Saturday, 24 March 2018

கடமை கடவுளிடம் சேர்க்கும் - சிசு.நாகேந்திரன்


முற்றும் துறந்த முனிவர் ஒருவர் ஒரு பெரிய விருட்சத்தின் கீழ் ஆழ்ந்த நிட்டையில் இருக்கும்பொழுது அவரது உடம்பில் ஏதோவொரு எச்சம் விழுந்ததை உணர்ந்தார். உடனே அவர் அண்ணாந்து பார்க்கையில் தலைக்குமேலே மரக்கிளையில் ஒரு கொக்கு இருப்பதைக் கண்டு அதை உற்றுப் பார்த்தார். அவரது பார்வையில், பாவம், அந்தக் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவரது தவப்பயன் அத்தனை வலிமை கொண்டது. உடனே போய் ஆற்றிலிறங்கிக் குளித்து உடம்பைச் சுத்தம்செய்துகொண்டார்.  

     மறுநாட்காலை வழக்கம்போல பிட்சாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். தினமும் பிச்சையாகக் கிடைக்கும் உணவைத்தான் இவர் உட்கொள்வார். எளிய உடை உடை உடுத்திக்கொள்வார். வேறு சொத்து எதுவும் கிடையாது. சதா தியானத்திலேயே பொழுதைக் கழிப்பார். புறப்பட்டவர் போய் ஒரு வீட்டு முன்றலில் பாத்திரத்தைக் கையில் ஏந்தியபடி நின்றார். எவரும் வீட்டிலிருந்து வருவதாகக் காணோம். “பிட்சாந்தேகி” (பிச்சையிடுங்கள்) என்று கூவியழைத்தார். சற்று நேரங்கழிந்தபின்னர் ஒரு பெண்மணி கையில் ஒரு பாத்திரத்தில் உணவுடன் தோற்றினாள். அவளது தாமதம் முனிவருக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது.  அவரது கண்கள் கோபத்துடன் அவளைப் பார்த்தன. அவள் முனிவரைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு, “கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா?” என்று கேட்டாள்.  முனிவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. எங்கோ நேற்று நடந்த விடயம் இவளுக்கு எப்படித் தெரியவந்தது என்று திகைத்து, “பெண்ணே! நீ தாமதமாக வந்ததால்தான் எனக்குக் கோபம் வந்தது. காட்டில் நடந்த கொக்கின் கதை உனக்கு எப்படித் தெரியவந்தது?” என்று வினவினார்.  “அதுவா!  மனச்சுத்தியுடன் கடமைகளைச் செய்பவர்களுக்கு எல்லாமே தெரியும். நீர் வந்து வாசலில் நின்றது எனக்குத் தெரியும். அவ்வேளை நான் எனது கணவருக்கு அமுது படைத்துக்கொண் டிருந்தேன். அவர் உணவருந்தி முடியும்வரை அங்கு நின்று அவருக்குரிய சேவைகள் அனைத்தும் செய்துவிட்டுத்தான் உம்மிடம் வருகிறேன்.  தவவலிமையிலும்பார்க்க கடமை மேலல்லவா!” என்று பரிவுடன் சொன்னாள். அத்துடன், “கடமையைப்பற்றி இன்னும் அறியவேண்டுமாயின் அதோ அந்த ஊரெல்லையில் இருக்கும் வீட்டிலுள்ளவர்களிடம் போயறியுங்கள்” என்று கூறிக்கொண்டு பாத்திரத்தில் உணவையிட்டு, அனுப்பிவிட்டாள்.

      முனிவர் திரும்பிப் போகும்போது ஒரே மனக்;குழப்பம். அதையும்தான் பார்த்து விடுவோமே என்று நினைத்துக்கொண்டு அந்த அம்மையார் காட்டிவிட்;ட வீட்டுவாசலில் பிட்சாபாத்திரத்தை ஏந்தியவண்ணம் நின்றார். அங்கும் தாமதம். வந்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு நின்றார் முனிவர்.  சற்று நேரம் கழித்து ஒரு பெண் வந்து முனிவரைக் கும்பிட்டு வரவேற்று “வாருங்கள் முனிபுங்கவரே!  எனது சுணக்கத்திற்கு மன்னிக்கவும். நேற்று உமக்கு உணவளித்த அந்த பெருந்தெருவில் வசிக்கும் பெண்தானே உம்மை இங்கு அனுப்பிவைத்தாள். இந்தத் திண்ணையில் சற்றுநேரம் உட்காருங்கள். எனது வயதான பெற்றோருக்குத் தேவையான சிஸ்ரூபைகளைச் செய்துகொண்டிருக்கிறேன். அவற்றை முடித்துக்கொண்டு சீக்கிரம் உமக்கு அமுது படைப்பேன். அதுவரை பொறுத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளேபோய் பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வந்து முனிவருக்கு உணவு பரிமாறினாள். முடிந்ததும் அவள் மேலும் சொன்னாள், “முனி சிரேஸ்டரே! கடமையின் மகிமையைப்பற்றி நீவிர் இன்னும் அறிய விரும்பினால், ஊர் எல்லையில் ஒரு கசாப்புக்கடை இருக்கிறது. அங்கு போனால் இன்னும் அறிந்துகொள்ளலாம்” என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.
முனிவருக்கோ ஒரே அதிசயம். அந்தவீட்டுப் பெண்ணுக்கு இவள் பெற்றோருக்குச் செய்துவரும் சேவை எப்படித் தெரிய வந்தது?  அதுமட்டுமா? என்னை இவர்களிடம் போ என்று குறிப்பாகச் சொல்லி அனுப்பி வைத்தாளே! இவர்களின் கடமையும் சேவையும் எத்துணை பெரியது! நான் இதுவரை எனது தவவலிமைதான் பெரிதென்று இறுமாப்புக் கொண்டிருந்திருந்தேனே! என்று தனக்குள் பிரலாபித்தபடியே வீடுபோய்ச் சேர்ந்தார்.

     அடுத்தநாள் மனக்கலவரத்துடன் முனிவர் அந்தக் கசாப்புக் கடைக்கு வந்து பார்த்தார். அங்கு தோலுரித்த கோழி, ஆடு, பன்றி முதலிய மிருகங்களின் உடல்கள் தலைகீழாகக் கட்டித் தொங்குவதையும், அங்கு ஒரு தடித்த மனிதன் பெரியதொரு கூர்க்கத்திகொண்டு அவற்றைத் துண்டுதுண்டாக வெட்டிக்கொண்டிருப்பதையும் கண்டார். அந்தக் காட்சியைக் கண்ணால் காண அவருக்குச் சகிக்கவில்லை. ஆயினும் அங்கு அருவருப்புடன் நிற்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. அவர் வந்தது கசாப்புக்கடைக்காரனைக் காணத்தானே! பொறுமையை வரவழைத்துக்கொண்டு வேறுபக்கம் திரும்பி நின்றுகொண்டு காத்திருந்தார். வெகுநேரங்கழித்து அந்த மனிதன் வந்து முனிவரைக் கும்பிட்டு “ஐயா, முனிவர்பெருமானே! நான் உங்களிடம் வருவதற்குச் சுணங்கியதற்கு எனது தினசரித் தொழிலில் நான் வைத்த பற்றுத்தான் காரணம். அந்தக் கடமையுணர்வை நான் எச்சந்தர்ப்பத்திலும் இழந்துவிட மாட்டேன். இனி நான் உங்களுக்குச் சேவைசெய்யத் தயார்” என்று சொல்லிக்கொண்டு உள்ளேபோய் கைகால்களை அலம்பிவிட்டு ஒரு கிண்ணத்தில் அரிசியுடன் வெளியே வந்தாள்.  அங்கு முனிவர் இல்லை. போய்விட்டார்.

     முனிவரின் மூளை கடுமையாக வேலைசெய்யவே அவர் அவ்விடம் விட்டகன்று தனிமையான ஒரு இடத்தில் போயிருந்துகொண்டு யோசனையில் ஆழ்ந்தார். நான் எத்தனை காலம் எவ்வளவு கடுமையாகத் தவம்செய்து தவவலிமை பெற்றிருக்கிறேன். இருந்தும் எனது கோபத்தை அடக்கமுடியவில்லையே.  கேவலம் இச்சிறு உணர்ச்சி களைக்கூட அடக்கமுடியவில்லையென்றால் தவஞ்செய்வதால் என்ன பலன்? என்று தன்னைத்தான் சலித்துக்கொண்டார்.

     நாளடைவில், கடமைகளின் மேன்மையையும் அதன் வலிமையையும்பற்றிச் சிந்தித்;து ஆராய்ந்தபின்னர் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிறருக்கும் அதன் அவசியத்தையும் நன்மைகளையும் போதிப்பதில் ஈடுபட்டு, தனது மிகுதி வாழ்க்கையைக் கழிக்கலானார்.

     கடமையே பெரிது.  மனிதநேயமே மானிடருக்கு உயிரனையது.
      

No comments:

Post a Comment