Wednesday, 28 August 2019

வட இந்தியப் பயணம் (9)


 
9. 
மறுநாள் பயணத்தில், பஸ்சினில் இடமிருந்ததால் நாங்களும் பதிவு செய்து கொண்டோம். சுவாமி நாராயணன் கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கம். இந்தப்பயணத்தில் ஹுமாயூன் மன்னரின் சமாதி (Humayun’s Tomb), தேசிய அருங்காட்சியகம் (National museum), காந்தி இல்லம்/காந்தி சமிதி (Birla House), சுவாமி நாராயணன் கோவில் (Akshar Dham Temple/Swaminarayan) என்பவை இடம்பெற்றிருந்தன.
மன்னர் ஹுமாயூன் மொகலாயப்பேரரசின் இரண்டாவது மன்னர் என்பதை முன்னர் அறிந்திருந்தோம். ஹுமாயூன் சமாதியை அவரின் மனைவியான அமீதா பானு பேகம் கட்ட ஆரம்பித்தார். பின்னர் இந்தக் கட்டடத்தொகுதியில் அமீதா பேகம், சாஜகானின் மகன் தாரா சிக்கோ போன்றவர்களின் சமாதிகளும் அடங்கின.

இந்தியாவின் மிகப் பெரும் தேசிய அருங்காட்சியகத்தை முறையாகப் பார்வையிட வேண்டுமானால் ஒரு மாதம் போதாது என்று சுற்றுலா வழிகாட்டி முதலிலேயே சொல்லிவிட்டார். சூறாவளியாட்டமாக ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். புது டில்கியில் அமைந்துள்ள இந்த மியூசியம் 1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரால் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டு தற்காலம் வரையிலுமான அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், சிலைகள், ஓவியங்கள், ஆயுதங்கள், ஆடைகள் என்பவற்றை இங்கே காணலாம்.
     
 

காந்தி சமாதி (பிர்லா மாளிகை) என்ற நினைவகம், புதுடில்கியில் காந்தி அருங்காட்சியகத்தின் அருகின் அமைந்திருக்கின்றது. காந்தி தன் இறுதிக் காலங்களில் இங்கே தங்கி இருந்தபோதுதான், 1948 ஜனவரி 30 ஆம் நாள் கோட்ஷேயினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது அமைந்திருக்கும் வீதியின் பெயர் கூட 30 ஜனவரி வீதி ( ஹிந்தியில் - Tees January Marg) என அழைக்கப்படுகின்றது.


இறுதியாக சுவாமி நாராயணன் கோவிலில் எங்களையெல்லாம் இறக்கிவிட்டு பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் போய்விட்டார்கள். அதற்குக் காரணம் பெரும் திரளான சனக்கூட்டம். உள்ளே எல்லாரும் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பும்வரை அவர்களால் காத்திருக்க முடியாமைதான். தவிர அங்கே இரவு வேளைகளில் பல நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான களியாட்டங்களும் நடைபெறுவது வழக்கம். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பயணத்தை ஒழுங்கு செய்பவர்கள் அப்படிச் செய்வது வழக்கம். நாங்கள் உள்ளே செல்வதற்காக அரைமணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்தோம். வரிசை நகரவேயில்லை. பொறுமையிழந்து திரும்பிவிட்டோம். எதைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டோமோ அது சாத்தியமாகவில்லை.


இவை தவிர வட இந்தியாவில் பார்ப்பதற்கு - ஹரித்துவார் (Haridwar), ரிஷிகேஷ் (Rishikesh), சண்டிகார் (Chandigarh), சிம்லா (Simla), குருஷேத்திரம் (Kurukshetra), ஸ்ரீ பத்ரிநாத் (Shri Badrinath), கேதார்நாத் (Kedarnath), யமுனோத்ரி (Yamunotri), கங்கோத்ரி (Gangotri) போன்ற நிறைய இடங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் ஒரு வாரத்தில் பார்த்துவிட முடியாது.

முன்பின் அறியாத இடங்களுக்கு, நண்பர்களுமில்லாத நிலையில் வந்து பார்த்துவிட்டுத் திரும்பியதில் மகிழ்ச்சிதான்.


No comments:

Post a Comment