Friday, 16 August 2019

வட இந்தியப் பயணம் (7)

 

7.

சனிக்கிழமை டெல்கி, புது டெல்கியில் அமைந்திருக்கும் இந்தியாவின் நுழைவாயில் (India Gate), தாமரைக்கோயில் (Lotus Temple), குதுப்மினார் (Qutab Minar), இந்திரா காந்தி ஞாபகார்த்த நிலையம், நேரு / மகாத்மா காந்தி அருங்காட்சியகங்கள், மகாத்மா காந்தி சமாதி (Raj Ghat), பாராளுமன்றம் (Parliament House), குடியரசுத்தலைவர் இல்லம் (Rashtrapati Bhawan), பிர்லா மந்திர் (Birla Mandir), செங்கோட்டை (Red Fort) என்பவற்றைப் பார்வையிட இருந்தோம்.

காலை 5 மணியளவில் எமது ஹோட்டலை அண்மித்து பெரிய ஆரவார ஒலி கேட்டது. அந்த வாத்தியங்களின் இன்னிசையுடன் துயில் கலைந்தது. வெளியே ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்தபோது, திருமணத்திற்கான ஏற்பாட்டுடன் ஒரு மணவாளன் தன் உற்றம் சுற்றம் புடைசூழ வாத்தியக்கருவிகள் முழங்க அழைத்துச் செல்லப் பட்டுக்கொண்டிருந்தார். மனிதர்களின் பின்னே சில நாய்களும் ஊர்வத்தில் கலந்து கொண்டிருந்தன. நல்லதொரு மங்களகரமான காட்சியுடன் அன்று விழித்தோம். காலை உணவாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, ஆலு பராத்தா (Aloo Paratha) கிடைத்தது. ஆலு என்றால் ஹிந்தியில் உருளைக்கிழங்கு. முதன் முதலாக அந்த உணவைச் சாப்பிட்டோம். உருளைக்கிழங்கில் செய்த சுவையான கறியைச் சப்பாத்திக்குள் திணித்து செய்யப்படும் சுவையான உணவு. மிகவும் மெல்லிய தட்டையான ஆலுப்பராத்தாவிற்கு தொட்டுக்க ஊறுகாய், தயிர் தந்தார்கள். மசாலா சாய் அருந்திவிட்டு, இம்முறை ஊபர் (uber) எடுத்து பஸ் புறப்படும் இடத்திற்குச் சென்றோம். 9 மணிக்கு பஸ் புறப்படும் என்று சொல்லியிருந்தார்கள். இங்கே ரக்‌ஷி, ஓட்டோவை விட ஊபரில் போவது மலிவானதாகும். நீங்கள் மொபைல்போனைக் கையாளக் கூடியவராக இருந்தால் ஊபர் தான் குறுகிய தூரப் பயணத்திற்கு நல்லது என்பேன்.

அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்படும்போது, வட இந்தியாவில் ஆங்கிலம் செல்லுபடியாகாது என்று பலர் எம்மைப் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது நிலைமை அப்படியில்லை என்பது தெளிவாகியது.

இங்கே பல இடங்களில் ரிக்‌ஷா வண்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது. மனிதரை வைத்து மனிதர் இழுக்கும் காலம் இன்னும் மறையவில்லையே என்ற கவலை வந்து போனது.

ஒருவாறு இந்தியா கேட் வந்தடைந்தோம். இந்தியே கேட் நினைவுச்சின்னம், புதுதில்லியில் ராஜ்பத்தில் (Rajpath) உள்ளது. 1914 – 1921 காலப்பகுதியில் முதலாம் உலகயுத்தம் நடந்தபோது உயிரிழந்த 70,000 பிரித்தானிய இந்தியப் படை வீரர்களின் நினைவாக நிறுவப்பட்டது. நாங்கள் அங்கு போனபோது இராணுவ அணிவகுப்பு மரியாதை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

      

அதைத் தொடர்ந்து தாமரைக்கோயிலைப் பார்வையிட்டோம். தாமரைக்கோயில் புதுதில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலமாகும். 1986 இல் பாஹாபூர் (Bahapur) என்னும் இடத்தில், ஈரானியக் கட்டடக்கலை நிபுணர் ஃபாரிபோர்ஸ் (Fariborz Sahba) என்பவரால் கட்டப்பட்டது. பஹாய் என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் பஹாவுல்லா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமாகும்.

 
 

குதுப் மினார், 72.5 மீற்றர்கள் உயரமான, செங்கல்லினால் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான பள்ளிவாசல் தூபி ஆகும். இந்தியாவின் முதல் முஸ்லிம் அரசனான குதுப் உதின் ஜபக் இனால் இந்தத் தூபியின் கட்டடப்பணி 1193 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அவரினால் அடித்தளத்தை மட்டுமே கட்டமுடிந்தது. அவரின் பின் வந்த அரசரால் அதற்கடுத்த 3 தளங்களையும், அதன் பின்னர் வந்தவரால் 5வது மற்றும் கடைசித்தளங்களும் கட்டிமுடிக்கப்பட்டன (1286). இந்தக் காலகட்டங்களிடையே ஏற்பட்ட கட்டடக்கலையின் மாற்றங்களை இந்தக் குதுப்மினார் தூபியில் நாம் காணக்கூடியதாக இருந்தது. இந்தத் தூபியை அடியிலிருந்து உச்சிவரை சென்று பார்க்க முடியுமாகினும், தற்போது பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்குள் ஒருமுறை சன நெரிசலில் பலர் இறந்துவிட்டதும் ஒரு காரணமாகும். சிலர் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக வந்தவர்களில் சிலர் கதைத்துக் கொண்டார்கள். போரைப்பற்றிய எச்சரிக்கைகள், தொழுகைக்கான நேர அறிவிப்புகள் போன்ற செய்திகளை இங்கிருந்துதான் அக்காலத்தில் அறிவித்தார்கள்.

இந்தக் குதுப்மினார் அமைந்திருக்கும் பகுதியில் பல கட்டடங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவை நிலநடுக்கத்தால் சீரழிந்த கட்டடங்களின் பகுதிகளா அல்லது உண்மையிலேயே கட்டி முடிக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை.

இங்கே குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்ட, 2000 வருடங்களளாகத் துருப்பிடிக்காத இரும்புத்தூண் ஒன்றைப் பார்த்தது அதிசயமாக இருந்தது.


பயணம் தொடரும்…….

No comments:

Post a comment