Friday, 7 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

7. சமூகப் பணி
  
ஒரு கல்லூரியின் எழுச்சி மேன்மை முதன்மை என்பன முதற்கண் அதன் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. அதிபரின் முகாமைத்துவ-நிருவாகத் திறமை இரண்டாம் பட்சந்தான். அதிபர்தான் உதவியாசிரியர்களை முதலாம் பட்சமாகச் சிருஷ்டிக்க வேண்டியவர். சிருஷ்டிகர்த்தா பொய்த்தால், உதவி ஆசிரியர்கள் கல்லூரியை இரண்டாம் பட்சமாக்கிவிடுவர். அதன் மேலும் அவர்கள் கொண்டு செல்லத் தயங்கமாட்டார்கள். உழுகிற மாடானாலும், மௌனமாக ஏரைப் பிடித்துக் கொண்டிருந்தால், காலகதியில் படுக்கவும் தொடங்கிவிடும். அதிபர் மட்டும் ஒரு கல்லூரியை ஓஹோ என்ற நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாது.

        பெற்றார்கள் முதற்கண் கவனிப்பது உதவி ஆசிரியர்கள் பணியின் செம்மையையே. அது மாதாந்தப் பரீட்சைகள், தவணைப் பரீட்சைகள், பொதுப் பரீட்சைகள் வாயிலாகச் சமூகத்துக்குச் செய்தியை எடுத்துச் செல்லும். பரீட்சைகள் மட்டுமல்லாது உதவி ஆசிரியர்களின் வகுப்பு வேலைகளும் பெற்றார்களின் கண்களிலிருந்து கவனிப்பிலிருந்து தப்புவதில்லை. அவர்கள் அதிபரிடமிருந்து எதிர் பார்ப்பதிலும் பார்க்க வகுப்பாசிரியரிடமிருந்தே நிரம்ப எதிர் பார்க்கிறார்கள். ஆனால் ஆசிரியர்களின் பணியைச் சிறப்பான பூரணத்துவம் வாய்ந்ததாக மேனிலைப்படுத்த, பல்வேறு அம்சங்களின் ஒருமித்த பணியை ஆசிரியர்களிடம் அதிபர் எதிர்பார்க்கிறார். அவை: மாணவர்களை அரவணைத்துச் செல்லுதல், பாட ஞானம், பாட ஆயத்தம், வகுப்பு நேரத்தைப் பொன்னாக மதித்தல், கற்பித்தல் பாங்கு, ஒழுங்கான பயிற்சிகளும் திருத்துதலும், அளவான கிரமமான வீட்டுவேலை, பாடத்திட்டத்தை முடித்தல், வகுப்பு ஆளுமை என்பனவே அவை. கல்லூரி வளர்ச்சியின் சிகர இலக்கை அடைவதற்கு ஆசிரியர்கள் அதிபருடன் மனதார ஒத்துழைத்து, பணியைச் சமூகத் தொண்டாக மேற்கொள்வது அவசியம்.

     பிரதி அதிபராகிய அன்று தொடக்கம், கடமையை உதாசீனம் செய்கின்ற ஆசிரியர்களைச் சீரமைப்பதில் ஈடுபடவேண்டிய கட்டாயம் இருந்தது. பழைய ஆசிரியர்களை வைத்துக்கொண்டு கல்லூரியை மேனிலைப் படுத்த முடியாது என்பது தெளிவாகப் புரிந்தது. கையை வீசிக்கொண்டு கல்லூரியுள் நுழைந்து, வெறும் கையை வேகமாக வீசிக்கொண்டு வகுப்புள் நுழைபவர்களை - இளம் சமுதாயத்துக்குப் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள் தாம் என்பதைப் புரிய மறுப்பவர்களை – - நேரத்தைப் பொன்னாக மதித்து ஒழுங்காக வகுப்பில் உழைக்க விரும்பாத சோம்பேறிகளை –- படிப்பித்தற் கலை கைவராது வகுப்பு நேரத்தை வீணடிப்பவர்களை - சரக்கில்லாமலே வகுப்புக்களில் புலுடாக் காட்டுபவர்களை – - கதிரையில் –ஒட்டியிருந்து சம்பளத்துக்காகச் சாட்டுக் கழிக்கின்றவர்களை - மாணவர் நலனைப் பற்றிக் கவலைப்படாத அல்லது அவர்கள்மீது அக்கறைகாட்டும் உளப்பாங்கு இல்லாதவர்களை வைத்துக்கொண்டு நவயுகத்தைக் காண்பது சிரமமல்ல - முற்றாக முடியாத காரியம்.  அவ்வாறான ஆசிரியர்கள் இருக்கும்வரை திறமையான மாணவர்கள் கல்லூரிப் பக்கம் தலைகாட்ட விரும்பமாட்டார்கள். இருக்கும் சிறந்த மாணவர்களும் ‘டாட்டா’ சொல்லிவிட்டுச் சகோதர கல்லூரிக்குத் தாவிவிடுவார்கள். அதனால் கூட்டோடு அல்லாவிட்டாலும், பார்வைக்கு அப்படித்தான் காட்சிதரக்கூடியதாகப் பெரும்பாலான பழைய ஆசிரியர்களை விடுவித்துப் புதிய ஆசிரியர்களை வரவழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

அவ்வாறான ஆசிரியர்கள் மூன்று பிரிவினராகக் காணப்பட்டனர். அதில் ஒரு பிரிவினர் நீண்ட காலம் கல்லூரியில் ஆழவேர்பாய்ச்சியிருந்த புயலுக்கும் சாயாத விருட்சங்களாக விருந்தனர். புதிதாக வருபவர்களை ஒதுக்குவதில் சுனாமியாகச் செயற்பட்டார்கள்.

தொடர்ந்து ஒரே பாடசாலையில் நீண்ட காலத்துக்குக் கற்பிப்பதால் பெரும்பான்மையான ஆசிரியர்களின் செயற்திறன் குன்றுகின்றது. தமது பணி சமூகப் பணி என்பதை மறந்து விடுகிறார்கள். மிகச் சிறந்த ஆசிரியர்கள்கூட இந்தப் பட்டியலில் காலப்போக்கில் சிக்கிவிடுகிறார்கள். சில ஆசிரியர்கள் ஐந்தாறு ஆண்டுகளில் உற்சாகம் இழக்கின்றார்கள். சிலர் எட்டுப் பத்து வருடங்களின் பின்னர் சோர்வடைகிறார்கள். இப்பொழுது ஒஸ்ரேலியாவில் வாழ்கின்ற திருமதி பராசக்தி பரமேஸ்வரன் ஆசிரியை போன்ற ஒரு சிறு சதவீத ஆசிரியர்கள் புறநடை. ஒரே பாடசாலைச் சேவைக் கால நீட்சியால் பெரும்பான்மையான ஆசிரியர்களின் செயல் திறன் குன்றுவதை அவதானித்தேன். அவர்கள் ஏனையவர்களையும் தம்பக்கம் இழுக்க உபதேசம் செய்கிறார்கள். அந்த வகையிலே யூனியன் கல்லூரியின் தளர்ச்சிக்கு அங்கு நீண்ட காலம் தொடர்ந்து சேவையாற்றிய ஆசிரியர்களும் காரணமாக அமைந்தனர். புறநடையாக எத்தனை பேர் இருந்தார்கள் என்று பூதக்கண்ணாடி பிடித்துத் தேடவேண்டியிருந்தது.

     இன்னொரு பிரிவினரின் கல்விச் சேவையின் நோக்கம் பற்றிய புரிதலே அசட்டுத்தனமாக இருந்தது. “அதிபரா சம்பளம் தருகிறார்? அரசாங்கம் சம்பளம் தருகிறது. உவர் என்ன தான் சம்பளம் தருவது போலத் தடிவிட்டாட்டுகிறார்?” என்ற சிலரின் முணுமுணுப்பு வார்த்தைகள் என் காதுகளை எட்டின. ஒரு அதிபரின் கடமைகளையே சரிவரப் புரியமுடியாத ஆசிரியர்கள் - கையெழுத்திட்டால் போதும் சம்பளம் வரும் என்று எண்ணுகிற ஆசிரியர்கள் - அப்படியான மனோநிலையின் சொந்தக்காரர்களை வைத்துக் கொண்டு கல்லூரியைக் கட்டி எழுப்பமுடியாது. அவர்களின் புரிதலைச் செம்மைப்படுத்திப் புத்திபுகட்ட வேண்டியிருந்தது.

    மூன்றாவது பிரிவினர் வருமானத்திற்காக ஆசிரிய சேவையை மேற்கொண்டவர்கள். கற்பித்தல் சம்பந்தமான கலைக்கும் அவர்களுக்கும் கீரிக்கும் பாம்பிற்குமுள்ள முரண்பட்ட தூரம். யூனியன் கல்லூரியில் மட்டும் என்றுமே வெண்கட்டியைத் தொடாதவர்கள் என்ற வரிசையில் குறைந்தது பத்துப் பேர்வரை இருந்தார்கள். கொஞ்சம் சிரத்தை எடுத்துப் பாட ஆயத்தம் செய்து தம்மை ஆசிரிய சேவைக்குப் பொருத்தமானவராக்கவும் அவர்கள் தயாராக இருக்கவில்லை. சேவை மனப்பான்மையற்ற வெறும் சுயநலவாதிகளாக விருந்தனர். அவர்கள்,

கைவீசம்மா கைவீசு
கைவீசம்மா கைவீசு
என்று சிந்து பாடிக்
கல்லூரியுள் நுழைந்து
கையெழுத்திட்டுக் களையாறி
மணியோசை சினந்து
புறப்படுவர் களத்துக்கு.

கையில் ஒரு கடதாசித் துண்டு
வேண்டாம் ஒரு வெண்கட்டித்துண்டு
பையில் மட்டும் கைபதித்தபடி
வீசும் வெறுங் கையோடு
அன்ன நடையில் புகுவார்
போர்க் களத்துள்.

தொப்பெனக் கதிரையில்
தொந்தி ஆசனத்தைப் பதித்துச்
சற்றுக் களையாறி
பறி கொடுத்தவனைப் போல
கையில் நாடிபதித்து
வகுப்பை ஒரு நோட்டம்.
ஒரு செருமல், ஒரு பார்வை
ஆறஅமரச் சிந்தனை,
வந்த ஜோலி என்ன
என்று தலையைச் சொறிவார்.

பக்கத்துக் கரும்பலகையைக்
கண்கள் வெறித்து நோக்கும்.
“சீக்” கழுதை யென்று நெருமி
வெளித்த தலையை உலுப்பி
வேறு பக்கம் நோக்கி
வீட்டில் விட்டு வந்த ஜோலியை
நினைந்து தலையாட்டி ஓய்ந்து
இன்னொரு முறை வகுப்பை
ஒரு நோட்டம், ஒரு கோணங்கிச் சிரிப்பு.
அது முடியப் பதினாறு
நிமிசங்களை முழுங்கியாச்சுது.

வாத்தியார் செருமுகிறார்.
அதன் அர்த்தம்
மாணவர்களுக்குப் புரிகிறது.
அவரின் வாயைப் பார்க்கிறார்கள்.

“என்ன படிப்பம்?”

அந்த வகை ஆசிரியர்கள் ஒன்று மட்டுமல்ல. பலர். அவர்களில் ஒருவர் என் நண்பர். அவரின் கதையைக் கேளுங்கள்.

அவர் ஏழாம் எட்டாம் வகுப்புகளுக்குத் தமிழ் கற்பித்தார்.   சந்தோசமான குளுமையான முகம். சிறிதாகப் பகிடியும் அவிழ்த்து விடுவார். அதில் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களை முழுங்கிவிடலாம், இல்லையா? கவலையற்று வாழத் தெரிந்த நண்பர். அவருடைய கற்பித்தல் மகிமையை அறிமின்.

     “தம்பி டே. மல்லாகம். எழும்படா மோனை. வாசி.”
     “என்ன பாடம் சேர்?”
     “நேற்றைக்கு எத்தனையாவது பாடம் வாசித்தோம்.”
     “ஐந்தாம் பாடம்.”
     “சரி. ஆறாம் பாடத்தில் தொடங்கு. . . . நிறுத்து. அடுத்தாள். . . . . போதும். இரு. . . . . அடுத்தாள்.”

அவ்வளவுதான் அவரது படிப்பித்தல். வருடம் முழுவதும், ஒரு கட்டுரை எழுதுவித்துத் திருத்திய வரலாறு அவருக்கு இல்லை. ஒரு பந்தி எழுதுவித்து அதனைப் பற்றி மாணவர்களோடு கலந்து உரையாடிய வாடிக்கை அவரிடம் இல்லை. ஒரு இலக்கணப் பிழையைக் கரும்பலகையில் எழுதி அதனைப் பற்றி விளக்கம் செய்த  சரித்திரம் அவருக்கு இல்லை. ஒரு சிறிய கடிதம் எழுதுவித்துத் திருத்தியதுகூடக் கிடையாது. வேண்டாம். தமிழ்ப் பாடத்துக்கு அந்த மாணவர்களிடம் கொப்பியே இல்லை. ஒரு கவிதையின் பொழிப்போ நயமோ கூறும் பழக்கமில்லை. வெண்கட்டியை என்றுமே யூனியன் கல்லூரியில் அவர் தொட்டதில்லை. முன்னர் வேறு பாடசாலைகளில் அவரது கையில் வெண்கட்டி பட்டதோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஒரு முறை யாழ் கல்வித்திணைக்கள அதிகாரிகள் பலர் திடீர்ப் பரிசோதனைக்காக வந்திருந்தார்கள். அவரது வகுப்பிற்கும் ஒருவர் சென்றார். வஞ்சகம் இல்லாமல், அவர் அன்றும் அப்படியே பாடத்தை நடாத்தினார்.

          நிற்க, கனடாவில் ஒரு எழுத்தாளர் தனது சிறுகதைகள் சிலவற்றைப் பார்வையிடத் தந்தார்.

“ஏன் இத்தனை இலக்கணப் பிழை?” வினாவினேன்.
“நான் இன்னாரிடம் தமிழ் கற்றேன். பிழை வரத்தானே செய்யும்” என்றார்.

ஆசிரியர் பணி மாணவனின் பாடசாலை வாழ்க்கையுடன் முடிந்துவிடும் சமாச்சாரம் அல்ல. அவனது வாழ்க்கை முழுவதையும் ஊடறுத்து நிற்கும் வாழ்க்கைப் பிரச்சினை. சாட்டுக் கழிப்பவர்களை சீர்பண்ண அல்லது அப்புறப்படுத்தச் சட்ட திட்டங்கள் தேவை. அதுபோக, அந்த ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்க அரசாங்க பாடசாலை அதிபரிடம் என்ன அதிகாரம் உள்ளது?

அந்த நண்பர் - தமிழ் கற்பித்த ஆசிரியர் - எப்படியோ மணந்து பிடித்துவிட்டார். நான்தான் சூத்தைகளைக் கல்லூரிக்கு வெளியே நகர்த்துவதின் பின்னணியில் உள்ளதாக. ஒரு நாள் அவர் ஆசிரியர் ஓய்வு அறை வாசலில் நின்ற வெள்ளைப் பூப் பூக்கும் சொத்தி அலரி மரநிழலில் வைத்து,

     “தம்பி டே உன்னோடு ஒரு கதை” என்றார்.
     “சொல்லுங்கோ அண்ணை.”
     “தம்பி டே என்னை மாற்றுகிற சமயம், எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள பாடசாலைக்கு மாற்றாதே. நீ வீட்டுக்கு வந்தனியல்லே. நான் சின்னப் பள்ளிக்கூடத்திலே படிப்பிக்கிறன் என்று ஊர் நெளிக்கும். ஊரெளுவில் உள்ள இன்ன பள்ளிக்கூடத்துக்கு என்னை மாற்றிவிடு” என்றார்.

நண்பர் ஒரு கலைப் பட்டதாரி. அவர் கேட்ட அதே பாடசாலைக்கு மாற்றலாகிப் போய் ஒன்றரைத் தசாப்தங்களின் பின்னர் - உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து என்னைப் போலவே தப்பி ஓடி உயிர் பிழைத்தவர் –- அவரை இடம் பெயர்ந்து வாழ்ந்த அந்த அழகிய ஊர்ச் சாலையில் சந்தித்தேன். “அண்ணை எப்படிச் சுகம்?” என்றேன். விடுவிடென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டார். அவர் “சுகம். வாறன்டா தம்பி. நீ எப்படியெடா இருக்கிறாய்?” என்று கேளாதது சொல்லாதது என்னை மிகவும் வருத்தியது. அது யூனியன் கல்லூரியின் மேன்மைக்காக நான் சம்பாதித்த சொத்து. அது ஒரு சின்னப் பதம் மட்டுமே.

*****

            “Good-teaching is one-fourth preparation and three-fourths theatre.”                                                               

“பாட ஆயத்தம் காற் பங்கு. அரங்க நடிப்பு முக்காற் பங்கு. அதுதான் சிறந்த கற்பித்தலின் இலக்கணம்.”
*****

அந்தத் தமிழ் கற்பித்த ஆசிரியரில் குறை காண முடியுமா? அல்லது அவரைக் கல்விச் சேவைக்கு அழைத்தவரில் குறை காணவேண்டுமா?  ஆசிரிய சேவைக்குப் பொருத்தமற்ற பலர் ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். ஒரு மேடை நடிகனுக்கு உள்ள திறமை வல்லமை உளப்பாங்கு ஆசிரியனுக்கு இருக்க வேண்டும். கதிரையில் சிக்காராக அமர்ந்திருக்காமல், கையில் வெண்கட்டியுடன் கரும்பலகையின் எதிரே நின்று நடிப்பவராக இருக்க வேண்டும். அவரது உள்ளம் ஆசிரிய சேவைக்கு உகந்த பண்புகள் நிரம்பியதாக, மனிதநேயம் மிக்கதாக, சமூகப்பற்று உள்ளதாக இருக்க வேண்டும். கடும் உழைப்பாளியாக இருக்க வேண்டும். மாணவர்களை அச்சுறுத்தாமல் அரவணைத்துப் பாடம் புகட்டுபவராக இருக்கவேண்டும். பாடத்தில் பின்தங்கியதற்காக எந்த மாணவனையும் தண்டிக்கக் கூடாது. கருவிலேயே திருவருள் கிட்டப் பெறாத மாணவனும் இருப்பான். அவனுக்காக இரங்க வேண்டும். அதட்டக்கூடாது. வையக்கூடாது. வெருட்டி முழந்தாளில் இருத்தக்கூடாது. தலையில் குட்டக்கூடாது. கன்னத்தில் அடிக்ககூடாது. அவன் மட்டத்திலிருந்து அவனுக்கு உதவி செய்ய ஆசிரியர் கடமைப்பட்டவர். அதுதான் சிறந்த ஆசிரியனின் இலட்சணம். சிறந்த மாணவனுக்குப் பெரிதாக உதவி தேவையில்லை. மாணவன் அதிபருக்குப் பயப்படலாம். ஆனால் தனது பாட ஆசியருக்குப் பயப்படக்கூடாது. அவன் பயபக்தியாக ஆசிரியரை நேசிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் பாடத்தை நடத்தும் வல்லவராக இருக்கவேண்டும். வரப்போகும் பரீட்சையைப் பற்றி மாணவனிலும் பார்க்க ஆசிரியர் அக்கறையுடையவராக இருக்கவேண்டும். கடமை தவறினால் குற்ற உணர்வால் வாடுபவராக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வகுப்பறையில் செய்யும் சேவையில் ஆனந்தம் காண்பவராக இருக்க ணே;டும். இவற்றில் எந்தவித பண்புகளும் அற்ற பலர் ஆசிரியர் சேவையில் உள்ளார்கள். அவர்கள் எல்லோரையும் செயற்கையான பயிற்சியின் மூலம் நல்லாசிரியனாக ஆக்கிவிட முடியாது. காகங்களைக் குயிலைப் போலக் கூவவைக்க முடியாது. மரங்கொத்தியை மயிலைப் போலத் தோகைவிரித்து  ஆடவைக்க முடியாது. பலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை விட்டு வெளியேறும் போதே, தாம் அங்கு கற்றவற்றைத் தூக்கி வீசிவிட்டே வகுப்பறைக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆசிரிய பயிற்சியின் போது சுருள்சுருளாக ‘காட்போட்’ மட்டைகள், உபகரணங்களைச் சுமந்து வகுப்பறைக்குள் புகுந்தவர்கள் - வெளியேறியதும் கையை வீசிக்கொண்டு வகுப்பறைக்குள் செல்கிறார்கள். இதென்ன? எல்லாரும் சேர்ந்து சமூகத்தை ஏமாற்றும் செப்படி வித்தையா? யாரும் விசாரிப்பதில்லை. யாரும் கவலைப்படுவதில்லை.

ஆசிரியர்கள் பலர் அந்த ஊழியத்துக்கு அருகதை யற்றவர்களாக உள்ளனர். இந்தக் குறை பாட்டைப் போக்குவதற்கு ஒரேவழிதான் உண்டு. ஆசிரிய சேவைக்கு உகந்தவரா இல்லையா என்பதைச் செய்முறையில் பரீட்சித்துப் பார்த்துச் சேவையில் சேர்த்துக் கொள்வதே உள்ள ஒரே வழி. ஒருவரை ஆசிரிய சேவைக்குப் பொருத்தமானவரா என்பதைக் கணிப்பதற்கு நீண்ட நேரம் தேவை இல்லை. ஒரு அரைமணி நேரம் மேலதிகம். அப்படி ஒரு வழிமுறை கண்டிப்பாகக் கடைப்பிடிக்காத வரை, ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.

ஒரு நல்லாசிரியனால் பரீட்சையில் மாணவர்களைத் திறம்படச் சித்தி அடைய வைக்க முடியும் என்பது மட்டுமல்ல, வேறு பல நன்மைகளும் உள்ளன. வகுப்பறையில் ஒழுக்கப் பிரச்சினையே இருக்காது. குழப்படிக்காரப் பையன்கூட மந்திர மாயத்துள் அடங்கியவன் போல ஆகிவிடுகிறான். வகுப்பறைக்கு வெளியேகூட மாணவன் ஆசிரியருக்கு கௌரவம் கொடுப்பவனாக மாறுகிறான். சமூகத்தில் ஆசிரியரின் கௌரவம் உயரக் காரணமாகிறான். ஒரு திறமையான ஆசிரியருக்குப் பெற்றார்கள்கூட மிக்க மரியாதை கொடுப்பதைச் சர்வசாதாரணமாகக் காணலாம். ஆசிரியரின் கற்பித்தற் குறைபாடே அவர் மாணவர்களின், வெளிச் சமூகத்தின் மதிப்பை இழக்கக் காரணம். ஆசிரியரின் படிப்பித்தற் கலை மோசமானால், சமூகம் கசமுசா கசமுசா என்று நொட்டை பேசும். அதைத் தவிர்க்க வேண்டும்.

     பாடநேர விரயம், கற்றல்-கற்பித்தலில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. பத்து நிமிடம் விரையம் செய்யப்பட்டால் மாதத்தில் நாலு மணித்தியாலம் வரை விரையமாகிவிடும். ஒரு வருடத்தில்? பாடத் திட்டத்தை முடிக்க முடியாமல் போவதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஆசிரிய சேவையும், வைத்தியர் சேவையும் புனிதமான (noble professions) சேவைகள். அப்படித்தான் பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஏன்? ஒரு வைத்தியர் தவறுவிடுவாரானால் அவரது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதே போலத்தான் ஆசிரியரும் வகுப்பறைக் கற்றல்-கற்பித்தலில் தவறுவிடுவரானால், அந்த மாணவ சமூகத்தின எதிர் காலமே பாழாகிவிடும். அவ்வகையான ஆசிரியர்கள் சமூகப் பிரக்ஞை அற்றவர்கள். அவர்களிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு அதிபரிடமே உள்ளது. அதனால் யூனியன் கல்லூரியில் ஆழவேர் பாய்ச்சி நின்று, கடமையை உதாசீனம் செய்து, கல்லூரியை வீழ்ச்சிப் பாதையில் வைத்திருந்த சூத்தைகள் அழுகல்கள் கொந்தல்களை வளாகத்துக்கு வெளியே நகர்த்தி, புதிய ஆசிரியர்களைத் தேடி வரவழைக்க வேண்டிய கடமையை எதிர்நோக்கினேன்.

பயிர் விளைச்சல் தரவேண்டு மாயின் களைகளைத் தயவு தாட்சணிய மின்றி அகற்ற வேண்டும். அந்தப் பணியைத்தான் செய்ய வேண்டியிருந்தது. ஒரு தொகுதி சூத்தைகள் ஒரே சமயத்தில் வெளியேற்றப் பட்டதும், இருந்தவர்கள் தம்பாட்டில் ஒழுங்காக வேலை செய்ய முயன்றார்கள். மாற்றப்பட்டவர்கள்கூட அவரவர் வீடுகளுக்கு அண்மையிலே உள்ள பாடசாலைகளுக்கே அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. பெரிய பாடசாலையைவிட்டுப் போகிறோம் என்ற ஆதங்கம் தெரிந்தது. நடேஸ்வராக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட ஆசிரியருக்குக்கூட அந்த ஆதங்கம் இருந்தது.   


                  *****

“Teachers, I believe, are the most responsible and important members of the society because their professional efforts affect the fate of the earth.”

                                                                    Helen Caldicott


“ஆசிரியர்கள்தான் சமூகத்தின் மிகவும் பொறுப்புவாய்ந்த பிரதான அங்கத்தவர்கள். ஏனெனில் அவர்களது தொழில் சார்ந்த முயற்சிகள் பூமியின் விதியைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவை.”

                                                                               ஹெலன் கல்டிகொற்

1 comment:

  1. அருமையான படைப்பு
    தொடருங்கள்

    ReplyDelete