Friday, 26 September 2025

நாடோடிகள் - எனக்குப் பிடித்த கதை

 

கி.பி.அரவிந்தன் 

நேற்றென்று ஒருநாள் காலமாகிப்போக இன்றென்று ஒருநாள் விடிந்தது. அது ஒரு சனிக்கிழமை.

ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்துவிட்டேன். படுக்கையில் புரள்கின்றேன். எண்ணங்களும் பல வேறாய் உருள்கின்றன.

உடல் வெளிப்படுத்தும் இளஞ்சூட்டில் குளிர் காய்ந்தபடி அணைந்து உறங்கும் நானும் மனைவியும் உறக்கம் கலைந்த புரளலில் விலகினோம் போலும்.

விலகலிடையே குளிர் நிரவுகின்றது.

இருவரும் மீள மெல்ல அணைந்து கொள்கிறோம். இதமாக இருக்கின்றது.

குளிர் இறங்கிச் செல்கின்ற இளவேனிற் காலாந்தானானாலும் காலை நேரக்குளிரின் இறுக்கப்பிடி இன்னமும் தளரவில்லை. “மாசிப்பனி மூசிப் பெய்யும்" என ஊரில் சொல்வதுண்டுதான். பனியா இது? மூச்சையே உறையச் செய்யும் இக் குளிரின் வீச்சத்தை எப்படி அழைப்பது?

போர்வையை அகற்றாதே, அணைப்பை தளர்த்தாதே எனக் குளிர் எச்சரித்தாலும், அணைப்பில் சுகம் காணும் நாளல்ல சனிக்கிழமை.

"
சந்தைக்குபோக எவ்வளவு நேரம் கிடக்கு. இப்பவே முழிச்சுக்கொண்டு. என்னையும் உறங்கவிடாமல்." உறக்கக் கலக்கத்துடன் மனைவியின் சிணுக்கம்.

சனிக்கிழமை சந்தை கூடும் நாள். சந்தை கூடும் இடமும் எங்கள் குடிமனையில் இருந்து ஒரு நடை எட்டும் தூரந்தான். இந்த ஊர் மையமிட்ட பிராந்தியமெங்கணும் இந்தச் சனிக்கிழமைச் சந்தை பிரசித்தமானது.

சந்தை கூடும் சனிக்கிழமைக்காகவே மற்ற நாள்களில் பலரும் உயிர் வாழ்கின்றனரோ எனும் சந்தேகம் இங்கு வந்து சேர்ந்த இரண்டரை ஆண்டுகளில் பல தடவை என்னுள் ஏற்பட்டிருக்கின்றது.

ஏனெனில் சனிக்கிழமை எப்போ வரும் என்னும் தவிப்பு இப்போதெல்லாம் எனக்கு ஒரு வெறியாகவே மாறிவிட்டது. என்னை போல்தானே மற்றவர்களுக்கும் இருக்கும்.

வேலையற்றோரையும், சமூக உதவியில் வாழ்வோரையும் அதிகமாய் கொண்ட இந்த ஊரில் சனிக்கிழமைச் சந்தை நாள் கொண்டாட்டமாய் அமைந்து போனது. இதுவும் இல்லையானால்? நான் எழுந்துவிட்டேன். முகச்சவரம் செய்து, இளஞ்சூட்டு நீரில் உடல் நனைத்து பசுமையாகி, வாசனைத் திரவியம் பூசி மலர்ச்சியுறத் தொடங்கினேன்.

உற்சாகம் புரண்டெழத் தொடங்கியது.

மனைவியும் தன்னாயத்தங்களை தொடங்கி இருந்தாள். இருவரும் அணியமாகும் அவசரம் எங்களிடையே சிறு உரசலையும் தோற்றுவித்திருந்தது.

யார் தேநீர் தயாரிப்பது என்பது இன்னமும் இழுபறியாகவே இருந்தது. குழந்தைகள் துயிலெழும் நேரமும் நெருங்கிவிட்டது. முழிக்கும்போது பால் தேநீர் தயாராக இருக்கவில்லையானால் காலை ஆலாபனையை தொடங்கிவிடும் கடைக்குட்டியை சாந்தப்படுத்த அன்றைய நாள் போதாமல் இருக்கும். அதுவும் சனிக்கிழமை நாட்களில் இப்படி எதுவும் நிகழ்ந்து விடாதபடி மிகக்கவனமாக இருவரும் இருப்போம். வேலைப் பங்கீட்டில் சனிக்கிழமை நாளில் தேநீர் தயாரிப்பது என் முறையாக வரும்பொழுது இவ்வகை இழுபறி நிலை தோன்றிவிடும். சந்தைக்கு சென்று மீளும்வரை ஒரு வித பதட்டம் என்னை ஆட்கொள்வதால் பல தடவைகளில் பால் பொங்கி பால் பாத்திரம் எரிந்து, அடுப்பெல்லாம் அணைந்து ஒரு வேலைக்கு இரு வேலையாகி, எனக்கும் மனைவிக்கும் முறுகல் நிலைதோன்றி, சனிக்கிழமை நாளின் உற்சாகத்தையே கெடுத்துக் கொண்டதும் உண்டு. ஆதலால் இதனை நான் தவிர்ப்பதுண்டு. தெரிந்தும் மனைவி இன்றைக்கு முரண்டுபிடிக்கிறாளா?

நான் சந்தைக்கு எடுத்துச்செல்லும் பண்டமாற்றுப் பொருட்களை தேடிச் சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். பத்திரிகையை காணவில்லை. தமிழ்ப் படஒளி நாடாப் பிரதிகள் நான்கில் ஒன்று குறைந்திருந்தது. முடிந்தவரை தேடிவிட்டேன். மனைவியைத்தான் துணைக்கழைக்க வேண்டும்.

சமையல் அறையில் அவள் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். பத்திரிகை ஒளிநாடாப் பிரதி தேடியும் கிடையாத விடயத்தை மெதுவாக தொடங்கினேன்.

”எந்த எந்த அவசரமெண்டாலும் காலையில் வாசிக்கிற ஏதோ ஒன்றுடன் போவீங்களே அங்க பார்த்தீர்களா?” என்றாள் வெடுக்குடன் மனைவி.

அப்போதுதான் எனக்கு உறைத்தது.

ஓடிச்சென்று கழிப்பறையை பார்த்தேன். அங்கு இருந்தது. ஒளி நாடாவையும் நான் தேடிய இடத்தில் இருந்தே எடுத்துத் தந்தாள்.

இப்படித்தான் நான் தேடும் நேரத்தில் அப்பொருட்கள் என் கண்ணில் தட்டுப்படாது. இதற்காய் மனைவியிடம் வார்த்தைகளால் குட்டுப்பட்டிருக்கிறேன். அதுவும் சனிக்கிழமை காலை நேரத்தில் எல்லாப் பொருளுமே எனக்கு உச்சுக்காட்டிவிடும். சந்தை கூடும் நாளான சனிக்கிழமையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பண்டமாற்று. அதாவது கலாசார கொடுக்கல் வாங்கல்.

பல்வேறு தேசத்தார் வந்துறையும் அந்த ஊரில் நாங்கள் ஓர் ஆறு குடும்பத்தாரும் வெளிநாட்டாராய் வசித்து வருகிறோம். எனது குடும்பந்தான் இந்த ஊருக்கு வந்து சேர்ந்த கடைசித் தமிழ்க் குடும்பம். நான் இங்கு வந்து இரண்டு வருடமும் மூன்று மாதமுமாகின்றது. எங்களுக்குப் பின் புதிய வரவாய் தமிழ்க் குடும்பத்தார் எவரும் வந்து சேரவில்லை. ஆனால் வேறு தேசத்தார் அவ்வப்போது வந்து சேர்ந்த வண்ணமே இருக்கின்றனர்.

எனக்கு முன்வந்த ஐந்து குடும்பங்களுள்ளும் மூத்தகுடி எனக் கூறிக் கொள்ளும் குடும்பம் வந்து சேர்ந்து ஆறு வருடமாகின்றது. ஆறு வருட வரலாறு கொண்ட இந்தக் குடும்பங்கள் எவர்க்கும் வேலைவெட்டி கிடையாது. வேலையற்றிருப்பது இந்த ஊரில் பெரிய விடயமுமில்லை.

ஆதலால் எங்களது அக்கறைக்கும் பொழுதுபோக்கிற்கும் உரிய விடயமாய் கலாசாரத்தை பேணுதல், அதற்கு மெருகேற்றுதல். அச்சொட்டுத் தவறாமல் அதனை கைக்கொள்ளுதல் என்பன அமைந்து போனது. தொலைதூரத்தில் இருந்து தமிழ்ப்பட ஒளி நாடாக்களை வரவழைத்து அதனை பரிமாற்றம் செய்து கண்டுகளிப்பது முக்கியமான கலாசார கடமையாக எங்களுக்கு இருந்து வந்தது. இதில் இரு குடும்பத்தார் ஆளுக்கொரு தமிழ்ப் பத்திரிகையை வருவித்து தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்வதுமுண்டு. நான் தமிழ்ப் பத்திரிகையுடன் சஞ்சிகைகளையும் வரவழைத்து படிப்பதன் மூலம் ஆறு குடும்பத்தாருள்ளும் ஒரங்குலம் உயரமாக என்னைக் காட்டிக்கொண்டேன்.

கடந்தவார சந்தைச் சந்திப்பில் வாங்கிவந்த பண்டமாற்றுப் பொருட்கள் அனைத்தையும் எடுத்து சந்தைக்கு கொண்டு செல்லும் உருளும் சில்லுப் பொருந்திய இழுவைப் பைக்குள் வைத்துக்கொண்டேன்.

முதல் சுற்றுப் பயணம் என்னுடையது. இரண்டாவது சுற்றில்தான் குடும்பத்தார் வந்து சேர்வர். அதற்கு நேரமிருக்கிறது. நான் இழுவைப் பையுடன் இறங்கினேன்.

காலை எட்டு மணிதான் நான் வழமையாக இறங்கும் நேரம். வெளியில் வந்துவிட்டேன்.

வெளியை நிறைத்திருந்து கைத்தட்டுத் தாளத்துடன் கூடிய கூட்டிசைப்பாடல். இசையின் அடிநாதம் கூக்குரல் என்றாலும் பொருந்தும். எனக்கு இப்போதெல்லாம் மிகப் பரிட்சயமாகிவிட்ட பாடல் இது.

`நாங்கள் பறவையைப் போன்றவர். எல்லைகள் இன்றியே பறப்பவர் நாங்கள்’

அவர்கள் பாடுவது இந்தப் பாடலாகவும் இருக்கலாம் அவர்களின் பலபாடல்களின் மெட்டு ஒத்த தன்மை கொண்டவை. தெருவோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றைச் சுற்றிநின்றபடி அவர்கள் இசைக்கின்றார்கள்.

அவர்களில் பலர் எனக்கு பரிச்சயமானவர்கள். அடிக்கடி சந்தித்து மரியாதை வணக்கம் தெரிவித்துக் கொள்பவர்கள். என் அயலவர்கள், இவர்களின் அறிமுகத்திலும் ஒரு கதை உண்டு. நான் எனது குடும்பத்துடன் மத்தியதரைக் கடலோரமுள்ள இந்த அகதிகள் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட போது ஒரு வகை அச்சம் மனதில் பரவி இருந்தது. ஆனாலும் வதிவிடமில்லா அலைச்சலுக்கு ஒரு தாவாரம் கிடைத்ததே என்ற திருப்தியும் பயத்துடன் கூடவே இணைந்திருந்தது. காணும் மனிதரெல்லாம் கரடு முரடானவர்கள் போல் தென்பட்டனர். சமூக உதவிப் பணியாளர்கள்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாகப்பட்டனர்.

எங்களுக்கான நிர்வாகப் பதிவு வேலைகள் நடைபெற்ற போதில்தான். வங்கிக் கணக்கைத் திறப்பதற்காக வங்கிக் கிளையொன்றுக்கு சமூக உதவிப் பணியாளர்கள் எங்களை அழைத்துச் சென்றனர்.

இந்நாட்டின் மொழியை தெளிவுற அறியாதிருந்த எனக்கு, வங்கியாளருக்கும் சமூக உதவியாளருக்கும் இடையே நடந்த உரையாடலை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் வங்கியாளர் மறுப்பு தெரிவித்தும் உரையாடல் சூடாக மாறியதும், பின்னர் சம நிலையை அடைந்ததும் உய்த்துணர முடிந்தது. ஒருவாறாய் வங்கி வேலைகள் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கையில் தான் சமூக உதவிப் பணியாளர் நடந்தவை பற்றி விபரித்தார். அவரது குரலில் பாவனையில் கவலை தொனித்தது.

உங்களுக்கும், இங்குள்ள நாடோடிகளுக்கும் தோற்ற ஒற்றுமை இருக்குத்தானே. வங்கியாளன் உங்களையும் நாடோடிகள்தான் என நினைத்து கணக்குத் திறக்க மறுத்துவிட்டார். நீங்கள் அகதி இலங்கையர் என்று விளக்கமளித்த பின்தான் சம்மதித்தான். ஆனால் நாடோடிகள் இந்நாட்டு சமூகப் பிரிவினராக..? நாடோடிகள் இங்கு வந்து பல நூற்றாண்டுகளாகின்றன. எங்கள் சமூகம் அவர்களை தீண்டாதவராய் ஒதுக்கித்தான் வைத்துள்ளது".

சட்டென பாறாங்கல்லொன்றில் முகம் மோதி சிதறியது. நான் சமாளித்துக்கொண்டேன்.

அன்றைக்கே என் மூதாதையரை இவர்களில் அடையாளம் காணலாமோ என்னும் உணர்வு என்னுள் உறுத்தத் தொடங்கியது.

இப்போது இதோ என்முன் பாடிக்கொண்டிருக்கின்றார்களே அவர்களின் தோள்வரை புரளும் சுருள் சுருளான தலைமயிரை பின்னிருந்து பார்க்கையில் ஊரில் நாட்டுக் கூத்து அண்ணாவிதான் கண்முன் வருகிறார்

எனது தாய்மாமனும் ஒரு அண்ணாவிதான். பனையில் இருந்து இறக்கிய புதுக் கள்ளைப் பருகிய படியே `ஞானசவுந்தரி’ கூத்தில் துயர்மிகு பாடலொன்றை இசைக்கும் இழுப்பில் என் நெஞ்சு பதறும். நிசப்தம் சூழும் சாமப்பொழுதினில் விவிலியத்திலுள்ள புலம்பல் பகுதியை பெருங்குரலெடுத்து ஒதும் பொழுதினில் அயலெங்கும் நெகிழ்ந்து கண்ணீர் உகுக்கும். இந்த நாடோடிகளின் பாடலிலும் அதே சாயல்தான். சாயலல்ல: அது ஆறாக்காயம். சொல்லி மாளாத துன்பம்.

ஊரூராய், நாடு நாடாய், கண்டம் கண்டமாய் துரத்தியடிக்கப்பட்ட முடிவுறாத அலைச்சலின் கதைகள் அவை. உலகத்தாரால் கைவிடப்பட்டோரின் அபயக்குரல் அது ஏரோது மன்னனின் ஆணைக்குப் பயந்து வயிற்றில் நிறைமாத குழுந்தையுடன் கன்னி மேரி அலைந்தபோது. இன்று நாடோடிகளென அறியப்பட்டோரின் மூதாதையரிடம் அடைக்கலம் கேட்கிறாள். அவர்கள் மறுத்துவிடுகின்றனர். `அலைந்து திரிவீர்’ என அவள் சாபமிடுகின்றாள். சாபம் பலவிதமாக முடிவில்லாமல் நீள்கின்றது. அப்படியென நம்புகிறார்கள். அவர்கள் பாடுகின்றார்கள்.

நானும் நாடோடியாகினேனாகில் எனக்கிடப்பட்ட சாபம் யாதெனில்.?

சொந்த மொழி பேசியோனுக்கே "கள்ளத்தோணி எனப் பட்டம் சூட்டி காட்டிக்கொடுத்த சாபம் சூளுதோ?

வணக்கம் நலமா? றொட்டிகோ கை கொடுக்கின்றார் என் சுற்றாடலில் வதியும் நாடோடிகளின் பிரதிநிதி அவர்வணக்கம். வணக்கம். யாரேனும் புதிதாக வந்துள்ளார்களாஎன்கிறேன் நான்.

"
எங்கள் குடும்ப உறுப்பினர் சிலர் கடந்த கோடையில் புறப்பட்டவர்கள் இந்த இளவேனில் தொடக்கத்தில் நலமே திரும்பி இருக்கின்றனர்.” என்கிறார் றொட்றிகோ.

பயணமாகி யார் வரும் போதும், புறப்படும் போதும் இப்படித்தான் பாடல் இசையுடன் உருகுகின்றார்கள். இதற்கு கால நேரம் எதுவும் கிடையாது.

எப்போதும் கூட்டமாகவே தென்படும் இவர்கள் எப்போது சாப்பிடுவார். எப்போது உறங்குவார் என்பது விநோதமாகவே எனக்கு இருக்கும். றொட்றிகோ என்னை விடவும் பல வயதுகள் மூத்தவர். ஆனால் உற்சாகமும் உல்லாசமும் கொண்டவர். வசீகரக் கிழவன். றொட்டிகோ தன் சகாக்களுக்கு என்னை அறிமுகம் செய்யும்போது நம்ம சகோதரர் என்றே எப்போதும் கூறுவார். என்னிடம் பேசும்போது நகைச்சுவையாக கூறுவார். "நீங்கள் இந்தியாவின் காலில் இருந்து வந்தவர்கள். நாங்கள் இந்தியாவின் தலையில் இருந்துவந்தவர்கள். நாங்கள் முந்தியவர்கள் - நீங்கள் பிந்தியவர்கள்.”

முதல்தடவை இதனை கூறியபோது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

எகிப்து வரைக்கும்தான் சிலர் எங்கள் வரலாற்றை தேடுகின்றார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் எங்கள் வரலாறு இராஜஸ்தான் பாலைவனம் வரைக்கும் நீள்கின்றது. அதுவும் இந்திய நாட்டுக்காரர்தான் கண்டுபிடித்தார்கள். அங்கு உள்ள பாட்டும், இசையும், எங்க மாதிரியே இருக்கும். படம்பிடித்துக் கொண்டுவந்து காட்டினார்கள். பின்பு எங்கள் பாட்டையும் படம்பிடித்து இணைத்துள்ளார்கள். எந்த வித்தியாசமும் இல்லை.

எங்களை 'கலே' என்று அழைப்பதுண்டு 'கல்தேஷ்' என்று எங்களில் 905 பிரிவுண்டு சில வேளை சிந்து நதிக்குள்ளாகப் புதையுண்டது உங்களதும். எங்களதும் தேசமாக இருக்கலாம். ஆனால் இன்றைக்கு தேசம் என்று ஒன்று எங்களுக்கு இல்லை. நாங்கள் எங்கேயும் இருக்கலாம் ஆனால் உலகில் நாங்கள் ஒரு தனிச் சமூகம்.

என அவர் உணர்ச்சிபடக் கூறியது அவர்களைக் காணும் போதெல்லாம் என் காதுகள் மீள ஒலிக்கும்.

றொட்றிகோவிடமும், மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு சந்தையை நோக்கி திரும்புகின்றேன்.

இளவேனிற்கால வனப்பிற்கு தன்னை ஆரவாரமின்றி தயார்ப்படுத்துகிறது இயற்கை.

கோடை நெருங்கிவர பெரும்பான்மையினர் பயணமாகிவிடுவர். அதிலும் இந்த நாடோடிகள் ஒருவர் கூட இரார். இந்த ஊரே வெறிச்சோடி விடும். கூடும் சந்தையிலும் பொலிவிருக்காது. ஏனோ தானோவென சிலர் கடைகளை விரிப்பர். முதன் முதல் இந்த சனிக்கிழமைச் சந்தையைக் காண நேர்ந்தபோது அதன் அமர்க்களம் என்னை ஈர்த்துக்கொண்டது. ஒரு திருவிழாக்கால கடைத்தெருவின் சாயல் அதில் இருந்தது.

நாங்கள் வருவதற்கு ஒரு ஒன்றரை வருட இடைவெளியில் முன்வந்து சேர்ந்த பிரேம் - ராணி இளந்தம்பதியினர்தான் இவ்வூர் நிலவரங்களை எமக்கு அறியத் தந்தனர்.

தங்களது ஒருவயது நிறையாத குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து உருட்டியபடியே இச்சந்தைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் இத்தாலியில் வசித்த பின் அங்கு அகதிகள் பராமரிப்பு சரிவராதது என உணர்ந்ததால் வயிற்றில் குழந்தையுடன் எல்லை கடந்து வந்து சேர்ந்தவர்கள்.

அவர்கள் தான் இங்குள்ள மலிவுவிலைக் கடைகள், சமூக சேவை நிலையங்கள் என்பவற்றை இடம் காட்டி விட்டவர்கள். அந்தவகையில்தான் இந்த சந்தைக்கும் அழைத்து வந்தனர்.

எனது மனைவி பொட்டு வைத்திருந்தாள். சந்தையை நெருங்கி கொண்டிருந்தபோது, சிறுவர்களும் பெண்களுமான ஒரு கும்பல் எங்களை மொய்த்தது. எதிர்பாராத சுற்றிவளைப்பினால் நாங்கள் சற்று மிரண்டு போனோம். ஆனால் அவர்கள் ஒருவகை நேசத்துடன்தான் விசாரித்தார்கள். நானும் மனைவியும் எதுவும் பேசவில்லை. அழைத்து வந்த இளம் தம்பதியினர்தான் பதிலளித்தார்கள். “பொட்டு வைத்திருக்கிறீர்களே நீங்கள் இந்தியரா? ஒரு பாட்டுப் பாடுங்களேன்?” என்பது தான் அவர்களது வேண்டுகோள். இவ்வளவு தானா என்பது போல ஆகிவிட்டது எங்களுக்கு. நாங்கள் இலங்கையர் என்றதும் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர். இதுகளோட சகவாசம் வைக்கக்கூடாது. இதுகள் இந்நாட்டினரில்லை. இதுகள் நாடோடிகள்.”

எங்களை அழைத்து வந்தவர்கள் இந்த விளக்கத்தை கூறியபோது அவர்களுக்காய் ஒரு பாட்டுப் பாடி இருக்கலாம் போல்பட்டது. நான் சந்தையை அடைந்து விட்டேன். சத்த சந்தடியில் சந்தை மூழ்கிக் கிடந்தது.

ஒவ்வொரு காய்கறியின் மீதும். அதன் பூர்வீகம் அதன் விலை எழுதப்பட்டிருந்தது.

பெரு ஆலைக் கழிவுகளான துணிமணிகள் பாத்திரங்கள் மலிவு விலையில் குவிக்கப்பட்டிருந்தன. பாவித்த பழைய ஆடைகள் குப்பையாய் இறைந்து கிடந்தன. றேகே, ராய், றொக், றாப் ஒலி நாடாக்கள் விற்பனைக்காய் கூவி இரைந்து கொண்டிருந்தன.

மொறோக் - அல்ஜீரி போன்ற வட ஆபிரிக்க அரேபியரின் விருப்பங்கள் தேவைகளுக்கேற்ற கடைகள், ஆபிரிக்க நீக்ரோக்களின் விருப்பங்கள். தேவைக்ளுக்கேற்ற கடைகள் என நிறைந்திருந்தன.

சரிகையும், மினுக்கு முலாமும் கொண்ட துணிவகைகளை முக்காடணிந்த அரேபிய பெண்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்.

சந்தைக் காற்றை ஆவல்தீர இழுத்துக் கொள்கிறேன். எதிரே 'பாயிக் தம்பதியினர் வந்துகொண்டிருந்தனர். மலர்ந்த முகத்துடன் காலை வணக்கம் தெரிவித்த அவர்கள்வேலை கிடைத்ததாஎன்ற மரபான கேள்வியைக் கேட்டனர். வழமையான "இல்லைபதிலையே நானும் சொன்னேன். பொஸ்னியா முஸ்லிம்கள், அவர்கள் மொஸ்ரார் கிராமத்தை இனத் தூய்மையாளர் மொய்த்தபோது இரண்டு குழந்தைகளுடன் தப்பித்து வந்தவர்கள். இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தார் இங்கு வாழ்கின்றனர்.

பாயிக் குடும்பத்தாரும் நாங்களும் ஏறத்தாழ ஒரே நேரத்திலே இங்கு வந்து சேர்ந்தவர்கள்.

நட்பானவர்கள், எங்கள் நன்றிக்குரியவர்கள் . இவர்களால் எனது ஏழு வயது மகன் பலத்த அடிகாயங்களில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றான்.

பாடசாலை வார விடுமுறை நாளான ஒரு புதன்கிழமை மதிய உணவின் பின் குழந்தைகளுடன் நானும் மனைவியும் கண்ணயர்ந்து விட்டோம். ஏழு வயதான மகன் கண்ணுறங்க மறுத்துவிட்டான். முன்னறையில் விளையாடிக் கொண்டிருந்தான். பல நாட்களில் இப்படித்தான். கதவு தட்டப்படும் ஓசை கேட்டுத் திடுக்கிட்டெழுந்தோம். முன்னறையில் மகன் இல்லை. மகனின் விசும்பும் ஒலி வெளியே கேட்டுக்கொண்டிருந்தது. மகனின் கையைப் பிடித்தபடி பாயிக் நின்றிருந்தார். மகனின் முகம் வீங்கி இருந்தது. எனக்குப் பதட்டம். நாங்கள் தூங்கிவிட்ட குற்றம். மனம் குறுகுறுத்தது. பாயிக் உள் வந்தபோது உட்கார மறுத்துவிட்டார்.

"
தனியே ஏன் விளையாட விட்டீர்கள். விட்டாலும் கவனித்து இருக்க வேண்டாமா? என் வீட்டிற்கு அருகே நடந்ததால் தற்செயலாகக் காணமுடிந்தது. எனக்கு அந்தப் பையன்களைத் தெரியும். மோசமானவர்கள். நல்லா அடித்து விட்டார்கள் போலத் தெரிகிறது பாருங்கள்.”

அவர் சென்றுவிட்டார். எங்கள்மீது இலேசான எரிச்சல். இது எங்கள் பிழைதான்.

பாயிக் சென்றதும் மகன் சத்தமிட்டு விக்கி விக்கி அழத் தொடங்கினான். அவனது தொடையில் காயங்கள் இருந்தன. "என்னைப் பன்றி என்றார்கள். என் கால்சட்டையைக் கழற்றி குஞ்சாமணியைப் பார்த்தார்கள். பின்பு என்னை கம்புகளால் பிடித்தார்கள். நாடோடி நாயே எங்களிடத்தில் ஏன் விளையாட வந்தாய் என்று ஏசினார்கள். முகத்தில் துப்பினார்கள். பாயிக் மாமா சத்தம் போடவே ஓடிவிட்டான்கள்என்றான் மகன். அவனின் குரலில் நடுக்கம் இருந்தது. அவனைத் தேற்றி முகமெல்லாம் கழுவி கீறல் காயங்களுக்கு மருந்திட்டோம். எனக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. மனைவி மகனைக் கட்டியணைத்து கண்ணிர் உகுத்தபடி இருந்தாள்.

என் சகநாட்டவர் யாரையும் காணவில்லை. சந்தை சற்று விரிவானது. பெரிய திடல் அது. மற்ற நாட்களில் வாகனம் நிறுத்துமிடமாகவும் வயதானவர்களின் குண்டுருட்டு மைதானமாகவும் உள்ள அப்பகுதி சனிக்கிழமைகளில் சந்தை கூடும் இடமாக மாறிவிடுகின்றது. சல்மான் வணக்கம் சொன்னார். ஏழு பிள்ளைகள் புடைசூழ மனைவியுடன் வந்திருந்தார். கத்தோலிக்க துருக்கியர்கள் இவர்கள். துருக்கியில் கத்தோலிக்கர்கள் விரட்டப்படுகின்றார்கள். தாங்கள் தங்கள் பூர்வீகமான இரு வீட்டையும் பழத்தோட்டத்தையும் விட்டுவிட்டு வந்ததாக எந்தக் கதையிலும் ஒருதடவை கூறுவார். இவரது குடும்பக் கிளையொன்றே இங்கே வசிக்கின்றது. அவர்தான் கூறினார்உங்கள் உறவினரெல்லாம் பஸ்தரிப்பிடத்திற்கு அருகே கூடியுள்ளார்கள். ராணி அழுதுகொண்டிருக்கிறாள். ஏதும் துக்க செய்தியாக இருக்கலாம். நான் அங்கே செல்லவில்லை. நீங்கள் சந்திக்கவில்லையா?” என்றார்.

நான் சல்மானுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன். அட என்ன இந்த சனிக்கிழமை இப்படி.

இந்த பிரேம் - ராணி இளம் தம்பதியினர்தான் நாங்கள் முதன்முதலாக இங்கே வந்தபோது அகதிகள் பராமரிப்பு நிலையத்தில் எங்களை வரவேற்று உபசரித்தவர்கள். நாங்கள் வரும்போது ஒரு குழந்தை. தற்போது இன்னொன்று வயிற்றில் உருவாகி இருந்தது. பிரேம் - ராணி குடும்பத்தினர் இன்னமும் அகதியாக ஏற்கப்படவில்லை. அவர்களது விண்ணப்பம் பரிசீலனையில்தான் உள்ளது. முதல் விசாரணையில் இவர்களது நியாயங்கள் ஏற்கப்படவில்லை. தற்போது மேன்முறையீடு செய்துவிட்டு முடிவிற்காக காத்திருந்தார்கள். இது இறுதியானது. அவர்கள் முடிவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.

என்னைத் தவிர்த்து மற்றைய குடும்பத்தார் அனைவரும் குழுமி நின்றனர். ராணி தலையைக் கவிழ்த்தபடி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். பிரேம் கையை கட்டியபடி கவலையுடன் நின்றுகொண்டிருந்தார். குழந்தை சற்றுத் தள்ளி மற்றக் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தது.

என்னைக் கண்டதும் ராணி சற்று உரமாக கேவிக் கேவி அழத் தொடங்கினாள். எனக்கு மனசைப் பிசைந்தது. இழவு வீட்டிற்கு செல்லும்போது ஒவ்வொருவரைக் காணும்போது ஒப்பாரி சொல்லி அழுகை கூடுமே. அப்படி இருந்தது நிலைமை. "நேற்று ராத்திரிதான் வந்து சொன்னார்கள் எங்கள் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு விட்டதாம். வரும் திங்களுக்குப்பின் இங்கு இருக்க இயலாதாம். இரா முழுவதும் தூக்கமில்லை. செய்தி கேட்டதில் இருந்து ராணி அழுதபடிதான். தொலைபேசியிலும் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்றைக்கு இந்தச் சந்தையில் சந்திப்பம்தானே என்று."

பிரேமின் குரல் தளதளத்து வார்த்தைகள் வெளியே வராமல் தடைப்பட்டன.

இதுதான் எங்கட கடைசிச் சந்தையோ..? ராணி தலையை நிமிர்த்தி கேட்கிறாள்.

எல்லோரும் சந்தைப் பக்கம் பார்வையை ஒடவிடுகின்றோம். எங்க வீடுகளில் நிக்கலாம் தானே. சமாதானம் கூற முயன்றனர்.

"
திங்கட்கிழமையின் பின்னால் இவர்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்கள். பொலிஸ் வந்து கைது செய்ய வாய்ப்புண்டு." அந்தோனி பரமானந்தத்திற்கு பதில் சொன்னாரா. உள்ளதைத் தெரிவித்தாரா தெரியவில்லை.

இப்ப உங்கட வீட்டில நிக்கப்போறமெண்டே சொன்னனாங்க.." ராணி வெடித்தாள்.

பிரேம் ராணியைக் கடிந்துகொண்டான். உள்ள நிலைமைதானே. போன வாரம் நம்மட கண்ணுக்கு முன்னாலைதானே சோமாலி குடும்பத்தை பொலிஸ் கொண்டுபோனது.

எல்லாம் சரிவரும். வீடு தரப்போறாங்கள் என்று ஒரு வீட்டிற்கு தேவையான சாமான்கள் எல்லாத்தையுமல்லோ வாங்கிப்போட்டு அந்த நம்பிக்கையிலதானே வயிற்றில் குழந்தையை வளரவிட்டனான்" ராணி கேவிக் கேவிப் புலம்பினாள்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

"ஊர் உறவையே விட்டு தொலைச்ச நாங்கள் இங்க இல்லையெண்டால் இன்னொரு இடம் மாறுறது பிரச்சனையே. எல்லாத்துக்கும் தயாராய் இருக்கோணும். நடக்கிறதைப் பாருங்கள் " என்றேன் நான்.

”நாடோடிகள் மாதிரி எல்லோ ஆகிபோச்சு. இது இத்தாலியில்உண்டாகியது இங்கு பிறந்தது. இப்ப ஒன்று இங்க உருவாகி இருக்கு. எங்க பிறக்கப் போகுதோ?” பிரேமின் கண்களிலிருந்தும் நீர் வழிந்தது. துடைத்துக்கொண்டார்.

"
அம்மா. சந்தை. அப்பா." குழந்தை சிணுங்கிக்கொண்டிருந்தாள். எங்களுடன் பழக்கமுள்ள ஏனைய நாட்டவரும் செய்தி அறிந்து எங்களைக் குழுமி நிற்கின்றனர்.

கவலை எல்லோரையும் சூழ்ந்திருக்கின்றது. எல்லோருக்கும் தெரியும் பிரேமும் ராணியும் இந்த ஊரைவிட்டும் நாட்டை விட்டும் வெளியேறி ஆகவேண்டியவர்கள் என்பது.
சந்தை தன்பாட்டில் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

இன்றையநாள் குதூகலத்தை நாங்கள் இழந்துவிட்டோம். இன்னும் சிலமணி நேரத்தில் கடைகள் கட்டப்பட்டுவிடும். சந்தையும் கலைந்துவிடும்.

பின்னர் அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து சந்திப்பதாய் கூறி ஒவ்வொருவராய் கழரத் தொடங்குகின்றனர். பிரேமும் ராணியும் தம் குழந்தைகளுடன் சுமக்கக்கூடிய பாரங்களை மூட்டை முடிச்சுக்களாக்கி கிளம்புகின்றனர். நான் சந்தைக் கடமைகள் எதையும் நிறைவேற்றாமலேயே வீட்டிற்குத் திரும்புகிறேன்.

இன்னமும் நாடோடிகள் சிலர் பாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் பயணங்கள் பாடல்களாகி பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இனி எங்களின் பயணங்களும் பாடல்களாகும்.



பாரிஸ் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), 2004, அப்பால் தமிழ்

No comments:

Post a Comment