Sunday 18 March 2018

விதியின் வழியே மதி செல்லும் - சிசு.நாகேந்திரன்


ஒரு மனிதனின் வாழ்க்கையானது அவன் முன்பு செய்துகொண்ட நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அமையும்.  அவனுடைய பிராரத்துவ வினைகளின் பயனை அடைவதற்கு ஏற்ற விதத்தில்தான் அவனுடைய வாழ்க்கைமுறைகள், வாழ்க்கைவசதிகள், கல்வி, செல்வம், பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சுற்றம் சூழல் முதலிய யாவும் ஏலவே அமைக்கப்பட்டிருக்கும்.  மனிதன் தன் வாழ்க்கையைத் தன்னிஸ்டப்படி நடத்துவதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். அது அவனுடைய அறியாத்தனமாகும்.  ஏற்கனவே தண்டவாளம் போடப்பட்டுவிட்டது.  ஓடும் ரயில் அத்தண்டவாளத்தில்தான் போகலாம்.  தான் விரும்பியவாறு பாதையை மாற்றிப் போகமுடியாது.  அதேபோலத்தான் மனிதவாழ்க்கையும்.   வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஏற்கனவே விதியினால் திட்டமிடப்பட்டு அது நியமித்தபடியே நடந்தேறும். இதற்கு உதாரணமாக ஒரு சிறு கதையை இங்கு பார்ப்போம்.

        ஒரு ஊரில் ஒரு பரம ஏழை.  உழைத்துச் சாப்பிட முடியாத அவனது உடல் நிலை.  சனசந்தடி இல்லாத ஒரு தெருவில் ஓரமாகக் போய்க்கொண்டிருக்கிறான்.  அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற ஏக்கத்துடன் நடந்து போகிறான்.

         இந்தக் காட்சியை விண்ணுலகத்திலிருந்து உமாதேவியார் கண்டுவிடுகிறார். அவருக்கு அந்த ஏழைமீது அனுதாபம் பிறக்கின்றது. சிவபெருமானை நோக்கி, “அதோ பாருங்கள்!  ஒரு ஏழைக் குடியானவன் போய்க்கொண்டிருக்கிறான்.  அவன் உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறான்.  எல்லா உயிர்களையும் காத்து இரட்சிக்கும் தாங்கள் இவனுக்குமட்டும் ஏன் இரக்கம் காட்டவில்லை? அவன் பாவமல்லவா?” என்று வேண்டினாள்.
         “நானும் அவனைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.  நான் ஒன்றும் செய்ய முடியாது. அவரவர் முற்பிறப்பில் செய்துகொண்ட பாவபுண்ணியங்களுக்கேற்ப அவரவருக்கு பிறவிகள் கிடைக்கின்றன.  அவர்கள் செய்த வினைகளுக்குத் தகுந்தபடி அவரவர் இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிக்கிறார்கள்.  உலகிலுள்ள சகல சீவராசிகளும் அவ்வண்ணமே!  இவனின் விதியின் பிரகாரம் இவன் ஏழையாக இருக்கிறான்.  அதை எவராலும் மாற்றிவிட முடியாது” என்று பரமசிவன் பதிலளித்தார். “ஏன் முடியாது?  ஏதாவது கொஞ்சம் செல்வத்தையாவது கொடுத்தால் அவன் அதைக் கொண்டு நல்ல முறையில் வாழ்வான்தானே” என்று உமையாள் தர்க்கித்தார். “நான்தான் சொன்னேனே, ஒவ்வொருவரும் தான்தான் செய்த பாவபுண்ணியங்களுக்குத் தக்கபடி வாழ்க்கையை அனுபவித்தே தீரவேணும். அது உலகநியதி. அதை மாற்ற முடியாது” என்று பெருமான் சிறிது கண்டிப்பாக பதிலளித்தார்.

         பரமேஸ்வரனின் கையைப் பிடித்துக்கொண்டு பார்வதி சொன்னார் “ஐயோ, அவன் பாவம்.  அவனைப் பார்க்கும்போது உங்களுக்குப் பரிதாபமாகப் படவில்லையா? கடவுள் இரக்கமுள்ளவர்;,  கருணை காட்டுபவர், ஆபத்பாந்தவர் என்றெல்லாம் உங்களைப் பூசிக்கிறார்களே!  இவன் விடயத்தில்மட்டும் ஏன் தயை காட்டத் தயங்குகிறீர்கள்?”  என்று கெஞ்சினார்.

         “நான் சொல்வதை நீ நம்பமாட்டாய், தேவி! ஒரே அடம்பிடிக்கிறாய். அவனுக்குச் செல்வம் கிடைத்தாலும் அதை அனுபவிக்க அவனுடைய விதி விடாது” என்று சிறிது சினத்துடன் கூறினார் பெருமானார்.  “கொடுத்துத்தான் பாருங்களேன்! அவன் என்ன வேண்டாமென்றா சொல்லப் போகிறான்?” என்று உமாதேவி வற்புறுத்தினார். சிவன் சற்றுக் கோபத்துடன், “சொன்னால் ஏற்கமாட்டாய்.  சரி, நீயே பார்” என்று சொல்லிக்கொண்டு ஒரு பணப்பொதியை அந்த ஏழை போய்க்கொண்டிருந்த பாதையில், அவனுக்கு முன்பாக சற்றுத் தூரத்தில் போட்டுவிட்டார்.

அதேவேளை, அந்த ஏழை மனிதனுக்குத் திடீரென்று ஒரு குள்ள யோசனை மனதில் தோன்றிற்று.  “நான் பணமில்லாமலே இவ்வளவு கஸ்டப்படுகிறேனே, உலகிலே இரண்டு கண்ணும் தெரியாத குருடர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்களோ! பாவம்!  கண்பார்வையில்லாமல் எப்படி உலகத்தில் நடமாடித் திரிவார்கள்?  அவர்கள் எப்படி நடந்து போவார்கள்? நாமும் ஒருக்கால் அப்படி நடந்துதான் பார்ப்போமே!” என்று சொல்லிக்கொண்டு குருடர்போலக் கண்களை இறுக மூடிக்கொண்டு சிறிது தூரம் நடந்து பார்த்தான்.  அப்படியே கண்களை மூடியபடி தொடர்ந்து போனான். வழியில் சிவபெருமான் போட்ட பணமுடிப்பு இருந்த இடத்தையும் கடந்து மேலும் சிறிது தூரம் சென்றதும் கண்ணை விழித்தான்.  “கடவுள் படைப்பில் பலதரப்பட்ட பிறவிகள் இருக்கின்றன.  அதில் விழிப்புலன் அற்றவர்கள் பாடு மிகவும் பரிதாபமானதுதான். பாவம்!” என்று நினைத்துக் கொண்டு தன்வழியே தொடர்ந்து போனான். 
         “பார்த்தாயா?  நீ கேட்டுகொண்டபடி பணஉதவி செய்தும் அவனது பிராரத்துவம் அவனுக்கு அது கிடைக்காமல் தடுத்துவிட்டதல்லவா!  அது அவனுடைய தலைவிதி. தலைவிதியை மாற்ற எவராலும் முடியாது” என்று சுட்டிக்காட்டினார். உமாதேவியார் வெட்கித் தலைகுனிந்தார்.

         “வருந்தி அழைத்தாலும் வாராத வாரா.
         பொருந்துவன போமின் என்றால் போகா.........”          அவ்வையார்.

     ஆகவே, ஒவ்வொரு உயிரினமும் தாம்தாம் செய்துகொண்ட வினைகளுக்கு ஏற்பவே உலகில் பிறந்து சுகமோ கஸ்;டமோ அனுபவிக்கவேண்டியது நியதி.  அவ்விதியை எவராலும் மாற்றியமைக்கமுடியாது.  இதை உறுதியாக நம்பி நடப்போமானால் எமக்கு வரும் சுகத்தையும் கஸ்டங்களையும் சமாளித்து வாழப் பழகிக்கொள்ளலாம்.




2 comments:

  1. ஜெ வாழ்வை நினைத்து பார்க்கவும். அடித்த கொள்ளையும் செய்த அநீதிகளும் என்ன செய்தது? சுகமாக சென்று விட்டார். இங்குள்ள மக்கள் இன்றும் அவதி. அதே போல் பல அரசியல்வாதி மற்றும் பலர். விதி என்று சொல்லி நியாய படுத்த முடியாது.

    ReplyDelete
  2. விதிதான் மதியை செலுத்துகிறது என்பதை ஏற்கிறேன். நான் ஏற்பது சரியா என்று தெளிய சரியான விளக்கங்கள் தேவை.
    1) இயற்கை விதிகள் நிறைந்தது; இதை செய்தால் இது நடக்கும், இப்படி செய்தால் இப்படி விளைவுகள் இருக்கும், ஆக நாம் தெளிந்தறிந்தால் அல்லது நம் அனுபவத்தால் விதியை வெல்ல முடியாதா? "பிறப்பால் ஏழை என்பது என் தவறல்ல ஆனால் இறக்கும் போது ஏழை என்பது என் தவறு" என்பது போல், பிறப்பது என்பது விதியால் நிகழ்கிறது அதன் பின் நாம் விதியை வெல்ல முடியாதா?
    2) நான் ஜோதிடத்தை நம்புகிறேன், ஜோதிடத்தில் எதிர்காலத்தை கூறமுடியும் அப்படியானால் நம் வாழ்க்கை முன்னரே முடிவு செய்யப்பட்டது தானே.... அப்படியெனில் இந்த வாழ்வில் நமது பங்களிப்பு என்ன?
    3) முற்பிறவி வினை, கர்மா எல்லாம் நம்மை பாதிக்கிறது என்று சொல்கிறீர்கள், அப்படியானால் ஒரு பிறவியில் நாம் பாவம் அல்லது வினை செய்ய ஆரம்பித்திருப்போம் இல்லையா, அந்த பிறவியில் நாம் ஏன் பாவம் செய்தோம்? ஒரு பிறவியில் பாவம் செய்கிறோம் மறு பிறவியில் அதன் தண்டனையை பெறுகிறோம் என்பது உண்மையானால் நாம் ஏன் அல்லது எப்படி இந்த சுழற்சிக்குள் செல்கிறோம்?
    4) (கருணை காட்டுபவர்,சிறிது சினத்துடன் கூறினார்...)4) கடவுள் இயற்க்கை போல சம நிலையானவர் அவருக்கு எந்த உணர்வும், உணர்ச்சிகளும் இருக்காது, அப்படி இருந்தால் அவர் கடவுள் கிடையாது. அழிக்கும் செயல் நடைபெற்றால்தான் ஆக்கம் நடைபெற முடியும், அழகாக படைக்கவும் வேண்டும் அதை அழிக்கவும் வேண்டும் அப்படியெனில் எந்த உணர்வுகளுக்கும் இடமே கிடையாது இறைவனிடம் ஆகவே தான் அனைத்திற்கும் ஒரு விதி உள்ளது. இவை கதைகள் என்றே நம்புவோமாக.

    ReplyDelete