திருமணம்
முடிந்து, வீட்டிற்கு வந்துவிட்ட மணமக்கள் கம்பளம் விரிக்கப்பட்ட செற்றியில்
நடுநாயகமாக வீற்றிருந்தார்கள். மீனா ரகுபதியின் ஒரே மகள். அம்மா
இறந்துவிட்டார். மீனாவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத முரளிக்கும் திருமணம் நடந்திருந்தது.
மீனாவும்
முரளியும் கதைத்ததையோ சிரித்துக் கழித்ததையோ காண முடியவில்லை. மீனா மொபைல் போனில்
யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆக்கள் மெல்லக் கலைந்து
போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அவள் எழுந்து தனது றூமுக்குள் நுழைந்தாள். முரளி ஆந்தைக்கண்
முழியால் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே போய் கதவைச்
சாத்தினான்.
சற்று
நேரத்தில் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மீனா டெக் பக்கம் இருந்த கதவினூடாக வெளியே
பாய்ந்தாள். தன் குதியுயர்ந்த செருப்புகள் இரண்டையும் கழற்றிப் புல்வெளிக்குள்
எறிந்தாள். டெக்கினுள் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அவர்களை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த ரகுபதியும் திகைத்து விடுபடமுன் வீட்டு வாசலை நோக்கி
ஓடினாள். சடுதியாக ஒரு கார் கிரீச்சிட்டு வாசலில் வந்து நின்றது. ஒரு காப்பிலி
காருக்குள் இருந்து இறங்கி மீனாவின் கையைக் கோர்த்தான். இருவரும் பாய்ந்து
காருக்குள் ஏறினார்கள். வாசலை நோக்கி ஓடிவந்தவர்களுக்கு, இருவரும் கையைக்
காட்டியபடியே பறந்தோடினார்கள்.
“என்ன
தம்பி... என்ன நடந்தது?” மாப்பிள்ளை
முரளியைப் பார்த்துக் கேட்டார் ரகுபதி.
“நான்
ஒண்டும் செய்யேல்லை மாமா! கத்தி ஒண்டை நீட்டினபடி – கிட்ட வராதை, தொடாதை,
குத்துவன் எண்டாள் மீனா. பிறகு கதவைத் திறந்து ஓடீட்டாள்” திகைப்பில் இருந்து நீங்காதவனாக முரளி
நின்றான்.
ரகுபதி நெஞ்சைப் பொத்தியபடி நிலத்திலே சரிந்தார்.
ஹார்ட் அற்றாக். அம்புலன்ஸ் வந்தது. வைத்தியசாலைக்கு விரைந்தார்கள்.
வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து ரகுபதி
இருந்து சிகிச்சை பெறவேண்டும் என்றார்கள் வைத்தியர்கள். அவருடன் கூடமாட உதவிக்கு நிற்பதற்கு
ஒருவர் தேவை என்றார்கள்.
முரளி ’நான் நிற்கின்றேன்’ என்றான்.