Tuesday, 20 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
18. தோள்கொடுத்த தோழர்கள்
        
    முதல் நாளே திணறினார்.

     அதிபராகி நான்கு வருடங்கள் கழித்து ஒரு வெள்ளி இரவு எனக்கு ‘ஹாட் அற்றாக்’ வந்தது. அப்பொழுதுதான் முதன் முதலாக, அடுத்து வந்த திங்கட்கிழமை விடுதலை எடுத்தேன். அதிபராகிய பின்னர் எடுத்த ‘லீவின்’ முதல் நாள். பிரதி அதிபர் பொறுப்பாக இருந்தார். அவருக்கு அது முதல் நாள். ஒரு தினம்கூட முகாமைத்துவ சுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினார். கல்லூரிச் செயற்திட்டத்தில்  ஒழுக்காற்றுக் குழு ஒன்று நிரந்தரமாக இருந்தது. அதில் அதிபர், பிரதி அதிபர், பகுதிப் பொறுப்பாளர்கள், மாணவிகள் ஒழுக்கப் பொறுப்பாளர்கள் அங்கத்தவராக இருந்தனர். அவர்களில் மூவர் இப்பொழுது கனடாவில் வாழ்கிறார்கள். எனது பதவிக் காலத்தில் நான் ஒரு தடவைகூட அதனைக் கூட்டியது கிடையாது. ஓர் அற்ப விடயத்தைக் கையாளத் தெரியாமல், முதல் நாள் திங்கட்கிழமை ஒரு தவறு விட்டார். இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமை ஒழுக்காற்றுக் குழுவைக் கூட்டி அந்தத் தவறைப் பூதாகாரமாக்கினார். மூன்றாம் நாள் புதன்கிழமை யாழ்-காங்கேசன்துறை வீதியில் ஊர்வலம் வைத்து மாதவறு செய்தார். அது இன்னொரு தவறுக்கு வழிசெய்தது. அந்தத் தவறுகள் என்னைப் பாதிக்காமல் விடவில்லை.
              பிரதி அதிபர்கள்

எனக்குப் பிரதி அதிபர்கள் பொருந்துவதில்லை என்ற கருத்து உயர்ந்த இடத்தில் முகிழ்த்தது. அதனை மிகைப்படுத்திச் சுமந்து செல்வதற்குத் தெல்லிப்பழையில் ஒரு குருவி இருந்தது. “ஏன் பொருந்துவதாக இல்லை” என்று வினாவப்பட்டது. நான் என்ன சொல்லி இருப்பேன்?

     எனது காலத்தில் நால்வர் பிரதி அதிபர்களாக இருந்தனர். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறுகிய காலம் நானும் பிரதி அதிபராக இருந்தவன்தான். நான் அப்போது உழைத்தது போல, பிரதி அதிபர்கள் உழைக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்களால் என்னோடு ஒத்து ஓடுவது சிரமமாக இருந்தது. என்னுடைய தீவிர எதிர்பார்ப்புகளை அவர்களால் நிறைவேற்ற முடியாமைக்கு காரணங்கள் இருந்தன. திறமைக் குறைவு அல்லது அசட்டை என்று சொல்ல முடியாது. பிரதி அதிபர்களாக வருபவர்கள் முதியவர்களாகவே இருப்பர். சேவை மூப்பு அடிப்படையே அதற்குரிய ஒரே தகமை. நான் அவர்களிடம் இளைஞர்களின் சுறுசுறுப்பான வேலைகளை எதிர்பார்த்தேன். எமது கல்லூரியை ஒரு முறை சுற்றி வருவதானால் 600 மீற்றர் வரை நடக்க வேண்டும். நாலு ஐந்து தடவைகள் சுற்றுவர அவர்களது தேக ஆரோக்கியம் இடம் கொடுக்கவில்லை. பாடசாலை நேரத்துக்குப் புறம்பான நேரத்தில் நின்று உழைக்கவும் முதுமை இடமளிக்கவில்லை. அதனால் நானே அவர்கள் பாரங்களின் ஒருபகுதியைச் சுமக்க வேண்டியிருந்தது. அல்லது அவர்களது கடமைகளை வேறு ஆசியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டியிருந்தது. அவ்வாறு சுமந்தவர்களில் ஒருவர் ஆசிரியர் திரு.அ.பரமநாதன் அவர்கள். வழமையாக எமக்கிடையில் இருந்த நட்பான உறவில் எந்த விரிசலும் இருக்கவில்லை.

பிரதி அதிபர் திரு.வி.குணரத்தினம் அவர்கள் கலைப் பட்டதாரி. ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெருமகன். குளுமையான தோற்றம். முகத்தில் ஒருவித சாந்தமான கவர்ச்சி. மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடாமல் வாழும் மனப் பக்குவம். எதிரியையும் நேசிக்கும் பரந்த அன்பு உள்ளம். பல நற்பண்புகளின் உறைவிடம். நான் பதவி ஏற்ற புதிதில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர். என் கரங்களை வலுப்படுத்தியவர். அவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பதவி பெற்றுச் சென்றார். ஒஸ்ரேலியாவில் வாழும் அவரை “என்றும் நன்றே வாழ்க! நலமே வாழ்க!” என்று வாழ்த்துகிறேன்.

திருவாளர்கள் த.சண்முகசுந்தரம், இ.விசுவநாதன், நா.புஸ்பநாதன் ஆகிய மூவரும் அமரத்துவம் அடைந்து விட்டார்கள். திரு.த.சண்முகசுந்தரம் அவர்கள் கலைப்பட்டதாரி. மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். சிறந்த அறிவாளி. உயர்ந்த சிந்தனைகள் நிறைந்தவர். பிரபல எழுத்தாளர். சாகித்தியமண்டலப் பரிசு பெற்றவர். படைப்பாளிகள் மத்தியில் பிரபல்யமானவர். அதிபராகப் பதவி உயர்வு பெற்று மகாஜனக் கல்லூரிக்குச் சென்ற அவர், நோய்வாய்ப்பட்டு விரைவில் இறைபதம் அடைந்துவிட்டார். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

திரு.இ.விசுவநாதன் சிங்கப்பூரில் பிறந்தவர். கொல்லன் கலட்டியைச் சேர்ந்தவர். விசேட பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர். கலைத்துறையில் நாட்டமுடையவர். எனது நாடகங்களில் பின்னணியில் நின்று உதவியவர். 1980இல் காங்கேசன்துறை மாவட்டச் சாரணர் கிளைச் சங்கம் அமைக்கப்பட்டபோது, அதன் முதலாவது ஆணையாளராக நியமிக்கப்பட்டார். கல்லூரியில் சாரணியத் துறையைப் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடாத்தியவர். கல்லூரி விளையாட்டுப் போட்டிகள், கல்லூரியில் நடந்தாலென்ன வேறெங்கு நடந்தாலென்ன, அங்கு தவறாமல் பிரசன்னமாக விருந்து ஊக்கமளித்தவர். சகலருடனும் நட்பாகப் பழகுபவர். குணத்தின் குன்று. உதாரண புருஷர். அவர் இருக்கும் வரை நேரசூசி தயாரிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்தவர். அதன் மூலம் எமது வேலைப்பளுவைப் பெரிதும் குறைத்தவர். அவருடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

திரு. நா.புஸ்பநாதன் மலைநாட்டிலிருந்து யூனியனுக்கு மாற்றலாகி வந்தவர். மல்லாகம் அவருக்குப் புகுந்த வீடு. இலங்கைக் கலைப் பட்டதாரி. வஞ்சகமில்லாத நெஞ்சத்தின் உரிமையாளர். நிரம்பக் கலகலப்பாகக் கதைப்பார். எல்லோரையும் நம்புவார். வாழ்க்கையைச் சுமையாகக் கருதாது வாழத் தெரிந்தவர். நல்ல ஞாபகசக்திமிக்கவர். சகல மாணவர்களையும் பெயர் சொல்லி அழைப்பார். என்னிடமிருந்து அதிபர் பதவியைப் பொறுப்பேற்றவர். இடம் பெயர்ந்து வன்னியில் வாழ்ந்த காலை இறைபதம் எய்தினார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.


      பகுதித் தலைர்கள்

எனது சுமையைப் பங்கிட்டுச் சுமந்தவர்கள் பகுதித் தலைவர்கள். ஆரம்பத்திலிருந்து எனது சுமையின் ஒரு பகுதியைப் பெரிய மனத்தோடு சுமந்தவர் திரு. அ.பரமநாதன் பீ.ஏ. அவர்கள். தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். ஆடம்பரம் இல்லாத பெருமகன். சீரிய ஒழுக்கங்களின் உறைவிடம். கண்ணியம் நிறைந்தவர். தெழிந்த சிந்தனையாளர். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். கல்லூரியின் எழுச்சிக்காக எனது ஒரு கரமாகச் செயல்பட்டவர். கனிட்ட பிரிவுக்குப் பொறுப்பான பகுதித் தவைராக இருந்தார். அவரது பகுதியைப்பற்றிய கவலை இல்லாமல் இயங்க முடிந்தது. அவர் தனது பகுதியை அத்தனை சிறப்பாக மேற்பார்வை செய்தார். முறைப்பாடுகளை ஆறஅமர நீதிபதி போல விசாரணை செய்வார். மாணவர்களைச் சிரித்தபடியே தண்டிப்பார். அவரைப் பிரதி அதிபராக்க விரும்பினேன். வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சேவை மூப்புக் குறைந்தவராக இருந்ததால் முடியாமல் போய்விட்டது. எனினும் அவர் பின்னர் யூனியன் கல்லூரியின் பிரதி அதிபராக உயர்வு பெற்றுச் சிறந்த சேவை செய்தவர். அவருக்கு இத்தருணத்தில் எனது மனங்கனிந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.என்.கந்தசாமி அவர்கள் எனது அதிபர் பதவி ஆரம்ப காலத்தில் க.பொ.த. உயர்தர விஞ்ஞான வகுப்புகளுக்கும், வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கும் பொறுப்பாக இருந்தவர். இரண்டுவருடங்களின் பின்னர் அவர் நைஜீரியா சென்று விட்டார். ஏழாலையைச் சேர்ந்த அவர் ஒரு BSc பட்டதரரி. பௌதிகவியல் பாடத்தை வெகு சிறப்பாக உயர்தர வகுப்பில் கற்பித்தவர். பிரதி அதிபர் பதவியை நான் பெறவேண்டும் என்பதில் மிக்க அக்கறைகாட்டியவர். யூனியனில் மாணவனாக இருந்த காலத்தில் மெய்வல்லுநர் போட்டிகளில் சிறந்து விளங்கியவர். விளையாட்டுப் போட்டிகளை நிருவகிப்பதில் அபார திறமையுடையவர். அவருடைய ஆவிபட்டால் வாடிய பூக்கூடத் துளிர்க்கும். அவ்வளவு மெதுமையானவர். அவரது வார்த்தைகளில் ஒதுக்கக்கூடியவை எதுவும் இருக்காது. வாழ்க்கைக்கு உதாரணமாகக் காட்டக்கூடிய பெருந்தகை. அவருடைய வீட்டுக்கும் சில தடவைகள் சென்றிருக்கிறேன். அவர் பின்னர் யூனியன் கல்லூரியின் அதிபராக இருந்து, சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு எனது நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
    
திரு.செ.சிவகுமாரன் BSc க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவுக்கும், மாணவர் தலைவருக்கும் பொறுப்பாக இருந்தார். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மிக்க விவேகமான ஆசிரியர். சிந்தித்துத் தெளிவான முடிவு எடுக்கக்கூடியவர். சிரமப்படாமல் காரியங்களைச் சாதித்தவர். உயர் வகுப்புக்களில் இரசாயனவியல் போதித்தார். பிரத்தியேக கல்வி நிலையங்களின் பிரபல்யமான ஆசிரியர்களுக்கு ஈடாக, இரசாயனவியலைப் போதிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். ஏனையவர்களிலும் மிக இளைஞரான அவர், உயர்தர விஞ்ஞான மாணவர்களை எதுவித பிரச்சினையும் இல்லாமல் கட்டுக் கோப்பில் வைத்திருந்தார். எப்படி முடிகிறது என்று நான் சிலவேளைகளில் யோசித்தது உண்டு. அவர் பின்னர் Dip-in-Ed. முடித்து, பதவியில் உயர்ந்து அதிபராகி, புலமைப் பரிசில் பெற்று லண்டன் சென்றும் வந்தவர். ஓய்வு பெற்றுக் கனடாவில் குடும்பத்தோடு வாழும் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாக.

திரு.பொ.கமலநாதன் அவர்கள் க.பொ.த. உயர்தர வர்த்தக-கலைப் பிரிவுகளுக்குப் பொறுப்பாக இருந்தார். வர்த்தக பட்டதாரி. சுன்னாகத்தைச் சேர்ந்த அவரின் வருகையின் பின்னர்தான், யூனியனில் வர்த்தகப் பிரிவு களைகட்டி விறுவிறென்று வளரத் தொடங்கியது. எந்தப் பணியைக் கொடுத்தாலும், அதனைச் சிறப்பாக ஒழுங்காகச் செய்தவர். நல்ல எண்ணங்களின் சொந்தக்காரர். சிறந்த விழுமியங்கள் நிறைந்தவர். தகுந்த ஆலோசனை வழங்கும் இயல்பினர். மிகச் சாதுரியமாக அலுவல்களைக் கவனிக்கக்கூடிய அவருக்கு, வர்த்தகப் பிரிவைத்  தனது ஆளுமையில் வைத்திருப்பதில் எதுவித சிரமமும் இருக்கவில்லை. தட்டச்சில் வல்லவராக இருந்ததினால் அலுவலகத்திலும் மிக்க உதவிகள் புரிந்தார். வேலைத் திட்டங்கள் அனைத்தையும் அவரே தட்டச்சில் அழகாகப் பதித்துத் தந்தவர். அவர் பின்னர் அதிபர் சேவைத் தேர்வில் சித்தி யடைந்து, சிறிது காலம் யூனியனில் அதிபராக இருந்து சிறப்பாகச் சேவையாற்றியவர். இப்பொழுது கொக்குவில் இந்துக்கல்லூரியில் அதிபராக இருக்கும் திரு.பொ.கமலநாதன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, மேலும் பதவி உயர்வுகள் பெற்றுப் பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்துகிறேன்.

         மாணவிகள் ஒழுக்கப் பொறுப்பாளர்கள்

மாணவிகள் ஒழுக்கத்திற்குப் பொறுப்பாக இருந்து, எனது வலக்கையாக அமைந்து பொறுப்புக்களைப் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றிய மங்கையர் திலகங்கள் இருவர். ஒருவர் திருமதி பத்மாவதி சந்திரசேகரி அவர்கள். அன்னார்  1985 யூன் வரை மாணவிகளின் ஒழுக்கத்திற்குப் பொறுப்பாக இருந்தார். கட்டுவனைச் சேர்ந்த இவர் விஞ்ஞான விசேட பயிற்சி பெற்ற ஆசிரியை. கல்லூரியின் சினிமா நட்சத்திரம். மிக்க சாதுரியம் நிறைந்தவர். பல நல்ல பண்புகளின் பொக்கிசம். தனது மனதுக்கு நியாயமானதைப் பயப்படாமல் சொல்லக்கூடியவர்.  யூனியன் கல்லூரி ஒரு கலவன் தாபனம். சரிக்குச்சரியாக ஆண்களையும் பெண்களையும் கொண்டது. வயதுக்கோளாறுகள் வருவது இயற்கை. பிரச்சினைகள் வருவது தவிர்க்க முடியாதது. எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி. எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு வயதுக் கோளாறு வருவதில்லையோ வென்று. ஒருவேளை நான் அந்தத் துறையை எவருக்கும் தெரியாமல் கையாண்டது போலவே, அவரும் கையாள்கிறாரோ என்று எண்ணியதும் உண்டு. பெண்கள் ஒழுக்கப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேனே தவிர, எப்படி நிருவகிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தைகூடச் சொன்னது கிடையாது. எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஏதாவது சிறு பிரச்சினைகள் வந்து அதனை அப்படியே முளையிலே கிள்ளித் தீர்த்தாரோ என்னவோ தெரியாது. வளாகத்துள் பெண்பிள்ளைகளுக்கு என்று சிறப்பான சில ஒழுக்க முறைகள் வரையறை செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒரு சிறு உதாரணம்: பெண்பிள்ளைகளின் தலை யலங்காரம் பற்றியது. அதனை ஒரு சீரிய ஒழுங்கினுள்; கொண்டு வந்தாகிவிட்டது. யாரும் ‘வண்ண அல்லது வெள்ளிக் கிளிப்’ அணியப்படாது என்பது அவரது ஒழுங்குமுறை. எனினும் சில உயர் வகுப்பு மாணவிகள் - வண்ண அல்லது வெள்ளிக் ‘கிளிப்புகளை’ அணிந்தனர். காலைக் கூட்டத்துக்கு நிரையாகப் பிரதான மண்டபத்துக்கு வரும்வேளை, அவரது தலையைக் கண்டால் கழற்றி எடுத்துவிடுவர். பின்னர் வகுப்பிற்குள் புகுந்ததும் அணிவர். அதை மணந்து பிடித்த திருமதி சந்திரசேகரி அவர்கள், இரண்டு சுற்று உயர்தர வகுப்புக் கட்டடப் பக்கத்தால் போய் வந்தார். அதன் பிறகு அந்தக் குறும்பை நிறுத்திக் கொண்டார்கள். மாணவிகளின் ஒழுக்கத்தைப் பொறுத்தவரை, தான் வரைந்த எல்லைக் கோட்டுக்குள் அவர்களை வைத்துக் கொண்டார். யூனியன் கல்லூரியிலிருந்து கணவனோடு நைஜீரியா சென்று, இறுதியில் கனடாவில் குடியேறியுள்ள திருமதி பத்மாவதி சந்திரசேகரி அவர்களுக்கு, மாணவிகள் ஒழுக்கத்துக்குப் பொறுப்பாக இருந்து ஆற்றிய அற்புதமான பணிகளுக்கு நன்றிகள் பல சொல்கின்றேன். அத்துடன் அன்னாரது குடும்பத்துக்கும் என் அன்பான நல்வாழ்த்துக்கள்.

திருமதி சந்திரசேகரி அவர்கள் நைஜீரியா சென்ற பொழுது, எனக்கு ஒரு கையிழந்தது போலவிருந்தது. அந்தக் குறையைச் செல்வி ஜயரத்தினதேவி சபாரத்தினம் தீர்த்தார். பெண்களின் ஒழுக்கப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்றர். வருத்தலைவிளானில் உதித்த இவர் டீளுஉ. பட்டதாரியும், விசேட ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியையுமாகும். சீரிய சிந்தனையும், சிறந்த வாழ்க்கைப் பண்புகளும் நிறைந்த திருமகள். சம்பவங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றல் நிறைவுறப்பெற்றவர். பிழைகளைச் சுட்டிக் காட்டத் தயங்கமாட்டார். கல்லூரியில் தேவையான சமயங்களில் ஆலோசனை வழங்கியவர்களில் செல்வி சபாரத்தினம் முதன்மையானவர். மாணவிகள் ஒழுக்கத்தைப் பொறுத்தவரை, திருமதி சந்திரசேகரி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தனது கடமைகளை சிறப்புறச் செய்தார். செல்வி சபாரத்தினம் அவர்களுக்குக்கூட எப்படித் தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று ஒரு வார்த்தைதன்னும் சொன்னதில்லை. மாணவிகள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் தலைகாட்டவில்லை. தமக்கே உரிய சீரிய கட்டுப்பாட்டுடன் - பிரச்சினைகள் வராமல் - மாணவிகள் வளாகத்துள் இயங்கப் பெரிதும் காரணமாக இருந்தார்.

ஆங்கில மொழித்தினப் போட்டிகளை நடாத்துவதிலும், மாணவருக்குப் பயிற்சி அளிப்பதிலும் முக்கிய பங்காற்றினார். அத்தோடு ஆங்கில நாடகங்களையும் நெறிப்படுத்தி மேடை ஏற்றியவர்.

அவர் பின்னர் பதவி உயர்வு பெற்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில உதவி விரிவுரையாளராக இருந்து, இப்பொழுது ஓய்வு பெற்றுள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம் பெயர்ந்து கரவெட்டியில் வாழும் செல்வி  ஜயரத்தினதேவி சபாரத்தினம் அவர்களுக்கு, அவராற்றிய மிகச் சிறந்த பணிகளுக்காக, ஆற்றிய அரும் உதவிகளுக்காக எனது மனம்நிறைந்த நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு கலவன் பாடசாலையில் பல பிரச்சினைகள் தலைகாட்டினாலும் வியப்பதற்கில்லை. எனினும் பெற்றாரை அழைத்து முறையீடு கண்டிப்பு வெருட்டல் என்று எதனையும் வராது இருவரும் பார்த்துக் கொண்டார்கள். என்னிடமும் மாணவிகள் பிரச்சினை வருவது அவர்களுக்குத் தெரியாது. பல பிரச்சினைகளை அவர்களுக்கு மட்டுமல்ல, வேறு எவருக்கும் தெரியாமல் தீர்த்தேன். சில காதல் கடிதங்கள். எதனையும் பொறுப்பாளர்களுக்குக் கொடுத்ததில்லை. அவை மாணவனையோ மாணவியையோ மாட்டிவிடுவதற்காகவே வருவன என்பது என்னுடைய கருத்து. புறநடைகளும் இருக்கலாம். அவற்றைப் பற்றி அலட்டிக் கொண்டது கிடையாது. கிழித்துக் குப்பைக்கூடைக்குள் தள்ளிவிடுவேன். மாணவிகள் ஒழுக்கப் பிரச்சினையைப் பொறுத்தவரை மிகமிக அவதானம் கடைப்பிடிக்கப் பட்டது. மற்றவருக்குச் சொன்னால் அது சிலசமயம் பற்றியெரிந்து வாழ்க்கைப் பிரச்சினையாகிவிடும். அதனால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. ஒரு பதம்:

ஒரு முறை ஏ.எல். வகுப்பு மாணவி ஒருவர் -  உயர்தர விஞ்ஞான வகுப்பு மாணவர் இருவரின் கரைச்சல் பொறுக்க முடியாமல் - தனது பெற்றாருக்கு முறையிட்டார். பாடசாலை முடிந்தால் நான் உடன் வீடு செல்வதில்லை. அலுவக வாசலில் உள்ள குந்தில் இருப்பேன். சிலநேரம் சிலர் வருவார்கள். கதைப்பார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும்  விளையாட்டு மைதானத்தையும், எதிரே தூரத் தெரியும் நெடுஞ்சாலையையும் பார்த்துக் கொண்டிருப்பேன். அதுதான் ஓய்வெடுக்கும் வேளை. ஓங்கி வளர்ந்து சடைத்த மலைவேம்புகளின் நிழலும், அவற்றைத் தழுவி வரும் மாலைவேளையின் மந்தமாருதமும் இதமாக இருக்கும். அப்படியான சமயமே அந்த ஏ.எல். மாணவி அங்கு வந்தார்.  குறித்த இரு மாணவர்களைப் பற்றி எனக்கு முறைப்பாடு செய்தார். அவரின் கண்கள் கலங்கின. தந்தையாரே அனுப்பியதாகச் சொன்னார். தந்தையாரும் நன்கு படித்தவரே. எல்லாவற்றையும் கேட்டு விட்டு “இனிமேல் அவர்கள் வாலாட்டாமல்  பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அனுப்பினேன். சிறிது நேரத்தால் விளையாட்டு மைதானத்துக்கு மாணவர்கள் வரத்தொடங்கினார்கள். அந்தக் குறித்த இரு மாணவர்களைக் கண்டேன். அழைப்பித்தேன். வந்து என் முன்னே நின்றார்கள்.

     ஏன்? எதற்காக என்ற கேள்விகள் அவர்கள் முகங்களில் படர்ந்தன. என்னைப் பார்த்தபடி நின்றார்கள்.
     “உங்கள் சாதகக் குறிப்புக்களை நாளை எடுத்து வாருங்கள்” என்றேன்.
     திகைத்துப் போனார்கள்.
     சிறிது தாமதித்து,
     “பொருத்தம் பார்க்க” என்றேன்
     அவர்கள் மலைத்துப் போய் என்னைப் பார்த்தபடி கல்லாக நின்றனர்.
     சிறிது நேரம் கழித்து - எனக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அப்படியே கூறிவிட்டு, அவர்களை அவதானித்தபடி இருந்தேன்.
     “சேர், நாங்கள் இனிமேல் அப்படிச் செய்யமாட்டோம். மன்னித்துக்கொள்ளுங்கள் சேர்” என்றனர். 
     முகங்கள் இருண்டன. கண்கள் மழை பொழிய ஆயத்தம். கால்கள் மெல்லிதாகக் கதை பேசின.
     “இனிமேல் முறைப்பாடு வரப்படாது. போங்கள்.”

      நான் மேலதிகமாக ஒரு சொல்லும் பேசவில்லை. அவர்கள் அந்தப் பிழையைப் பின்னர் கடைசிவரை விடவில்லை. அதனால் அவர்களுக்கும் எனக்கும் இடையில், பின்னர் வழமையான தொடர்பில் எந்த மாறுதலும் இருக்கவில்லை. ஒன்றுமே தெரியாதது போல, ஒன்றுமே நடவாதது போல நடந்து கொண்டேன்.   

      இருவரின் பெற்றார்களையும் எனக்கு நன்கு தெரியும். அதுபற்றி எவருக்கும் சாதுவாகவும் தொட்டுப் பேசவில்லை. இப்படிச் சில சம்பவங்கள். எங்களுடைய சமுதாய அமைப்பிற்கு முளையில் கிள்ளி எறிவதே உகந்தது.  அதை விரித்து விசாரிப்பதில் இறங்கக் கூடாது. பொறுப்பாளர்கள் திருமதி சந்திரசேகரிக்கோ, செல்வி சபாரத்தினத்துக்கோ, எனக்கோ, கல்லூரிக்கோ ‘மாணவிகள் ஒழுக்கம்’ பிரச்சினையாகவே இருக்க வில்லை.

         சைவ சமயம், நூல்நிலையம்,
    தமிழ்த் தினப் போட்டிகள் - பொறுப்பாளர்

     திருமதி மகாதேவி பத்மநாதன் பல துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. கொல்லன்கலட்டியில் அவதரித்தவர். மனையாளைக் குறிக்க –- பின்தூங்கி முன்னெழுவாள். கணவனே கண்கண்ட தெய்வம். - இப்படிப் பல முதுமொழிகள். அவை யெல்லாம் மகாதேவிக்காக எழுதப்பட்டவைதான். மனையின் சிறப்பு மனையாளில்தான். அத்தகைய பெரும் பண்புகள் நிறைந்தவர். தான் ஏற்றுக்கொண்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஓயாது உழைத்தவர். சிரமத்தை வெளியே காட்டமாட்டார். அந்த அம்மையார் விவேகானந்தா சைவசமயப் பரீட்சைப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்றிருந்தார். மாணவர்களைச் சேர்த்தல், தேர்வுக் கட்டணம் சேகரித்தல், தேர்வு விண்ணப்பம் நிரப்புதல் முதலிய சகல வேலைகளையும் அவரே சுமந்தார். சைவ மாணவர்கள் அனைவரும் அப்பரீட்சை எடுக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது. அத்தோடு தமிழ் மொழித் தின விழாப் போட்டிகளுக்கும் பொறுப்பாக இருந்து திறம்பட இயங்கியவர். பேச்சுப் போட்டிகளுக்குப் பயிற்சி அளித்தவர். மேற்பார்வைக்கு இடம் வைக்கவில்லை. ஒருவருக்கு உகந்த வேலையை அவரிடம் ஒப்படைப்பதால் ஏற்படும் நன்மை அது.

எல்லாவற்றிற்கும் மேலாகத் திருமதி பத்மநாதன்  அவர்கள் நூலகத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார். அதன் முன்னர் நூலகத்தின் தனிப்பொறுப்பாளராக வசாவிளானைச் சேர்ந்த திரு.சன்முகராசா அவர்கள் பணியாற்றினார்கள். அவரைக் கல்வித் திணைக்களம் வேறு பாடசாலைக்கு எழுதுவினைஞராக மாற்றிய பின்னர், எமது கல்லூரிக்கு நூலகர் நியமனம் நடைபெறவில்லை. கல்வித் திணைக்களம் சிலசமயங்களில் மாணவர்களை மையமாக வைத்துச் சிந்திக்காமல், தங்கள் நிருவாக வசதிக்கு முதன்மை கொடுப்பது வருந்தத் தக்கது. அது ஒரு பெரிய நூலகம். பூரணத்துவமான  அற்புதமான நூலகம். எந்த விடயத்தை அறிய விரும்பினாலும், அது பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள் அங்கு கிடைத்தன. தமிழ் நூல்களும் ஓரளவு கிடைத்தன. அவற்றை எவரும் கிரமமாகப் பாவித்ததாக ஞாபகம் இல்லை. பெரும் பகுதியான நூல்கள் கைபடாமலே இருந்தன. நான் யூனியன் கல்லூரிக்குச் சென்ற கையோடு - 1972 - நூல் நிலையத்தில் இருந்த கைபடாத தூசிபடிந்த இரு நூல்கள்; என்னை வியப்பில் ஆழ்த்தின. ஒன்று உலகறிந்த  பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசானின் (Guy De Maupassant 1850/1893 சிறுகதைகள் அடங்கிய நூலாகும். நான் கற்பனையிலும் அவரது சிறுகதைகள் அடங்கிய நூலை என்றாவது வாசிக்க வாய்ப்புக் கிட்டுமென்று எதிர்பார்க்கவில்லை. உலகிலேயே சிறந்த சிறுகதை என்று சுட்டிக்காட்டப்படுகின்ற மாப்பசானின் ‘அட்டியல்’ என்ற சிறுகதைமீது எனக்கு அபார மோகம். சோனாமாரியாகச் சொற்களை அள்ளி வீசி, காட்சிகளைக் கண்ணுக்குள் வைத்து, படு விறுவிறுப்பாகக் கதையை நகர்த்தி வாசகனுக்குப் போதையேற்றும் அற்புதத்தைக் காணலாம். தாழ்வில் வருந்தி மடிந்து போகாமல், போராடி எழும் சக்தி இயல்பாக வாய்ந்தவன் மனிதன் என்பதைச் சொல்லும் கதை. மாப்பசானின் அக்கதையை மட்டுந்தான் அதன் முன்னர் வாசித்திருந்தேன். அக்கதை பின்னர் க.பொ.த. சாதாரணதர ஆங்கில இலக்கியப் பாடத்தில் ஒரு கதையாகவும் இருந்தது. மாப்பசானின் சிறுகதைகள் அடங்கிய பெரிய மெல்லிய நீலச் சாம்பல் அட்டை நூலை வீடு கொண்டு சென்று வாசித்தேன். மற்றது மொல்லீர் (Moliere 1622/1673) என்ற புனை பெயர் கொண்ட பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியரின் நையாண்டி நாடகங்கள் அடங்கிய நூல். அவரின் ‘பறக்கும் டாக்டர்’ என்ற நாடகத்தை மட்டக்களப்பில் ஒரு பாடசாலைப் பரிசளிப்பு விழாவின்பொழுது மேடையேற்றி யிருந்தேன். அது டாக்டர்களை நையாண்டி செய்யும் நாடகம். அந்த நாடகத்தை மட்டும் திரு. பி.ரி.சின்னையா என்ற கல்விமானிடம் பெற்றிருந்தேன். ஆடம்பரத்துக்கு உலகப் பிரசித்தி பெற்ற XIVவது லூயி மன்னனுக்குக் கேளிக்கை விருந்தளிக்க, வேர்சயிலிஸ் கண்ணாடி மாளிகையில் மொல்லீரின் நாடகங்கள்  மேடையேற்றப்பட்ட பெருமை யுடையவை. உலகப் பிரசித்தி பெற்றவை.

ஆங்கில, அமெரிக்க எழுத்தாளர்களின் நூல்களே நூலகத்தில் ஏராளமாகவிருந்தன. உதாரணமாக வரலாற்றை எடுத்துக் கொண்டால் கிரெய்கரின் (Wilhelm Greiger -1912) மகாவம்ச மொழி பெயர்ப்புத் தொடக்கம், பிரித்தானிய ரியூடர், ஸ்ருவேட், ஹனோவர் அரச பரம்பரை வரலாறு வரையான நூல்கள் இருந்தன. இன்னொரு ஆங்கில நூல் அங்கிருந்தது. தமிழரால் எழுதப்பட்டது. அது அரசினால் தடை செய்யப்பட்டது என்று யாரோ கூறியதாக ஞாபகம். நூலாசிரியர் பெயர் ஞாபகத்துக்கு வர மறுக்கிறது. இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை வலுவான ஆதாரங்காட்டி எழுதிய வரலாற்று நூல். இப்படிப் பல கிடைத்தற்கரிய நூல்கள். வேறும், விஞ்ஞான கலைக்களஞ்சியம், ஆங்கில கலைக்களஞ்சியம், தமிழ் கலைக்களஞ்சியம் - அவை நிரை நிரையாக அடுக்கியிருந்தன. தூசி தட்டித்தான் எடுக்கவேண்டும். எல்லாம் கொஞ்சம் பழைய காலத்தவைதான். எனது காலத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கு உதவக்கூடிய சில தமிழ், ஆங்கில நூல்கள் சேர்க்கப்பட்டன. சில நவீன இலக்கிய நூல்கள் சேர்க்கப்பட்டன. ஒரு தொகுதி விஞ்ஞானக் கலைக்களஞ்சியம் சேர்க்கப்பட்டது. இவை யுத்த அனர்த்தத்தால் அழிந்து போனமை மிக்க வேதனைக்குரியது.

நூல் நிலையத்துக்குப் பொறுப்பான திருமதி பத்மநாதனுக்கு உதவியாக, வீமன்காமம் செல்வி விஜயலக்சுமி சுப்பிரமணியம் வசதிக் கட்டணத்தில் கடமை புரிந்தார். அவர் ஒரு நல்ல சிறுகதை இரசிகை. ‘உயர உயரும் அன்ரனாக்கள்’ என்ற எனது சிறுகதையை  ‘அமிர்த கங்கை’  சஞ்சிகையில் வாசித்துவிட்டு “சேர், பாலசந்தர் மாதிரி எழுதுகிறீர்கள்” என்று விமர்சனம் சொன்னவர். அவர் எனது மாணவி. என்னை அதிபராகப் பார்ப்பதில்லை. ஆசிரியராகவே கௌரவித்தவர். அவருக்கு இறைவன் நல்லருள் புரிய வேண்டுகிறேன்.

வகுப்பு வேலைகளுக்கு அப்பால் - மிக்க பெரிய மனதுடன் அத்தனை பெரிய நூல்நிலையச் சுமையையும், ஏனைய பணிகளையும் சுமந்த திருமதி மகாதேவி பத்மநாதன் அம்மையாருக்கு எனது நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் உரித்தாக.

   கிறீஸ்தவ சமயம், Guides சாரணீயம் - பொறுப்பாளர்

கிறீஸ்தவம், பெண்கள் சாரணீயம் என்பனவற்றிற்குத் திருமதி தேவி செல்வரத்தினம் பொறுப்பாக இருந்தார். சித்திரம் கற்பித்த இவர் தான் பெண்களுள் மாணிக்கம் என்று மற்றவர்களை எண்ணவைக்கக்கூடிய குணநலம் கொண்டவர். அவருடைய வார்த்தைகள் மென்மையானவை. மிகப் பொறுப்பாகக் கருமமாற்றுவார்.   கறோல் கொண்டாட்டம், கிறிஸ்மஸ் பண்டிகை என்பனவற்றைத் திறம்பட ஒழுங்கு செய்து நடாத்தியவர். அப்பண்டிகைகளுக்குச் சைவசமய மாணவர்களையும், அதிபரையும் அழைத்து வெகு விமரிசையாக நடாத்தியவர். 'Guides' பொறுப்பாளியாக இருந்து திறம்பட இயங்கியவர். ‘தேவி ரீச்சர்’ என்று சகலராலும் அன்போடு அழைக்கப்பட்ட அமைதியின் வடிவமாகிய திருமதி செல்வரத்தினம் இறைபதம் அடைந்து விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


“எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபமே.”

                                     

இன்னும் வரும்...      

1 comment:

  1. அருமையான பகிர்வு
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete