

பால்வண்ணம் - கே.எஸ்.சுதாகர்:
ஆசிரியர் குறிப்பு:
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 1983ல் இருந்து எழுதி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் ஏற்கனவே வெளியான இவரது படைப்புகள். இது சிறுகதைத் தொகுப்பு.
தமிழில் நல்ல சிறுகதைகள் இருபது முதல் இருபத்தைந்து எழுத்தாளர்களாலேயே, இப்போது திரும்பத்திரும்ப எழுதப்படுகின்றது என்ற என் கருத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே எல்லாம் நடக்கிறது. ஒரு நாவல் வாசித்த போது அதே எழுத்தாளரால் இரண்டு வருடங்கள் முன்பு எழுதிய தொடர்புடைய சிறுகதையை என்னால் நினைவுகூர முடிந்தது. நல்ல சிறுகதைகளை எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் எழுதி முடித்ததும் சில நாட்கள் மறந்துவிட்டு இரண்டு மூன்று இடைவெளிகளில் மறுபடியும் வாசித்துப் பாருங்கள்.
கதைகளில் வேறு சாத்தியங்களையும் யோசித்துப் பாருங்கள்.
'ஏன்' என்ற கதையை எடுத்துக் கொள்வோம். அதன் மையஅச்சு, ஜனனிக்கு பிறந்த பெண்குழந்தையின் நிறம். அதைச்சுற்றியே கதை சுழன்றிருக்க வேண்டும். அக்குழந்தையைக் கொன்று, வேறெங்கோ திரிந்து கதை முடிகிறது.
தொகுப்பில் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள் ' பால்வண்ணம்", " யாரோ ஒளிந்திருக்கிறார்கள்". பால்வண்ணம் கதையில், அவள் இரவு வீட்டில் தங்கச் சொல்வதில் ஆரம்பித்து, இரவு, அவள் அறைக்குள் சென்றாலும் அவள் சாதாரணமாகப் பேசுவது, அவன் மனதில் அவள் உயரத்தில் இருப்பது என்று எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது கதையில் மெய்நிகர் உலகம் எப்படி நிஜஉலகை ஆக்கிரமிக்கிறது என்பதில் இருந்து விலகாது செல்கிறது.
சிறுகதைகளுக்கு முக்கியமாக வேண்டியது Focus. அது பல கதைகளிலில்லை. நம்மால் பயன் பெறுவோர், எதிர்காலப் பயனுக்கு வைத்துக் கொண்டோர், உற்றார், பெற்றோர், உறவினர், நண்பர் என்று எவர் சொல்வதையும் உங்கள் கதைகளைப் பொறுத்தமட்டில் காதுகொடுத்துக் கேட்காதீர்கள். அவர்கள் மனமறிந்து பொய் சொல்பவர்கள். பொது வாசிப்பில் சொல்லப்படும் குறைகளுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துங்கள். நிறைய வாசித்துக் குறைவாக எழுதுங்கள். Stock marketல் சம்பாதிப்பதை விட நல்ல சிறுகதை எழுதுவதென்பது கடினம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
பிரதிக்கு:
Zero Degree 89250 61999
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ. 190.
சரவணன் மாணிக்கவாசகம்
மாசி 09, 2024
No comments:
Post a Comment