Wednesday, 1 March 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் மூன்று - ’ஒகாரா’

நந்தன் திருமணமானவனா?

நந்தன் அவுஸ்திரேலியாவிற்குப் புறப்படத் தயாரானபோது அவனுக்கொரு கலியாணத்தைச் செய்து வைத்தார்கள். உறவுக்குள் அமைந்த சம்பந்தம். கட்டாயத்தின் நிமிர்த்தம் செய்ய வேண்டியிருந்தது. பெண்ணுக்கு நல்ல நீட்டுத் தலைமயிர், வெள்ளை நிறம், பல்கலைக்கழகத்தில் படித்தவள் என்று சொல்லிச் செய்து வைத்தார்கள். அவர்கள் குடும்பம் நீண்ட நாட்களாக வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தது. தகப்பனாரின் தொழில் நிமிர்த்தம் அவர்கள் அடிக்கடி நாடு விட்டு நாடு மாறினார்கள். குடும்பத்தில் ஒரே பெண்பிள்ளை என்ற செல்லம், வெளிநாட்டில் வேலை பார்த்ததால் நுனிநாக்கு இங்கிலிஸ் எல்லாம் அவளின் தலைக்கனத்தை உயர்த்தி வைத்தன.

வெளியே தெரியாவிட்டாலும், மனதளவில் மகிழ்ச்சியில்லாமல் அவர்கள் குடும்பவண்டில் ஓடியது. பட்டதாரி என்ற அகம்பாவமும் வேலை செய்கின்றேன் என்ற திமிரும் அவளிடம் தலை தூக்கியது. அடிக்கடி அவளின் வாய் நீண்டுகொண்டே வந்தது.

இந்த இடத்தில் ஒகாராவைப் பற்றி சிறிது சொல்ல வேண்டும்.

சப்பை மூக்கு. மொட்டந்தலை. குள்ள உருவம். ஒகாரா ஒரு வியட்நாமியன். ஒகாரா என்பது அவனது இயற்பெயரே அல்ல. வான் மான் நூஜ்ஜினிற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்று அவனுக்கே ஞாபகமில்லை.

இங்கு வேலை செய்யும் பலரின் நிக்நேம்ஸ் உங்களுக்கு வியப்பூட்டும். Flower girl, bomb boy , 'Say Yes or No', 'Jackpot  Now', ஹிப்போபொரமஸ்... இப்படிப் பல பெயர்கள்.

இரண்டு வியட்நாமியர்கள்---ஒருவன் கொன் அடுத்தவன் ‘ரொம்---இவர்கள் இருவரும் சேர்ந்தே திரிவார்கள். அனேகமாக சேர்ந்தே வேலை செய்வார்கள். இவர்கள் இருவரையும் சேர்த்து ‘கொன்டோம் என்று கூப்பிடுவார்கள்.

யாராவது ஒகாராவின் வயதை திடீரென்று கேட்டால் உடனே சொல்லமாட்டான். அவனுக்கு இரண்டு வயதுகள். வியட்நாமிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு அகதியாக வந்தபோது- யாரோ கூறிய அறிவுரையின்படி அவன் தனது வயதைக் குறைத்து வைத்திருக்கின்றான்.

போகிற வருகின்ற எல்லாப் பெண்களிடமும் பேச்சுக் கொடுப்பான். ஆங்கிலம் பேசுவதற்கு அவன் என்றுமே தயங்கியதில்லை, வெட்கப்பட்டதில்லை. ஆனால் ஆங்கிலம்தான் அவன் உதட்டைவிட்டு வெளியே வரமாட்டேன் என்கின்றது. Money  'மொனி' ஆகும். Brother  'பிறடர்' ஆகும். water  'ஓட்டர்' ஆகும். இன்னுமொரு சொல்லக்கூடாத வார்த்தை 'பக் பக்' ஆகும்.
ஒகாரா தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்தே வேலை செய்து வருகின்றான். நந்தன்  வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் அவனுடன் வேலை செய்து வருகின்றான்.

ஆரம்பத்தில் சேர்ந்தவர்களில் ஆங்கிலம் ஒரு வார்த்தை தன்னும் சரியாக உச்சரிக்க முடியாதவர்கள் வேலை செய்வதைக் காணலாம். ஏன் வலம் இடம் தெரியாதவர்கள்கூட இருக்கின்றார்கள். இவர்கள் வேலையைப் பழகிக் கொண்டுவிட்டார்கள். அதனால் காலத்தைக் கடத்துகின்றார்கள்.

நிறுத்தப்பட்டிருக்கும் அல்லது நகர்ந்து கொண்டிருக்கும் காரின் அருகே நின்று, தனது கையைத் தூக்கிப் பார்த்து இடம் வலம் அறிந்து கொள்வான் ஒகாரா.

இங்குள்ள அடிமட்டத் தொழிலாளர்களில் பல்கலைக்கழகம் சென்றவர்கள் முதல், பல்கலைக்கழகம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் வரை வேலை செய்கின்றார்கள்.

ஒகாராவின் வேடிக்கை மிகுந்த செயல்கள் வேலையிடத்தைக் கலகலப்பாக்கும். அவன் அடிக்கடி தனது கண்ணாடி மணிக்கூடு மொபைல் போன் என்பவற்றை மாற்றிக் கொள்வான். ஒருதடவை தனது மொபைல்போனில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் புகைப்படத்தைக் காண்பித்தான். 15 வயதில் ஒரு மகனும் 21 வயதில் ஒரு மகளும் அழகாக இருந்தார்கள். அழகான அவனது மனைவி தன் இரு பிள்ளைகளையும் அணைத்திருந்தாள்.

சிலகாலம் கழித்து, ஒகாராவின் சாயலில் சற்றுப் பருமனான 30 வயது மதிக்கத்தக்க ஒருவனைக் காட்டி தனது மகன் என்றான்.

“உனக்கு எத்தனை பிள்ளைகள்? மீண்டும் நந்தன் அவனிடம் கேட்டான்.

இரண்டு பிள்ளைகள்.

நந்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நண்பர்களை விசாரித்தபோது விஷயம் தெரிய வந்தது. ஒகாராவிற்கு வியட்நாமில் ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். போரின் உச்சக்கட்டத்தில் அவன் வியட்நாமில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றான். அங்கு சில மாதங்கள் இருந்துவிட்டு பின்னர் அகதியாக கப்பலில் வந்து சேர்ந்தான். அதன் பின்னர் அவர்களை மறந்துவிட்டான். அவுஸ்திரேலியாவில் ஒரு மான்குட்டியுடன் அவன் சுற்றித் திரிந்தான். எல்லாம் முடிந்த பின்னர் திரும்பவும் வியட்நாம் போனபோது மனைவியை விவாகரத்து செய்து கொண்டான்.

மான்குட்டி துள்ளிப் போய்விட, இன்னொரு பெண்ணைப் பிடித்துக் கொண்டான். அவள்தான் இன்றைய மனைவி.

பிறிதொருநாள் அவனது மனைவியுடன் இன்னொரு பெண் நிற்கும் படத்தை மொபைல்போனில் காட்டினான்.

“இந்த இரண்டு பெண்களில் யார் அழகு?

“சந்தேகமில்லை... உன் மனைவிதான். மற்றவள் வயது முதிர்ந்தவளாக இருக்கின்றாள் என்றான் நந்தன்.

“மற்றவள்தான் எனது எக்ஸ் வைஃப். இப்பொழுது நாங்கள் ஃபிரண்ட்ஸ் என்றான் அவன்.

அந்தப் பெண்ணிற்கும் ஒரு கதை இருந்தது. அவள் வியட்நாமிலிருந்து எதையோ கடத்தி வந்தபோது பிடிபட்டு சிட்னி ஜெயிலில் சிலகாலம் இருந்திருக்கின்றாள்.

ஒகாரா வருடத்திற்கு. குறைந்தது இரண்டு தடவைகளாவது வியட்நாம் போய் வருவான். அவனுக்கு அங்கும் இங்கும் நிறையவே பெண்கள் சகவாசம் இருந்தது. இங்கு இருக்கும் காலங்களில் அடிக்கடி சென்ற் கில்டா (St Kilda) என்ற இடத்திற்குப் போய் வருவான். அது ‘இதுக்குப் பேர் போன இடம்.

“இஞ்சை குடுக்கிற 110 டொலரிலை, அங்கை ஆறு பெண்களை எடுக்கலாம் என்பான். அவன் ஓவர் ரைம் வேலை செய்வதற்கு என்றுமே தயங்கியதில்லை. ஓவர் ரைம் செய்யாவிடில் அன்று வேலை செய்தது மாதிரியே இருக்காது என்பான். சனி ஞாயிறுகளில்கூட தொழிற்சாலையில் கிளீனிங் வேலை செய்வான்.

அப்படி கூடுதலாக வேலை செய்யும் நேரத்தை, அவன் குறித்து வைக்கும் விதமானது உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். ஒரு பேப்பரில் 18, 25, 30, 35 என்று குறித்து வைத்துக் கொள்வான். ஒரு மணி நேரம் ஓவர் ரைம் செய்தால் 35 இற்கு நேரே 2 என்று போட்டுக் கொள்வான் அல்லது 30 இற்கு நேரே 1 என்று போட்டுக் கொள்வான். இரண்டு மணி நேரம் ஓவர் ரைம் செய்தால் 18 இற்கு நேரே 1 என்று போட்டுக் கொள்வான். அந்த வருடம் எப்படிப்பட்ட பெண்களை விரும்புகின்றானோ அதற்குத் தகுந்தமாதிரி குறித்துக் கொள்வான். இப்போது 18, 25, 30, 35 என்பது எல்லாம் பெண்களின் வயதைக் குறிக்கின்றது என்று சொன்னால் உங்கள் மெய் சிலிர்க்குமா இல்லையா? சனிக்கிழமை கிளீனிங் வேலை செய்வான். குறைந்தது ஐந்து மணி நேரம் வேலை. ஒன்றரை மடங்கு சம்பளம் கிடைக்கும். வெள்ளி இரவு வரும்போது அவனுக்குக் குஷி பிறந்துவிடும். 18 க்கு நேரே ஐந்து தடவைகள் புள்ளடி இடுவான்.

இப்போதெல்லாம் அவன் 35 இற்கு நேரேதான் அதிகமாக குறியிட்டுக் கொள்கின்றான். அதற்குக் காரணம் வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. ‘வயது போய்விட்டது. உடம்பில் வலு இல்லை என்பான். வயது போய்விட்டது என்று அவன் சொல்வது தற்போதைய வயதைத்தான். உண்மையான வயது அதையும் விடப் போய்விட்டது.


தொடரும்...

No comments:

Post a Comment