Friday 14 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்


யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

8. பொருத்தம் பார்த்தே அனுப்பினோம்

           
     ஆசிரியருக்கும், அவர் கற்பிக்கின்ற பாடத்துக்கும் பொருத்தம் பார்த்தே வகுப்பிற்கு அனுப்பவேண்டும். மனப் பொருத்தம் இல்லாத குடும்பத்தில் சச்சரவு வருவது போலவே, பாடப் பொருத்தம் இல்லாத ஆசிரியருக்கும் மாணவருக்கு மிடையில் வகுப்பில் சச்சரவு ஏற்பட்டதை அவதானித்திருக்கிறேன்.

ஆசிரியரின் மேன்மையான ஊழியத்தை மேலுயர்த்த உள்ள ஓரே வழி, அவருக்குப் பொருத்தமான பாடத்தை, பொருத்தமான வகுப்பிற்கு வழங்குவதாகும். எமது வெற்றியின் மந்திரத்தில் அதுவும் ஒன்று. விசேட பயிற்சி பெற்றவர்கள், பட்டதாரிகளைப் பொறுத்தவரை - அவர்கள் குறித்த பாடங்களை எடுக்கவேண்டும் என்பதே ஒழுங்கு. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி, ஒழுங்கு முறைக்கு இயைபு இல்லாத வகையில், செயலாற்ற வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன.

ஓர் ஆசிரியை க.பொ.த. உயர்தர வகுப்பில் பௌதிகவியல் பாடம் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் பல்கலைக்கழகப் பட்டதாரி. கல்வித் திணைக்களத்திடம் பொளதிகவியலுக்கு ஆசிரியர் கேட்ட பொழுது, கல்வி அதிகாரிகள் அந்த ஆசிரியரே அப்பாடத்தைப் கற்பிக்க வேண்டும் என்று சட்ட விளக்கம் கூறினர். ஆனால் அவரால் அப்பாடத்தைத் திருப்பிதியாகக் கற்பிக்க இயலாமலிருந்தது. அவரை அலுவலகத்துக்கு அழைத்துக் கலந்துரையாடினேன். அவர் கீழ்வகுப்புகளில் - ஏழாம், எட்டாம் ஒன்பதாம் ஆண்டுகளில் - தன்னால் கணிதம் சிறப்பாகச் செய்ய முடியும் என்றார். மகிழ்ச்சியோடு கணித பாடத்தைக் கொடுத்துவிட்டு, அதனைச் சிறப்பாகச் செய்கிறாரா என்று அவதானித்தேன். எனக்கு மிகமிகத் திருப்தியாக இருந்தது. கணித ஆசிரியர்கள் எல்லோரும் என்னைக் கவர்ந்த சிறந்த ஆசிரியர்களே. அவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற சேவைசெய்தார். பெற்றார்கள் ஒரு முகமாக அந்த ஆசிரியையைப் போற்றினார்கள். பலர் கல்லூரி வந்து அவரிடமும் நேரடியாக நன்றி தெரிவித்தனர். உயர் வகுப்பிலிருந்து இறக்கி, கீழ்வகுப்பில் பாடம் கொடுத்ததற்காக  என்னை வாழ்த்திய ஆசிரியை, அமரராகிவிட்ட திருமதி பங்கஜம் சாந்தராசா அவர்களே. 

     இன்னொரு ஆசிரியரின் கதை. பாடஞானம் போதாமை காரணமாக க.பொ.த. உயர்தர வகுப்பில் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்கினார். அவரைக் கீழ்வகுப்புகளுக்கு வேறு பாடம் கற்பிக்க அனுப்பினேன். வகுப்பில் ஒரே அமைதி. மாணவர்கள் குஷியாகக் காணப்பட்டனர். சில மாதங்களுக்குள்ளேயே, பெற்றார் கல்லூரிக்கு வந்து அவரைச் சந்தித்துப் போற்றி வாழ்த்தினர். ஆனாலும் அந்த ஆசிரியரால் வகுப்பு இறக்கப்பட்ட நியாயத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

     கீழ்வகுப்புகளுக்குப் பொருத்தமான பாடங்களுக்கு ஆசிரியர்களை, உயர் வகுப்புக்களிலிருந்து இறக்கும் முயற்சி இலகுவானதாக இருக்கவில்லை. மனிதர்களின் இயல்பான குணங்களுக்கு ஏற்ப அவை பிரதிபலித்தன. சில ஆசிரியர்கள் உயர்வகுப்புகளில் கற்பிப்பதை ஒருவித உயர்ந்த அந்தஸ்தாக நினைக்கின்றனர். அதனால் மன நிறைவில்லாமலே, கீழ்வகுப்புகளில் பணியாற்ற ஒருப்பட்டனர். அவர்கள் அந்த அம்சத்தை மறக்க முடியாது கஷ்டப்பட்டனர். கற்பித்தல் ஒருவித இன்பம் தரும் - மனநிறைவு தரும் தெய்வீகத் தொழில். அந்தத் தொழிலால் கிடைக்கும் இனிமையை, இன்பத்தை, மனநிறைவை, மகிழ்ச்சியை நல்லாசிரியன் எந்த வகுப்பில் கற்பித்தாலும் அனுபவிக்கிறான். இல்லாதபட்சத்தில் கற்பித்தற் சூழல் நெருடலாகவே அமையும்.

                  *****
              “The most important motive for work in school and in life is pleasure in work, pleasure in its results and the knowledge of the value of the result to the community.

                                                                        Albert Einstein


             
“கல்விக் கூடங்களிலும், வாழ்க்கையின் பிற துறைகளிலும் புரியும் பணியின் உள்ளார்ந்த நோக்கம், அதன்வழி உளப்பூரிப்படைதலும் ஆனந்தம் அனுபவித்தலும் மட்டுமன்றி, அப்பணியின் பேற்றால் சமூகம் அடையும் உன்னத நன்மைகள் பற்றிய அறிவுபெறுதலுமாகும்.”
                            அல்பேட் ஈன்ஸ்ரெயின்
                  *****
                                       

பட்டதாரி ஆசிரியர்களைக் கீழ் வகுப்பிற்கு அனுப்பியது போல, கீழ்;வகுப்புகளிலிருந்து பட்டதாரிகள் அல்லாதவர்கள், பாடப் பொருத்தம் பார்த்துக் க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் விசேட பயிற்சி பெற்றவர்களாகவும், பட்டப் பரீட்சைக்குத் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஆயத்தம் செய்தவர்களாகவும், அல்லது பட்டப் பரீட்சைக்குத் தோன்றித் தவறியவர்களாகவும் இருந்தார்கள். அந்த வகையிலே அனுபப் பட்டவர்களில் ஒருவர் திரு.ஏ.எஸ்.அன்ரன் அவர்கள். விஞ்ஞான விசேட பயிற்சி பெற்ற இவர் தாவரவியல் படிப்பித்தார். அவ்வேளை BSc பட்டப் பரீட்சைக்குத் தனிப்பட்ட பரீட்சார்த்தியாகத் தோன்றிச் சித்தி அடைந்தார். பின்னர் இவர் அதிபராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றார். அன்னார் மேலும் பதவி உயர்வுகள் பெற வாழ்த்துகிறேன்.  ஆங்கில விசேடபயிற்சி பெற்ற திரு.எம்.சாமுவேல் அவர்கள் இன்னொருவர். இவர் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியர். இவர் பொருளியல் கற்பிக்கக் க.பொ.த. உயர்தர வகுப்பிற்கு அனுப்பப்பட்டார். இன்னும் கீழ் வகுப்புகளில் வெகு திறமையாகக் கணிதம் கற்பித்த திருமதி திலகவதி கமலாகரன், திரு.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கணிதம் கற்பிக்க க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்கள் சிறந்த பட்டதாரி ஆசிரியர்கள் போலக் கடமையாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இவர்களைத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் கிடைத்ததும், திரும்பக் கீழ் வகுப்புகளுக்கு அனுப்பவேண்டி யிருந்தது. இவர்கள் அந்தரித்த சமயத்தில் கைகொடுத்தவர்கள். அதற்காக நன்றி சொல்கின்றேன்.
                      *

   க.பொ.த. உயர்தர விஞ்ஞான வகுப்புகளுக்கு எப்போதும் ஆசிரியத் தட்டுப்பாடு நிலவியது. ஆரம்பத்தில், திரு.அல்பேட் இராசையா அவர்கள் விலங்கியல் கற்பித்தார். அவரது பாரியார் கிருபைமலர் இராசையா அவர்கள் தாவரவியல் கற்பித்தார். தாவரவியல் பாடம் கற்பிப்பதில் தனியார் கல்வி நிறுவனங்களின் பிரபல ஆசிரியர்களுக்கு நிகராக அவரது பணி அமைந்திருந்தது. கல்வி அமைச்சு நடாத்தும் க.பொ.த. உயர்தர தாவரவியல் பாடம் முடிந்த இரண்டொரு தினங்களில் அவரது மாணவர்கள் தாம் எழுதிய விடைகளைச் சரிபிழை பார்க்க அவரிடம் செல்வார்கள். 60 வினாக்கள் கொண்ட முதலாம் பகுதி வினாக்களுக்கு அவர் கொடுக்கும் விடைகள் அச்சொட்டாக இருக்கும். பல மாதங்களுக்குப் பின்னரே விடைகள் திருத்தும் பணி ஆரம்பிக்கும். அப்பொழுது பரீட்சைத் திணைக்களம் கொடுக்கும் விடைகளுக்கும், திருமதி இராசையா அவர்கள் கொடுத்த விடைகளுக்குமிடையில் கூடினால் 2 விடை வித்தியாசமே யிருக்கும். அவரைப் போல எந்தவொரு பாடத்துக்கும் அச்சொட்டாக முதலாம் பகுதிக்கு விடை கொடுத்தவர்களை நான் அறிந்ததில்லை. தாவரவியல் பாடத்தில் அத்தனை நிபுணத்துவம் உடையவராக இருந்தார். அதன் காரணமாக அவரது மாணவர்கள் கூடுதலான புள்ளிகளைப் பெற்று மருத்துவத் துறைக்கு அல்லது உயிரியல் துறைக்குத் தெரிவாகும் மேலதிக வாய்ப்பைப் பெற்றனர். தெல்லிப்பழையைச் சேர்ந்த B.Sc பட்டதாரியான கணவனைப் போலவே உயர்ந்த குங்கும-வெள்ளை நிறமான திருமதி இராசையா அவர்கள் ஆசிரிய சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பணிபுரிந்தவர். ஆசிரியருக்குரிய அத்தனை அரிய பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்றவர். தானும் தனது கடமைகளுமாக ஒதுங்கி வாழ்ந்த பல உத்தம குணங்கள் நிறைந்தவர். இன்னும், ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உண்டு என்பார்கள். திரு.இராசையா அவர்கள் கல்லூரி முடிந்து மாலை நேரம் முழுவதும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவார். வீடு திரும்பியதும் மின்சார வெளிச்சத்தில் (flood-lit) காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் ரெனிஸ் விளையாடச் சென்று நள்ளிரவே வீடு திரும்புவார். அவர்தம் இனியதுணைவியார் கிருபைமலர் வீட்டுச் சுமையைத் தானே சுமந்து, விளையாட்டுப் பிரியரான திரு. அல்பேட் இராசையா அவர்களின் வெற்றியின் பின்னணியில் உந்துசக்தியாக இருந்தார். அரிய குணங்களின் நிறைகுடமான அவருக்கு எனது நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் உரித்தாக.

விலங்கியல் போதித்த திரு. அல்பேட் இராசையா அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த முயற்சி மிகவும் போற்றக் கூடியதாக இருந்தது. அவரை நான் விலங்கியல் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். அந்த ஆய்வுகூடம் ward block கட்டடத் தொகுதியில் இருந்தது. ward block அத்திவாரக் கல்வெட்டில், அதற்கு அத்திவாரம் இட்டவர் Rev.R.C.P.Welch  எனவிருந்தது. அந்தச் சங்கைக்குரிய கனவான், அல்பேட் இராசையா அவர்களது தாய் மாமனாகும். இராசையா அவர்கள் யூனியன் கல்லூரிக்கு வந்த முதற் தினம், அந்தக் கல்வெட்டில் தனது மாமாவின் பெயர் - Rev.R.C.P.Welch, the president of the C.S.I. Church of Sri Lanka -    இருப்பதைக் கண்டு ஆச்சரிய முற்றார். அந்தக் கட்டடம் தனக்கு ஒரு புனித தலமாகத் தெரிந்ததென்று கூறுகிறார். அதனாற்போலும் வகுப்பின் ஒரு நிமிடத்தைத் தன்னும் விரயம் செய்யாமல் தனது பணியைப் புனித பணியாக மேற்கொண்டார். பாட அலகின் ஒரு செய்முறையைக்கூட அவர் தவிர்த்ததில்லை. கற்பித்தலை அவர் சம்பளத்துக்கான தொழிலாக மேற்கொள்ளவில்லை. அதனை மாணவசமூகச் சேவையாகக் கருதிப் பணியாற்றினார். க.பொ.த. உயர்தர இறுதிப் பரீட்சையில் பெருமளவு மாணவர்கள் அவரது பாடத்தில் திறமைச் சித்திகள் பெற்றனர். திரு. இராசையா அவர்கள் துணைவியாரோடு எனது அதிபர் பதவிக்கால  ஆரம்பத்திலேயே நைஜீரியா சென்றமை பெரிய தாக்கமாகவிருந்தது. அவரது பாடம் ஒரு பட்டதாரி ஆசிரியைக்குக் கொடுக்கப்பட்டது. ஏமாற்றமே விடையாகக் கிடைத்தது. அவர்கள் இடத்தை வசதிக்கட்டண ஆசிரியர்கள் மூலம் நிரப்ப வேண்டியிருந்தது. இருபாடங்களையும் கற்பிக்க டீளுஉ பட்டதாரியான திரு. ஸ்ரீகரன் வசதிக்கட்டணத்தில் நியமிக்கப்பட்டார். அவரது சேவையும் போற்றக்கூடியதாக இருந்தது. ஆனால் அவர் நிரந்தர நியமனம் பெற்று யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குச் சென்றார். அவரிடத்துக்கு விலங்கியல் கற்பிக்க வசதிக்கட்டணத்தில் திரு.த.கெங்காதரன் நியமிக்கப்பட்டார்.

     பௌதிகவியல் கற்பித்த திரு.என்.கந்தசாமி அவர்கள் நைஜீரியா சென்றதால் வசதிக்கட்டணத்தில் திரு.எ.பிரான்சிஸ்   நியமிக்கப்பட்டார். அவர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு நிரந்தர நியமனம் பெற்றுச் சென்ற பின்னர் திரு. என்.பி.செல்வரஞ்சன், திரு. ஆர்.விமலநாதன் ஆகிய விஞ்ஞான பட்டதாரிகள் வசதிக்கட்டணத்தில் நியமிக்கப்பட்டனர். தூயகணிதம், பிரயோககணிதம் பௌதிகவியல், கற்பிக்க வசதிக்கட்டணத்தில் நியமிக்கப்பட்ட பழைய மாணவராகிய திரு.ஆர்.விமலகாந்தன் B.Sc பட்டதாரியாகும். இவரது சேவை சிறப்பாக வரவேற்கப்பட்டது. கனடாவில் வாழும் இவர் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் சுறுசுறுப்பான செயற்குழு உறுப்பினர். இவரது பாரியார் திருமதி ராஜினி இப்பொழுது ப.மா.ச. செயலாளராகவுள்ளார். இருவரும் சீரும் சிறப்புமாக வாழ என் நல்வாழ்த்துக்கள். இவ்வேளை வசதிக் கட்டணத்தில் சேவையாற்றிக் கல்லூரியின் உயர்வுக்குத் துணைநின்ற அனைத்து வசதிக்கட்டண ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.



   “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.”

                               திருமந்திரம் - திருமூலர்

1 comment: