Friday 17 July 2015

எங்கே போகிறோம்? - சிறுகதை


கொழும்பிலிருந்து புறப்பட்ட சொகுசு பஸ், நீர்கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

புறப்பட்ட நேரத்திலிருந்தே செல்வராசா முகத்தை 'உம்' என்று வைத்திருந்தான். உயர்ந்த தோற்றமும், ஒடிந்து விழுமாப் போன்ற மெல்லிய தேக அமைப்பும் கொண்டவன் அவன். ஆங்காங்கே தலை நரைக்கத் தொடங்கியிருந்த போதிலும் வயது ஐம்பதிற்குள்தான் இருக்கும். எண்ணெய் பூசி தலையை ஒழுங்காக வாரி விட்டிருந்தான்.

அவனுக்குப் பக்கத்து ஆசனத்தில் சந்திரன். சந்திரன் செல்வராசாவிற்கு நேர் எதிரான தோற்றம் கொண்டவன். கொழுத்த உடலமைப்பு. சுருள் சுருளான கன்னங்கரேலென்ற கேசம். கலகலப்பான பேர்வழி. அவன் செல்வராசாவுடன் கதைத்துவிடத் துடித்தான்.

அவர்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் - ஒரு சிறுமி. அக்காமீது சாய்ந்திருந்த சிறுவன், ஏதோ குறும்பு செய்திருக்க வேண்டும். 'கிளுக்' என அவள் சிரிக்க, அந்தச் சிரிப்போடு அவள் கன்னங்களும் சிவந்து போயின. அழுக்குப் படாத சிரிப்பு என்றுமே அழகானது தான்.

 அந்தச் சிறுவனின் வயதுதான் சந்திரனின் மகளிற்கும் இருக்கும். 'வரேக்கை ஓடிப் பிடிச்சு விளையாட - தம்பிப் பாப்பா ஒண்டு வாங்கிக் கொண்டு வாங்கோ' மகள் டுபாய்க்கு எழுதிய கடிதத்தின் வரி சந்திரனின் நினைவிற்கு வந்தது. கூடவே சிரிப்பும் குமிழியிட்டது.

சந்திரன் டுபாய் சென்று, உழைத்துப் பணம் தேடப் புறப்பட்டவன். தனது நாலு சகோதரிகளை கரை சேர்த்த பெருமையோடு நாடு திரும்பியிருக்கிறான். இருந்தும் கரை சேர்ந்த சகோதரிகளில், வித்தியா இப்போ விதவையாகி விட்டாள். தங்கை சுகந்தி காத்திருக்கின்றாள்.

"கடைக்குட்டி சுகந்திக்கு ஒரு வழி பண்ண வேண்டும். மிச்சம் பிடித்துக் கட்டிய வீட்டையும் பார்க்க வேண்டும்."

78 இல் போக்கு - இப்ப 86 இல் வரவு. போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியமும். மணம் முடித்து ஆறு மாதங்கள். ஆறே மாதங்கள்! அதற்கடுத்த மாதங்களில் பிரிந்து டுபாய் போக வேண்டிய நிலமை. அப்படி அவனுக்கு அமைந்து விட்டது.

தம்பிப் பாப்பா யாருக்கு வேண்டும்? மகள் ஆரபியின் ஆசையா? அல்லது குழந்தையை சூசகமாகக் காட்டும் மனைவியின் ஆசையா?

மனைவி ஜெயந்தியைப் பற்றி வண்ண வண்ணக் கனவுகள் கண்டான். சிதைந்த கனவுகளின் துணுக்குகளைத் தழுவிக் கொண்டான். காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நுழைந்தான். வானில் சஞ்சரித்தான். கடலினுள் மூழ்கினான்.

கவிதைகள் பிறந்தன. சந்தம் வழியும் கவிதைகள்.

மாரி காலத் தொடக்கம். புத்தளத்தைக் கடந்து விட்ட பஸ் வண்டிக்கு வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. மெல்லிய தென்றல் ஏதோ இரகசியங்களை காவிக் கொண்டு வந்து காதிற்குள் தள்ளிவிட்டுச் சென்றது. எவ்வளவு காலம் - அந்த ஆசையை மறந்து போய் வாழ்ந்து விட்டான்.

பஸ் கண்ணாடி மீது, மணிமணியாக விழுந்த மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து, கோடிட்டு வழிந்து ஒழுகின. சிறுவன் உட்புறமாகக் கண்ணாடி மீது கிறுக்கி வேடிக்கை செய்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தவன், பின்புறம் திரும்பிக் கைகளைக் கோலி கண்ணுக்குள் வைத்து உருட்டி,
"அப்பா, நித்திரை வருது" என்றான்.

பார்வையில் மின்னல். சந்திரனின் பார்வையில் ஒரு மின்னல்.

செல்வராசாவுடன் கதைப்பதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பம்.

"உங்களுடைய பிள்ளையளா? எதுவரை போகின்றீர்கள்?"

செல்வராசா தலையை நிமிர்த்தினான். விழிகளில் இலேசான ஈரம் கசிந்தது.

"ஆச்சிக்குச் சுகமில்லை."

அவனது பதில் சம்பந்தமில்லாமல் இருந்தது. சம்பாசனை வாழைக் குருத்துப் போல மளமளவென்று வளர்ந்தது.

செல்வராசா எதை மறக்க வேண்டும், மறைக்க வேண்டும் என்று நினைத்தானோ அது மெல்ல வெளியே வரத் தொடங்கியது. சிதைந்து போன பழைய நினைவுகள் எழுந்து வந்தன.

                                xxx                                                         xxx                                                         xxx                                        
செல்வராசா அப்பொழுது, கட்டுகஸ்தோட்ட என்ற மலையகக் கிராமத்தில் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தான். எட்டு வருடங்களாகத் தனியே இருந்து வந்த செல்வராசா, தனது மனைவி செல்வி, பிள்ளைகளை அக்கிராமத்திற்கு அழைத்துச் சென்று இன்னும் ஒரு வாரமே ஆகவில்லை. இனிமேல் செல்வி அவரோடு நிரந்தரமாகவே தங்கி விடுவாள். சுமை இறக்கிய சுகம் அவனுக்கு. பிள்ளைகளையும் அவர்கள் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் படிக்க வசதி செய்தாயிற்று. இனி அவனது அன்றாட காரியங்களில் அவர்களும் பங்கு பற்றுவார்கள். இப்படித்தான் அவன் கோட்டை கட்டினான்.

ஆனால் அந்த 83 ஆம் ஆண்டு - ஒரு முழு நிலவு. அந்த முழு நிலவிலேதான் எல்லாமே அரங்கேறின. கொழும்பு நகரெங்கும் இனக் கலவரம். பெற்றோல் ஊற்றிக் கொழுத்தப்பட்ட தமிழர்கள் கொழும்பு வீதிகளிலே ஓலமிட்டு ஓடிய காலம். இனவெறி கொண்ட மிருகங்கள், தமிழர்களின் குருதியில் தீர்த்தமாடிய கறுப்பு ஆடி. ஊழிக் கூத்தாடிய இனவெறி, தொற்று வியாதியாக மலைநாட்டுக் கிராமங்களையும் இரை கொள்ளும் என்று செல்வராசா எண்ணவில்லை. பாம்பின் நிழலில் தேரைகள் அமர்ந்திருப்பது போல உணர்ந்தான்.

பிள்ளைகளும் செல்வராசாவும் பாடசாலைக்குப் போய் விட்டார்கள்.

ஒரு தமிழச்சியின் ஓலம், எல்லையில்லாப் பெருவெளி எங்கும் ஒலித்து அடங்கும் வரைக்கும், அந்த முகம் தெரியாத கரடுமுரடான உருவங்கள் அவளை எச்சிற்படுத்தி அசிங்கமாக்கின.

அந்த நிகழ்வின் பிறகு அவன் நினைவில் மிருகங்கள் கடகடவென்று ஓடுவதும், இருளுக்குள் தரதரவென இழுத்துப் போவதுமான பிரமைக்குள் அவன் தள்ளப்பட்டான்.

                                xxx                                                         xxx                                                         xxx                                                        
பஸ்வண்டி இன்னமும் அனுராதபுரத்தைத் தாண்டவில்லை. சாரதி பாக்கு வெற்றிலை போட்டுக் கொண்டு பஸ்சை வெட்டி வெட்டி ஓடிக் கொண்டிருந்தார். அந்தச் சொகுசு வண்டி ஒரே இராகத்தில் கூவிக் கொண்டிருந்தது. 'ரசிகன் ஒரு ரசிகை' திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அனேகமாக எல்லாரும் கோழித் தூக்கம். யார் அதைப் பார்த்தார்கள்?

"நேற்றைக்கு யாழ்ப்பாணத்திலை குண்டு ஒன்று வெடிச்சுதாம். 'ஸ்பொட்டிலே' கனபேர் செத்துப் போச்சினமாம்" என்றார் செல்வராசாவிற்குப் பக்கத்து ஆசனத்தில் இருந்த ஒரு கிழவர்.

திடுக்கென விழுந்த பல்லி, திகைத்துக் கிடந்து, பின் பொடுக்கென மீள்வது போலச் சுய உணர்வுக்கு மீண்டான் செல்வராசா.

செல்வராசாவின் கதையைக் கேட்டதின் பின்னர், அந்த நினைவோடு அரைத் தூக்கத்தில் இருந்த சந்திரன் கண்களை விரித்துச் செல்வராசாவைப் பார்த்தான். ஒரு விசித்திர யோசனை எட்டி எட்டிப் பார்த்தது. தங்கை வித்தியா எண்ணத்தில் வந்து போனாள். கனவுகளைத் தேக்கிக் கவிதைகளாக்குகையில், கண்ணீரில் விழுந்தது அவள் வாழ்க்கை. செல்வராசாவைத் தன் தங்கையின் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள அவன் மனம் ஆவல் கொண்டது. கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்; ஆனால் அப்படிக் கேட்கவிடாது தாழ்வு மனப்பான்மை தடுத்துக் கொண்டது. ஒரு நாள் பயணத்திலே சந்தித்துவிட்டு எப்படிக் கேட்பது?

ஒருவேளை செல்வராசா ஒத்துக் கொண்டு, தங்கை வித்தியா அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால்? 'ஆல்' போல் விருட்சமாகியது சந்திரனது சிந்தனை.

இடையே கடை ஒன்றிற்கு முன்பாக பஸ்ஸை நிற்பாட்டினார்கள். நசநசத்துத் தூறிக்கொண்டிருந்த மழை விட்டிருந்தது. வந்தவர்கள் சிற்றுண்டி, தேநீர் அருந்திக் கொண்டதும் மீண்டும் ஏறிக் கொண்டார்கள். செல்வராசா இறங்கவுமில்லை - தேநீர் அருந்தவுமில்லை. மிகவும் பலவீனம் அடைந்தவன் போலக் காணப்பட்டான். சந்திரன் மூன்று கோலாரின்கள் வாங்கி வந்து செல்வராசாவிடம் கொடுத்தான்.

அவர்கள் இருவரும் நெருக்கமானார்கள். நட்பு வளரத் தொடங்கியது.

அதன் பின்னர் மதவாச்சியில் பஸ் நின்றது. இரண்டு பிரயாணிகள் இறங்கினர். மன்னார் போகும் வீதிப் பக்கமிருந்து ஒருவன் கை காட்டியபடி ஓடி வந்தான். முறுகிய தேகத்தின் தலையில் ஒரு வாழையிலைக் கட்டு. இளைக்க இளைக்க பஸ்சிற்குள் ஏறியவன், "காலை உயர்த்தண்ணை" என்று சொல்லி அந்த இலைக்கட்டைசந்திரனின் இருக்கையின் கீழ் தள்ளி விட்டான். இலையில் படிந்த சேற்று நீர் தெறித்து சந்திரனின் பளபளவென்ற ஆடையில் பரவிற்று. அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டான்.

செல்வராசா கண்ணாடிக்கு அப்பால் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். காடுகள் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தன. தருணம் பார்த்துக் காத்திருந்தான் சந்திரன். 'நிச்சயம் ஊர் போய்ச் சேர்வதற்குள் கேட்டு விடலாம்!' அவன் மனம் அங்கலாய்ந்தது.

ஈறப்பெரியகுள சோதனைச் சாவடி. துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவம் படபடவென பஸ்சிற்குள் புகுந்தது.

பிரயாணச் சோம்பலில் எல்லாரும் தூங்கி வழிந்து கொண்டிருக்க - இராணுவச் சிப்பாயின் கையில் தொங்கிய அந்த வாழையடி வாழை இலைக் கட்டு திருப்பள்ளி எழிச்சி பாடியது. சுருள் சுருளாக நோட்டீசுகள். புலிப் படம் வேறு. இது போதாதா வினையை ஆரம்பிக்க? குளம் குட்டையில் சேற்றைக் கலக்கிய மாதிரி இருந்தது.  உரிமையாளன் இல்லாத சுருள்கள்.

மதவாச்சியில் ஏறியவன், இடையில் மறைந்து விட்டான். சந்திரனுக்கு வாழையிலைக் கட்டோடு ஏறியவனை நன்றாக நினைவிருந்தது.

முதலில் ஒரு அடி ஒரு பிரயாணிக்கு செம்மையாக விழுந்தது. நித்திரையில் இருந்தவனைத் தூக்கிப் பளீரென ஒன்று கொடுத்தவுடன் - ஏதோ விபரீதம் நடந்து விட்டதெனப் பதறியடித்து விழித்துக் கொண்டனர். பயங்கரத்துள் பிரயாணிகள் கண்கள் பிதுங்கின. கால்கள் உதறின.

ஆண்களில் ஆறுபேர் இறக்கப்பட்டு, சோதனைச் சாவடி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாம் வாசலில் கோழித் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்த ஒருவன் திடுக்கிட்டான். அது அவசரமாகக் கதவைத் திறந்து விட்டு 'சலூற்' போட்டது.

சந்திரன் டுபாயில் இருக்கும் பொழுதே தடுப்புமுகாம்கள், சித்திரவதைகள், இராணுவ அடக்கு முறைச் சட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருந்தான். நினைத்த நேரத்தில் கைது செய்தல், சுட்டுக் கொல்லுதல் நிரந்தரமாகிவிட்ட நிலையில், வடக்குக் கிழக்கில் உள்ள எந்த மனிதருக்கும் வாழுகிற உரிமைக்கான உத்தரவாதம் இல்லாமலிருந்தது. எல்லாருக்கும் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலமையில் - பத்திரமான எதிர்காலம் என்பது பகற்கனவு என்பது புரிந்தது.

போராட்ட நெருக்கடிகள் தீவிரமடைவதற்கு முன்பே அவன் நாட்டை விட்டுப் போய்விட்டாலும், அவனுக்கு அதையிட்டு மன நெருடல்கள் உண்டு.

வாழை இலைகளுக்குள் மறைந்திருந்த 'நோட்டீசுகள்' கை, கால் முளைத்து சோதனைச் சாவடியெங்கும் உலாவின.

"உங்க எவனாவது இலை சம்பந்தம் இல்லை இருக்கலாம். அதிங் இல்லாட்டி நீங்க ஒருத்தனுமே இதே கொண்டுவறான் இல்லை இருக்கலாம். ஆனா நமக்கு ஒரு தெமிழன் நிச்சயமா தேவை. ஒவ் மட்ட ஓணாய்."
'செக்கன் லெப்ரினன்' பட்டியணிந்த ஒரு இராணுவ வீரன் துப்பாக்கியை ஆட்டி ஆட்டிக் கொச்சைத் தமிழில் உறுமினான்.

"நிஜம் சொல்லுடா ஒருத்தன். இல்லாட்டி ஆறு தெமிழனும் சுட்டுக் கொல்லுறது நான். ஒவ். பறைத் தெமிழோ."

வார்த்தைக்கு வார்த்தை உதை விழுந்தது. பேய் வீட்டில் சில நிமிடங்கள் அமைதி குடி கொண்டது. சில மிருகங்கள் கடகடவென்று வந்தன. கனத்த 'பூட்ஸ்' ஒலிகள் வானைப் பிளந்தன. இவர்கள் புழுதித் தரை மீது புரண்டனர். பாவமும் புண்ணியமும் போதி மாதவனின் போதனைகளும் சேர்ந்து புரண்டன. இருபக்க காதுகளிற் குள்ளும் புகையிரதங்கள் ஓடி, ஒன்றுடன் ஒன்று மோதி செவிப்பறை நாசமுறும் வகையில் சிதறுண்டு போயின. உடலினுள் மின்சாரம் கணப்பொழுது பாய்ந்து சுள்ளிட்டு உயிர் நரம்புகள் அறுந்தன.

செல்வராசாவிற்கு தலை உடைந்து இரத்தம் இழையாகப் பரவியது. அவர்கள் நெடு நேரம் முழங்காலில் இருத்தப் பட்டனர். நிலமெல்லாம் இரத்தத்தில் பிசுபிசுத்தது.

ஆத்திரம் தாளாமல் பலமாகக் கத்தினான் ஒரு சிங்களச் சிப்பாய். பாசக் கயிறு வீசுவதுதான் பாக்கி.

சந்திரன் திடுக்கிட்டான். அவன் சிந்தனை வேகமாகச் சுழன்றது. முகத்தின் கோலங்கள் மின்னல் வேகத்தில் மாறின. இருண்ட முகம் வெளித்தது.

"ஆறு உயிர்களும் போக வேண்டுமா?" - சந்திரன்.
"என்ன பேசுகிறாய்?" - செல்வராசா.

"ஆறு பேரையும் சுட்டுக் கொல்லப் போறான்கள், இல்லையா?"
"ஆம்!"

"ஏன் அப்படி? ஒன்று நின்றால் போதுந்தானே?"
"நீ என்ன பேசுகிறாய்?"

செல்வராசா சந்திரனின் முகத்தை உற்றுப் பார்த்தான். மிகத் தெளிவாக இருந்தது. சோகம் இல்லை.

'அது என்ன புது உணர்ச்சி? மனம் விசாரணை செய்தது.

சந்திரன் எழுந்தான்.

இனி ஒன்றும் செய்வதற்கில்லை. எல்லாம் முடிந்த கதையாகிவிட்டது என்று எண்ணினான். அவனைப் பொறுத்தவரை எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போயிற்று.

கிரகங்கள் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டன.

சந்திரன் உள்ளே சென்றான். ஒரே ஒரு பொய் சொன்னான்.

மற்றவர்கள் விடுபட்டனர்.

பஸ்சில் செல்வராசா கல்லாய்ச் சமைந்திருந்தான்.

ஏனையவர்கள் சந்திரனைத் திட்டித் தீர்த்தபடி தங்களது பிரயாணத்தைத் தொடர்ந்தனர்.


1996, இலங்கை எழுத்தாளர்களின் 26 சிறுகதைகள் (2002), திருத்தி எழுதப்பட்டது (2007)









1 comment:

  1. கொடுமையை உணர முடிந்தது
    அற்புதமான சிறுகதை
    முடித்த விதம் மிகக் கச்சிதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete