் இயக்கத்துக்குப் போனதால் கைது என்று எண்ணினார். பாடசாலையில் அம்மா கைவிலங்கோடு இருப்பதைக் கண்டு ஆடிப்போனார்.

விடுதலை செய்யாத எண்மரையும் கொழும்பு நாலாம்மாடிக்கு ஹெலியில் கொண்டு சென்றனர்.

அம்மா, அப்பாவை கைவிலங்கோடு ஹெலியில் ஏற்றுவதை முல்லையும் பாவலனும் பார்த்துக்கொண்டு வளவு வாசலில் நின்றனர். கண்களில் ஆறுகள் ஊற்றெடுத்துப் பாய்ந்தன.
அந்தக் கவலையோடு எனக்கு என்ன ஆனதோ என்ற கவலையும் பற்றிக்கொண்டது. அம்மாவுக்குத் தெரிந்த விடயங்கள் அவர்கள் இருவருக்கும் ஓரளவு தெரிந்திருந்தன. முல்லைக்கு மேலதிகமாகத் தெரியும். முல்லை மாதவி அக்காவோடு கனநேரம் தனித்திருந்து கதைத்தவள். அவள் எல்லாவற்றையும் ஊகித்திருப்பாள்.கொழும்பு நாலாம் மாடி. பொலிஸ் உளவுத் துறையின் பயங்கர தலைமை மையம். அங்கு சென்றவர் கதைகள் குரூரமானவை.சித்திரவதை நரகம். நாலாம் மாடி என்றாலே நாடு நடுங்கும்.

*** தொடரும்... ***

No comments:

Post a Comment