
வடகோவை வரதராஜன்
இலண்டன் மாநகரத்தின் அமைதியான `தேம்ஸ்’ நதியில் பெளர்ணமி
காலத்தில் படகுச் சவாரி செய்திருக்கின்றேன். வாஷிங்ரனின் `பொடோமோ’ நதிக்கரையில் பூத்துக்குலுங்கும்
செர்ரி மரங்களுக்கிடையில் சில்வர் நைற் கவிதை படித்துக்கொண்டு நிலவில் நடந்திருக்கின்றேன்.
ஆனாலும் அங்கெல்லாம் என்மனம் வெறுமையுற்று ஏங்கிக் கொண்டே
இருக்கும். தேம்ஸ் நதியில் படகுச் சவாரி செய்யும் போதெல்லாம் இங்கே கோப்பாய் கடற்கரையில்
கைதடிப் பாலக் கட்டில் நான், பாலன், குவி, ஜோக்கர் எல்லோரும் வரிசையாய் இருந்துகொண்டு
மினிக்கிவிட்ட தங்கத்தாம்பாளம் போல் கடல் நீரில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பத்தைப்
பார்த்து,
”சிந்து நதியின்
மிசை நிலவினிலே
சேரநன் நாட்டிளம்
பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில்
பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி
வருவோம்”
என்ற கவிதையைப் பாடி மகிழ்ந்து மெய்மறந்திருந்த நினைவுகள் என் நெஞ்சத்தில் இனிய உணர்வுகளை உதிர்த்துவிடும்.
இங்கே வெறும் பாலக்கட்டில் குறுணிக்கல்லுகள் குண்டிச்சதையை
உறுத்துகிற பாலக்கட்டில் இருந்து கொண்டு நிஜமான கடலைப் பார்த்து அதை நதி எனப் பாவனை
பண்ணி அந்த நதியிலே நாமே ஓடம் விடுவதாக அதீத கற்பனை பண்ணி மகிழ்ந்து சுகம், அந்த அனுபவத்தை
நிஜான அனுபவமாக நிலவொளியில் குளித்து உருக்கிவிட்ட வெள்ளி ஆறாக ஓடுகிற தேம்ஸ் நதியில்,
சேர நன்நாட்டிளம் பெண்கள் இல்லாவிட்டாலும் அழகான ரோஜாப் பூவைப் போல மலர்ந்து சிரிக்கிற
எனது இங்கிலாந்துத் தோழி ஜேனுடன் படகுச்சவாரி செய்தபோது உண்டாகவில்லையே.
ஏனோ இப்படியாக இயற்கைக் காட்சிகளைக் காணுகின்ற வேளைகளில்
தான் எனது மனதில் கோப்பாய் கடற்கரையும், தாமரைக்குளமும், சம்பைப் புல்வெளியும், பனம்
சோலைகளும் தோன்றி எனது ஏக்கத்தைக் கிளறி விடுகின்றன. ஏக்கங்கள் கிளறப்படுகையில் என்
அடிமனதில் கனன்று கொண்டிருந்த நாட்டுப்பற்றின் மேல் (இது நாட்டுப்பற்றா, பழகிற இடத்தையும்
குலவிய உறவுகளையும் பார்க்க விரும்பும் அவாவா? என்பதை என்னால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை)
உள்ளே சாம்பல் விலக விலக அந்த அடிமனதில் கனல் மிகச் செம்மையாகவே கனன்று என்னை ஏங்க
வைத்தது.
அந்த ஏக்கக் கனவின் தகிப்பில் எங்கே நான் உருகிப் போய்விடுவேனோ என்ற அச்சத்தில் இருபது நாட்கள் `விடுப்பு’ எடுத்துக்கொண்டு தாயகம் திரும்பினேன்.
விமானம் இலங்கையை நெருங்க நெருங்க என்மனதில் பொங்கிப் பிரவாகித்த
உணர்வுகளையும், என்னில் ஏற்பட்ட கிளர்வுகளையும் விவரிப்பதற்கு எனக்கு மொழியறிவு போதாமல்
இருப்பதையிட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடுவேன். இவ்வுணர்வுகளை எவ்வளவு
தான் முயன்றாலும் வார்த்தைகளால் உணர்த்த முடியாது. உணர்ந்தாலேயே புரிந்து கொள்ள முடியும்.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இறங்கியதும், சப்பாத்துக்களை
உதறி எறிந்துவிட்டு, எனது மண்ணிலே, நான் பிறந்து புழுதி அளைந்து, மணல் வீடு கட்டி விளையாடிய
எனது சொந்த மண்ணிலே வெறும்பாதம் பதித்து இந்த ஏழு வருடப் பிரிவில், இந்த மண்ணிற்கும்,
எனக்கும் விட்டுப்போன உறவுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற ஓர் குறுகுறுப்பு, ஓர் வெறி.
சீ… சீ… கெளரவம் என்ற போர்வையில் எமது உள்ளத்து உண்மையான
உணர்வுகளுக்கு நாம் எவ்வளவு கட்டாயத் தடை போட வேண்டியுள்ளது.
வாடகை வண்டியால் இறங்கியதும், சப்பாத்தையும், கால் உறைகளையும்
கழற்றி எறிந்துவிட்டு வெறுங்காலுடன் குறுகுறுக்கும் எனது சொந்த மண்ணில் பாதம் பதித்து
நடந்தேன்.
ஓ…! எவ்வளவு தாபத்துடன் அந்த மண் என் கால்களை அணைத்து முத்தமிடுகிறது.
வீட்டில் அம்மா, நிறத்திருக்கிறியே ஒழிய நல்லாய் மெலிஞ்சு
போனாய். ஏன் உந்த தலைமயிரை உப்பிடி வளத்திருக்கிறாய்? என்ற மதிப்பீடு. தங்கையின் எங்கடை
மார்கழிக் குளிரை விட அங்கை கனக்கக் குளிரோ? என்ற அப்பாவித்தனமான கேள்விகள்.
ஆச்சி இந்த ஐந்து வருட காலத்தில் இறந்தவர்களின் பெயர்களைப்
பட்டியல் போட்டா. இடையிடையே அப்பனே முருகா என்னை எப்பதான் கூப்பிடப் போறியோ என்று பிதற்றிக்
கொண்டா!
என்னைச் சுற்றி நிறையக் குழந்தைகள். எனது ஐந்து வருடப் பிரிவில்
உருப்பெற்ற அவதாரங்கள்.
தங்கை “இது கமலா அக்கான்ரை கடைசி – வினோதினி. இது கார்த்தியன்ரை
நடுவிலான் – சுகந்தன்” என்று ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தியவாறு நான் கொண்டு வந்த மிட்டாய்
பொட்டலங்களை எடுத்துக் கொடுத்தாள்.
இவற்றில் எல்லாம் என் மனம் பதியவே இல்லை. நான் நட்ட தென்னம்
கன்றுகள், முற்றத்தில் ஏழுவிதமான நிறங்களில் நான் ஒட்டிய செவ்வரத்தை, நான் வளர்த்த
பசுக்கன்று நந்தினி, இவற்றைப் பார்க்கவே மனம் அவாவியது.
மெதுவாக அவ்விடத்தால் கழன்று வளவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன்.
வளவில் அதிக மாற்றம் ஒன்றும் தெரியவில்லை. கோடியில் நின்ற கொட்டைக் காய்ச்சி மாமரம்
தறிக்கப்பட்டு அவ்விடத்தில் ஒரு கறுத்தக் கொழும்பன் மாமரம் நடப்பட்டது. புதிதான ஓர்
குறுக்குவேல் எழுந்துள்ளது. ஓ…! தங்கச்சி பெரியவளாகி விட்டாள் அல்லவா! என்ன இருந்தாலும்
அப்பா இதில் எல்லாம் வலு கவனம்.
பனையோலைக் குடிலில் நின்று குரக்கன் ஒட்டுத்தின்று கொண்டிருந்த
நந்தினி என்னை இந்த ஐந்து வருடகாலப் பிரிவின் பின்னரும் அடையாளம் கண்டு செல்லமாக கத்தியது.
என்ன மாதிரி வளர்ந்து விட்டாள் இந்த நந்தினி. விம்மிபுடைத்த
மடியின் முலைக்காம்புகளை ஓர் சிவப்பு நிறக் கன்றுக்குட்டி ஒலி எழுப்பச் சப்பிக் கொண்டிருந்தது.
அதன் வாயெல்லாம் நுரைக் கொப்பளங்கள் மகிழ்ச்சியின் அடையாளமான பசுமையான இளம் கன்றுகட்கே
உரித்தான கூழையான வால் அதன் இடப்புறமும் வலப்புறமுமாக அசைந்து கொண்டிருந்தது.
அம்மா சொன்னா, இது இரண்டாவது கன்றாம். நான் இலண்டனுக்குப்
போகும் போது இந்த நந்தினி ஊட்டு மாறாத பச்சிளம் கன்று. காலம் எவ்வளவு விரைவாய் கடந்திவிட்டது.
அம்மா எனக்கு வைத்த கப்பல் வாழைப்பழங்கள் இரண்டை எடுத்து
நந்தினியிடம் நீட்டினேன்.
நான் நட்ட தென்னம் பிள்ளைகள் எல்லாம் பருவப் பெண்களாகி இளமை
திமிறி குலுங்க, சுமக்க முடியாத குலைகளுடன் காற்றில் தம் ஓலைகளை அசைத்து என்னை வரவேற்றன.
முற்றத்தில் நான் ஒட்டிய செவ்வரத்தை ஒவ்வோர் கொப்பும் ஒவ்வோர் வர்ணமாகப் பூத்தது ஓர்
மலர்க் கதம்பமாக காட்சியளித்தது.
இதிலை தான் மாமி கோயிலுக்கு `பூ ஆயிறவ’ அம்மா பெருமையுடன்
சொன்னா.
இந்த இருபது நாள் விடுப்பில் எட்டு நாட்கள் எவ்வளவு வேகமாய்
போய்விட்டன என்று எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. இந்த எட்டு நாட்களிலும் இந்த ஐந்து
வருடங்களும் நான் விட்டுப் பிரிந்திருந்த ஒவ்வோர் சதுர அடி மண்ணையும் ஆவலோடு தரிசித்து
எனது உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள முயன்றேன்.
இன்னமும் 12 நாட்களில் நான் இலண்டனில் நிற்க வேண்டும் என்ற
நினைப்பு கசப்பைச் சுமந்து என் முகத்தைச் சுண்டச் செய்தது. இந்த அழகான அமைதியான கிராமத்தை
விட்டு விட்டு எந்நேரமும் சத்தமும் இரைச்சலும் பெட்ரோல் புகையும் நிறைந்த இலண்டன் மாநகரத்தில்
போய் இருப்பதென்றால்…
இறைவன் எவ்வளவு இனியவன்! இந்த அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத
கிராமத்தில் என்னைப் பிறக்கச் செய்தானே!
இருபது நாள் விடுப்பை ஐம்பது நாட்களாகத் தள்ளிப் போட்டால்
என்ன என்ற எண்ணம் தோன்றியது.
இருபது நாட்களில் திரும்புவது என்று முற்கூட்டியே மீள பயண
ரிக்கற் எடுத்து விட்டேன். அது கொஞ்சம் இலாபகரமானது. அதை இரத்துச் செய்தால் சில பவுண்கள்
நஷ்டம் போகும். போனால் போகட்டும். இந்த மண் தரும் மனநிறைவை; பரிமளிப்பை; சுகத்தை கேவலம்
பவுண்களுடனும், டாலர்களுடனும் ஒப்பிடுவதா?
நாளை மறுநாள் கொழும்பு சென்று பயணச்சீட்டை இரத்துச் செய்து
ஓர் கேபிள் கொடுத்தால் விசயம் சரி. அன்று மதியம் பிள்ளையார் கோவில் கேணியில் முழுகிக்
கொண்டிருந்தேன். அமைதியான தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுகிறபோது உண்டாகிற சுகம் இருக்கிறதே
அதற்கு ஈடாக அதையே தான் என்ணால் சிபார்சிக்க முடியும்.
இந்தக் கேணியில் ஒல்லித் தேங்காய் கட்டி, நீந்தப் பழகிய நாள்
முதல் நான் பரமேஸ், பாலன், கோபால், பேரன் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை நீரினுள்
அமுக்கி விளையாடியது வரை சகல நிகழ்வுகளும் என் நெஞ்சில் முகிழ்த்த வண்ணம் இருந்தன.
இந்த நண்பர் குழுமத்தில் இப்போ பரமேஸ் இல்லை. சேவை மனப்பாங்கும்,
சுறுசுறுப்பும் உள்ள எவ்வளவு இனிய நண்பர் அவன். யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட அடுத்தநாள்,
வாலிபத்தின் வாசற்படியில் அவன் உயிர் துப்பாக்கியால் அநியாயமாகப் பறிக்கப்பட்ட நிகழ்வு
ஓர் ஆவேசமான மனக்கிளர்ச்சியை என்னுள் உண்டுபண்ணியது.
யாரோ ஒரு பெண் கையில் தேங்காயுடன் கால் கழுவுவதற்குக் கேணியில்
இறங்கினாள். அவள் என்னைக் கண்டு கூச்சப்படக்கூடாது என்ற நினைப்பில் கேணியின் அக்கரைக்கு
நீந்திச் சென்றேன். கேணியில் இறங்கிய பெண் ஒரு கணம் என்னை நிமிர்ந்து பார்த்திருக்க
வேண்டும். `வ…ரதன்’ ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிய இது நிஜமா என்ற பிரமையில் ஆழ்ந்து
சுட்டுவிரலை உதட்டில் பதித்து முணுமுணுத்தாள்.
`கெளரியக்கா…’ நானும் திகைத்து வார்த்தையைக் குழற்றினேன்.
`எப்ப வந்தனீர் வரதன்?’
`போன கிழமையக்கா…’
`எனக்குத் தெரியாமல் போச்சே’
`எப்படி அக்கா…? சுகமாய் இருக்கிறியளே’
திடீர் என அக்காவின் முகத்தில் மழை மேகங்கள் குவிந்தன.
“ம்.. சுகத்திற்கென்ன குறைச்சல்” சொற்கள் கைப்புடன் தெறித்து
விழ, நீண்ட பெருமூச்சொன்று அனலாய் கிழம்பி வளிமண்டலத்தைச் சூடாக்கியது.
நான் கெளரி அக்காவை ஆழமாக ஊடுருவினேன்.
முன்பு பிஞ்சுக் கத்தரிக்காய் போன்று தளதள என்றிருந்த அக்கா
இப்ப மிளகாய் பழம் சுருங்கினால் போல் சுருங்கி விட்டாவே!
கண்களின் கீழ் அடர்ந்த கருவளையம்.
தலையின் முன்னுச்சியில் சில வெள்ளை மயிர்கள் இரகசியமாய் எட்டிப்
பார்த்தன.
முன்பு தக்காளிப்பழம் போல் தளதள என்று அழகு காட்டிய கன்னச்
சதைகள் இப்போ சற்று ஒட்டிப் போயிருந்தன.
“இனி எப்ப போறீர்” – அக்கா விழிப்பு வந்தவளாகக் கேட்க…
“இருவது நாள் லீவிலை வந்தனான்; இனி ஐம்பது நாளாக்குவம் எண்டு
யோசிக்கிறேன்”
“ஏதேனும் விசேசமாய் வந்தனீரோ”
“இல்லை சும்மாதான்”
“நான் ஏதேனும் கலியாணம் கிலியாணம் எண்டு நினைச்சன்”
குறும்பா கண்களை வெட்டிச் சிரித்தா. அப்போதுதான் விழிப்புற்றவனாக
அக்காவின் கழுத்தைப் பார்த்தேன்!
வெறுமை!
அக்கா இன்னும் கைல்யாணம் செய்யவில்லையா? அல்லது செய்து வாழ்விழந்து
விட்டாளா?
“எப்படியக்கா மார்கண்டம்மான் சுகமாய் இருக்கிறாரே?”
“ம்.. அவருக்கென்ன…? குத்துக்கல்லுப் போலை இருக்கிறார்”
ஏன் இந்த கைத்த கதைகள்? கெளரியக்கா ஏன் இப்படி மாறிப்போய்
விட்டா?
“ஏனக்கா ஒரு மாதிரியாய் இருக்கிறியள் ஏதேனும் சுகமில்லையே
– முகமெல்லாம் காய்ஞ்சு போய்க் கிடக்கு”
”சுகமில்லையோ? எப்ப சுகமாய் இருந்தனான்?”
“அப்பிடி என்ன வருத்தம்”
கெளரியக்கா சிரித்தா… கைப்பு துண்டு துண்டாக தெறித்து விழுந்தது.
“நான் சும்மா பகிடிக்கு சொன்னனான்; நீர் கனநேரம் தண்ணீக்கை நில்லாதையும், கனகாலப் பழக்கமில்லாதது
சூட்டைக் கிழப்பி விட்டிடும். லண்டனுக்குப் போறதுக்கிடையில் நேரமுள்ள நேரம் ஒருக்கா
வீட்டை வாருமன். நாங்கள் ஆறுவரியமாய் ஒண்டாய் பள்ளிக்கூடம் போய் வந்தனாங்கள் அல்லே.
ஐஞ்சு வரியத்துக்குப்பிறகு வந்திருக்கிறீர். எங்கடை வீட்டிலை ஒரு கோப்பித் தண்ணியாவது
உமக்குத் தர வேண்டாமே”
கெளரி அக்காவின் தோற்றமும் கதைகளும் என்னை மிகவும் பாதித்தன. பள்ளி நாட்களில் அக்கா
மிகவும் அழகானவ. சிறு வயது தொடங்கி அக்கா பள்ளிப் பருவத்தை முடித்து சர்வகலாசாலை போகும்
வரையில், நான் அக்காவுடன் ஒட்டிக் கொண்டே பாடசாலைக்குப் போய் வருவேன்.
அந்நாட்களில் அழகின் சொரூபமான அக்காவின் பக்கத்தில் நடந்து
செல்வதில் எனக்கு மிகவும் பெருமை. பல கண்கள் பொறாமையுடன் என்னைப் பார்க்கும். அக்கா
போகும்வழி எல்லாம் கேலியும் கிண்டலுமாக மலர்ச்சி பொங்கிச் சிரிக்கும். அந்த அக்காவா
இப்படி மாறிப்போனா?
அன்று பின்னேரமே கெளரியக்காவின் வீட்டிற்குச் சென்றேன். வீடு
நிசப்தமாக இருந்தது. கெளரியக்கா விறாந்தையில் கதிரை ஒன்றில் அமர்ந்தபடி சூனியத்தை வெறித்துக்
கொண்டிருந்தா. என்னைக் கண்டதும் “வரதனா, வாரும்… வாரும்… அண் எக்ஸ்பெக்டட் விசிட்.
இண்டைக்கே வருவீர் எண்டு எதிர்பார்க்கேல்லை” என்று உற்சாகமாக வரவேற்றா.
“எங்கை வீட்டிலை ஒருத்தரையும் காணேல்லை?”
“அம்மா ஆட்டுக்கு குழையொடிக்க வளவுக்கு போய்ட்டா. வசந்தனும்
ரஞ்சியும் ரியூசனுக்குப் போட்டினம்.” யார் இந்த ரஞ்சி? நான் இலண்டனுக்குப் புறப்பட்ட
காலத்தில் சின்னண்ணையின் புளியமரத்தின் கீழ் பெடியளுடன் கிளித்தட்டு மறிச்சு விளையாடியவள்.
இப்ப வளர்ந்து பெரிய பெட்டையாய் இருப்பள். ரஞ்சியைப் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆவல்.
ஆண்களுக்கே உரிய சபலத்தனத்தில் மெல்லிய குறுகுறுப்பு.”
”எங்கை மார்க்கண்டம்மானைக் காணேல்லை”
“எங்கை போறது, உங்கினை மாணிக்கன்ரை கொட்டில்லை போய் வாத்துக்கட்டிப்போட்டு,
மடத்திலை இருந்து ஊர் வம்பளந்து கொண்டிருப்பார்” தந்தை என்றதும் அக்காவின் முகம் ஏன்
இவ்வளவு அஷ்டகோணமாகிறது. அக்காவின் அடிமனத்தைத் துருவி ஆராயும் குறியாகவே நான் இருந்தேன்.
“இப்ப எங்கை படிப்பிக்கிறியள்” என்று தொடங்கி மெதுவாக மெதுவாக விடயத்திற்கு வந்தேன்.
”அக்கா நானொன்று கேப்பன், கோவிக்கப்படாது”
கோவிக்காததைக் கேட்டால், ஏன் கோவிக்கிறன்”
அக்கா எச்சரிக்கை அடைந்து விட்டாவோ? நான் தயங்கினேன்.
“உமக்கும் எனக்கும் என்ன ஒளிப்பு மறைப்பு வரதன். எங்களுக்கை
ஆக மூன்று வயதுதான் வித்தியாசம். வயது வந்த பிறகும் நாங்கள் ஒரு குடேக்கை தானே பள்ளிக்கூடம்
போய் வந்தனாங்கள்… அப்பிடியான நீர் கேட்டால் நான் ஏன் கோவிக்கப் போறன், பயப்படாமல்
கேளும்”
“பெரிசாய் ஒண்டுமில்லை. நீங்கள் ஏன்…”
“பேந்தேன் நிப்பாட்டிப் போட்டீர்…. ஃபீல் பிறி அன் ஆஸ்க்
வரதன்”
கேட்கத் துணிந்துவிட்ட கேள்விக்கு எப்படி வார்த்தை வடிவம்
கொடுத்து வெளிக்கொணர்வது என்று தெரியாமல் தயங்கி விழித்தேன்.
“என்ன யோசிக்கிறீர். நான் ஏன் இன்னும் கலியாணம் செய்யேல்லை
எண்டுதானே கேக்கப் போறீர். இப்படி எத்தனைபேர் என்னைக் கேட்டிட்டினம். அத்தனை பேரோடையும்
நான் கோவிச்சிருந்தால் இப்ப கதைக்கிறதுக்குக்கூட எனக்கொரு ஆள் கிடைக்காமல் போயிருக்கும்.”
”ஓ… அக்கா பிலோசபியும் ஒரு பாடமாய் படித்தவ அல்லவா?”
“ஏன் மரிபண்ணிரேலை எண்டு ஏதாவது லட்சியமோ”
“லட்சியமோ? எல்லாம் அலட்சியத்தாலை வந்த வினை. நான் கேக்கிறன்
குமரானதிலை இருந்து கலியாணம் செய்யிறதே லட்சியம் எண்டிருந்த எத்தனை பெம்பிளையள் இப்ப
கலியாணம் செய்திட்டினம்?”
அக்காவுடன் பிலோசபி கதைக்க என்னால முடியாது. அக்கா சூனியத்தை
வெறித்தா. அவாவின் கண்கள் சாதுவாய் கலங்கி இருந்தன. நான் மிகவும் குழம்பிப் போய் இருந்தேன்.
“அக்கா நான் சீரியசாய் கதைக்கிறன்; நீங்கள் பிலோசபி கதைச்சுக்கொண்டு”
“பிலோசபி! யூமின் தத்துவம்? யெஸ் வயது போகப் போக தத்துவம்
பிறக்கிற பருவம்தானே. ஒரு பொம்பிளைக்கு சராசரி அறுவது வயதெண்டு பார்த்தாலும், அதிலை
பாதிக்கு மேலை எனக்கு இப்ப போட்டுதெல்லே. இனித் தத்துவம் பிறக்கிற பருவம்தானே”
“ஏன் மார்க்கண்டம்மான் நல்லதாய் ஒண்டும் பாக்கேல்லையே”
அக்காவின் முகம் திடீர் என சிவந்து உதடுகள் துடித்தன. இதுவரை
என்ரை கலியாண விசயத்தை மனம் திறந்து ஒருத்தரோடையும் கதைக்கேல்லை. ஏனெண்டால் போலி அனுதாபத்தோடை
என்ரை கதையை கேட்டுக்கொண்டு அங்காலை போய் உவளுக்கு கலியாண விசர் என்கிறவையும் தங்கடை
மன அரிப்பை என்னைக் கொண்டு சொறியிறவையும் தான் இஞ்சை இருக்கினம். என்ரை மனம் திறந்து
கதைக்க நீர்தான் சந்திச்சிருக்கிறீர்.”
“நீர் மார்க்கண்டம்மாவை மார்க்கண்டம்மான் என்கிறீரே அது மார்க்கண்டில்லை
வரதன் `மாங்கண்டு’ வரதன். ஓம் மாங்கண்டுதான். மற்றவையின்ரை உணர்வுகளைப் புரிந்து கொள்ள
முடியாத மரமாங்கண்டு அது.
அவருக்கு நான் எடுக்கிற சம்பளத்திலைதான் குறி. அதை மட்டும்
தவறாமல் அச்சொட்டாய் வேண்டிப் போடுவார். அம்பது சதம் குறைஞ்சாலும் எத்தனை கேள்விகள்.
ஆனால் என்ரை ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள், ஆசாபாசங்கள்
எல்லாம் காத்திலை கரைய வேண்டியதுதான். கீ டசன்ற் வொரீட் எபட்டுற்… ஊர் உலகத்திற்காக
நானும் மகளுக்குக் கலியாணம் பேசிறன் எண்டு நாலு சாதகக்கட்டோடை திரிவார். வாறதை எல்லாம்
இவன் சாதி குறைவு இவன்ரை பாட்டன்ரை பாட்டன்ரை பாட்டன், எங்கடை பாட்டன்ரை பேரன்ரை பாட்டனுக்குச்
சேவகம் செய்தவன் எண்டு ஏதாவது விசர் ஞாயம் கற்பிச்சு குழப்பிப் போடுவார். ஆனா வெளியாலை
தன்ரை மோளின்ரை பெருமையை பீற்றேக்கை கேக்கவேணும். தண்ணியைப் போட்டிட்டு தன்ரை மோளின்ரை
அடக்கதைப் பேசேக்கை பார்க்க வேணும்.
அடக்கம்! கண்டறியாத அடக்கம்… இப்பிடி எங்கடை ஆசையளை அடக்கி
வைச்சுக்கொண்டு – விறகு காஞ்ச மாதிரி காஞ்சு கொண்டு – நாங்கள் சலனமே இல்லாத கற்பின்
பெருந்தகைகள் எண்டும், கண்ணகியின் வாரிசுகள் எண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது தான்
அடக்கம் எண்டால் எனக்கு அந்த அடக்கமே வேண்டாம் வரதன்.
ஐ ஹேற் இற்! ரியலி ஐ கேற் இற். உண்மையிலை நாங்கள் அடக்கமாகவா
இருக்கிறம். எங்கடை ஆசையளை மூடி மூடிப் பொத்திக்கொண்டு எங்கடை உணர்ச்சிக் கொந்தளிப்புகளை
கோயில் குளங்களிலை அணைச்சுக்கொண்டு நாங்கள் ஒரு ஷோ போடுறம். வீ ஆர் புட்டிங் எஷோ ஃபோர்
சொசையற்றி.
இப்ப முப்பத்தி ஆறு வரியமாய் நான் எடுத்தது அடக்கமானவள் என்ற
பெயர்தான். ஆனால் எனக்குள்ளேயே நான் வெந்து புழுங்கி, குமைஞ்சு அவிஞ்சதெல்லாம் ஆருக்குத்
தெரியும். சமூகத்திற்கென்ன முதலியார் மார்க்கண்டற்றை மூத்த பெட்டையோ `தங்கப்பவுண்’
எண்டு சொல்லும். ஆனா தங்கப் பவுணை எடுத்து மார்பிலை சூட ஒருத்தரும் இல்லை.”
கண்களில் நீர் முத்துக்கள் உருண்டோட உணர்ச்சிக் கொந்தளிப்பில்
உதடுகள் துடித்து விம்ம ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அக்கா குமுறிக் கொட்டிக் கொண்டிருந்தா.
“ஏன் அக்கா நீங்கள் ஆரையேனும் காதலிச்சிருந்தால் அவரோடை உங்கடை
வாழ்க்கையைத் தொடங்கலாமே.”
“காதல்…! இந்த வேலியளைப் பாரும் வரதன். இந்த உயரமான கிடுகு
வேலியளைத் தாண்டி ஒரு ஆம்பிளேன்ரை பார்வை என்மேல் பட முடியுமே! காதலிச்சால் மட்டும்
காரியம் ஒப்பேறிடுமே!”
உமக்குத் தெரியுமா என்னோடை படிப்பிச்ச மாஸ்ரர் ஒருத்தர் என்னைக்
கலியாணம் செய்ய விரும்பி முறையாய் வீட்டைவந்து கேட்டார். ஆனால் உம்மடை மார்க்கண்டம்மான்
மாட்டெண்டு போட்டார். ஏன் தெரியுமே! பெரியவை கதைக்கிற விசயத்தை இப்படி வெக்கம் மானம்
இல்லாமல் கலியாண விசரிலை தானாய் வந்து கேட்டுப் போட்டாராம். எப்பிடி இருக்கு அவற்றை
ஞாயம்.
“எங்கடை ஆசாபாசங்கள் அவருக்கு ஆபாசமாய் படுகுது. ஆனால் இந்த
வயதிலையும் அவருக்கு ஒரு `வைப்பு’ வேறை. தன்ரை பாட்டன் நாலு பெண்சாதிக்காரன் எண்டதிலை
அவருக்கு ரொம்பப் பெருமை. அந்த மாஸ்ரருக்கு தாய் தகப்பன் இல்லை என்பது என்ரை தகப்பனுக்குத்
தெரியாமல் போச்சு. தெரிஞ்சிருந்தால் மட்டும் செய்து வைச்சிடுவரே அவன்ரை பூட்டன்ரை பூட்டன்
மாடு மேச்சவன் எண்டு எப்பிடியாவது கண்டுபிடிப்பார். அந்த மாடு மேய்ச்ச குலத்திலை முதலியாற்ரை
மோழுக்கு சம்பந்தமோ எண்டு கேட்பர். நான் பொன் முட்டை இடுகிற வாத்து வரதன். உம்மடை மார்க்கண்டம்மான்
லேசிலை அதை விட்டுடுவரே?”
“ஏன் உங்கடை அம்மா இதிலை அக்கறை காட்டிறேல்லையே அக்கா”
“பாவம் அவவாலை என்ன செய்ய முடியும்? தனரை தாலியையே இன்னொருத்திக்கு
பங்கு போட்டுக் குடுத்திருக்கிறவ எனக்கொரு தாலி அமைச்சு தர முடியுமா? அவாவின்ரை ஆதரவும்
இல்லாட்டி நான் எப்பவோ தற்கொலை செய்திருப்பன்.”
என்ரை தங்கச்சி ரஞ்சி யாரையாவது காதலிச்சு என்னட்டை உதவிக்கு
வந்தால் அவளை அவனோடை வீட்டைவிட்டுப் போகும்படி நானே உதவி செய்வன். அவ்வளவு தூரத்துக்கு
நான் என்னுக்குள்ளை வெந்து போய் அந்த வெக்கேலை மரத்துப் போனேன்.
“என்ரை தேப்பனைப்போய் எனக்கு எப்ப கலியாணம் எண்டு கேக்க முடியுமா
வரதன். கேட்டால் அவர் சும்மாயிருப்பாரா? அவளுக்கு `அமர்’ முத்திப்போச்செண்டு அடி அடி
எண்டு அடிச்சு அறேக்கை பூட்டி வைச்சிடுவார். இப்ப தெரியுதா நான் ஏன் கலியாணம் செய்யேல்லை
எண்டு. எனக்கு கலியாணம் செய்துவைக்க என்ரை தேப்பனுக்கு விருப்பமில்லை. இதுதான் உண்மையான
வாசகம். ஐ லைக் வென்ஸரேன் பீப்பில்ஸ். இப்தே வோண்ரு மரி சம்வொன் தெய பேரண்ஸ் டூ நொற்
இன்ரரொப் தெய பேசனல் லைஃப்”
உணர்ச்சித் துடிப்பில் கைகள் பதற உதடுகள் வெம்பி வெடிக்க
கெளரி அக்காவின் மனவெக்கை சொற்காற்றாய் வேகாரத்துடனும் உஷ்ணத்துடனும் வீசியது. அந்த
உஷ்ணகாற்றின் பெரும்பகுதி ஆங்கிலமாகவே வீசியது.
அக்காவின் இவ்வளவு நேரப் பேச்சில் இருந்து நான் ஒன்றை அவதானித்தேன்.
அவ தனது தந்தையை அப்பா என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை. உம்மடை மார்க்கண்டம்மான்,
மைஃபாதர் என்ற அடைமொழிகளாலே குறிப்பிட்டுவந்ததில் இருந்து மார்கண்டம்மான்மேல் அவ எவ்வளவு
வெறுப்புற்றிருக்கிறா என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“அக்கா நீங்கள் மேற்கத்தைய ஆட்களின் தடையில்லாக் காதலை விரும்புறன்
எண்ணுறியள். ரஞ்சி ஆரோடேனும் ஓடிப் போனால் துணை செய்வன் எண்ணுறியள், அப்ப உங்களுக்கு
பிடிச்சவரோடை நீங்கள் ஏன் போகக் கூடாது?”
அக்கா சில கணங்கள் மெளனமாக என்னை ஊடுருவினா. அப்பார்வையில்
சலிப்புக் கொட்டிக் கிடப்பதை உணர்ந்தேன்.
“இவ்வளவு நேரத்திலும் நீர் ஏன்னைப் புரிஞ்சு கொண்டது இவ்வளவுதானா?”
என்கிறமாதிரி ஒரு சிரிப்புச் சிரிச்சா. அந்தச் சிரிப்பில் நான் மிகவும் குறுகிப் போய்விட்டேன்.
கெளரியக்கா தொடர்ந்தா.
“எனக்குப் பிடிச்சவை ஆர் வரதன். பள்ளிக்கூடம், வீடு, லைபிறரி,
இதைத்தவிர வேறு எனக்கு என்ன தெரியும். இனி ஒருத்தரைக் காதலிக்கிறது எண்டால் இந்த வயதிலை
அது லேசாக முடிகிற காரியமா? வசந்தகால மலர்கள் தங்கள் கூரிய முட்களை விட்டுவிட்டு அழகிய
இதழ்களை உதிர்ப்பதைப் பாரும்” என்று முன்னுச்சி நரை மயிர்களைத் தொட்டுக்காட்டினா.
“ஓடிப் போறதெண்டாலும் இந்த சமூகத்தைத் தூக்கி எறிஞ்சு போட்டு
போக முடியுமா என்ன? எனக்குப் பின் கரைசேரக் காத்திருக்கிற ரஞ்சி, எனக்காக நோன்பிருக்கிற
அம்மா, இவர்கள் எல்லாரையும் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓட முடியுமா?
இது இலண்டன் இல்லை வரதன், வேலியை உயர்த்தி உயர்த்தி அடைச்சு
வைக்கிற கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடி. இந்த மூத்த
குடியையா தூக்கி எறிஞ்சு போட்டு போகச் சொல்லுறீர்.
பீயூடல் சொசைட்டி… இந்திராவோ, கமலிலியோ ஓடிப் போனால் அதைப்பற்றி
இந்த சமூகம் அலட்டிக் கொள்ளாது, ஒரு நாளில் பழங்கஞ்சியாய்ப்போம். ஆனால் நான்?
முதலியார் மார்க்கண்டுவின் மூத்த குமாரியான நான்?
அடக்கத்திற்கென்ற உதாரணம் காட்டப்பட்ட நான்.
பாதி வயது கடந்தும் அன்னிய ஆம்பிள்ளையளைத் திரும்பிப் பார்க்காதவள்
எனப் பேசப்படுகிற நான்?
கண்ணகியின் மறுவார்ப்பு எனப் பேசப்படுகின்ற நான்?
உம்மால் என்னைக் கொஞ்சமேனும் புரிய முடியுதா வரதன்?
நான் ஓடிப்போனால் இத்தினை காலமும் முந்தின அமரை அடக்கி வைச்சுக்கொண்டு
பத்தினி வேஷம் போட்டிருக்கிறாள் எண்டு ஊர் சிரிக்கும். என்ரை அப்பா தொடக்கம் தம்பி
வரை என்ரை முகத்திலை காறி உமிழும். என்ன இருந்தாலும் இந்த சமூகத்தின் தளைகளை மீற முடியாமல்
எங்களை சின்ன வயதிலை இருந்து வளத்துப் போட்டினம் வரதன்.” கெளரி அக்கா குமுறி அழுதா.
அன்று இரவு முழுக்க என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை.
நிலவு, சோலை, மலர், பறவை என்று புற அழகுகளில் எவ்வளவு ஏமாந்து விட்டேன் நான்.
யாழ்ப்பாணத்து நீர் எல்லாம் உவர்நீர் ஆகிறதாமே.காரணம் என்ன
என்ற கேள்விக்கு “கலியாணமாகாத யாழ்ப்பாணத்துக் கன்னியர்கள் விடும் கண்ணீர் எல்லாம்
மண்ணில் சுவறுவதே” என்ற சிரித்திரன் மகுடியின் கருத்தாழம் மிக்க பதில் நினைவில் திரும்பத்திரும்ப
வந்து என் நெஞ்சைத் துளைத்தது.
எவ்வளவு பரிதாபமான பெண் இந்தக் கெளரியக்கா!
யாழ்ப்பாணத்துக் காற்று சூடாய் இருப்பதன் காரணம் இந்தக் கன்னி
கழியாத பெண்கள் விடும் ஏக்கப் பெருமூச்சுத்தானே?
கோப்பாய், கைதடிப் பாலக்கட்டில் தனியே இருந்து கொண்டிருந்தேன்.
மேலே முழுநிலவின் அமுத ஒளி கசிந்து ஒழுகியது. எந்தக் காட்சியைக் கண்டு இரசிக்க ஐந்தாண்டுகள்
ஏங்கியிருந்து ஓடோடி வந்தேனோ அந்த நிலவின் ஒளி எனக்குக் கசந்தது.
இந்த நிலவின் ஒளி என்னைத் தகித்தது.
இந்த ஈரமான கடற்காற்று என்னைப் புழுக்கி அவிக்கிறது.
இந்த நிலவு குளிர்ச்சியாகவே இல்லை.
நான் எனது மீள்பயணச் சீட்டை இரத்துச் செய்யப் போவதில்லை.
இருபதாம் நாள் முடிவில் எனது பயணம் திட்டமிட்டபடி நடக்கும். என்னால் இந்தத் தகிப்பை
தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த யாழ்ப்பாணக் காற்று அனலாக வீசுகிறது.
இந்த மண் துணிக்கைகள் என் காலை உறுத்தி வருத்துகின்றன.
ஓ ஜேன்! அங்கே காத்திரு. விரைவில் நான் உன்னிடம் வருகிறேன்.
அமைதியான தேம்ஸ் நதியின் பின்னணியில் செர்ரி மரங்கள் பூத்துக்
குலுங்க `சில்வர் நைற்’ கவிதை படித்துக்கொண்டு நடப்போம் ஜேன்.
இங்கு சிந்து நதி கொதிக்கிறது. நிலவு குளிர்ச்சியாகவே இல்லை
ஜேன்.
•
சிரித்திரன் (மார்கழி, 1981)
No comments:
Post a Comment