ஊர் சுற்றிப்
புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா
விக்ரர் துறைமுகம் (Victor Harbour) தெற்கு
அவுஸ்திரேலியாவின் கடல் சார்ந்த ஒரு நகரமாகும். அடிலையிட் நகரத்தில் இருந்து 80
கி.மீ தெற்குப்புறமாக உள்ளது.

அங்கே பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் பிரசித்திபெற்ற ஒன்று ‘கிரனைட் தீவு’ (Granite Island). இது ஒரு ஆளில்லா தீவு. சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடம். 500 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலத்திற்கு அடியில் உருகிய பாறைகளினால் (Magma) உருவானவை இந்த கிரனைற் பாறைகள். மழை, கடல் அலைகள், காற்று என்பவற்றினால் கரையோரம் அரிக்கப்பட்ட பொழுது இந்தத் தீவு வெளித் தோன்றியது. Ramindjeri இன ஆதிவாசிகள் இங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் இந்த நிலப்பரப்பிற்கு Nulcoowarra எனப் பெயரிட்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் இடம்பெயர்ந்துவிட்டார்கள்.
கரையில் இருந்து நீரின் மேலால் போடப்பட்ட நடை பாதைவழியே
நடந்து சென்றால் ‘கிரனைட் தீவை’ அடையலாம். நடைபாதைக்கு அருகாக, குதிரைகள்
இழுத்துச் செல்லும் ‘றாம்’ வண்டியின் மூலமும் அங்கு போய்ச் சேரலாம். 1800 ஆம்
ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, விடுமுறைக் காலங்களில் அனேகம் பேர் தரிசிக்கும்
ஒரு இடமாகத் திகழ்கின்றது. 1886 ஆம் ஆண்டில் இருந்து தினமும் இந்தக் குதிரைகள்
இழுத்துச் செல்லும் Tram சேவை நடைபெறுகின்றது.

மேலும் சிறிய பென்குவின் பறவைகளின் உறைவிடமும் கூட.
காலையில் மீன்வேட்டைக்குக் கிழம்பிவிடும் இவை, சூரியன் அஸ்தமிக்கும்போது மீண்டும்
இங்கே வந்து சேருகின்றன. தற்போது இவை
அருகி வருகின்றன. கடலில் அதிகரித்து வரும் சீல் விலங்கினங்களாலும், நரி போன்றவை
இவற்றை வேட்டையாடியதாலும் இந்த நிலைமை. தவிர டொல்பின், பெலிக்கன்கள் நிறைந்த இடம்.
ஆனிமாதம் தொடக்கம் ஐப்பசி வரை திமிங்கிலங்களின் நடமாட்டம் கடலில் உண்டு..
நீராவி எஞ்சினால் இயங்கும் புராதன ரயிலில்
ஏறிக்கொண்டால், கடற்கரையோரமாக உள்ள பல அரிய காட்சிகளைத் தரிசிக்கலாம்.
பாலத்தின்மீது நடந்து செல்லும்போது வழி தவறிப்போன ஒரு திருக்கை
(stringray) மீன் ஒன்று பதகளித்துப் போவதைக் கண்டேன். கூடவே Crocodile hunter’
Irwin நினைவிற்கு வந்து சென்றார்.
கிரனைற் தீவில் ஏராளமான அழகான பாறைகள் இருக்கின்றன.
இடையிடையே பல சிற்ப வேலைப்பாடுகள் (sculpture) காணப்பட்டன. உள்ளே சுற்றிப்
பார்ப்பதற்கு பல அடிச்சுவட்டுப் பாதைகள் இருந்தன. கண் போன திசையில் ஒரு பாதையில்
சென்று பல அரிய காட்சிகளைக் கண்டோம்.
No comments:
Post a Comment