Wednesday, 17 September 2025

மிஸ்டர் பீன், தேங்காய், கத்தி

தணிகாசலத்திற்கு சார்லி சப்பிளினுக்கு அடுத்ததாக மிஸ்டர் பீனைத்தான் அதிகம் பிடிக்கும். மிஸ்டர் பீனின் நகைச்சுவைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். மிஸ்டர் பீன் ஒரு அங்காடிக்குச் செல்கின்றார். திடீரென்று தனது மேலங்கிக்குள் இருந்து ஒரு முழு மீனை எடுத்துக் கொண்டார். ஒரு பாத்திரம் ஒன்றினுள் போட்டு, அப்பிடி ஒரு சுழட்டு இப்பிடி ஒரு சுழட்டு விட்டு, மீனைத் தூக்கித் தூக்கிப் போட்டார். திருப்தி வந்தவுடன் சட்டியை எடுத்துக் கொண்டார். பின்னர் தனது பொக்கற்றுக்குள் இருந்து ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். `பீலர்’ ஒன்றை எடுத்து உருளைக்கிழங்கின் மேல்புறத் தோலை சீவிப்பார்த்து, திருப்தி வந்தவுடன் அதையும் எடுத்துக் கொண்டார்.

அத்துடன் தணிகாசலம் படத்தை இடையில் நிறுத்திக் கொண்டார்.“இஞ்சாரும்… எங்கடை தேங்காய் உடைக்கிற கத்தியையும், பழங்கள் வெட்டுற கத்தியையும் எடுத்துக் கொண்டு என்னோடை ஒருக்கா கடைக்கு வரமாட்டீரோ?”

சற்று நேரத்தில் தணிகாசலமும் சிவகாமியும், ஒரு பெரிய கத்தி, இன்னொரு சின்னக் கத்தி சகிதம் காரில் ஏறினார்கள்.

இலங்கையை விட்டு வெளிநாட்டுக்கு வந்த இந்த முப்பது வருடங்களில் அவர்கள் இருவரும் ஒரு ஆமான தேங்காயைக் காணவில்லை. முதல் பத்து வருடங்களில் எந்தவொரு கடையிலும் தேங்காயே இருக்கவில்லை. அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கடைகளில் தேங்காய்கள் முளைத்தன. ஆனால் தேங்காய் என்று சொல்வதற்கில்லை. ஏதோ ஒரு காய். இரண்டு தேங்காய்கள் வாங்கினால், இரண்டும் அழுகிப் போயிருக்கும், அல்லது ஒன்று தேறியிருக்கும். ஒரு போதும் இரண்டுமே நன்றாக இருந்ததில்லை. ஒரு முறை நான்கு தேங்காய்கள் வாங்கி, தான் பள்ளிகூடத்தில் படிப்பித்த நிகழ்தகவைச் சோதித்துப் பார்த்தார். அவரால் அதை நம்ப முடியவில்லை. நிகழ்தகவு தோற்றுப் போயிருந்தது. நான்கில் மூன்று பாழ்.

தேங்காய்களை வாங்கி வந்து வீட்டில் உடைத்துப் பார்த்து, சரியில்லாவிடில் திருப்பிக் கொண்டுபோய் ரசீதுடன் குடுத்தால் தேங்காய்க்குப் பதில் தேங்காய் கிடைக்கும். பணத்தை ஒருவரும் திருப்பிக் குடுத்தது கிடையாது. பின்பு மீண்டும் முதலில் இருந்து வில்லங்கம் முளைக்கும். வீட்டில் கொண்டுவந்து உடைச்சுப் பார்த்து நல்லதோ கெட்டதோ நமக்கு இதுதான் விதி என்று நொந்து கொள்வார்கள்.

இப்பொழுது அப்பிடியில்லை. தேங்காய்க்கான ரசீதுடன் உடைத்த தேங்காய்ப் பாதிகளையும் கொண்டு போக வேண்டும். தேங்காய்களும் இரட்டி மடங்கு விலை. பெற்றோல் செலவு கூடி, அதையும் நட்டத்துடன் சேர்க்க வேண்டும். கடைக்கும் வீட்டுக்கும் மாறி மாறி ஓடிப்போவதில் சீவன் போய்விடும்.

சிவகாமியின் நண்பி ஒருவர், “எடியேய் காமி…. இப்ப வூல்வேர்த் சொப்பிங் சென்ரரிலை தேங்காயை பாதி பாதியா உடைச்சுக் குடுக்கிறாங்களாமடீ” என்று சொல்லியைதைக் கேட்டு, சொப்பிங் சென்ரருக்குப் போன சிவகாமி அங்குள்ளவர்களைச் சிரிக்க வைத்து தானும் சிரித்துவிட்டு வந்தாள். “நாங்கள் என்ன கவுண்டரிலை கத்தி வைச்சுக் கொண்டா இருக்கிறம்” என்று தேங்காய்ப்பாதி போல வாயை விரித்துக் கத்திய பெண்மணியை நினைத்து நடுச்சாமத்திலும் சிவகாமி சிரித்துக் கொள்வாள். அதன் பிறகு ஒரு குஜராத்காரனின் கடையில் நல்ல தேங்காய்கள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அங்கே போனார்கள். “நாங்கள் கோயில் தேவைகளுக்காக விற்கின்றோம்” என்றபடியே தேங்காய்கள் இருக்குமிடத்துக்கு கூட்டிச் சென்றார் கடைக்காரர். அங்கே ஒரு குளிரூட்டியில் தேங்காய்கள் குடுமியுடன் வீற்றிருந்தன. மற்றக் கடைகளைவிட விலை மூன்று மடங்கு அதிகம். `எக்காரணம் கொண்டும் வாங்கிய தேங்காய்களை நாங்கள் மீளப் பெற்றுக் கொள்ள மாட்டோம். பணமும் திருப்பித் தரப்பட மாட்டாது’ என்றொரு வாசகம் குளிரூட்டியில் ஒட்டிக் கிடந்தது. சலமும் காமியும் விழுந்தடித்துக் கொண்டு கடைக்கு வெளியே ஓடி வந்துவிட்டார்கள்.

“ஏனுங்கோ… உந்தக் கோயிலிலை அரிச்சனைக்கு வைச்சிருக்கிற தேங்காயளெல்லாம் நல்லாத்தானே இருக்கு” என்று சிவகாமி சொல்ல, “அவையளுக்கு தேங்காய் எல்லாம் பிறிஸ்பேர்ணிலிருந்து அல்லது பிஜித் தீவிலிருந்து நேரடியா வருகுது.” என்றார் தணிகாசலம்.

“அப்ப கோயில் நிர்வாகமே, கோயிலுக்குப் பக்கத்திலை ஒரு தேங்காய்க்கடை போட்டா நல்ல யாவாரமா இருக்குமல்லோ?”

“இனி அதுக்கு ஒரு கடை போட்டு, ஒரு ஆளை வைச்சு வியாபாரம் செய்யிறதைவிட அரிச்சனையாலை அவைக்குக் கூட வரும். அது சரியப்பா… உதுகளை விட்டிட்டு நாங்கள் வந்த வேலையைப் பாப்பம். பழையபடி நாங்கள் எங்கடை கடையிலையே நாலு தேங்காயள் வாங்குவம். இப்பதானே கத்தி இருக்கல்லோ… வீட்டை போய் திரும்பி வாற வேலையும் இல்லை. நேரமும் மிச்சம், பெற்றோல் செலவும் மிச்சம்”

கடைக்குள் இருவரும் புகுந்தார்கள். நான்கு தேங்காய்கள் வாங்கிக் கொண்டார்கள்.

“ஏனுங்கோ… மாம்பழம் படு ஜோரா, மாசு மறுவில்லாமக் இருக்கு… ஒரு கிலோ வாங்குவோமா…”

“போனமுறை வாங்கி, வெளியிலை நல்ல சிவப்பாக் கிடந்தது, உள்ளுக்கை வெய்யிலிலை வெம்பி, நரம்பு நரம்பா கறுத்தக் கோடுகளோடை கிடந்ததல்லே… இந்தமுறை மாம்பழம் வேண்டாம். அங்கை பாரும் கொய்யாப்பழங்களை… சாம்பிளுக்கு வெட்டி குவியலுக்கு மேலை கொஞ்சம் வைச்சிருக்கிறான். நல்ல இளந்தாரிப் பெம்பிளயள் சொண்டுக்குப் பூசினது போல சிரிச்சுக்கொண்டு சிவப்புச் சிவப்பாக் கிடக்கு… இரண்டு கிலோ வாங்குவம்.”

“முதன்முதல் கொய்யாப்பழத்தை பெம்பிளப்பிள்ளையளின்ர சொண்டுக்கு வர்ணிச்சது நீங்கள்தான். பதின்மூண்டு டொலர் எண்டு போட்டிருக்கிறான். விலை கொஞ்சம் கூடவாக் கிடக்கு…”

“இப்பதானே கத்தி கிடக்கல்லே…”

நாலு தேங்காய்களுடனும், இரண்டு கிலோ கொய்யாப்பழங்களுடனும் இருவரும் கார் நிற்குமிடம் விரைந்தார்கள்.

மறைவாக கார் நிற்பாட்டியிருந்த இடத்திற்குச் சென்று, பின் பூற்லிட்டைத் திறந்தார்கள். எக்ஸ்ரா டயரை மிதத்தி, அதற்குள் ஒளித்து வைத்திருந்த கத்திகளை எடுத்துக் கொண்டார்கள். தேங்காய்கள் நாலில் மூன்று நாசம். கொய்யாப்பழம் சாப்பிட ஆசையாக இருக்கு என்று காமி சொன்னதில், இரண்டு கொய்யாப் பழங்களை சின்னக் கத்தியால் நறுக்கினார் தணிகாசலம். உள்ளுக்குள் எல்லாமே வெள்ளையாகக் கிடந்த அதிர்ச்சியில் கொய்யாப்பழங்களைக் கீழே நிலத்தில் போட்டுவிட்டார். மேலும் இரண்டை நறுக்கினார். அதுவும் வெள்ளை.

“படுபாவி… மேலுக்கு சிவப்பை வெட்டி வைச்சு ஏமாத்திப் போட்டான்.” எல்லாவற்றையும் மீண்டும் பையிற்குள் போட்டுக்கொண்ட தணிகாசலம், “நீர் இந்தக் கத்தியளை ரிசூவாலை வடிவாத் துடைச்சு பின்னுக்கு வையும். நான் ஒருக்கா போட்டு வாறன்” சொல்லிக்கொண்டே கோபத்துடன் மீண்டும் கடைக்கு விரைந்தார்.

போனவர், போன வேகத்தில் திரும்ப வந்தார்.

“தேங்காயளுக்கும் கொய்யாப்பழங்களுக்கும் பதிலா இரண்டு மூட்டையள் அரிசி வாங்கி வந்தனான். இனி எங்கட மகள் சுருதியின்ரை கலியாண வீட்டுக்கும் ஆக்கள் நிறையப்பேர் வருவினம் தானே. தேவைப்படும்.”

தணிகாசலமும் சிவகாமியும் காரில் ஏறி, வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் காருக்குப் பின்னால் ஒரு பொலிஸ் வாகனம் லைற்றைப் போட்டபடி துரத்தியபடி இருந்தது. தணிகாசலம் அதைக் கவனிக்கவில்லை. பத்து நமிடங்களாகத் துரத்திய பொலிஸ் திடீரென்று கோபம் கொண்டு எச்சரிக்கை ஒலியை எழுப்பியபோது சிவகாமி உசாரானார்.

“ஏனுங்கோ… பொலிஸ், சைரன் போட்டபடி எங்களைத் துரத்தி வருகுது” சிவகாமி சொல்லிக் கொண்டிருக்கும்போது, பொலிஸ் வாகனம் வேகமாக அவர்களின் காரை முந்திச் சென்று மறுத்தான் போட்டது.

“நீங்கள் கத்தியள் வைச்சிருந்ததா எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது…” ஆங்கிலத்தில் உரையாடல் வேகமெடுத்தது.

“என்ரை கத்தி நான் வைச்சிருக்காமல் வேறை யார் வைச்சிருக்கிறது?”

“உங்கள் காரைச் சோதனை போட வேண்டும்…”

“உங்களுக்கு ஏன் சிரமம்! நானே எடுத்துத் தாரேனே!” பூற்லிட்டைத் திறந்து, இரண்டு கத்திகளையும் தணிகாசலம் எடுத்துப் பொலிசிடம் குடுத்தார்.

“கத்தியைப் பொதுவெளியில் கொண்டு திரிவது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றம். வேறை ஏதாவது ஆயுதங்களும் காருக்குள்ளை பதுக்கி வைத்திருக்கின்றீர்களா?”

பொலிஸ்காரன் இவர்களின் காரைச் சல்லடை போட்டுத் தேடினான்.

“உங்கட றைவிங் லைசென்ஸை தாருங்கோ. நாளக்குக் காலமை ஒருக்கா பொலிஸ் ஸ்ரேஷன் வந்துவிட்டுப் போங்கள்.”

தணிகாசலத்திற்கு சலம் சலமாக வேர்த்தது. செய்வதறியாது ஓட்டுநர் உரிமத்தைப் பொலிசிடம் குடுத்துவிட்டு காரிற்குள் ஏறிக் கொண்டார். சிவகாமி பேயறைந்தது போல காருக்குள் பதுங்கிக் கிடந்தார். முன்வீட்டு வெள்ளைக்காரத் தம்பதியினர் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பொலிஸ் போனதும், இவர்களை நோக்கி வந்தார்கள்.

“உங்களுக்கு விபரமே தெரியாதா? சமீபத்திலை கோல்ஸ் அங்காடியிலை வேலை செய்யிற ஒரு முதிய பெண்மணியை, அவர் தட்டுகளில் பொருட்களை அடிக்கிக் கொண்டிருந்தபோது, அவரின் பின்புறத்தை ஒரு டீன் ஏஜ் பையன் கத்தியால் குத்திவிட்டான். அதாலை இப்ப அங்கை கத்திகள் விற்பதைத் தடை செய்திருக்கினம்.”

“மற்றது எங்கட அயல்பகுதிகளிலை, இரவு நேரத்திலை பெடியளும் பெட்டையளும் கத்திகளாலை குத்திச் சண்டை போட்டிருக்கினம். சிசிடிவி கேமராவிலை பதிவான காட்சிகளை ரிவியிலை போட்டுக் காட்டினவை. நீங்கள் பாக்கேல்லையோ?” வந்தவர்கள் இருவரும் மாறிமாறிச் சொன்னார்கள்.

“நாங்கள் எங்கட மகளின்ர கலியாணவீட்டு அலுவலுகளிலை கொஞ்சம் பிஷியாப் போனம்” என்று தணிகாசலம் சமாளித்தார்.

”நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். பொலிஸ் ஸ்ரேசனிலை றிப்போட் ஒண்டு எடுக்கத்தான் நாளைக்கு உங்களை வரச் சொல்லியிருக்கினம்.”

அவர்கள் இருவரும் விடைபெற்றுக் கொள்ளவே, தணிகாசலம் காரை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். தணிகாசலம் ஊரிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் சென்றிருக்க மாட்டார். அன்று முழுவதும் அதைப்பற்றியே யோசித்தபடி இருந்தார்.

இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டதும், தொலைபேசியை எடுத்து டொக் டொக் என்று தட்டினார் தணிகாசலம்.

“இப்ப ஆருக்கு ரெலிபோன் எடுக்கிறியள்… உந்தத் தேங்காய்க்கதை ஒண்டையும் ஆருக்கும் உளறி வையாதையுங்கோ…” என சிவகாமி புறுபுறுக்க, உதட்டில் கையை வைத்து சத்தம் போட வேண்டாமென்று சைகை செய்தார் தணிகாசலம்.

“ஐயா…. நீங்கள் எங்கட மகளின்ரை கலியாணத்துக்கு நாலு மாலையளும், ஏழு தேங்காயளும் வாங்கிவரச் சொன்னியள். இனித் தென்னைமரம் நட்டுத்தான் நான் நல்ல தேங்காயள் எடுக்க முடியும். அது நடக்கிற காரியமோ? இப்ப நான் கடையிலை போய் வாங்கிவந்து, ஒரு நல்ல காரியத்துக்கு உடைக்கப் போகேக்கை உள்ளுக்கை எல்லாம் அழுகியிருந்தா என்னவாகிறது?”

“அதாலை…” குருக்கள் இராகத்துடன் இழுத்தார்.

“நாங்கள் கோயில் நிர்வாகத்திட்டையே மொத்தமா எங்கட கலியாணத்தைக் குடுக்க யோசிக்கிறம். அவையிட்டைத்தான் நல்ல தேங்காயள் இருக்கு. எங்களுக்கும் சுகம்.”

“உந்தப் பிரச்சினைக்கு ஒரு மாற்றீடு சொல்லுறன். விருப்பமெண்டா…”

“சொல்லுங்கோ… சொல்லுங்கோ”

“இப்ப இதுக்கெண்டு பிளாஸ்ரிக்கிலை தேங்காயள் வருகுது. வாடல் தேங்காய், நாறிப்போன தேங்காய், ஊசிப்போன தேங்காய் எண்டு ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்லை. தேங்காயின்ரை சரி நடுவிலை ஒரு நொப் வைச்சிருக்கிறானகள். அதிலை கத்தி பட, தேங்காய் சரி பாதியா பிளந்து சிரிக்கும். படத்துக்கும் வீடியோவுக்கும் ஜோரா இருக்கும். ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்லை…”

குருக்களை இடை மறித்தார் தணிகாசலம்.

“ஐயா… எனக்கு இன்னொரு மகனும் இருக்கிறான். அவன் இப்ப கொஞ்ச நாளா பிளாஸ்ரிக் பெட்டையளோடை திரியுறான். எல்லாமே வடிவானதுகள். அதுகளின்ரை முகத்திலை தொட, அதுகள் நளினம் காட்டுதுகள்… நாக்கை நீட்டுதுகள். அவன்ரை கலியாணத்தை கட்டாயம் நீங்கள்தான் நடத்தித் தரவேணும்.”

மறுபுறத்தில் இருந்து சிரிப்பு வர, தணிகாசலமும் சிரித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment