Friday 21 February 2020

வாழ்க்கை என்பது என்ன? கனவா அல்லது நாடகமா? - சிசு நாகேந்திரன்



         உலகமே ஒரு நாடகமேடை.  அதில் நாமெல்லோரும் நடிகர்கள். பூமி என்னும் மேடையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேடம் தரித்துக்கொண்டு தங்கள் தங்கள் பாத்திரங்களைச் செவ்வனே நடித்துவிட்டுப் போகிறார்கள். இந்த நாடகத்துக்கு ஒத்திகையில்லை.  நடிகர்களின் ஒப்பனையை இயற்கையே செய்து விடுகிறது. முன்னறிவிப்பின்றித் தோன்றி, தத்தம் பாத்திரங்களைத் திறம்பட நடித்துவிட்டு நடிகர்கள் மறைந்துவிடுகிறார்கள். உலக நாடகமேடையில் எல்லோருமே நடிகர்கள்.  பார்வையாளர்களும் அவர்களே!  வேறாக பார்வையாளர்கள் என்றில்லை.

         ஒரேயொரு வித்தியாசம்.  நடிகர் எப்போது தோன்றுவார், என்ன வேடத்தில் தோன்றுவார், எப்போது அவரின் நடிப்பு முடிவுக்கு வரும் என்பது எவருக்கும் தெரியாது. எல்லாவற்றையும் இறைவன்தான் ஆட்டிப் படைக்கிறார். நாடகத்தின் மூலக்கதை, வசனம், பாத்திர அமைப்பு, தயாரிப்பு, நெறியாள்கை எல்லாமே ஆண்டவன்தான்!   மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயலாற்றுகிறார்.  நாம் அவரின் நெறியாள்கையில் எள்ளளவும் பிசகாமல் நமக்கிட்ட பாகங்களை நடிக்க வைக்கிறார். மேடையில் தோற்ற வைத்து, அச்சொட்டாக நடிக்கவைத்து, எமது பாகம் முடிந்ததும் விலக்கிவிடுவார். 

         வாழ்க்கை ஒரு சந்தைக்கூட்டம் என்று அறிஞர்கள் சொல்வார்கள்.  சந்தைக்குப் போகிறோம்.  தினமும் ஒழுங்காகச் சந்தைக்கு வருபவர்களையும் சந்திக் கிறோம்.  அவர்களுடன் உரையாடுகிறோம்.  புதுப்புது ஆட்களைக்கூட எதிர் கொள்கிறோம்.  அறிமுகம் செய்து அவர்களுடன் அளவாளாவிப் பழகுகிறோம். அந்த உரையாடல்களில் சந்தோஷமான விடயங்கள், துக்கமான விடயங்கள், பிடிக்காத விடயங்கள்கூட இடம்பெறும்.  சம்பாஷணை முரண்பட்டால் சண்டை சச்சரவுகள். கைகலப்புகள்கூட நடைபெறலாம்.  சாமான்களை வாங்கிக்கொண்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்புகிறோம் அவ்வளவுதான்.  காட்சி மாறிவிடும்.  சந்தையில் சந்தித்த வர்களையும் அங்கு இடம்பெற்ற உரையாடல்கள், உணர்ச்சிப் பேதங்கள் முதலியன பற்றி முற்றாக மறந்துவிடுகிறோம்.  வீட்டுக்கு வந்ததும் சந்தைக் கதையே வராது.

         இவ்விதமாக, வாழ்க்கையில் எமது செயற்பாடுகள் எல்லாமே கனவுகள் தாம்.  குறுங்கனவுகள், நீண்ட கனவுகள் - எமது நாளாந்த செயற்பாடுகள், அதாவது உண்ணுதல், உறங்குதல், போதல் வருதல், இரங்குதல், கோபித்தல், துக்கித்தல், ஆடுதல், பாடுதல், இன்பம் நுகர்தல், துன்பம் அனுபவித்தல், இவையெல்லாம் குறுங்கனவுகள்.  இவைகள் உடனுக்குடன் மறந்துபோவன.  நீண்ட கனவுகள் என்பன- பிறந்து, வளர்ந்து, படித்து, உழைத்து, திருமணஞ் செய்து. சொத்துச்சேர்த்து, ஆண்டு அனுபவித்து, பொருள்களை இழந்து, நோய்வாய்ப் பட்டு, கடைசியாக இறந்துபோதல் என்று கொள்ளலாம்.  நீண்ட கனவுகள்கூட காலப்போக்கில் நினைவிலிருந்து மங்கி, மறைந்து கடைசியாக மறந்தே போகும்.
         நாம் ஒவ்வொருவரும் கனவுகள் கண்டு பழக்கம்.  சிலது நல்ல கனவுகள், சிலது கெட்ட கனவுகள். கனவு கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் மனதில் பெரிய தாக்கங்கள் ஏற்பட்டுவிடுகிறன. மனதில் பயம் வரும், அல்லது ஏக்கம் வரும். அல்லது சந்தோஷமிகுதியால் குதூகலிக்கும். வாழ்க்கையில் எதிர்பார்க்காதது எல்லாம் கனவில் நடந்தேறும்.  ஆனால் கனவுமுடிந்து கண் விழித்துக்கொண்டதும் எமக்கே சிரிப்பாக, அதிசயமாக, ஏமாற்றமாக இருக்கும்.  இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டோமே என்று எம்மையே நம்பமுடியாத நிலையில் இருப்போம்.  இந்தளவுக்கு நாம் மனதைப்போட்டு உலைச்சதெல்லாம் சும்மா கனவுதானா?  நிஜமாகவே நாம் அந்தத் துக்கத்தையோ, ஏக்கத்தையோ, சந்தோஷத்தையோ அனுபவிக்கவில்லையா என்று எம்மையே நாம் கேட்டுக்கொள்வோம். கனவு நேரத்தில் நம் உடம்பிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட தாக்கங்களெல்லாம் பொய். அவை தோற்றம் மட்டுமே. விழித்ததும் நம் மனதிலோ உடலிலோ எந்தவித மாற்றமும் ஏற்பட்டிருக்காது.

         இதேமாதிரித்தான், இந்தக் கனவு மாதிரித்தான் எமது வாழ்க்கையும் என்பதை ஆறுதலாக உற்று யோசித்தால் புரியும். பிறக்கிறோம், அனுபவிக்கிறோம், இறக்கிறோம். இன்பம், துன்பம், கோபம், துக்கம் எல்லாம் வரும் போகும். ஆனால் அவையெல்லாம் உடலைப் பொறுத்தமட்டில்தான்.  உயிரானது தன்பாட்டில், அமைதி யாக, எல்லாவற்றுக்கும் சாட்சியாக, பார்த்துக்கொண்டிருக்கும்.  பின்னர், இந்த உடம்பின் காலம் முடிந்ததும் இதிலிருந்து நீங்கி இன்னொரு உடம்புக்கு மாறிவிடும்.
இந்தப் பிறப்பில் இந்த உடம்பு செய்த நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அடுத்த பிறப்பை இந்த உயிர் எடுத்துக்கொள்ளும். சகலதும் ஆண்டவனின் திட்டத்தின்படியே நடக்கும்.  நாம் செய்கிறோம் என்று நினைப்பதெல்லாம் வீண் பிரமை. நாமாக ஒன்றும் திட்டமிடுவதோ, செய்வதோ கிடையாது, எல்லாம் ஆண்டவன் விதித்தபடியே நடந்து தீரும்.
                                ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்
                                அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
                                நினையாதபோது முன்வந்து நிற்கும் எதுவும்
                                எனையாளும் ஈசன் செயல் --- (ஒளவையார்.)
     
         சற்று பொறுமையாக யோசித்துப் பார்த்தால் விளங்கும். வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் கனவுதான்.  சில காலத்துக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் எங்கள் மனதை மிகவும் பாதித்தன.  தாங்கமுடியாத உணர்ச்சி வசப் பட்டோம். ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் நினைவாய், கனவாய், பழங்கதையாய் மனதை விட்டு அகன்றுவிட்டனவல்லவா?  பழையதுகளை இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவை கனவுமாதிரி மனதுக்குத் தோற்றவில்லையா?

No comments:

Post a Comment