Tuesday 21 March 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 6 -  விவாகரத்து

நந்தனின் மகள் அப்பொழுது ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியாத கணக்குகளை நந்தன் சிலவேளைகளில் வேலை செய்யுமிடத்தில் வைத்து செய்து பார்ப்பதுண்டு. வேலை செய்யுமிடத்தில் இவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை என்பதால் இரகசியமாகத்தான் செய்வான். சாப்பாட்டு நேரத்தின்போது அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தக் கணக்குகளுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன்.

இங்கே மாணவர்கள் தமது 6ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் கல்வியில் விழிப்பாக இருக்க வேண்டும். ஆரம்ப பாடசாலையில் இருந்து இடைநிலைப் பாடசாலைக்கோ, அல்லது இடைநிலையிலிருந்து உயர்தரத்திற்கோ போகும்போது நல்ல பாடசாலைக்குப் போக வேண்டுமாயின் போட்டிப்பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். போட்டிப் பரீட்சைகள் மிகவும் கடுமையானவை.

சிலவேளைகளில் - நந்தன் என்ன செய்கின்றான் என்று அவன் பின்னால் வந்து நின்று பார்த்துவிட்டுப் போவாள் ஆலின். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் 'குச்சி' (Gucci scent) சென்ரின் வாசமும் நந்தனை வந்து பார்த்துவிட்டுப் போகும். ஒருநாள் 'குச்சி' வாசத்துடன் "Are you a single?" என்றொரு கேள்வி ஆலின் இடமிருந்து வியப்பாக வந்தது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவளது கேள்வியின் அர்த்தம் அம்மாதான் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதா? அல்லது நந்தனை எடை போடும் எண்ணமா? நந்தன் சிரித்துவிட்டு "நான் விவாகம் செய்தவன். எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு ஆண். ஒரு பெண். மகன் பத்தாம் வகுப்புப் படிக்கின்றான். மகள் ஆறாம் வகுப்பு" என்றான்.  "அப்படியென்றால் இப்பொழுது மனைவியை டிவோர்ஸ் செய்துவிட்டாயா?" திடீரென்று அடுத்த கேள்வியைக் கேட்டாள். நந்தனின் 'இல்லை' என்ற பதில் அவளிற்குக் கவலையைக் கொடுத்தது.

"எப்போது உனது திருமணம்?" என்று நந்தன் கேட்டதற்கு விழுந்து விழுந்து சிரித்தாள். சிரிப்புத்தான் அதற்குப் பதில் என்று சொல்லிவிட்டாள்.

வேலைக்கு வந்த சிலநாட்களிலேயே எல்லாரிடமும் பழகத் தொடங்கிவிட்டாள் ஆலின். எப்பொழுதும் தன்னருகே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு கலகலப்பாக்கிக் கொண்டு திரிந்தாள். பதட்டப்படாமல், நன்கு தேர்ந்த ஒரு வேலையாள் போல வேலை செய்வாள். நந்தன் ஆலினை அன்புடன் நேசித்தான். நண்பர்களானார்கள். அவனது வயதின் பாதி வயதுக்கு சற்றே கூட இருந்தாள் அவள். நேர்மையாக உழைத்துவந்த அவளின் அடிமனதில் ஏதோ ஒரு சோகம் இருந்ததை நந்தன் உணர்ந்தான்.

ஒருமுறை மக்களின் பார்வைக்காக (open day ceremony) தொழிற்சாலை திறந்து விடப்பட்டிருந்தது. பெரும் திரளான சனக்கூட்டம்.  அந்த வெள்ளிக்கிழமையன்று ஆலின் தன் குடும்ப உறவினர்களுடன் வந்திருந்தாள். short skirt , see through top இல் அழகாக இருந்தாள் ஆலின். கூடவே கொழு கொழுவென்றிருந்த ஆறு வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை ஒருத்தியைக் கையில் பிடித்திருந்தாள். அழகான அந்தப் பெண்குழந்தை ஆலினின் அச்சில் இருந்தாள்.

"யார் இவள்? உனது தங்கையா?"

உடம்பை இரண்டாக மடித்து கெக்கட்டம் போட்டுச் சிரித்தாள் ஆலின். பின் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு "என் குழந்தை... மாயா" என்றாள். முதன் முதலாக ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதை அன்றுதான் நந்தன் கண்டான். மாயா அவளின் காலை இறுகக் கட்டியபடி நின்றாள்.

"எங்கே உனது கணவன்?" நந்தனின் கேள்விக்கு, வாயில் விரலை வைத்து 'உஷ்' என்று சைகை செய்தாள். ஆலினுடன் அவளது அப்பா, அம்மா, தங்கை, தங்கையின் கணவன், அவர்களின் பிள்ளைகள் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தனர்.

ஆரம்பத்தில் ஆலினுக்கு நந்தன்மீது மரியாதை இருந்தது. பின்னர் ஏன் அவனைத் தன் கணவனாக மாற்ற முடியாது என்று அவள் சிந்தித்தாள். திருமணமாகி ஒரு பெண்ணிற்கும் தாயான பின்னர் அவளுக்கு ஒரு ஆண் துணை  தேவையாக இருந்தது. ஏன் அது நந்தனாக இருக்கக்கூடாது என அவள் ஏங்கினாள்.

அன்றிலிருந்து நந்தனின் மூளை செயலற்றுப் போயிருந்தது. அடுத்து வந்த இருநாட்களும் நந்தன் கிறுக்குப் பிடித்து அலைந்து திரிந்தான்.

ஆலினைப் பற்றி அவளின் குடும்பவாழ்க்கை பற்றி ஏதாவது தெரியுமா என வேலை செய்யுமிடத்தில் வலை விரித்தான் நந்தன்.

"நீர்தான் ஆலினைப் பற்றி அறியும் கடைசி ஆள்!" என்று சொல்லி உடன் வேலை செய்பவர்கள் சிரித்தார்கள். பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களை அறிவதில் நந்தனுக்கு நாட்டமிருந்ததில்லை. தானுண்டு தன்பாடென இருந்து விடுவான்.

'ஆலின் கணவனுடன் டிவோர்ஸ்' என்று கேள்விப்பட்டதும் எல்லாமே சப்பென்றாகிவிட்டது நந்தனுக்கு.

வாழ்க்கையில் எல்லாமும் எல்லாருக்கும் முதல் தரத்தில் சரிவந்து விடுகின்றதா என்ன? முதல் தடவையிலே சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்ள முடிகின்றதா? கார் ஓட முடிகின்றதா? வேலைதான் சரிவந்து விடுகின்றதா? முதல் தடவையிலே எல்லாரும் பல்கலைக்கழகம் போய் விடுகின்றார்களா? பல்கலைக்கழகத்தின் பக்கமே போகாதாவர்கள் நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள் அல்லவா?

வாழ்க்கை மாத்திரம் ஏன் முதல் தடவையிலேயே சரியாக அமைந்து  விடவேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்? ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் எப்படி முதல் தடவையிலே சரியாக வேண்டும்?

●●


தொடரும்...

No comments:

Post a Comment