Monday, 23 December 2024

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி - 2025

 



அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள்

தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.

15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.

முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000.

இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.

மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000.

நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000.

ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 10,000.

10 பாராட்டுப்பரிசுகள் இலங்கை ரூபா தலா – 5000.

குரு அரவிந்தனின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1600 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவர்களாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாகவெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும். உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025

போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.

மின்னஞ்சல்: : kurufanclub@gmail.com

இணையம்: : https://kurunovelstory.blogspot.com/, http://tamilaram.blogspot.com/

https://canadiantamilsliterature.blogspot.com/

இந்த அறிவிப்பினை நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். kurufanclub@gmail.com

Friday, 13 December 2024

அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதை போட்டி -2024 முடிவுகள்

இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச் சிறுகதைப் போட்டி அறிவித்தேன். முடிவுத் தேதி 3-011-2024.

வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச் சிறுகதைப் போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் இந்தப் போட்டிக்கு மனம் உவந்து எழுதி எங்களைக் கௌரவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டி நடைபெறும் தகவலைப் பல்வேறு இலக்கியக் குழுக்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் முழுமனதோடு பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியமாகும். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்தப் போட்டிக்கு மொத்தம் 355 கதைகள் வந்து சேர்ந்ததை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்.

Sunday, 17 November 2024

குவிகம் குறும் புதினங்கள் - அறிமுகம்



குவிகம் குறுநாவல் ஆகஸ்ட் 2024

காந்திமதியின் காதலன் – கல்கி

`காந்திமதியின் காதலன்’ ஒரு குறுநாவல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்குச் சான்றாகின்றது. அதனால்தான் காலம் கடந்தும் இன்றும் வாழ்கின்றது. இரண்டு ஸ்வாமிமார்களை எப்படி முடிச்சுப் போட வைக்கின்றார் என்பது நாவலின் உச்சம்.

இரண்டாம் இடம் – அபிமானி

சீரான எழுத்து நடை. வித்தியாசமான உவமைகள். ஏழை மாணவன் மலையரசனுக்கும், நேர்மையான ஆசிரியருக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதை. அதிகாரம் மேலிடத்தில் இருக்கும்போது, ஆசிரியரினால் என்ன செய்ய முடியும்? இங்கே இரண்டாம் இடம் எதுவென்பது தெட்டத் தெளிவாகவே தெரிகின்றது. சிறுவன் எடுக்கும் முடிவு எதிர்பாராத திருப்பம்.

குவிகம் குறுநாவல் செப்டெம்பர் 2024

மியாமி மிதவை – ஜமுனா ஜெகன்

ஃபெர்மூடா முக்கோணத்தையும், அதனூடாகப் பயணம் செய்யும் பாண்டியநாட்டு சரக்குக் கப்பலையும் இணைக்கும் கற்பனை செறிந்த மாயாஜாலக் கதை. திகிலும் மர்மங்களும் நிறைந்த ஃபெர்மூடா முக்கோணத்தை நேரில் எதிர்கொண்ட அனுபவம் இங்கே கிடைக்கிறது. இடையிடையே வாழ்க்கையின் தத்துவங்கள், காட்சிகளின் வர்ணனைகள் போனஸ்.

குழலினது யாழினிது - பெஷாரா

குழந்தைகள் உலகம் அழகானது. எத்தனை குழந்தைகள்! எத்தனை கேள்விகள்!! எல்லாரிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து அறிவுரைகள் சொல்கின்றாள் `அவள்’. அவள் யார்? அதுதான் கதை. கதை குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் தான்.


குவிகம் குறுநாவல் ஒக்டோபர் 2024

உயிர்மேல் ஆசை – வ.ச.நாகராஜன்

வஞ்சனையின்றி உறவுகளுக்கு உதவும் சுந்தரிக்கு, சுகவனேசுவரர் தரிசனம் சொர்க்கம். இன்று அவள் எல்லாவற்றையும் இழந்து முதுமையின் விளிம்பில். அவளைப் போலவே சுகவனேசுவரர் ஆலயமும் கவனிப்பாரற்ற நிலையில். திடீரென்று கிடைத்த புதையலை கோவிலுக்கே குடுத்துவிட்டு, சுகவனேசுவரர் தரிசனத்தைக் காண்பதற்காக அவளுக்கு உயிர்மேல் ஆசை வந்துவிடுகின்றது. சிறப்பான கதை.

ஓணான்குழி – ராஜேஷ் வைரபாண்டியன்

மூக்கையா, மொச்சை, குன்னிமுத்து, வீரச்சங்கிலி, கோட்டையன், வண்ணக்கிளி, தேன்சிட்டு என்று பாத்திரங்களை கதைக்குள் அறிமுகம் செய்யும் உத்தி சிறப்பு. கொள்ளை காதல் அமானுஷ்யம் மாந்திரிகம் நரபலி எனச் சம்பவங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, ஒரு சீரான நதியோட்டம் போல சொல்லிச் செல்கின்றார் ஆசிரியர்.

வேர்களும் விழுதுகளும் – வசந்தா கோவிந்தராஜன்

முதல் திருமணம் திருநெல்வேலியில் ஊர் உறவுகள் என்று ஏகத்துக்கும் தடல்புடல். அடுத்த தலைமுறை சென்னையில் சாதி மாறிக் காதல் கலியாணம். அப்புறம் மூன்றாவது தலைமுறை அமெரிக்காவில். அவசரக் காதல். திருமணம் ஆகாமலே கர்ப்பம். காதலனின் கொரோனா மரணம். வேர்களும் விழுதுகளும் அந்நியமாகிப் போகின்றன.

Saturday, 9 November 2024

துறவியின் குகை (Hermit’s cave)

 
சித்தர்கள், சாமிமார்கள், துறவிகள் காடு மலை குகைகளில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். தற்போதும் சிலர் அப்படி வாழ்ந்து வருகின்றார்கள்.

அவுஸ்திரேலியாவில் க்ரிபித் (Griffith) என்ற நகரில் அப்படியொரு இத்தாலியத் துறவி வாழ்ந்திருக்கின்றார். ஆசாபாசங்களைத் துறந்த அவர் வாழ்ந்த குகையை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன்.

க்ரிபித், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு பிராந்திய நகரம். அவுஸ்திரேலியாவின் உணவுக்கிண்ணம் என அழைக்கப்படும் இந்த இடம் மெல்பேர்ணிலிருந்து ஐந்தரை மணித்தியாலங்கள் கார் ஓடும் தூரத்தில் இருக்கின்றது. மெல்பேர்ணிலிருந்து க்ரிபித் நோக்கிப் போகும் பாதைகளில் கடுகு வயல்கள், `சண்றைஸ்’ எனப்படும் நெல் வயல்கள், `வைன்’ தயாரிக்கப் பயன்படும் திராட்சைத்தோட்டங்கள், தோடம்பழத் தோட்டங்கள் என்பவற்றைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. கூடவே பாதையின் இருமருங்குகளிலும் இறந்திருக்கும் எண்ணற்ற கங்காருக்களையும் காணக்கூடியதாக இருந்தது. இந்தக் கங்காருக்கள் பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலும் மாலை நேரங்களிலும், அதி வேகமாகச் செல்லும் வாகனங்கள் மீது – வீதிக்குக் குறுக்காகப் பாய்வதால் விபத்துக்குள்ளாகின்றன.

இந்த ஹெர்மிட்ஸ் குகையானது க்ரிபித் நகரில் மெக்பெர்சன் மலைத்தொடரில் (Mcpherson Ranges) உள்ளது.

Friday, 4 October 2024

வேர்களைத் தேடும் விழுதின் பயணம்


வேர்கள் நூலின் மொழிபெயர்ப்பாளர் பொன் சின்னதம்பி முருகேசன் (03.10.2024) அன்று காலமானார். 

Monday, 23 September 2024

கொலையும் கூத்தும்

 
அப்பொழுதெல்லாம் பாடசாலை விடுமுறைக்காலங்களில் கிளிநொச்சி சென்றுவிடுவோம். ஜெயந்திநகர், உருத்திரபுரத்தில் எனக்கொரு அக்கா முறையானவர் இருந்தார். அவர்களின் பிள்ளைகளும் எங்களின் வயதை ஒத்தவர்களாக இருந்தார்கள்.


பத்தாம் வகுப்பு படிப்பிற்குப் பின்னர்தான் தனியவெல்லாம் சுற்றித்திரிவதற்கு வீட்டில் அனுமதி கிடைத்தது. அதற்கு முன்னரெல்லாம் ஆராவது கிளிநொச்சி போனால் அவர்களுடன் கூடிக்கொண்டு போவேன்.

மாரிகால விடுமுறையில் போவதற்குத்தான் நல்ல விருப்பம். நீண்ட விடுமுறை.

Monday, 9 September 2024

`எனக்கு வேணும்!’

பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.

Sunday, 1 September 2024

ரகசிய பொலிஸ்

 
அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.

 காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.

 அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.

 என்னிடம் சினிமாப் பாட்டுக்கள் அடங்கிய சிறுசிறு புத்தகங்கள் இருந்தன. அவற்றை அண்ணா வாங்கிப் படித்துவிட்டு என்னிடம் தருவார். சிலவேளைகளில் அவற்றில் சில காணாமல் போய்விடும். இந்தத்  தடவை ரகசியப் பொலிஸ் 115 காணாமல் போய்விட்டது. அவற்றைத் தேடி அண்ணாவின் பொக்கிஷங்கள் அடங்கிய அறைக்குப் போவேன். அப்போது அங்கே அக்கா எதையோ அங்கு தேடிக் கொண்டிருந்தார். அவரது கையில் வினோத எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த கொப்பி ஒன்று இருந்தது. அக்கா சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்தக் கொப்பியை அங்கே வைத்துவிட்டுப் போனார்.

Monday, 26 August 2024

ஒருபக்கம். மறுபக்கம்? - நெடுங்கதை

 

நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்

பகுதி 2

“அப்பா… இஞ்சை பாருங்கோ சீனறியை…” ஆச்சரியத்தால் செளம்யாவின் கண்கள் அகல விரிந்தன. அமலனின் சத்தம் வராது போகவே, “அப்பா சரியான நித்திரை” என்றாள்.

தாரிணி சீற்றுக்குள்ளால் கையை நுழைத்து அமலனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டினாள்.

“இந்தாள் இப்பிடியே தூங்கி வழிஞ்சா ரஞ்சனுக்கு நித்திரைதான் வரும். பிள்ளை நீ போய் முன்னுக்கு இரு…” செளம்யாவைப் பார்த்து தாரிணி சொன்னாள்.

“றைவிங் செய்யேக்கை நான் ஒருநாளும் தூங்க மாட்டன்” என்றான் ரஞ்சன்.

இவர்களின் கலாட்டாவில் சிந்தனை அறுந்த அமலன், கண்ணைக் கசக்கியபடியே சுற்றுமுற்றும் பார்த்தான். சில மலைகள் ஒதுங்கிப் பதுங்கி பின்புறம் ஓட, பனித்தூவல் சூழ்ந்த செழிப்புடன் கூடிய பிரதேசமென எங்குமே பச்சைப்பசேல் என்றிருந்தது மலையகம்.

“கண்டி வந்திட்டுது” என்றான் அமலன்.

Tuesday, 20 August 2024

ஒருபக்கம். மறுபக்கம்? - நெடுங்கதை

நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்

பகுதி 1

முப்பத்தி இரண்டு வருடங்களில் ஒருவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? ஒரு வேலையில் அமர்ந்து படிப்படியாக முன்னேறி மனேஜராகலாம்; திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று பேரப்பிள்ளைகளையும் கண்டடையலாம்; ஒரு அழகான வீடு கட்டி, முன்னே வாகனங்களை நிறுத்தி வைக்கலாம். இப்படி மூச்சு முட்டிக் களைத்து விழும்வரை ஒருவரால் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனாலும் இந்தக் காலப்பகுதியில் எத்தனையே மனிதர்களால் தமது சொந்த ஊரை ஒருதரமேனும் பார்க்க முடிந்ததில்லை.

இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டு அமலனுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிட்டியது. இந்துசமுத்திரத்தின் முத்து அவனை வரவேற்றது. அங்கே அந்த முத்தின் வடபகுதியில் அமலனுக்கு ஒரு வீடு முன்னொரு காலத்தில் இருந்தது.

அவனும் மனைவி தாரிணியும், மகள் செளம்யாவும் அதைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அமலனுக்கும் தாரிணிக்கும் ஊரைப் பார்ப்பது சொர்க்கம். ஆனால் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த செளம்மியாவிற்கு வெறுங்காணியைப் பார்ப்பதில் என்ன சந்தோசம் இருக்கப் போகின்றது? இருக்கின்றது. சிறுவயது முதல் உணவு ஊட்டுவதுபோல், தாம் பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றி தம் மூதாதையர் பற்றி, சிறுகச்சிறுக சொல்லியே அவளை வளர்த்திருந்தார்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த வரண்ட பூமியுடன், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களையும் சுற்றிக் காட்டினால் அவள் மகிழ்ச்சி கொள்வாள் அல்லவா?

Tuesday, 13 August 2024

கள்ளனும் பொலிசும்


 மனம் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க, கார் தன் பாட்டில் போய்க் கொண்டிருந்தது. வடக்கு மெல்பேர்ணில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

 

இரவு இரண்டுமணி. தெரு வெறிச்சோடிப் போய் இருந்தது. நன்றாகக் குடித்துவிட்டிருந்த ஒருவன் வீதியின் நடுவே நின்று தள்ளாடிக் கொண்டிருந்தான். கதவுகளை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். வேகத்தைக் குறைத்து ஓரமாகக் காரைச் செலுத்தும் போதுதான், எனக்குப் பின்னாலே ஒரு சிகப்புக்கார் வருவதைக் கண்டு கொண்டேன்.

 

அந்தக் கார் என்னை நெடுநேரம் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்த இரவு நேரப் 'பின்தொடர்தல்' சிலவேளைகளில் ஆபத்தையும் கொடுக்கலாம். மீண்டும் ஒரு முறை அவனை நோட்டம் விட்டேன். வாட்டசாட்டமான ஒரு வெள்ளைக்காரன். எவனாக இருந்தாலென்ன? நிறையவே கொள்ளைக்காரன் - குடிகாரன் - குடுக்காரன் – கொலைகாரன் கதைகள் கேள்விப்பட்டிருந்தேன்.

 

அந்த இடத்தில், 'பலறாற்' வீதியில் பயணம் செய்யக்கூடிய அதிகூடிய வேகம் மணிக்கு 80 கிலோமீட்டராகும். இந்த வேகத்தைத் தணித்து 50 இற்குக் கொண்டுவந்தால் அவனை சலிப்பூட்டச்செய்யலாம். ஆனால் அவன் தொடர்ந்தும் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். வீதியில் மூன்று பாதைகள் இருந்தும், அவன் இப்படி என்னைப் பின்தொடர்வது எனக்கு அவன்மீது சந்தேகத்தைக் கொடுத்தது.

 

'·புற்ஸ்கிறேய்' வைத்தியசாலை வந்தது. இந்த இடமெல்லாம் எனக்கு அத்துப்படி. அடிக்கடி வைத்தியசாலை போய்வந்த அனுபவம். இந்த இடத்தில் காரை பானாப்படச் (ப) செலுத்தி மீண்டும் 'பலறாற்' வீதிக்கு எடுத்தால், அந்தக் காலதாமத்தில் அவன் என்னை விட்டு முந்திப் போய் விடுவான். காரை எந்தவித 'சிக்னலும்' இல்லாமல் வெட்டித் திருப்பினேன். என்னுடைய வெட்டுதலில் அவன் சற்றுத் திணறிப் போனான். பின்னர் காரை வைத்தியசாலை இருக்கும் பக்கம் மெதுவாகச் செலுத்தினேன். மீண்டும் 'பலறாற்' வீதியில் எடுக்கும் பொழுதுதான் – அவனும் என்னைத் தொடர்ந்து மெதுவாக 'பானாப்பட' வருவதை அவதானித்தேன்.

 

பயம் பிடிக்கத் தொடங்கியது. எண்பது ஓடக்கூடிய வீதியில் மணிக்கு நூறு என்ற வேகத்தில் ஓடத் தொடங்கினேன். இனி என்ன செய்வான் பார்க்கலாம்? ஆனால் ஒவ்வொரு முறையும் பாழாய்ப்போன சிக்னலில் நிற்க வேண்டியதாயிற்று. அப்படி நிற்கும்போது அவனும் பின்னாலே வந்து விடுகின்றான்.

 

அடுத்து வந்த சிக்னலில், நாலாபக்கமும் வேறு வாகனங்கள் இருக்கவில்லை. அப்படியே சிக்னலில் நிற்காமல் - 'ரெட்' லைற்றில் – அதே வேகத்தில் எடுத்துக் கொண்டேன். அவனும் சிக்னலில் நிற்காமல் வேகவேகமாக வந்து கொண்டிருந்தான். கார் - 'மெயிட்ஸ்ரோன்', 'பிறேபுறூக்', 'சண்சைன்', 'ஆடியர்' என்ற இடங்களிலெல்லாம் அதே நூறு வேகத்தில் ஓடி, நான் இருக்கும் இடமான 'டியர்பார்க்'கை அடைந்தது. உள்ளேயிருக்கின்ற குறுக்குப் பாதைகளிலெல்லாம் காரை வெட்டி வெட்டி எடுத்தேன். அவனைக் காணவில்லை.

 

வீடு வந்ததும் 'றிமோற்கொன்ரோலினால்' கராஜின் கதவைத் திறந்து உள்புகுந்தேன். மீண்டும் கராஜின் கதவை மூடும்போது வீட்டு வாசலில் ஒரு கார் வந்து வேகமாக 'பிரேக்' போட்டு நின்றது. உடனே உள்ளே எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தேன். சற்றுநேரம் ஓசைப்படாமல் உள்ளே நின்றேன். நெஞ்சு திக்குத்திக்கென்றது. சற்று நேரத்தில் கராஜின் கதவை அவன் தட்டினான். நான் கராஜிற்குள்ளிருந்து வீட்டிற்குள் போகும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன்.

 

உள்ளே மனைவியின் காதிற்குள் விஷயத்தை மெதுவாகச் சொன்னேன். வீட்டு விளக்குகள் எல்லாவற்றையும் பளீரென எரியவிட்டோம். ஏறக்குறைய கத்துவதற்கு ரெடி. அவன் வீட்டின் முன் கதவைத் தட்டி "நான்பொலிஸ்" என்றான். 'எப்படி அவனை நாம் நம்புவது?' இதுவரையும் ஒரு கள்ளனைப் போல என்னைப் பின்னாலே துரத்தியவனை எப்படி நான் பொலிஸ் என நம்புவது?

 

"எவனாக இருந்தாலும் காலையில் வா!" என்றேன்நான்.

 

சொல்லிவிட்டு ஜன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கி அவன் போய் விட்டானா எனப் பார்த்தேன். ஏதோ ஒரு சிறுபேப்பரில் பேனாவால் கிறுக்கி எழுதி எமது தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றான் அவன். மேலும் கொஞ்சநேரம் தாமதித்துவிட்டு தபால்பெட்டிக்குள் போட்டிருந்த துண்டை எடுத்து வந்தேன்.

 

கூடிய வேகத்தில் ஓடியது, 'சிக்னலில்' நிற்காமல் 'ரெட்' லைற்றில் எடுத்தது போன்ற பல்வேறு காரணங்களிற்காக தண்டம் அறவிடப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவிற்கு வருமானத்தை ஈட்டித்தரும் அந்தத் தொழிலில் கள்ளனும் அவனே பொலிசும் அவனே!

Thursday, 8 August 2024

காட்டுக்குள்ளே திருவிழா


 வாழ்க்கை பல புதிர்களையும் மர்மங்களையும் கொண்டது.

1988 / 89 காலப்பகுதி - அப்பொழுது ‘லங்கா சீமென்ற் தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலைசெய்து கொண்டிருந்தேன். மதிய வேளைகளில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம். சைக்கிள்தான் எனது வாகனம். அப்பொழுது ‘பிள்ளைபிடிகாரர் நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்த காலம். வீதிகள் எங்குமே எப்பொழுதுமே வெறிச்சோடிக் கிடந்தன.

சிலவேளைகளில் நண்பர் ஜனாவுடன் கூடிக்கொண்டு வேலைக்குச் செல்வது வழக்கம். அவர் எனக்கு சீனியராக வேலை செய்துகொண்டிருந்தார். தோற்றத்திலும் சீனியர். அன்று அவரின் தெல்லிப்பழை வீட்டிற்குச் சென்று, எனது சைக்கிளை அங்கு வைத்துவிட்டு அவருடன் செல்வதாக ஏற்பாடு.

மோட்டார் சைக்கிள் கே.கே.எஸ் வீதியால் விரைந்து கொண்டிருந்தது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு சற்று முன்பாக வீதியோரத்தில் ஒரு வாகனம் நிறுத்தியிருந்ததைக் கண்டோம். மூடி அடைக்கப்பட்ட `மூடுமந்திரம்அது. மோட்டார் சைக்கிள் அதனை அண்மித்தவுடன், எதுவித அசுமாத்தமும் இல்லாமல் இருந்த அந்த வாகனத்தில் இருந்து முகமூடி அணிந்த இருவர் துள்ளிக் குதித்தார்கள்.

“அண்ணை... அண்ணை... நிறுத்துங்கோ... இப்பிடி ஓரங்கட்டுங்கோ!

Tuesday, 30 July 2024

லாவண்யா VS வைகுந்தன் - எனக்குப் பிடித்த கதை

 
-        மாதுமை சிவசுப்பிரமணியம்

கண்களின் குறும்பு உதடுகளில் ஒட்டியிருக்க அறைக்குள் நுழைந்தாள் லாவண்யா.

மெல்லியதாகப் படபடக்கும் விரல்களினால் பாத் ரூம் கதவைச் சாத்தியவள், “சொறி லேட்டாயிட்டா? ” என்றாள்.
லாப் டொப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தன் “பரவாயில்லை வாங்க, வணக்கம்” என்றான் பதிலுக்கு. குரலில் பதட்டமா பரவசமா கண்டுகொள்ள முடியவில்லை அவளுக்கு.
சில நொடி மௌனம். யாராவது கலைக்க வேண்டுமே…

“என்ன கமல்ஜீயோட படமா பாக்கிறீங்க? ” என்ற லாவண்யாவின் கேள்விக்கு “ ஐயோ அம்மா இந்தா இப்பவே மூடி வைக்கிறன். சும்மா நீர் வரும் வரையும் பொழுது போக வேணும் எண்டு தான் பாட்டுக்களை மட்டும் தட்டிப் பாத்துக் கொண்டிருந்தனான். எனக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணேலாது” என்று சொல்லியபடியே லாப் டொப்பை மூடி பண்ணி மேசையில் வைத்தான். விட்டால் அவளும் சேர்ந்து பார்க்கத் தொடங்கி விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும்.

இன்னும் அந்த குறும்புச் சிரிப்பு அப்படியே அவளிடம் ஒட்டியிருந்தது. “ சரி பெண்டாட்டி இப்ப சொல்லுங்க” அருகில் வந்தமர்ந்து அவளது விரல்களைப் பிடித்தவனிடம் பிடுங்கித் தின்ற வெட்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் “ வைகுந்தன் சூடா ஒரு ப்ளாக் கோப்பி குடிக்கலாமா? ” என்றாள்.

Friday, 5 July 2024

`கிழக்கினை எதிர்கொண்டு’ - கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

 

அற்புதமான புத்தகத்தின் தலைப்பு. இலங்கையின் தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் ஒரு ஒளிக்கீற்றாக கெகிறாவ ஸுலைஹாவின் இந்தப் புத்தகம் விளங்குகின்றது.

ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.

Friday, 28 June 2024

`கற்பகதரு – சுவைத்தேன்’ – சுவையுரை

 

திரு ஜெயராமசர்மா அவர்களின் `கற்பகதரு’ நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், எனக்கு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லித் தந்த `நட்டாயிரம், பட்டாயிரம்’ என்ற சொற்பதம் ஞாபகத்திற்கு வந்தது. பனை இருந்தாலும் நீண்ட காலம் பயன் கொடுக்கும், வெட்டியபின்னும் பல்வேறு பொருட்களாக நீண்ட காலம் பயன் கொடுக்கும் என்பதை `நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா’ என்பார்கள். பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் - தரவுகள் சார்ந்ததாகவும், ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `கற்பகதரு’ என்ற இந்தப் புத்தகம் பனை பற்றிய முழுமையான தகவல்கள் கொண்ட ஒரு பெட்டகமாகத் திகழ்கின்றது.

இலக்கியத்தில் ஆரம்பித்து இனிக்கும் பனையுடன் நிறைவு பெறும் இந்நூல், பனையைப்பற்றி இனிச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று சொல்லும் வகையில் இருக்கின்றது. பனையின் வரலாறு, அதன் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் எனப் பத்து அத்தியாயங்களில், நாற்பது சுவைகளில் கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டியதைப் போல எழுதியிருக்கின்றார் ஆசிரியர்.

Wednesday, 26 June 2024

`கற்பகதரு’

 



தமிழக அரசின் மொழியியல் விருதாளரான திரு. ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி ஆவார். அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.

இதுவரை இருபத்திரண்டு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) இவரது ‘கற்பகதரு’ கட்டுரை நூல் வெளியீடு, அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ‘சிவா – விஷ்ணு’ ஆலய ‘மயில் மண்டபத்தில்’ திரு சங்கர சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மத்தியில் இனிதே நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டின்,  வாழ்த்துரையை மாவை நித்தியானந்தன் அவர்களும், நூல் ஆய்வுரையை திரு சண்முகம் சந்திரனும் நிகழ்த்தினார்கள்.

பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் - தரவுகள் சார்ந்ததாகவும், ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `கற்பகதரு என்ற இந்தப் புத்தகம் பனை பற்றிய முழுமையான தகவல்கள் கொண்ட ஒரு பெட்டகமாகும்.

இலக்கியத்தில் ஆரம்பித்து இனிக்கும் பனையுடன் நிறைவு பெறும் இந்நூல் - பனையின் வரலாறு, அதன் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் எனப் பத்து அத்தியாயங்களில், நாற்பது சுவைகளைக் கொண்டுள்ளது.

இந்தப் புத்தகம், என்னைப் போலவே, பலருக்கும் தமது இளமைக்கால நினைவுகளை மீட்டித்தரும். பனை மரம் பற்றிய இத்தனை தகவல்களையும் எம்மால் மனதிறுத்தி வைத்திருப்பது என்பது மிகச் சிரமமான காரியம் ஆகும். வேண்டும்போது புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆவணமாக, திரு ஜெயராமசர்மா அவர்களின் கடும் முயற்சியினால் உழைப்பினால் உருவாகியிருக்கின்றது இந்தக் `கற்பகதரு நூல். இத்தனை தகவல்களையும் ஒருசேரத் திரட்டித் தருவதற்கு ஆசிரியர் எவ்வளவு தேடல்களைச் செய்திருக்க வேண்டும்! ஆச்சரியமாக இருக்கின்றது. ஆசிரியரின் இந்த முயற்சி பாராட்டுதற்குரியது. நின்று நிலைக்கக்கூடிய புத்தகமாக திகழும் இந்தப் புத்தகம் பலரிடமும் போய்ச் சேர வேண்டும், பலரும் வாசித்துப் பயன் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். திரு ஜெயராமசர்மா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

கற்பகதரு

ஆசிரியர்: மகாதேவஐயர் ஜெயராமசர்மா

பக்கங்கள் ; 232 + xviii

வெளியீடு : 2022

பதிப்பு : மெகா பதிப்பகம், யாழ்ப்பாணம்

ISBN : 978-624-97879-4-0

 

 

Saturday, 1 June 2024

வளரி – சிறுகதை

வேலைக்குச் சென்றவுடன் கன்ரீனில் இருக்கும் குளிரூட்டியில் எனது மதிய உணவை வைப்பதற்காகச் சென்றேன். அங்கே ஏழெட்டுப் புதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி தன்பாட்டில் வேலை செய்துகொண்டிருந்தது. குளிரூட்டியில் உணவை வைத்துவிட்டுத் திரும்புகையில், கையடக்க ஸ்கேனர் ஞாபகத்திற்கு வந்தது. தினமும் வேலை முடிவடைந்து வீட்டிற்குப் போகும்போது சார்ஜ் செய்வதற்காகப் போட்டுவிடும் கையடக்க ஸ்கானரை எடுத்துக் கொண்டு எனது அறைக்குச் சென்றேன்.

அறை, கட்டடத்தின் கடைத் தொங்கலில் இருந்தது. ஃபில்டர் (filter) தொழிற்சாலையின் நிர்வாகம், டிசைன், வடிகட்டும் அமைவைப் பரீட்சிக்கும் பகுதி என்பவை கட்டிடத்தின் முன் பகுதியிலும் ; கன்ரீன், ரொயிலற், உடை மாற்றும் பகுதி என்பவை நடுப்புறமும் ; இறுதியாக ஸ்ரோர் பகுதியும் இருக்கின்றன. எனது அறை மூன்று பக்கங்களும் கண்ணாடிகளினாலும், கிழக்குப்புறம் கொங்கிறீற்றினாலும் ஆனது. நான் அங்கே போனபோது சூரியன் கிழக்குப்புற ஜன்னலுக்குள்ளால் உள்ளே குதித்திருந்தான்.

“குட்மோனிங் ஜோன்…”

விற்பனை மேலாளரும், கொள்முதல் மேளாளர் ஜோனிடமிருந்து பதில் வரவில்லை. அவர் கொம்பியூட்டருக்குள் மூளையைச் சொருகியிருந்தார்.

கண்ணாடிக்கூண்டுக்குப் பின்புறமாக மார்க்கிரட் போர்க்லிஃப்ட் உடன் சறுக்கீஸ் விடத் தொடங்கியிருந்தார். அவர் சீமெந்துத்தரையில் நிரல்நிரலாக ஃபில்டர் பெட்டிகள் அடங்கிய பலற்களை அடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கிழக்குப்புற ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். நான்கு டிரக் வண்டிகள் ஏற்கனவே வந்திருந்தன. நான் எனது இரண்டு கொம்பியூட்டர் திரைகளையும் இயக்கிவிட்டு, வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டேன்.

பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிரல்களை மார்க்கிரட் அடுக்கி முடிந்ததும், நான் அவருக்கு இடையூறு இல்லாமல் எனது வேலையைத் தொடங்கி விடுவேன். வேணியர் கலிப்பர், றூளர், கோ நோ கேஜ் எல்லாவற்றையும் எடுத்து மேசை மீது பரப்பி வைத்தேன். இன்று வரவிருக்கும் ஃபில்டர்களின் விபரங்கள் அடங்கிய பத்திரங்களையும், ஸ்கானரையும் ஒரு றொலிக்குள் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.

“என்ன மார்க்கிரட்… ஸ்ரோருக்கு கொஞ்சப் பேரை புதுசா எடுத்திருக்கினம் போல? கன்ரீனுக்குள்ளை கண்டனான்.”

“கொரோனா தணிய வேலை சூடு பிடிச்சிட்டுது. அதுதான் கஸ்சுவலா கொஞ்சப்பேரை எடுத்திருக்கினம்.”

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரிக்கு ஒவ்வொன்று எடுத்து றொலிக்குள் போட்டுக்கொண்டு திரும்பும்போது, புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்னை எதிர்கொண்டு விலத்தியபடியே ஸ்ரோருக்குள் நுழைந்தார்கள்.

நெடுநேரம் ஃபில்டர்களை அளவிடுவதாலும், கொம்பியூட்டருக்கு முன்னால் இருப்பதாலும் கண்களுக்கு சோர்வு வந்துவிடுகின்றது. வெளியே சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வருவதற்காகப் புறப்பட்டேன்.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.

Friday, 24 May 2024

`வாழ்தல் என்பது’ காலம் கடந்தும் வாழ்கின்றது.

 





(திருக்கோவில் கவியுவனின் சிறுகதைத்தொகுப்பு தொடர்பான ஒரு அலசல்)

-     இராசையா யுவேந்திரா அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் என்ற இடத்தில் பிறந்தவர். திருக்கோவில் கவியுவன் இவரது புனைபெயர். இவரது `வாழ்தல் என்பதுஎன்ற இந்தத் தொகுப்பு வரும்போது இவருக்கு வயது 26. அப்பொழுது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாக இவர் பயின்று கொண்டிருந்தார்.

1996 இல் வெளிவந்த இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் எட்டு சரிநிகர் சஞ்சிகையிலும், இரண்டு வீரகேசரியிலும் பிரசுரமாகி உள்ளன.

1995 களின் பிற்பாடு நான் நியூசிலாந்தில் இருந்த வேளையில் இவரது படைப்புகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். நண்பரும் எழுத்தாளருமான ஆ.தேவராஜன் இவர் பற்றிச் சொல்லியிருந்தார். ஆனால் அப்பொழுது இவரின் படைப்புகளை தேடிப் படிக்கமுடியாத சூழ்நிலை. இணையமும் மொபைல்போனும் இருக்கவில்லை. பத்திரிகைகள் சஞ்சிகைகள் அப்போது அங்கே வருவதில்லை. அதன் பிற்பாடு இவரும் தொடர்ந்து எழுதவில்லை.

ஆயினும் முப்பது வருடங்கள் கழித்து இவரது எழுத்துகளை வாசிக்கும் சந்தர்ப்பம் இன்று கிட்டியிருக்கின்றது. அதுவும் நந்தினி சேவியர் என்ற எழுத்தாளரின் `பிடித்த சிறுகதை’ (முகநூலில் பிடித்த ஈழத்துச் சிறுகதைகளைப் பற்றிய குறிப்புகள்) முதலாம் தொகுதி வந்ததன் பிற்பாடுதான். நந்தினி சேவியர் போன்ற எழுத்தாளர்கள் யாராவது தற்போது வாழ்ந்து வருகின்றார்களா? தானும் `நல்லபடியாகஎழுதிக்கொண்டு, மற்றவர்களையும் தூக்கிவிட்டு, அவ்வப்போது இலக்கியம் சமைக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு புரளி கிழப்பி தாளமிடும் பொட்டுக்கேடுகளை புட்டுப்புட்டு வைத்த அருமையான மனிதர் அவர். அவரது அந்தத்தொகுப்பில் 144வது எழுத்தாளர் திருக்கோவில் கவியுவன். இவர் பற்றிய நந்தினி சேவியரின் குறிப்பை வாசித்ததும் நான் திகைத்துப் போனேன். அதே சூதனர்கள் இன்றும் நம்மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். காலமும் அதன் சுவடுகளும் அவ்வப்போது அவர்களைக் காட்டித் தந்துவிடுகின்றது. அவரின் அப்பத்தியை அப்படியே தருகின்றேன். |யாரும் இவரைக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லமுடியாது. கண்டும் காணாது சென்றவர்களின் தொகை அதிகம். இவரது சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதியவர் பேரா.சிவத்தம்பி அவர்கள். சூதனர்களின் குறுக்கீட்டால் பிரசுரமானது அவர் எழுதிய பிறிதொரு முன்னுரை.|

இனி இவர் எழுதிய சிறுகதைத்தொகுதிக்கு வருகின்றேன்.

`மரணத்தின் தூதுதொகுப்பின் முதல் கதை. கவித்துவமான நடையில், நடக்கப்போகும் சங்கதிகளுக்கெல்லாம் கட்டியம் கூறுவதுபோல் ஒரு கனவு நிலையில் நின்று எழுதப்பட்டுள்ளது இந்தச் சிறுகதை.

`உடைத்துப் போட்ட தெருவிளக்குஒரு காலத்தின் மாறுதலைச் பிரதிபலிக்கும் சிறுகதை. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே இந்த மாறுதல் தொடங்கிவிட்டது. கட்சிகள், உட்கட்சிப் பூசல்கள், மின்கம்பத் தண்டனைகள் எல்லாம் அப்போதே ஆரம்பமாகிவிட்டன.

ஒரு இனத்துக்கும் பாலுக்குமிடையேயான கருத்துப் பரிவர்த்தனைகள் `மதிப்பீடுகதையாகிறது.

`செவ்வந்திவட்டாரவழக்கில் (பேச்சுவழக்கு) எழுதப்பட்ட நெடுங்கதை. கடற்தொழிலாளர்கள் பற்றியும், மீன் றால் நண்டு பிடிக்கும் லாவகங்களும் இழையோட – சிறிசுகள் ஆணும் பெண்ணுமாக அடிக்கும் லூட்டிகளுடன் கதை நகர்ந்து செல்கின்றது. பல புதிய தகவல்களைச் சொல்லிச் செல்லும் கதை, செவ்வந்தி பெரியவள் ஆனதுடன் சூடு பிடிக்கின்றது. கதையில் வரும் செவ்வந்திக்கும் சேந்தனுக்கும் என்னவாயிற்று என்பதை அடுத்து வரும் `இனியும் ஒரு சாவுசிறுகதை சொல்கின்றது.

`வாழ்தல் என்பது…ஒரு தம்பியின் பார்வையில் அண்ணாவின் கதை. பூடகமாகவே கதை முழுவதையும் நகர்த்துகின்றார் ஆசிரியர்.

இத்தொகுப்பைப் படிக்கும்போது மனதை ஒன்றுசேர்த்து ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து வாசிக்க முடியவில்லை. நானும் எனது காலங்களுக்கு அவ்வப்போது தாவிப் போவதும் பின்னர் மீண்டு வருவதுமாகவே இருந்தேன். அனேகமான கதைகளில் ஆக்கள் காணாமல் போவதும், இறப்பும், கூடவே கவிதைகளும் வருகின்றன. சில கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. தொகுப்பின் முதல் ஒன்பது கதைகளும் `தன்மை ஒருமையில் எழுதப்பட்டுள்ளன. கடைசிக் கதையான `காற்று கனக்கும் தீவு’ படர்க்கையில் எழுதப்பட்ட, நாட்டின் சீர்கேடுகளையும் நடப்புகளையும் பிரதிபலிக்கும் உருவகக் கதை எனக் கொள்ளலாம்.

ஒவ்வொருவருடைய எழுத்தும் நடையும் ஒவ்வொரு ரகம். நமக்குப் பிடித்திருக்கின்றதா என்றுதான் பார்க்க வேண்டும். அந்த வகையில் திருக்கோவில் கவியுவனின் எழுத்துகள் கொண்டாடப்பட வேண்டியவை. ஒரு காலத்தில் கிழக்கில் நடந்த அவலங்களுக்கான ஆவணம் இது. தொகுப்பில் `உடைத்துப் போட்ட தெருவிளக்கு’, `மதிப்பீடு’, `நனைதலும் காய்தலும்’, `செவ்வந்தி, `வாழ்தல் என்பதுஎனக்கு மிகவும் பிடித்த கதைகள். இவர் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

கவித்துவமான நடையிலும் அலாதியான வர்ணனைகளுடன் எழுதப்பட்டுள்ள, இவரது இந்தச் சிறுகதைத்தொகுப்பை நூலகம் இணையத்தளத்திற்குச் சென்று படிக்கலாம்.