Monday 25 January 2016

அக்பர் விடுதிக்கு வந்த அழகி – குறும் கதை


அவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம்.

ரெலிபோன் அடித்தது. எடுத்தேன்.

மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி.

“உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள்” ஒருவாறு தானே தன்னைத் தேற்றிக் கொண்டு சொன்னாள் தமிழினி.
நான் மனைவியிடம் ரெலிபோனைக் கொடுத்துவிட்டு, அவளருகில் விடுப்புப் பார்க்க நின்றேன்.

மனைவி ’ஆ… ஆ…’ என்று வாய் பிளந்தாரே தவிர ஒன்றும் கதைக்கவில்லை. குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது. நான் ஒட்டுக் கேட்பதற்காக மனைவியின் காதருகே சென்றேன்.

“ஒரு நிமிஷம் பொறுங்கோ. போங்கோ அங்காலை” என்னைத் தோட்டப்பக்கமாகக் கலைத்தாள் மனைவி. சரி… பிறகு சொல்லத்தானே வேண்டும். நான் அங்கிருந்தபடியே கண்ணாடிக்குள்ளால் மனைவியைப் பார்த்தேன். மனைவியின் முகம் பேயறைந்தது போல இறுகிக் கிடந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கதைத்தால் அவளும் அழுதுவிடுவாள் போல இருந்தது.

ஜெயரதன் தமிழினிக்குத் தெரியாமல், சிறீலங்காவிற்கு யாரோ ஒரு பெண்ணுக்கு காசு அனுப்பியிருக்கின்றான். ஒரு தடவையல்ல. பல தடவைகள். விஷயத்தைப் போட்டுடைத்தாள் மனைவி.

“இது எப்பிடி தமிழினிக்குத் தெரியும்?”
“ஜெயரதன் வேலைக்குப் போனாப் பிறகு அவருடைய வைப்புச் செப்புகளை தமிழினி கிழறிப் பார்த்திருக்கின்றாள். கள்ளன் பிடிபட்டுக் கொண்டான்” என்றாள் மனைவி.

ஜெயரதன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் எனக்கு அடுத்த வகுப்பில் படித்தான். படித்தான் என்றால் இருபது வருடங்களுக்கு முன்னர் என்று கொள்க. அவுஸ்திரேலியாவிற்கு வந்து முதன் முதலில் அவனை நான் சந்தித்தபோது, அவனையும் அவனது இரண்டு பிள்ளைகளையும் பார்ப்பதை விடுத்து அவன் மனைவியைத்தான் பார்த்தேன். தமிழினி ’அவள்’ அல்ல என்பதைக் கண்டு கொண்டேன். அவள் அழகி, மெல்லிய உடல், உயரமான பெண், வெள்ளை நிறம். தமிழினி இவையெல்லாவற்றிற்கும் நேர்மாறு.

அக்பர் ஹோல் ஆண்களுக்கான விடுதி என்பதும், பொறியியல் பீடத்திற்கு மிக அண்மையாக உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. ஆனால் அகபர் ஹோலில் ஒரு போதும்  பெண்கள்  வாடை வீசியது கிடையாது. பொறியியல் பீடத்தில் படிக்கும் பெண்களில் மறந்தும் ஒருவர்கூட அங்கு வந்தது கிடையாது.  ஹோல் கன்ரீன் நடத்துபவர்கள்கூட ஆண்கள்தான். அக்பர்ஹோல் ஆண்கள் சாம்ராஜ்ஜியம்.

ஜெயரதன் பெண் ஒருத்திக்கு காசு அனுப்புகின்றான், அதுவும் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நாளில் இருந்து அனுப்பி வருகின்றான் என்றபோது எனக்கு ’அவள்’ தான் ஞாபகத்திற்கு வந்தாள்.

காலையில் தினமும் பேப்பர் போட்டு, மாலையில் ‘பிஷா’ டிலிவரி செய்து கஸ்டமாகப் பணம் சம்பாதித்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பணம் அனுப்பியிருக்கின்றானே என்பதுதான் தமிழினியின் பிரச்சினை.

யார் அந்தப் பெண்?

J

இது நடந்து இருபது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.

ஒரு நாள் சனிக்கிழமை காலை பத்து மணி இருக்கும். அக்பர்ஹோல் வாசலருகே ஒரு இளம்பெண் மயிந்திக்கொண்டு நின்றாள். ஹோலை விட்டு வெளியே போவோர் வருவோரிடம், ஜெயரதனைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியபடி நின்றாள். பார்த்த மாத்திரத்தில் கொள்ளை அழகு கொண்ட அந்த இளவயதுப் பெண் தன்னந்தனியனாக நின்றது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஏதோ ஒரு அவலம் அவளை இங்கே கொண்டுவந்து விட்டிருக்க வேஎண்டும்.

செய்தி ஜெயரதனைச் சென்றடைவதற்குள் அக்பர்ஹோல் எங்கும் பரவி வார்டனையும் எங்களையும் எட்டியது.

எங்களில் சிலர் புட்டுக்குழலை அவசர அவசரமாக அணிந்து கொண்டோம்.
”எங்கையடாப்பா காலமையே கிழம்பிட்டியல்?”
”கண்டிக்குப் போட்டு வாறம்.”

கண்டிக்குப் போவது போல சொல்லிக் கொண்டு, பஸ் ஸ்ராண்டிற்குப் போவதும் பின்னர் மீண்டும் அறைக்குத் திருப்புவதுமாக நடை பழகினோம்.

”சே! பஸ் போட்டுதப்பா… றூமுக்குப் போட்டு கொஞ்ச நேரத்திலை திரும்பி வருவம்.”

அந்தப் பெண் யார் என்று அறிவதுதான் எமது குறிக்கோள்.  கடைக்கண்ணால் அவளைப் பார்த்தோம். மூக்கும் முழியுமாக அழகாகவிருந்த அவளை வார்டன் துருவிக் கொண்டிருந்தார்.
ஜெயரதன் ரொயிலற்றுக்குள் ஓடி ஒளித்துக் கொண்டதாகச் சொன்னார்கள்.

பார்க்கப் பார்க்க பார்க்க வேண்டும் போன்றதொரு அழகு அவள். நாங்கள் மூன்றாவது றவுண்டாக - ஐந்து நிமிடங்கள் பஸ் ஸ்ராண்டில் இருந்துவிட்டு, மீண்டும் அறைக்குத் திரும்பும்போது ஜெயரதன் அங்கே இருந்தான்.

அவளுக்கு நேர் எதிராகக் கதிரையைப் போட்டுக் கொண்டு அவளை விழுங்கிவிடுமாப் போல நெருங்கி உட்கார்ந்திருந்தான் ஜெயரதன். அவள் அவனது கையைப் பிடித்து ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவளது முகம் அழுது வீங்கியிருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் கோடு போட்டு இறங்கி காய்ந்திருந்தது. ஜெயரதன் அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

“மச்சான் இது வேற கேஸ். உவன் தொழிலுக்குப் போய் மாட்டிக் கொண்டு விட்டான். காசைக் குடுக்காமல் ஏமாத்திப் போட்டான். அதுதான் அவள் ஹோல் வரைக்கும் வந்திருக்கிறாள்” என்றான் ஒருவன். அந்தக் கதை கை கால் முளைச்சு எல்லா இடமும் பரவியது.

மதியம் ஒரு மணி கடந்த வேளையில், நிஜமாகவே கண்டி செல்லப் புறப்பட்டபோது விருந்தாளிகள் பதிவிடும் கொப்பியை எட்டிப் பார்த்தோம். அவளது பெயர் ’சாந்தி’ என்று பதிவாகி இருந்தது.

கொஞ்ச நாட்களாக ஜெயரதன் றூமிற்குள் அடைபட்டுக் கிடந்தான். படிப்பு ஓடவில்லை. தனது சிறிய ரேப் றக்கோடரில் ’அமைதிக்குப் பேர்தான் சாந்தி’ என்ற பாடலைப் போட்டு பலமுறை லயித்திருந்தான். விரிவுரைகள் சிலவற்றிற்கும் மட்டம் போட்டான். இரண்டாம் வருடத்தில் இரண்டு பாடங்கள் கோட்டை விட்டான்.

‘சாந்தி’ என்று அவனைப் பட்டம் தெளிக்கும்போது சும்மா சிரித்துவிட்டுச் செல்வான். விருப்பம் இல்லாமல் சிரிப்பு வராது என்பது எங்கள் தத்துவம்.

நாளாக எல்லாம் மறக்கப்பட்டது. எல்லாரும் பிரிந்து வேறு திசைகள் சென்று விட்டோம்.

J
சிறிது நேரத்தில் திரும்பவும் தமிழினி ரெலிபோன் செய்தாள். அவளுடன் கதைத்த மனைவி, ரெலிபோனைப் பொத்தியபடி
“உங்களுக்கு சாந்தி வேந்தன் என்ற பெண்ணைத் தெரியுமா?” என்று கேட்டாள்.

சாந்தி வேந்தன்.

சாந்தி…

சாந்தியைத் தெரியும். வேந்தனைத் தெரியாதே! எனக்குத் தெரியாது என்று பொய் சொல்லிவிட்டேன்.

“அக்கா… பிரச்சினையளைப் பெரிசுபடுத்தாதையுங்கோ. இதை வேறை ஒருத்தருக்கும் சொல்லியும் போடாதையுங்கோ. எல்லாத்தையும் ஆறப் போடுங்கோ. ஆறுதலா மனம்விட்டு ஜெயரதனோடை  கதையுங்கோ. எல்லாம் சரிவரும்” மனைவி உபதேசம் செய்தாள்.

சிலவாரங்கள் கழித்து மீண்டும் ஒருநாள் தமிழினி ரெலிபோன் செய்தாள். அவள் குரலில் மகிழ்ச்சி பொங்கியது.

“சாந்தி எண்டது ஜெயரதனுடைய நண்பன் வேந்தனின் மனைவியாம். வேந்தன் ஆமி சுட்டுச் செத்துப் போனானாம். பாவம் சாந்தி கஸ்டப்படுகின்றாள் எண்டு சொல்லிக் காசு அனுப்புகிறவராம். நான் தான் ஏதோ தப்பாப் புரிஞ்சு கொண்டிட்டன்” தமிழினி சொல்லிக் கொண்டே போனாள்.

”தமிழினியே இப்படிச் சொல்லும் போது நாமள் ஏன் இதுக்குள் போய் தலை குடுத்து முட்டிக்குவான்” நான் என் மனைவிக்கு பதில் சொன்னேன்.

ஜெயரதனும் அப்படித்தான் சொல்லுவான்.

J



1 comment:

  1. Thevakie Karunagaran2 February 2016 at 15:21

    இப்படியும் நடக்கிறது என்பதை அழகாக குரும் கதையில் கூறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete