Friday 8 March 2024

கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் வளவளா - கங்காருப்பாய்ச்சல்கள் (41)

 

இலங்கையில் போர்க்காலங்களில் நடந்த சம்பவங்களைப்பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்று சில எழுத்தாளர்களிடம் கேட்கும்போது, அவர்கள் அந்தக்காலங்களில் தாங்கள் இலங்கையில் இருக்கவில்லை என்று உதாசீனமாக அந்தக் கேள்வியைத் தட்டிக் கழிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களைப் பற்றியெல்லாம் எழுதுகின்றார்கள், தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சங்ககால இலக்கியங்களிலெல்லாம் மேற்கோள் காட்டுகின்றார்கள். சங்ககாலப் பாத்திரங்களை மீளவும் கொண்டுவந்து படைப்புகளில் முன் வைக்கின்றார்கள். தாங்கள் காணாத சந்தித்திராத, புத்தகங்களில் மட்டும் படித்து அறிந்த அவற்றைப் பற்றியெல்லாம் எழுத முடிகின்றது என்றால், நம் கண்முன்னே நாளாந்தம் நடக்கும் இவற்றைப்பற்றி எழுத முடியாதா என்ன?



பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிற்றேடுகள் பணத்திற்குள் முடங்கிக் கிடத்தல் நல்லதல்ல.

பத்திரிகையை விடுங்கள். இலக்கியத்தை வளர்த்தெடுக்கப் புறப்பட்ட சஞ்சிகைகளிற்கு இவை ஆரோகியமானதல்ல. சஞ்சிகையின் வளர்ச்சிக்கு என்று பணத்தைக் கொடுத்துவிட்டு, தன்னுடைய படைப்புகளையே போடுங்கள் என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை அனுப்புதல் எழுத்தாளருக்கு அழகல்ல. அதைவிடுத்து ஒரு சிலரின் படைப்புகளைப் போட வேண்டாம் என்று சொல்பவர்களும் உண்டு.

எந்தப் பெரிய கொம்பனாகவிருந்தாலும் சரி, அவரின் படைப்புகளையே தொடர்ந்து பிரசுரிக்கும் இதழாசிரியருக்கும் அது அழகல்ல. இவை ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் சஞ்சிகை படுத்துவிடும்.



பத்திரிகைத்துறையில் இருந்து வந்து எழுதுபவர்களின் எழுத்து நடைக்கும், ஏனைய எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கின்றேன். எழுத்தை தமது தேவைக்காகப் பாவிப்பதற்கும், மக்களின் நல்வாழ்க்கைககாக எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? ஒன்று எழுத்தை விற்பது, மற்றயது எழுத்தை வளர்ப்பது.

இயல்பாக ஆர்வத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கும், ஒரு கொள்கைக்காக தாம் சார்ந்த அமைப்புக்காக எழுதியே ஆகவேண்டும் என வலிந்து எழுதப்படும் படைப்புகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. முதல்வகைப் படைப்புகள் இலக்கியப்படைப்புகள், இரண்டாமவை இளக்காரமானவை.

No comments:

Post a Comment