Wednesday, 19 October 2016

மெளனம் கலைகிறது (3)


 

தொகுப்புகளின் கதை

அவுஸ்திரேலியாவில் பலர் சேர்ந்து எழுதிய கதைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்புகள் வந்திருக்கின்றன. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அத்தகைய தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. ‘உயிர்ப்பு’ சிறுகதைத்தொகுதி, ‘வானவில்’ கவிதைத்தொகுதி போன்றவை அப்படி வெளிவந்தவை.

சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இத்தகைய தொகுதிகளை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கான அறிவித்தலை பத்திரிகை, வானொலிகள் மூலம் விடுத்திருந்தார். அதனடிப்படையில் நானும் எனது ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தேன். சிறுகதைகள் தெரிவு செய்யபட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு புத்தகமும் வரவிருப்பதாகச் சொல்லியிருந்தார்.

ஆனால் ‘உயிர்ப்பு’ சிறுகதைத்தொகுதி (2005) வந்தபோது பலருடைய ’ஏற்றுக் கொள்ளப்பட்ட’ சிறுகதைகளை அங்கு காண முடியவில்லை. அவற்றிற்குப் பதிலாக அவர்களின் வேறு கதைகள் இடம்பெற்றிருந்தன.

தொகுப்பாளரை விசாரித்தபோது, தொகுப்பு வெளிவரும் சமயத்தில் தான் இலங்கையில் இருந்ததாகவும் சிலகதைகளை அவுஸ்திரேலியாவில் தவறவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தத் ’தவறவிட்டு விடுதல்’ என்பதில் பல சங்கதிகள் அடங்கியிருக்கின்றன.

ஒரு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்புக் கொடுத்திருந்தால் போதும்- எல்லாவற்றையும் சரி செய்திருக்கலாம்.

சிறுகதைத்தொகுப்போ அல்லது கவிதைத்தொகுப்போ வெளிவரும்போது அதில் வரும் படைப்புகள் பலராலும் பேசப்பட்ட சிறந்த படைப்புகளாக இருந்தால் நல்லது. குறைந்தது எழுதியவருக்காவது அந்தப் படைப்பு விருப்புடையதாக இருத்தல் வேண்டும். ஒரு எழுத்தாளருக்கு தான் எழுதும் படைப்புகள் எல்லாமே நல்லவையாக இருக்கின்ற போதிலும், இப்படியான தொகுப்புகள் வெளிவரும்போது தான் எழுதியவற்றுள் உச்சமான படைப்பையே போட விரும்புவார். ஒரு தொகுதியில் இருக்கும் படைப்புகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டி போட்டபடி இருத்தல் வேண்டும். அப்படி அந்தத் தொகுப்பு அமையவில்லை.

பின்னர் ஒருதடவை - இந்த ‘உயிர்ப்பு’ தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் கனடாவில் வதியும் சியாமளா நவரட்னம் என்பவரால் மொழிபெயர்ப்புச் செய்யப்படுவதாக முருகபூபதி சொன்னார். அப்பொழுதுதான் நான் மேலே சொன்ன கருத்துகளை அவரிடம் சொன்னேன்.

அந்தக் காலப்பகுதியில், ஏற்கனவே ‘நல்லைக்குமரன்’ குமாரசாமி என்பவரால் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கதிற்காக சில கதைகள் தெரிவு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவர ஆயத்த நிலையில் இருந்தது. அவரும் எத்தனையோ தடவைகள் முயற்சி செய்தும் அது பலன் தரவில்லை. பின்னர் அது வெளிவரவில்லை.

பின்னர் சியாமளா நவரட்னம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இருபது கதைகளில் இருந்து 13 சிறுகதைகளும், முருகபூபதியின் புதிய சிறுகதையொன்றும் Edilbert N.Rajadurai (காவலூர் ராஜதுரை அவர்களின் மகன்) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஆழியாள்’ மதுபாஷினியின் சிறுகதை ஒன்றுமாகச் சேர்ந்து மொத்தம் 15 சிறுகதைகள் ‘being alive’ என்னும் பெயரில் 2011 இல் இலங்கையில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை ஒட்டி வெளிவந்தது.

எனது சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டிருந்த போதிலும், அது வெளிவருவதை நான் விரும்பவில்லை. என்னைப்போல மேலும் ஆறு பேர்கள் இருந்திருக்க வேண்டும் (சாந்தா ஜெயராஜ் / உஷா ஜவாகர்/ களுவாஞ்சிக்குடி யோகன் / மாத்தளை சோமு / நல்லைக்குமரன் / கன்பரா யோகன்).

’வானவில்’ கவிதைத் தொகுப்பில் நல்லைக்குமரன் குமாரசாமி அவர்களுக்கு நிரம்பவே பங்கு உண்டு.. தொகுப்பாளர் முருகபூபதியாக இருந்தாலும், நல்லைக்குமரன் தான் எல்லாரிடமும் கவிதைகளைப் பெற்று கணனி முறையில் தட்டச்சு செய்திருந்தார். முருகபூபதி கவிதைகளில் ஆர்வம் கொள்வதில்லை. நல்லைக்குமரனுக்கு அந்தத் தொகுதியைத் தொகுக்கும் பொறுப்பைத் தனக்குத் தரவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. ’ஒரு கவிதை எழுதத் தெரியாதவருக்கு எல்லாம் என்ன கண்டறியாத தொகுப்பு வேண்டிக் கிடக்கு’ என ஒரு முறை சலித்துக் கொண்டார்.

எஸ்.பொ தொகுத்த ‘பனியும் பனையும்’ சிறுகதைத்தொகுதியில் தன்னை ஏமாற்றிவிட்டார் எனக்கூறும் முருகபூபதி, ‘வானவில்’ கவிதைத்தொகுப்பில் நல்லைக்குமரன் குமாரசாமியை ஏமாற்றிவிட்டார்.

வெறுமனே ‘கணினி பதிவாளர்’ என்று அவரை ஒதுக்கிவிட முடியாது.
1 comment:

  1. அருமையான வெளியீடு
    வரவேற்கிறேன்

    ReplyDelete