Tuesday, 14 March 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 5 -  வேலை

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ‘ரீம் லீடர் பதவிக்கு நேர்முகப்பரீட்சை நடந்திருந்தது. அதில் நந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தான். ஆலின் வந்த நேரம் நந்தனுக்குப் பதவி உயர்வு என ஒகாரா நக்கல் அடித்தான். ‘ரொப் கோற்றிலேயே நந்தன் ரீம் லீடராக இருந்தான்.

நந்தனுடன் படித்தவர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் சென்று, படித்த படிப்பிற்கான வேலையைத் தேடிவிட்டு, பின்னர் அங்கிருந்து கொண்டு நகரங்களை நோக்கி வரத் தொடங்கினார்கள். இவனோ நகரத்திலே இருந்துகொண்டு ஒரு கடைநிலை வேலையில் சேர்ந்துவிட்டு பின்னர் படிப்படியாக வேலையில் முன்னேறினான். குடும்பநிலை, உடல் ஆரோக்கியம், பொருளாதாரத்தைப் பொறுத்தே ஒவ்வொருவருடைய நிலையும் அமைகிறது. வாழ்க்கை சமரசங்களுக்கு உட்பட்டது என்பது நந்தனின் வாதம். வாழ்வதற்காகப் படிப்பா? படிப்பதற்காக வாழ்வா?

ஒன்றோ அல்லது தொடர்ச்சியான நேர்முகப்பரீட்சைகளினாலோ திறமையானவர்களை விவேகமானவர்களை அடையாளம் காணமுடியுமா? வாய் உள்ளவர்கள் வங்காளம் போய் வரலாம் என்பதை எல்லாரும் தெரிந்தே வைத்துள்ளார்கள். அதனால்தான் பூமிப்பந்தில் எந்தப்பகுதியிலும் வாய் உள்ளவர்களை முதன்மைப்படுத்துகின்றார்கள். வாயில்லாப்பூச்சிகள் மெதுவாகத்தான் முன்னேறமுடியும். அதற்கு நந்தன் ஒரு உதாரணம். தொழிற்சாலையில் ஒரு ஆரம்ப மட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தவன், இன்று ஒரு குழுவிற்கு (Team Leader) தலைவன் ஆகிவிட்டான். அவன் ஏஜென்சிக்கூடாக வேலைக்கு விண்ணப்பித்திருந்த போது எந்தவொரு பல்கலைக்கழகச் சான்றிதழ்களையும் இணைத்திருக்கவில்லை. இணைத்திருந்தால் அவனுக்கு அந்த வேலையும் கிடைத்திருக்காது.

ஆலின் வேலைக்குச் சேர்ந்து பத்தாவது நாள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. வேலை செய்பவர்களின் பாவனைக்கான அறையில் உள்ள ரெலிவிஷனின் முன்னால் அடிக்கடி இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்து விழும் காட்சியை பலரும் அதிர்ச்சியுற்று பார்த்தபடி நின்றார்கள்.

அன்று ஒருவராலும் அக்கறையுடன் வேலை செய்ய முடியவில்லை. அங்கும் இங்கும் ஓடியபடி திரிந்தார்கள். குசுகுசுத்துக் கதைத்தார்கள்.

உடல் பெருத்த பெண் ஒருத்தி அடிக்கடி ஸ்ரோரில் இருந்து உதிரிப்பாகங்கள் கொண்டு வருவாள். தொங்கான் நாட்டவளான அவளின் நடைகூட தொங்கல்தான். ஆடாமல் அசையாமல் இருந்து ஃபோர்க் லிப்ற் (forklift) ஓடுவாள். பல வருட காலம் இங்கு அவள் வேலை செய்வதால் எல்லோருக்கும் அவளைத் தெரியும். சிலவேளைகளில் முகத்திலும் உதட்டிலும் காயங்களுடன் வருவாள். அவளின் கணவன் ஒரு ரான்ஸ்போற் கொம்பனியில் வேலை செய்வதாகச் சொல்லுவாள்.

அவளின் பெயர்கூட என்னவென்று ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பூமியிலிருந்து வானம் வரை அகலித்து விகாரமடைந்திருக்கும் அவளுக்கு ஹிப்போபொரமஸ் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.

அவள் ஃபோர்க் லிப்றை வெளியே நிறுத்திவிட்டு, உள்ளே வந்து ரெலிவிஷனைப் பார்த்துவிட்டு பெரிதாகச் சத்தமிட்டபடி போனாள். அப்போது வாசலுக்கு வெளியே விரைந்து சென்ற ஆச்சிமாவைக் கண்டாள். தன் கைவிரல்களை வாயிற்குள் நுழைத்து பெரும் சத்தமாக விசிலடித்தாள். விசிலடிச் சத்தம் தொழிற்சாலை எங்கும் கதறியது.

ஆச்சிமா... என்ன நேற்று எங்கேயோ பார்த்தமாதிரி உள்ளதே?

“ஹிப்போ.... சுத்தி வளைக்காதையும். அது நானும் அல்பேற்றோவும்தான். ஐரோப்பாவும் ஆசியாவும் சந்திக்கும்போது இதமாக இருக்கும். குளிரும் சூடும் இணையும் போது இதமானவை.

எப்பொழுதாவது விரும்பும் நாட்களில் வேலை முடித்து வீடு திரும்பும்போது அல்பேற்றோவும் ஆச்சிமாவும் தமது கார்களை ஏதாவது சந்துபொந்திற்குள் திருப்பி விடுவார்கள். ஏதோ அவர்களின் கெட்டகாலம் ஹிப்போ அவர்கள் இருவரையும் கண்டுவிட்டாள்.

ரெலிவிஷன் பார்த்துக் கொண்டு நின்றவர்களில் ஆலினும் நின்றாள். பச்சைநிற ஓவரோலிற்குள் பச்சைக்குழந்தையாகி அந்தக்காட்சியை வியந்தபடி பார்த்து நின்றாள் ஆலின். தன் தொப்பியை நெகிழ்த்தி பின்னலை அதற்குள் செருகும்போது, நடுவகிடு வெண்ணிறக் கோடாகி ஒழிந்து ஓடியது. காதுகள் இரண்டும் கண்ணாடியால் வார்க்கப்பட்ட ‘கிறிஷ்ரல் பளிங்குகள் போலிருந்தன. சிறிதே இமைத்த இமைகள். இந்தச் சின்னஞ் சிறிய விழிகளினால் எப்படி உலகத்தைப் பார்க்கின்றாள்? அவள் உதட்டிற்கு மேல் சிறு மச்சம் இருந்தது. அவள் ராசிக்காரி. உறுப்புகள் எல்லாம் தனித்தனியாக செய்யப்பட்டு பொருத்தப்பட்ட படைப்பின் இரகசியம் என அவள். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அவளைப் பார்த்தான் நந்தன். அவள் அங்கு நின்றதால் அறை பளிச்சென்று இருந்தது போல நந்தனுக்குத் தோன்றியது.  அவளின் பின்னால் அவளை ரசித்தபடி நின்றான் நந்தன். அவன் தன்னை வியந்து பார்த்துக் கொண்டு நின்றதை ஆலின் திரும்பும்போது கண்டுகொண்டாள்.

“குஸ்து கிஸ்தா (Gusto kita - I like you) என்று அவளது காதிற்குள் குனிந்து சொன்னான் நந்தன். அவள் வெட்கத்தில் கலகலவெனச் சிரித்தபோது ‘கிறிஷ்ரல்கள் இரண்டும் சிவந்து போயின.

“நீங்கள் பிலிப்பைன்ஸ் தேசமா? அவளைப்பற்றி எல்லாம் தெரிந்திருந்த நிலையில், சும்மா சம்பிரதாயத்திற்காகக் கேட்டான் நந்தன். அவளும், “ஆமாம், நீங்கள்? என்றாள்.

“நான் சிறீலங்காவில் பிறந்தவன்.

உன்னைப் பார்த்தால் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண் போல இல்லையே!

“உண்மைதான். எனது மூதாதையர் ஸ்பெயின் கலப்பு. உனக்குத் தெரியுமா எமது நாட்டை ஒருகாலத்தில் அமெரிக்காவும் ஸ்பெயினும் ஆக்கிரமித்திருந்தன. பின்னர் இரண்டு நாட்டினருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு ஸ்பெயின் முதலில் போய்விட்டது. 1946 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைக்கும்வரை அமெரிக்கா நின்றது. நாங்கள் பேசும் ஆங்கிலம் அமெரிக்காவினுடையது. You are bonito என்றாள் ஆலின்.

“அப்பிடியெண்டா?

அதற்கும் அவள் சிரித்தாள்.

“நீங்கள் அழகானவர்  என்று Spanish மொழியில் பொருள்தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனாள் அவள்.

Senorina என்றால் single lady. Senora என்றால் married  lady.

“எனக்கும் தெரியும். 'மகாய் கித்தாய்' ( Mahal  kita) என்றால் ஐ லவ் யு என்றான் நந்தன்.

இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அன்றைய நாளில் வேலை முடிவதற்குள் அந்தக் காட்சியை எத்தனை தடவைகள் அவர்கள் இருவரும் பார்த்திருப்பார்கள் என ஒருவரும் கணக்கு வைக்கவில்லை.

அன்றைய இரவு நந்தனுக்குத் தூக்கம் வரவில்லை. அன்று நடந்த பரவசமான அனுபவங்களினால் உறக்கம் கலைந்து சிரித்தான்.
தொடரும் ...

1 comment: