Friday 9 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன்கல்லூரி பதிவுகள் நினைவுகள்

16.   பிரதமர் கொண்டுவந்த அரங்கம்


பனையடைப்பில் திறந்தவெளியரங்கு அமைந்தமைக்குச் சுவாரஸ்யமான  ஒரு கதையுண்டு. பிரதமர் கௌரவ ஆர்.பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகைதர விருந்தார். அச்சமயம் அவர் தெல்லிப்பழையிலும் சொற்பொழிவாற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டன. அது யூ.என்.பி. அரசியல் பிரசாரச் சுற்று வருகையாகவே இருந்தது. தெல்லிப்பழையில் யூனியன் கல்லூரி தெரிவு செய்யப்பட்டது. சுதந்திரப் போராளிகளின் ஆரம்ப கட்டம். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுக் காங்கேசன்துறைக் காவல்நிலைய அத்தியட்சகர் எனது அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

 “ஒரு விசேட மேடை அமைக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தினுள் மேற்குப் பக்கமாக அமைக்கவும். பாதுகாப்புக் காரணம் முக்கியம். பனையடைப்பை அகற்றிவிடவும்” என்று கூறினார்.

அப்பொழுது திறந்த வெளி அரங்க நிலப்பகுதியும், அதன் பிற்பகுதியும் பனங்கூடலாக இருந்தது.

அடுத்ததினம் அரச அதிகாரிகள், காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலைப் பொது முகாமையாளர் திரு. ஜயமான, கல்விப் பணிப்பாளர் திரு.சிவநாதன், காவல்துறை அத்தியட்சகர், நான் இன்னும் சிலர் சேர்ந்த ஓர் ஆலோசனைக் கூட்டம் விளையாட்டு மைதான மேற்குப் பகுதியில் ஒரு மாலை வேளை நடந்தது. ஏழோ எட்டோ தினங்கள் மட்டும் இருந்தன. தற்காலிக –ஆனால் பலமான மேடை அமைக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அந்தப் பொறுப்பு திரு.ஜயமானே அவர்களிடம் விடப்பட்டது. அவர் இரவுபகலாக வேலை செய்து முடிப்பதாகச் சொன்னார். அப்பொழுது நான் அதனை நிரந்தரமானதாக அமைத்துத் தரும்படி வேண்டினேன். அவர் சம்மதித்தார். அன்றிரவே காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலையிலிருந்து வாகனங்கள் வந்தன. கட்டுவனைச் சேர்ந்த சீமெந்துக் கூட்டுத்தாபனப் பொறியியலாளர் திரு.துரைரத்தினசிங்கம், தெல்லிப்பழையைச் சேர்ந்த பொறியியலாளர் திரு.தேவரத்தினம் ஆகிய இருவர் தலைமையிலும் வேலைகள் ஆரம்பித்தன. 

முன்னிரவு வந்த வாகனங்கள், பனைகளையும் வேம்பையும் வேரோடு சாய்த்தன. வீழ்த்தப்பட்டவற்றை வாகனங்கள் ஏற்றிச் சென்றன. பனையடைப்பு அகற்றப்பட்டபொழுது பெரிய ஒரு வெளிதெரிந்தது. நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது. பொறியியலாளர்களும் நானும் கலந்து பேசி - காவல்துறை அத்தியட்சகர் காட்டிய இடத்தை விடுத்து - கட்டட நிலையத்தை வெகுவாக உள்ளே நகர்த்தினோம். எனக்கு உள்ளூரப் பயமாகவிருந்தது. பனையடைப்பை அகற்றிய பின்னர் நிலையத்தை உள்ளே நகர்த்தியது தெரியவில்லை. மேடையைப் பலமுடையதாகத் – திறந்த வெளியரங்காக - அமைக்க வேண்டும் என்ற ஆவல் பொங்கியது. பொறியியலாளர்களிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர்கள் மகிழ்ச்சியுடன் எனது வேண்டுகோளை ஏற்றனர். இரவும் பகலும் ஓய்வின்றி வேலை நடந்தது. ஒரே இயந்திர இரைச்சல். சீமெந்து மூட்டைகள் வண்டிகளில் வந்தன. அத்திவாரம் ஆழவெட்டி முழுவதும் கொன்கிறீற் கொட்டியே அமைக்கப்பட்டது. குண்டு போட்டாலும் துளைத்துச் செல்ல முடியாத வைரம். வேலை இரவு பகலாக நடந்து முடிந்து, அரங்கம் கம்பீரமாக எழுந்து நின்றது. அதனை எனது வேண்டுகோளுக்கு அமைய அமைத்து உதவிய முகாமையாளர் திரு.ஜயமானே, பொறியியலாளர்கள் திரு.துரைரத்தினசிங்கம், திரு.தேவரத்தினம் மூவருக்கும்  இவ்வேளை எனது இனிய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

பிரதமர் தெல்லிப்பழைச் சந்தியில் இறங்கி, திறந்தவெளி அரங்குவரை நடந்து வருவதாக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக யாழ்-காங்கேசன்துறை வீதி நவீனமாக்கப்பட்டது. அதேவேளை யூனியன் கல்லூரி வளாகத்துள் அமைந்த வீதியும் நவீனப்படுத்தப்பட்டது. அதனைப் பொதுவேலைப் பகுதியினர் அதிரடியாகச் செய்து முடித்தனர்.

மின்சார வேலைப் பகுதியினர் கல்லூரி வளவினுள் விளையாட்டு மைதானத்தைச் சுற்றியும், மற்றும் இடங்களிலும் மின்சாரக் கம்பங்களை நட்டு மின் இணைப்புக் கொடுத்தனர். இரவுவேளை கல்லூரி பகலாக் காட்சியளித்தது. விளையாட்டு மைதானத்தைச் சுற்றிய கம்பங்களைக் கழற்றிக்கொண்டு போய்விட்டனர்.

அரங்க வேலை முடிந்த மாலை நேரம். அலுவலகத்தில் தனித்து இருந்தேன். ஒருவர் வந்து தன்னை அறிமுகம் செய்தார். அவர் ஒரு முஸ்லிம். பெயர் மறந்து போய்விட்டது. பிரதமரின் அலுவலகத்தைச் சேர்ந்தவரென்று அறிமுகஞ் செய்தார். தெல்லிப்பழை நெடுஞ்சாலையையும், வளாகத்துள் அமைந்த வீதியையும் சோடனை செய்யும்படி கூறினார். வெளிவீதியில் சோடனை செய்வதில் எனக்கு இருக்கும் தயக்கத்தைக் கூறினேன். வளாக வீதியை அலங்கரிக்கும் பொறுப்பை ஏற்றேன். அப்படியே செய்தேன்.

ஒரு நாட்டின் பிரதமர் வரும் பொழுது கல்லூரியின் தலைவர் கட்டாயம் சமூகமளிக்க வேண்டும். ஆனால் உதவி ஆசிரியர்களிடம் “விரும்பியவர்கள் வரலாம்” என்று கூறியிருந்தேன். யாரும் தலைகாட்ட வில்லை. அப்படியான சூழ்நிலை. அதே போலவே வடமாநிலக் கல்விப் பணிப்பாளரும் அச்சமயம் தரிசனம் கொடுக்கக் கடமைப்பட்டவர். அவரும் தனித்தே அன்று மாலையில் வந்திருந்தார்.


நாமிருவரும் பிரதமருக்கு மாலையிட வேண்டும் என்பது அந்த முஸ்லிம் பிரமுகரின் வேண்டுகோள். இல்லைக் கட்டளை. குறித்த நேரம் நாம் அலுவலக வாசலில் மாலைகளுடன் நின்றோம். அவர்கள் தந்த மாலைகள்தான். பிரதமர் வளாக வீதியில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். சுற்றிவரப் பலர் விரைந்து கொண்டிருந்தனர். எங்கள் அருகே வந்ததும் யாரோ எமது இருவரையும் தள்ளி வழிவிட்டார்கள். நாம் நிலை குலைந்தோம். பிரதமர் படுவேகமாக எம்மைக் கடந்து சென்றார். நான் அவரின் உதவி அதிகாரி எவராவது கழுத்தில் மாலையைப் போட விரும்பி, பிரதமரின் பின்னே வந்த ஒருவரின் கழுத்தில் போட்டேன். எனக்குப் பின்னர்தான் விளங்கியது, பிரதமரைச் சூழ ஓடிவந்தவர்கள் சிவில் உடையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்றும், நான் பூ மாலை போட்டது ஒரு ‘கொஸ்தாப்புக்கு’ என்பதும்.

இன்னும் வரும்...

No comments:

Post a Comment