Monday 6 February 2017

வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணி

பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்த காலத்தில் (1977) கலாசாரமும் பண்பாடும் என்றொரு பாடம் இருந்தது. அதனை கதிர்.பாலசுந்தரம், த.சண்முகசுந்தரம் என்போர் நெறிப்படுத்தினார்கள். பாடத்திட்டத்தின்படி நாங்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். ஒவ்வோரு குழுக்களும் எழுத்தாளர்/கலைஞரைச் சந்திக்க வேண்டும்.

குரும்பசிட்டி ஊர், எழுத்தாளர்கள் கலைஞர்களுக்குப் பேர் போனது. எனது தந்தையாரின் ஊரும் அதுதான். நான்  எனது குழுவினருடன் அங்கு சென்று இரசிகமணி கனக.செந்திநாதனைச் சந்திக்க முடிவு செய்தோம். எனது குழுவில் முரளிதரன், குகநேசன் இன்னும் சிலர் இருந்தார்கள்.

ஒருநாள் காலை அவரது வீடு சென்றோம். அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாததால் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. போய் சிறிது நேரத்தில் அவரைச் சந்திக்கக் கூடியவாறு இருந்தது. நோய்வாய்ப்பட்டு சாய்மனைக்கதிரையில் படுத்திருந்த அவர் எழுந்து உரையாடினார். ஏற்கனவே ஒரு நேர்காணலுக்கென்று நாம் தயாரித்து வைத்திருந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதிலைப் பெற்றுக் கொண்டோம். பலதும் பத்தும் என்று கதைத்துக் கொண்டோம். அவரது ஒட்டுப்புத்தகங்களைப் பார்வையிட்டோம். அவரது மனைவி எங்கள் எல்லோருக்கும் தேநீர் தயாரித்துத் தந்தார். விடைபெறும்போது தனது நூல்களில் சிலவற்றைத் தந்தார்.

அந்த நேர்காணலைப் பின்னர் கட்டுரை வடிவில் அமைத்தேன். அதனை எனது விவசாய ஆசிரியர் சிவப்பிரகாசம் அவர்கள் அப்போது மெய்ப்புப் பார்த்தார். அது பின்னர் ஈழநாடு (20.11.1983) பத்திரிகையில் வந்தது.

w

வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணி

--    கதிரொளியான்

’அபார ஞாபகசக்தியும் அயரா உழைப்பும் அளவிலா இலக்கிய ஆர்வமும் கொண்ட அற்புதமான எழுத்தாளர்’ என இந்திய சஞ்சிகையான தீபத்தினால் குறிப்பிடப்பட்டிருந்தவர் இரசிகமணி.

இவர் 1916ம் ஆண்டு கார்த்திகை 5 இல் கனகசபைக்கும் பொன்னம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் திருச்செவ்வேல்.

முதன்முதலாக மகாதேவ வித்தியாலயத்தில் (பொன் பரமானந்த வித்தியாசாலை) கல்வி பயின்றார். முத்துத்தம்பி வித்தியாசாலையில் கற்றுச் சிரேஷ்ட தராதரப்பத்திர பரீட்சையில் தேறினார். பின்பு திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலே 1937, 38 களில் பயின்றார். அங்கு ஏற்பட்ட ஆர்வமே இவரைச் சிறுகதைகளை எழுதத் தூண்டியது. இவர் தமது குருவாகப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களையும் வழிகாட்டிகளாக சோ.சிவபாதசுந்தரம், ஈழகேசரிப் பொன்னையா என்போரையும் குறிப்பிடுவார். எழுத்துலகில் பிரவேசித்ததும் சாமிநாதையர், மறைமலையடிகள் ஆகியவர்களிடம் ஆசி பெற்றார்.

‘எங்களுடைய நாடு, எங்களுடைய எழுத்தாளர்கள், எங்களுடைய படைப்புகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்ற நோக்கிலேதான் இவர் எழுத்துலகில் பிரவேசித்தார்.

1039ல் தையிட்டியில் தமிழ் ஆசிரியராக இரசிகமணி கடமையேற்றார். இவர் தமது வீட்டிலே நூல்நிலையம் ஒன்றையும் வைத்திருந்தார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்புத்தகங்களை வைத்து எடுக்கும் சிரமமேற்பட்டதனால் அவற்றைப் பின்பு வட்டுக்கோட்டை வளாகத்திற்குக் கொடுத்துவிட்டார்.

1938 – 55 வரை இவரது கதை, கட்டுரைகள் ‘ஈழகேசரி’யில் வெளிவந்தன. அத்துடன் விமர்சனமும் செய்து வந்தார். சிறந்த
மேடைப் பேச்சாளருமாவார்.

‘பூச்சரம்’ என்னும் நூலில் உள்ள பதினாறு நூல்களைவிடப் பின்பும் பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். ஈழத்திலுள்ள எழுத்தாளர்கள் நாற்பது பேரை ‘ஈழத்துப் பேனா மன்னர்கள்’ மூலம் முதன் முதல் அறிமுகம் செய்தார். 1940ல் நாகம்மா என்னும் மங்கைநல்லாளை இவர் விவாகம் செய்தார். பின்னரும் இவர் இலக்கியத்தில் ஓய்ந்தாரில்லை. இவரது இலக்கிய ஆக்கங்களுக்கு ஊக்கமளித்து வந்தார் அம்மை நாகம்மை.

’இரசிகமணி’ என்னும் பட்டத்தை 1964ல் கிழக்கு மாகாணஎழுத்தாளர் சங்கமும், ‘இலக்கியச்செல்வர்’ என்ற பட்டத்தை அம்பனைக் கலைப்பெருமன்றமும் இவருக்கு வழங்கிக் கெளரவித்தன.

1948ல் எழுத்தாளர் மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கியவர்களில் இரசிகமணியும் ஒருவராவார். பின்னர் யாழ்.இலக்கிய வட்டத்தை உருவாக்கினார். குரும்பசிட்டி சன்மார்க்கசபையிலும் பல்வேறு பதவிகளை வகித்து அயராது உழைத்தார்.

இவர் எழுதிய ‘செம்மண்’ சிறுகதை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. ‘ஒரு பிடி சோறு’ என்ற கதை ‘பரிசுச் சிறுகதைகள்’ புத்தகத்தில் இடம்பெற்றதுடன் ரஷ்யாவில் வெளியான ‘வண்ணத்தேயிலை’ நூலிலும் இடம்பெற்றது. இக்கதை பின்னர் நாடகமாகவும் வெளிவந்தது.

விதியின் கை (வீரகேசரி நாவல்), இரண்டு பூக்கள் (காவடி வசந்தன்), ஈழத்து மணிவிளக்குகள், ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்பவை இவர் எழுதியவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

1975ல் இவருக்கு நோய் ஏற்பட்டு 1977ல் இறை அடி எய்தினார்.

’நடமாடும் நூல்நிலையமாகத்’ திகழ்ந்து இறக்கும்வரையும் இலக்கியமே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இரசிகமணியின் நாமம் வாழ்க.

w
கலை, இலக்கியம், கல்வி, சமயம் என்பவற்றிற்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இரசிகமணி கனக.செந்திநாதன். கார்த்திகை மாதம் 16ம் திகதியுடன் அவர் மறைந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன - ஈழநாடு (20.11.1983)

3 comments:

  1. சுருதி இணையத்தளத்தில் இரசினமணி கனக.செந்திநாதன் அவர்களைப் பற்றிய குறிப்பில் இலக்கியச் செல்வர் என்ற விருதை அம்பனைக் கல்விக்கழகம் அளித்ததாக தகவல் இருந்தது. இது தவறு. இவ்விருதை எம்மால் நடத்தப்பட்ட அம்பனைக் கலைப்பெருமன்றமே அளித்தது. இவ்விருதை அளிப்பதற்கு அழைப்பதற்காக நானும் அவரின் வீட்டுக்குப் போயிருந்தோம்.திருத்தி வெளியிடுமாறுஉ வேண்டுகிறேன்.

    கந்தையா முருகதாசன்

    ஜேர்மனி

    ReplyDelete
  2. இந்த மாமனிதர் 1964லில் என்னை 'ஈழத்துத்தமிழ் இலக்கிய வளர்ச்சி' ஆய்வில் பதிந்ததினால் ஒரு தமிழ்நாட்டு சாத்தானின் 2016 கேவலமான பதிவை இஸ்.இல.மாநாட்டின் தலைவரும் செயலரும் மலரிலிருந்து நீக்க தலைகுனிவின்றி தலைநமிர்ந்து.எனக்கு இலக்கியத்துறையை வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும்.அவன், அவன் படைத்த சாத்தானைக்கவனித்துக்கொள்வான். அய்யா கதிரொளியான் நல்ல அய்யா செய்த உதவியை நினைக்கவைத்தீர்கள்.நன்றி.

    மானா மக்கீன் (Maana Mackeen)

    ReplyDelete
  3. தங்களது இரசிகமணி பற்றிய 83ஆம் ஆண்டுக்கட்டுரையால் அன்னாரின் நினைவலைகளில் நான்...

    1964 - ஈழத்து இலக்கிய வளர்ச்சி - ஆய்வுநூலில் என்போன்ற சாமான்யர்களது பங்களிப்பும் பதிவு(பக். 184) அதனால் 2016-ல் ஒரு தமிழக ‘சாத்தான்’ இஸ்.இல.மாநாட்டு மலரில் எழுதிய இசக்கு பிசக்கான குறிப்பு நீக்கப்படுவதற்கு அடிகோலியது.இத்தனைக்கும் இரசிகமணி அவர்களைச்சந்தித்தவன் அல்லன். கலை-இலக்கியப்பங்களிப்பே என்னை இணைத்தது. இத்தகையவர் இன்று மிக அபூர்வம். என் பார்வையில் பேரா.யோகராசா மட்டுமே தென்படுகிறார்.

    மானா மக்கீன் (Maana Mackeen)

    ReplyDelete