Sunday, 2 October 2016

கடைசி ஓட்டம் – சிறுகதை

தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது – மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட தர்முவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“ஒருவேளை நான் இருக்கும் பக்கமாகவும் அவள் போகக்கூடும்”

ரக்சி நின்றது.

அவள் பதறியடித்தபடி ரக்சியை நோக்கி ஓடி வந்தாள். அவளின் ஓட்டத்தைப் பார்க்க தர்முவிற்கு சிரிப்பாகவும் இருந்தது.

வாயில் நுழையாத பூர்வீகக்குடிகள் வாழும் இருப்பொன்றின் பெயரைச் சொல்லி, அங்கு போக வேண்டும் என்றாள்.

“இந்த நேரத்திலா?” நெருப்பில் கால் வைத்தது போலப் பதறினான் தர்மு.

”ஆம். தாத்தாவிற்கு கடுமை என்று தகவல் வந்தது. எவ்வளவு என்றாலும் தருகின்றேன்” மூச்சிரைக்கச் சொன்னாள் அவள்.

எவ்வளவு என்றாலும் தருகின்றேன்!

அந்தக் குளிர் பனியிலும் அவள் முகம் வியர்த்திருந்தது. அழகான அந்த இளம்பெண்ணின் கையில் ஒரு ‘வோட்கா குறூசர்’ இருந்தது.

“சரி. ஏறிக்கொள்”

அவள் காரிற்குள் ஏறுவதற்குள் அவள் உடலில் பூசியிருந்த சென்ற் காரை குபுக்கென்று நிரப்பியது.

“இருபது நிமிடங்களுக்குள் போய் விடலாம்” தர்மு சொல்லவேண்டியதை அவளே சொன்னாள். அவர்களிடையே பேச்சு வளர்ந்தது. 

கார் மலையில் வளைந்து வளைந்து ஏறிக் கொண்டிருந்தது. இரண்டுதடவைகள் மலையைச் சுற்றியதும் ஜிபிஎஸ் தலை கிறுகிறுத்து செயலிழந்து போனது. அதன் பிறகு தர்முவிற்கு அவளே ஜிபிஎஸ் ஆனாள்.

ஒருவாறு வீட்டை அடைந்துவிட்டார்கள். பெரியதொரு வளவிற்குள் ஒரு குடில் போல இருந்த அந்த வீடு, தர்முவிற்கு ஒரு ஆச்சிரமத்தின் தோற்றத்தைக் கொடுத்தது. இறங்கும்போது, ”நாற்பது டொலர்கள்” என்றான் தர்மு.

“நீங்கள் என்னை இங்கு விரைவாகக் கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி” தன் இருகரங்களையும் கூப்பி நன்றி தெரிவித்தாள். பின்னர் சிறிதளவு காசை அவனது கையில் திணித்துவிட்டு பறந்தோடினாள். காசை எண்ணிப் பார்த்துவிட்டு, ”நில்லுங்கள்! இன்னும் இருபது டொலர்கள் தரவேண்டும்” கத்தினான் தர்மு.

அவள் ஓடுவதை நிறுத்தி, திரும்ப தர்முவிடம் வந்தாள்.

“என்ன காசு குறைகின்றதா? இவ்வளவும்தான் என்னிடம் உள்ளது” தர்மு நினைத்திரா வண்ணம் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள்.

“வந்தவழியே கவனமாகப் பார்த்துப் போங்கள். நன்றி” என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தோடினாள்.

மிகுதிக்காசுக்கு ஒரு முத்தம் வாங்கிய நிலையில் திகைத்துப் போய் காரிற்குள் சில நிமிடங்கள் இருந்தான் தர்மு. பின்னர் காரை ஸ்ராட் செய்தாரன். இனி எந்தத் திசையில் போவது?

ஒரு குறிப்பிட்ட திசைவழியே சென்ற தர்மு பாதை பிழைத்துவிட்டது என்பதை அறிந்து கொண்டான். இன்னும் கொஞ்ச தூரம் ஓடிப் பார்க்கலாம் என்ற நினைப்பில் மேலும் ஓடினான். இருந்த ஜிபிஎஸ் இயங்க மறுத்தது. வந்த ஜிபிஎஸ் போய்விட்டது.

தர்முவால் பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து வந்த வளைவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அதனடியில் செய்வதறியாது சில நிமிடங்கள் நின்றான். மீண்டும் அந்தப்பெண்ணின் வீட்டிற்குப் போய் அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம் என ஜோசித்தான். அது சரியாக அவனுக்குத் தென்படவில்லை. தன் வலக்கையின் சுட்டுவிரலையும் நடுவிரலையும் நீட்டி ‘இரண்டில் ஒன்றைத் தொடு’ என மனதுக்கு கட்டளையிட்டான். மனது தொட்ட வழியில் காரை வேகமாகச் செலுத்தினான். சற்றே பிசகினாலும் விதியின் வழி வீதியிலிருந்து பள்ளத்திற்குள்தான். வழியில் ‘சீனிக் பிளேஸ்’ என வயிற்றைத் தள்ளியபடி பூமிமாதா கர்ப்பிணியாகப் படுத்திருந்தாள். அதன் மேல் வாகனத்தை ஓரம் கட்டினான் தர்மு.

காரிற்குள் இருந்தபடி மனைவிக்கு ரெலிபோன் செய்வதற்காக முயற்சித்தான். அதுவும் செயலிழந்து போயிருந்தது. எதுவுமே இல்லாத இடத்தில் இப்படி ஒரு சீனிக்வியூ இருந்தது அவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தபடி காரிலிருந்து கீழிறங்கினான். சிகரெட் புகையுடன் போட்டியிட்டவாறு அதலபதாளத்திற்குள்ளிருந்து பனிப்புகார் மேல் நோக்கிக் கிழம்பிக் கொண்டிருந்தது. இயற்கையை ஒருவராலும் வெல்ல முடியாது என்பது உண்மைதான். மொபைல் போனில் நேரத்தைப் பார்த்தான். மணி நான்கு பத்து.

அன்றைய இரவு அந்த மலைப்பிரதேசத்தில் வேறு எந்தவிதமான வாகனங்களையோ மனித நடமாட்டங்களையோ அவன் சந்திக்கவில்லை. இனி வாகனம் ஓடுவதில் பயனில்லை எனக் கண்டுகொண்ட அவன் விடியும்வரை காரிற்குள் இருப்பதென முடிவு செய்தான். சீக்கிரமாகவே தர்மு தன்னையுமறியாமல் உறக்கத்திற்குப் போய்விட்டான்.

விடியற்காலை வாகனங்கள் வரிசைகட்டி விரைந்து செல்லும்சத்தம் அவனைத் துயிலெழ வைத்தது. பதைபதைத்து எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான்.

தூரத்தே வெளிச்சப்புள்ளிகள் நகர்ந்து செல்லும் காட்சி மரங்களினூடாகத் தெரிந்தது.

“அனேகமாக அது ஒரு நெடுஞ்சாலையாகத்தான் இருக்க வேண்டும்” முடிவு செய்தபடி வாகனத்தை ஸ்ராட் செய்து, அதன் திசை நோக்கிச் செலுத்தத் தொடங்கினான்.

வீட்டிற்கு வந்தபோது மணி ஆறாகிவிட்டது. வானம் வெளிச்சமிடத் தொடங்கிவிட்டது. இரவு என்ற ஒன்று அவனுக்கு வராமலேயே மறு உதயம்.

இன்னும் சிலமணி நேரங்களில் பிள்ளைகள் துயில் கலைத்து பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகி விடுவார்கள். மனைவியும் எழுந்து விடுவாள். ஒருவரையும் குழப்பாமல், முன் ஹோலிற்குள்ளிருந்த செற்றிக்குள் உடுப்புகளையும் மாற்றாமல் புதைந்து கொண்டான். மனைவி போட்டுத் தரும் கோப்பியின் சுவைப்பிற்காகக் காத்திருந்தான்.

ஒரு கோழித்தூக்க முடிவில் மனைவி கையில் கோப்பியுடன் நின்றார். கோப்பியை வாங்கி தர்மு உறுஞ்சிக் குடிப்பதை மனைவி ரசித்தபடி பார்த்தார். கோப்பி முடிந்ததும்,

“எங்கையப்பா போனனியள்? ஒரு போன் பண்ணக்கூடவா நேரமில்லை” என உறுமினார்.

தர்மு தனக்கு நேர்ந்த சம்பவத்தை மனைவியிடம் சொல்லத் தொடங்கினான். கதை முடிந்ததும், அவன் காதைப் பிடித்துத் திருகியபடி தர்முவை குளியலறைக்கு இழுத்துச் சென்றாள்.

“கண்ணாடியிலை பாருங்கோ உங்கடை முகத்தின்ரை லட்சணத்தை…”

வலது கன்னத்தில் உதட்டின் முத்தமொன்று செக்கச் செவேலென்று சிரித்தபடி இருந்தது. அவன் நடந்ததைச் சொல்லத் தெண்டித்தான். அது இனிச்சரிவராது என்று தர்முவிற்குத் தெரியும்.

“பிள்ளையள் எழும்பமுதல் உந்தக் கண்றாவியத் தலை முழுகிவிட்டு வாங்கோ. நேற்றைய ஓட்டம்தான் உங்களுக்குக் கடைசி ஓட்டம். ஓடுறாராம் ஒரு ஓட்டம்” குளியலறைக் கதவை பலமாக அடித்துச் சாத்திவிட்டுப் வெளியேறினாள் அவள்.


“ஓட்டம்… ஓட்டம்… எண்டு இவள் என்னத்தைச் சொல்கின்றாள்” அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.


1 comment: