Friday, 2 December 2016

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' சிறுகதை விமர்சனத்தை முன் வைத்து

முனைவர் துரை. மணிகண்டன் & முனைவர் கணபதிராமன்
விமர்சனம் என்பது இப்பொழுது குறைந்துவிட்டது. ஒருகாலத்தில் விமர்சனம் செய்யப்படாத நூல்கள் தகுதியில்லாத நூல்களாக ஆய்வாளர்களால் கருதப்பட்டது. இன்று அது தலைகீழாக மாறிவிட்டது. காரணம் இன்று யாரும் விமர்சனத்தை விரும்புவது இல்லை. அப்படியே விமர்சனம் செய்யப்பட்டாலும் புகழ்ந்து கூறினால் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால், அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் இருக்கின்றனர்.


விமர்சனம்
இலக்கிய விமர்சனத்தின் தந்தையெனப் போற்றப்படுவர் வ.வே.சு ஐயர் ஆவார். ஒரு திட்டவட்டமான முறையில் சுவை, பேருணர்ச்சி ஆகிய இரண்டு தன்மைகளை அளவு கோலாகக் கொண்டு ரசிகப் பார்வையில் பார்த்தவர். அடுத்து வையாபுரி பிள்ளை, இவர் இலக்கியத்தைச் சுவை நுகர்ச்சியை முதலில் வைத்துப் பிறகு உண்மை இயல்பை அறிதல் என்று குறிப்பிட்டிருப்பதாக சி.சு.செல்லப்பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கே. எஸ் சுதாகர் ஆவர். இவர் யாழ்பாணத்தைச் சார்ந்தவர். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டுள்ளார். இவரது சென்றிடுவீர் எட்டுத்திக்கும் சிறுகதைத் தொகுதியில் பன்னிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

வெளியானவை
பன்னிரெண்டு சிறுகதைகளும் வெவ்வேறு இதழ்களுக்கும் இணையப் பக்கங்களுக்கும் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. அவைகளில் ஆஸ்திரேலியா பல கதைகள் சிறுகதைப் போட்டி (2013), செம்பியன் செல்வன் அ. இராஜகோபால் சிறுகதைப் போட்டி (2013), வல்லமை, இணையத் தென்றல் சஞ்சிகைச் சிறுகதைப்போட்டி, யுகமாயினி - ஞானம் சஞ்சிகை - கந்தவர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி - த. மு. எ. ச, சிறைப்பட்டிருத்தல் போட்டி சிறுகதைத் தொகுப்பு போன்ற போட்டிகளுக்கு எழுதி ஒரு சில சிறுகதைகள் முதல் இரண்டு மூன்றாம் பரிசுகளை வென்றது.

முன்வைத்த விமர்சகர்கள்

சிங்கப்பூர் பாலு மணிமாறன், சிட்னி பாலா விக்னேஸ்வரன், மெல்பன் லெ. முருகபூபதி, நாஞ்சில்நாடன், வெங்கட் சாமிநாதன், கலிபோர்னியா சுபத்ரா பெருமாள், அம்புஜவல்லி, தேசிகாச்சாரி, தேமொழி, புலோலியூர் அ.இரத்தினவேலோன், ச. முருகானந்தன், நா. முத்து நிலவன், எம். ஏ. சுசீலா ச.தமிழ்ச்செல்வன், அருணன் போன்ற பல நாடுகளைச் சார்ந்த விமர்சகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

விளக்கின் இருள்
சிறுகதையாசிரியர் நேராக ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்று வாசிப்பவர்களை மீத்தேன் வாயுற்குள் புதைத்துவிட்டார். நம் நாட்டில்தான் குளங்கள், விவசாய நிலங்கள் காடுகளை அழித்துப் புதிய வீடுகளைக் கட்டுகின்றார்கள் என்றால் உலக நாடுகளில் பலவற்றிலும் இதே நிலைதான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அதுவும் சிறுகதைக்குள் சிறந்த கருத்தையும் இன்றைய நகரமயமாதலின் வளர்ச்சியையும், தொழிநுட்பச் சாதனங்களின் மாசுவைக் கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் எப்படித் தினறுகின்றன என்பதை இக்கதையின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதைத்தான் சிங்கப்பூர் பாலு மணிமாறனும் தன் விமர்சனமாக “நவீன உலகம் சுயநலமாக மாறிவிட்டதையும், நவீன மனிதன் அதிலும் அதிக சுயநலமிக்கவனாக வாழ்ந்து வருவதையும், ஒரு நவீன நகரப் பின்னணியில் விவரிக்கும் கதை” என்கிறார். மேலும், பிரச்சாரம் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் எவ்விடத்திலும் இதன் நெடி அடிக்காமல் மனதின் அடிவாரத்தில் கூரான ஊசிகளைச் சொருகிச் செல்கிறது என அழுத்தமாகப் பதிவு செய்கிறார். கடைசியாக இது ஒரு மிகத் தேர்ந்த கதை சொல்லியின் கதை என்கிறார். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

இரண்டு சம்பவங்கள்
சிட்னியின் பாலா விக்னேஸ்வரன் என்பவர் இரண்டு சம்பவங்கள் கதை குறித்தான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் இக்கதையில் ஆசிரியர் கே. எஸ். சுதாகரால் விடுப்பட்டுப் போன செய்திகளை இணைத்திருந்தால் நலம் என்று சுட்டிக் காட்டுகிறார். புதுசு இதழில் வந்த அந்தப்படம் புறாவை இரும்புக் குண்டில் கட்டியது தான் என்றாலும், தரம் குறைந்த நீயூஸ் பிரிண்டில் தெளிவற்ற கறுப்பு வெள்ளைப் பதிப்பில் அது குண்டும் புகையுமாகவும் தோற்றம் கொண்டிருந்தது. பேராதனைத் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்ட நாடகங்களை வழங்கிய திருவிழா நாடகக் குழுவும் காங்கேசன் துறைக் கல்வி வட்டார மாணவர்களுடன் ஹில்டாவில் தங்கியிருந்ததும், இவர்களும் இவர்களது துறைகளும் அடையாளம் காணப்பட்டமைக்கு ஒரு பின்னணி இல்லையா? பேராசிரியர் சிவசேகரத்துடன் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஆஷ்லி ஹல்லே மிகவும் அனுசரணையாக இருந்தார் என்பதையும் பதிவு செய்தல் பொருத்தம் என்கின்றார்.

இந்தச் சிறுகதையைப் படித்த முடித்தபின் ஒரு நொடி அதிர்ந்து போனேன். மொழிப்பிரச்சனையையும், இனப்பிரச்சனையையும் கண்முன் வந்து காட்டியது. பொதுஇடம், பணிபுரியும் இடம், கல்லூரி, பல்கலைக்கழகம் என்று எந்த இடங்களிலும் மொழிப்பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கின்றன என்பதை நான் உணர்ந்தேன். அதற்குத் தீர்வாக ஆசிரியர் எதையும் முன் வைக்கவில்லை என்பது என் ஆதங்கமாக இருந்தது.

காட்சிப்பிழை
காட்சிப்பிழை உண்மையில் கதைத் தலைப்பிற்கும், உள்ளே உள்ள விடயங்களுக்கும் மிகச் சரியாக ஒத்துப் போகின்றன. இன்று மனிதர்கள் பலவிதம் நட்பு கொள்ளும் போது இலகுவாகப் பேசுகின்றனர். அது எதிர்பார்த்தும் பேசுகின்றனர். ஆனால் காட்சிப்பிழையில் வரும் பாலாவும், தெமட்டகொடவும் எதிர் எதிர் துருவங்கள், ஒன்றாக இருந்த இருவரும் அம்மை நோயினால் பிரிகின்றனர். அதுவும் தெமட்டகொடதான் பாலாவை வெறுக்கின்றனார். இறுதியாக தெமட்ட கொடவிற்குப் புற்றுநோய் என்று தெரிந்து மனம் இரங்கிப் பார்க்க வருகின்றார். ஆபத்தில் உதவிய நண்பனை என்றும் மறக்கக்கூடாது என்பதையும் சிலப்பதிகாரத்தில் மாதவி “நம்மை மறந்தாரை நாம் மறக்க வேண்டாம்“ என்பார். அதுபோல பாலா தெமட்டகொடவைப் பார்க்க வந்த நிகழ்வைப் பொருந்திப் பார்க்க வேண்டும். இதையே லெ. முருகபூபதி தற்காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் தேடியது அநேகம். வீடு, தொழில் வருமானம், வாகனம் இப்படி அனைத்தையும் தேடிவிட்டு சொந்த ஊரிலில்லாத வசதி வாய்ப்புகளையெல்லாம் பெற்ற பின்பும் தொலைத்துவிட்ட ஒரு விடயம் இருக்கிறது.

எங்கே சொல்லுங்கள்...? என்று வாசகனைக் கேட்டுவிட்டு அவரே பதில் உரைக்கின்றார். நாம் தொலைத்த பல விடயங்களில் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சி என்கிறார். இதைப் போன்றே நாஞ்சில் நாடன் “வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்லும் சிறுகதை என்கின்றார். வெங்கட் சாமிநாதன் நாடு இழந்தாலும் வாழ்க்கை சிதைந்தாலும் மனித சுபாவம் மாறுவதில்லை, அது நாடு கடந்தாலும் வாழ்க்கையின் கடைசிப்படியில் இருந்தாலும், வெறுப்பையும் தன் ஈகோவையும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம் மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும், தன்னை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும் அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்டகொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். இக்கதையில் அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாகச் சித்தரிக்கப்பட்ட இலட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. சிலரது மனித சுபாவம் மாறுவதே இல்லை. சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பொற்றாலாம் சிக்கனமான எழுத்து, இயல்பான மனிதர்கள் என்று விமர்சனத்தை வைத்திருக்கின்றார். இது வரவேற்கத்தக்கதுதான் இருந்தும் “இன்னா செய்தாரே ஒறுத்தல் அவர் நாண நல்நயம் செய்து விடல்“ என்ற குறளின் கருத்தை இக்கதை கொண்டிருப்பதை நம்மால் உணரமுடிகிறது.

ஒரு கடிதத்தின் விலை
இக்கதைக்கு கலிபோர்னியாவைச் சார்ந்த சுபத்ரா பெருமாள் விமர்சனமாக “இடையிடையே நகைச்சுவையுடன் மிளிர்ந்தாலும், இறுதியில் கண்களில் நீரை வரவழைத்தது. இலங்கைவாழ் தமிழ் மக்களின் துயரமும், துன்பமும் நாளடைவில் மறைத்து விடாமல் நினைவூட்ட இது போன்ற கதைகளே உதாரணம். பிறந்த மண்ணைவிட்டுத் தொலைதூரம் சென்றாலும், அம்மண்ணின் மைந்தர்கள் படும் அவலம் ஆறாத ரணமாக, ஆழ்கடல் நீரோட்டம் போல உறுத்திக் கொண்டே இருக்கிறது என்கிறார்.

ஒரு படைப்பு என்பது விலங்குத்தனம் மிகுந்த மனிதனை நல்ல மனிதனாக்க வேண்டும். அதுவே சிறந்த படைப்பாகும். ஆனால் ஒரு கடிதத்தின் விலை சிறுகதை அதைச் செய்யத் தவறிவிட்டது. கதையில் சாதனாவின் செயல் புரட்சியின் முதல்படி ஒரு கலை ரசிகையை தீவிரவாதியாக மாற்றியது, இலங்கை அரசாங்கம் என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மிக நேர்த்தியாக செல்கிறது கதை, எப்படி? தமிழ்நாட்டில் ஒரு முத்துக்குமார் தன் இனத்திற்காகத் தன்னைத் தீயிட்டுக் கொண்டானோ அதனைப் போன்று சாதனா தன் உடலில் மனித வெடிகுண்டைக் கட்டி ராணுவத்தின் மீது பாய்ந்துள்ளார். இக்கதை உலக சிறுகதை வரலாற்றில் ஒரு மைல்கல் என்பேன்.

பறக்காத பறைவகள்
நியூசிலாந்தை இக்கதையில் வாயிலாகக் முழுமையாகக் காட்டுகின்றார் கே. எஸ். சுதாகர். இந்த நாட்டில் உரிமையுடன் வாழலாம் பணம், படிக்க வசதி, இலவச மருத்துவம் போன்ற பிறந்த மண்ணிலே கூட கிடைக்காத வாய்ப்புகள் இங்கே உண்டு என்று (ப. 91) குறிப்பிடும் ஆசிரியர் அங்குள்ளவர்களுக்கு வேலை செய்யப் படித்த முட்டாள்கள் வேண்டும் என்று குறிப்பிடும் போது எங்கோ வலிக்கிறது.

குழந்தை கேட்கும் கேள்விக்குக் கூட பதில் சொல்ல நேரமில்லாமல் பணம் சம்பாதிப்பதே குறியாக்கிய நாள் என்று ஓடும் மனநிலையே அதிகமாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். இக்கதையில் இலங்கை அகதிகளை விடப் பொஸ்னிய நாட்டைச்சேர்ந்த சுவேதாவின் வலி அதிகம் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இதையே தேமொழி என்பவர் எழுத்து நடை அருமை, பலவரிகள் மனதில் வலியுடன் இறங்கியது, குறிப்பாகச் சொந்த நாட்டை விட்டிட்டு வந்திட்டோம். அப்ப இருந்த சோகத்தை விடவா? இனி எங்கே போனால் தான் என்ன? போகக் கூடிய இடத்துக்குப் போக வேண்டியதுதான். பறக்காத பறவைகள் நிச்சயமற்ற வாழ்க்கையின் சோக வரிகள் என்று தன் விமர்சனத்தை முன் வைக்கின்றார்.

எதிர்கொள்ளல்
எதிர்கொள்ளல் கதை தொடக்கம் வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என்ற அமைப்பு முறையில் தடம் மாறாமல் செல்கிறது. அக்கா தம்பி பாசத்தை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா? என்ற கேள்வி பல தடவை மனதில் எழுகிறது. திருமணமே வேண்டாம் என்ற நிலையிலிருந்த அக்காவை மணப்பதற்கு 42 வயது ராசகுமாரன் வந்தான் எனும்போது திருமணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நம் மனதில் ஓடும் எண்ண அலைகள்.

அக்காவிற்கு குழந்தையில்லை, தம்பி அயல்நாடு பணி, இச்சூழலில் அக்கா மறுக்கின்றாள். காரணம், கேன்சர். இலங்கையில் போரின் காரணமாக கேன்சர் வெகு இலகுவாக வரும் என்பது போன்று கதை உள்ளது. கேன்சர் வந்தால் மருத்துவம் பார்க்க வசதியில்லை. இறந்த அக்காவின் இறுதிச்சடங்கிற்குக் கூட வரவில்லை. இறந்தவர்களை அடக்க செய்யப் போதுமான சூழல் இல்லை, என்ன கொடுமை? இவைற்றையெல்லாம் கதையாகப் பதிவு செய்ய ஒரு துணிச்சல் வேண்டும். அது ஆசிரியரிடம்-அதிகமாக-இருந்திருக்கிறது.

இதைதான் நா. முத்து நிலவனும் கூறுகின்றார். இன்றைய ஈழ மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை அடங்கிய குரலில் - ஆனால் மிக நுட்பமாகச் சொல்லும் அருமையான கதை. படித்து முடிக்கும் போது முற்றுப்புள்ளியாக ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்தது என்பதைவிட வேறென்ன நான் சொல்ல என்று தன் விமர்சனத்தை வைக்கின்றார்.

எம்.ஏ. சுசீலா என்பவர் புலம் பெயர்ந்து ஓடும் அவலங்களை, புற்றநோய் வந்தும் புலம் பெயர்ந்து ஓட மனமின்றிச் சொந்த மண்ணிலேயே மடியும் சோகங்களை இவ்வாறு பலவற்றையும்-முன்-வைக்கிறது-என்கிறார்.

ச. தமிழ்ச்செல்வன் இலங்கைத் தமிழர் வாழ்வை நம் மனம் நெகிழச் சொல்கிறது. வாசித்து முடித்த பின்னரும், அக்கா கதாபாத்திரம் நம்மோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வு நீடிக்கிறது.

சேர்ப்பிறைஸ் விசிட்
எங்கு போனாலும் மனித மனம், பிறர் எதையும், நம்மைவிட அதிகமாக வாங்கிவிடக் கூடாது என்பதில் முடிவாக உள்ளது என்பதையும், அதைத்தான் இக்கதையில் வரும் சுலோசனா கதாப்பாத்திரம் நமக்கு உணர்த்துகிறது. கதையில் சில இடங்களில் நகைச்சுவையும் இடம் பெற்றுள்ளன.

ஒரு வகை உறவு
இக்கதையில் கல்யாணியின் பாத்திரம் என்னையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். மனைவி என்பவர் எந்த அளவிற்கு நமக்கு உதவிபுரிபவள் ஆகின்றாள். ஆனால் ஒரு சிலரைத் தவிர அனைத்து ஆண்களும் அவர்கள் சொல்லும் செயலுக்கு செவிகொடுக்கின்றோமா? இல்லையே... இக்கதையைப் படித்தால் நாம் மனைவியின் கருத்தையும் ஏற்று நடப்போம்.

நான் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன்.

“வீட்டு வாடகையாகக் கொடுத்த
பணத்தில்
கால் சதவீதம் பெற்ற தாய் தந்தையருக்குக்
கொடுத்திருக்கின்றோமா“

- என்று இந்தக் கேள்வியை இக்கதையில் கேட்கலாம்.

வீட்டு வாடகை எந்த அளவிற்கு இன்று கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. மேலும் புலம் பெயர்ந்தவர்கள், தன் சொந்த நாட்டில் நடக்கும் துக்கம், சுகம் காரியங்களுக்குச் செல்ல முடியாத சூழலை ஆசிரியர் அழகாகப் பதிவு செய்துள்ளார். இக்கதையில் புலம் பெயர்ந்தவர்கள், சென்ற நாட்டில் முதலில் வேலை கிடைப்பது பத்திரிக்கைத் துறைதான் என்ற செய்தி வியப்படையச் செய்தது.

கற்றுக் கொள்வதற்கு
வியட்நாம் போர் உலக வரலாற்றில் மறக்க முடியாத போர். அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் நடந்த அந்தப் போரில் பல லட்சம் பேர் இறந்துள்ளனர். இருந்தாலும் வியட்நாம் இன்று சுதந்திர நாடு. வியட்நாமின் நண்பன் ஹா கூறுகையில் இலங்கையில் நடந்த போரில் பல லட்சம் பேர் இறந்தாலும், இன்னும் விடுதலை அடையவில்லை காரணம் நீங்கள் எங்களிடம் அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர்ந்த யாழ் மக்கள் தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இழந்த மக்களுக்கு வழங்க வேண்டும். அங்கு பெரிய நிறுவனங்களைக் கட்டிப் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்கின்றான். படித்தால் மட்டும் போதாது, படிக்காதவர்கள் என்னைப் போல என் தாய்நாட்டிற்கும் அதிகம் உதவி செய்ய முன்வரலாம். அது உங்கள் இனத்திற்குப் பேருதவியாக இருக்கும் என்கிறான். கதையை வாசிக்க வாசிக்கப் பல நாட்டுப் போர்கள், அதனால் இழந்தவை அவற்றை மீட்டெடுக்கப் பயன்பட்ட பல்வேறு வழிமுறைகளை இக்கதை நயமாக எடுத்துரைக்கிறது.

இருவேறு பார்வைகள்
புலம்பெயர்ந்தவர் முதலில் வேலை தேடுவது, எந்த அளவிற்கு இயலாத காரியமாகிப் போகின்றது என்பதை நயம்பட இக்கதை விளக்குகிறது. பிலிப்பைன்ஸ், சீனம், வியட்நாம் என எந்த நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் தொடக்கம் மிகவும் சிரமம்.

அசலும் நகலும்
இக்கதை இலங்கையில் போர் நடைபெற்ற போதும், போர் நடந்து முடிந்த பிறகும் கூட நடந்திருக்கலாம். தேவன் மரண வீட்டிற்கு அதே தெருவைச் சார்ந்தவர்கள் கூட போக முடியாத சூழல் நிலவி வந்திருக்கின்றன. இது தமிழ்ச் சாதிக்கு நிகழ்ந்த பெரும் துயரம். கனத்த இதயுடத்துடன் இக்கதையை முடிக்க மனமில்லாமல் முடிக்கின்றேன். அசலம் நகலும் - உண்மையே.

புதிய வருகை
நியூசிலாந்தின் கலாச்சாரம், நமது தமிழ்க் கலாச்சாரம் இரண்டையும் இணைத்து எழுதியுள்ளார். அங்கு குழந்தைகள் சுதந்திரமாகச் செல்லலாம். அதே போன்று, பிரசவ அறையில் கணவன் இருக்க வேண்டும். அவரே தொப்புள் கொடியை வெட்ட வேண்டும் என்ற கலாச்சாரப் பின்னணி எனக்கு வியப்பை அளித்தது.

கருத்துரை

1. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கே. எஸ். சுதாகர் ஒரு படைப்பாற்றல் மிக்கவர்.

2. பன்னிரெண்டு சிறுகதைகளிலும் பல்வேறு உலகச் கலாச்சாரம் பின்னப்பட்டுள்ளது.

3. புலம்பெயர்ந்த மக்களின் வலியை மிக இலகுவாகச் தன் எழுத்தில் சொல்லிச் செல்கிறார்.

4. வியட்நாம், சீனா, போலந்து, இந்தோனேசியா, கனடா, இலங்கை போன்ற நாடுகளின் அகதிகளைத் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

5. பல்வேறு நாட்டுக் கலாச்சாரங்களைப் பதிவு செய்துள்ளார்.

6. புலம்பெயர்ந்து சென்றாலும், வியட்நாமின் நூஜ்ஜின் போல தாய்நாட்டிற்கும் தாய் மண்ணிற்கும் உதவி செய்ய வேண்டும்.

7. எவ்வாறு ஒரு நாடு சுதந்திர நாடாக மலர வேண்டும்.

8. படிப்பு முக்கியமில்லை, பயன்தான் முக்கியம் என்கின்றார்.

9. குடும்ப பாசம்.

10. ஆசிரியர் சொல்ல வந்த செய்தியை தெளிந்த தமிழில் தெரிவித்திருப்பது எம்மைப் போன்றவருக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

11. எழுத்து நடையில், பேச்சு நடையில் இலங்கைத் தமிழுக்கும் தமிழ் நாட்டின் தமிழுக்கும் சற்று வேறுபாடு காணமுடிகிறது.

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்

1. சி.சு. செல்லப்பா, இலக்கிய விமர்சனக் கலை, எழுத்துப் பிரசுரம், ட்ரிப்பிளிக்கன், சென்னை-5.

2. சிலம்பொலி. சு. செல்லப்பனார், சிலப்பதிகார உரை, பாரதி பதிப்பகம், சென்னை-17. முதற்பதிப்பு. 1994.

3. கே.எஸ். சுதாகர், சென்றிடுவீர் எட்டுத்திக்கும், அக்னிக்குஞ்சு பதிப்பகம், மு.ப. 2014.

(நன்றி: முத்துக்கமலம் – 01.07.2016 பன்னாட்டுக் கருத்தரங்குக் கட்டுரைகள் ; முத்து 11/ கமலம் 9)

No comments:

Post a comment