Wednesday, 26 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்


(பகுதி 1)

மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது
ஆதிகாலத்து மனிதனுக்கு அன்றாட தேவைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அவற்றுள் முக்கியமானவை உணவு தேடி உண்பதும், ஆண்பெண் உறவுமாகும். இவைகளோடு அவனது வாழ்நாட்கள் கழிந்தன.
அன்றாடத் தேவைகளை வெற்றிகரமாகக் கையாளுகிறோம் என்று அவன் திருப்தியடைந்திருந்தான்.
வேறு தேவைகள் ஏற்படாதவரையும் அவன் வேறெதையும்பற்றிச் சிந்திக்கவில்லை.
ஆனால், காலப்போக்கில், தனது அன்றாட தேவைகள் உணவோடும் உறவோடும் நின்றுவிடவில்லை என்பதையும், மேலும் பல தேவைகளும் ஆசைகளும் மனிதகுலத்துக்கு உண்டு என்பதையும் அனுபவரீதியாக உணரத்தொடங்கினான். அதனால், படிப்படியாக அவனுடைய  தேவைகளும் ஆசைகளும் விரிவடைந்த அவனுடைய முயற்சிகளும் பலதரப்பட்டவையாகப்  பரிணமித்தன.

உணவு தேடும் முயற்சிகளில் அவனுக்கு வேட்டைக்கருவிகள், வேளாண்மை செய்வதற்கு வேண்டிய  நிலபுலம், தண்ணீர் வசதி, விதைகள் என அன்றாட  தேவைகள் பல புதிதாக முளைத்தன. அத்துடன், தங்கியிருப்பதற்கு உறைவிடம், குளிரையும் வெயிலையும் தாங்கிக்   கொள்வதற்கு மேலுடைகள், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பண்டங்கள், பாத்திரங்கள், உபகரணங்கள் முதலியன அவனுடைய தேவைகளைப் பன்மடங்கு அதிகரிக்கச்  செய்தன.

இடையிடையே சமூகப் பிரச்சினைகளும் உருவெடுத்து பிரச்சினை கொடுத்தன.

இவ்வாறு, மேன்மேலும் ஏற்பட்ட தேவைகளும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் ஆசையும் அவனுடைய வலிமையைச் சோதிக்கத் தொடங்கின.

சில சில அலுவல்கள் மனிதனுடைய முயற்சியினால் முற்றுப்பெறாதோ என்ற சந்தேகம் அவனது மனதில் இடம்பிடிக்கத் தொடங்கிற்று.
ஆகவே, மனிதனது முயற்சிகளுக்குள் அடங்காததும்,, அவனது வலிமைக்கு அப்பாற்பட்டதுமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அனுபவ வாயிலாக அவன் உணர்ந்தான்.

தனது வல்லமையால் சாதிக்கமுடியாதவற்றை தமக்கு மேலான ஒரு சக்தி அருளக்கூடிய உதவியுடன் சாதிக்கலாம் என்னும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டான்.

மனித வலுவுக்கும் மேலான அந்த சக்தியைக் கற்பனைபண்ணி, அதற்குப் பணிந்து நடப்பதைத்தவிர வேறுவழியில்லை என்ற உண்மையை உணர்ந்துகொண்டதும், அந்த சக்திக்கு தன் சொந்தக் கற்பனைக்கேற்றவாறு உருவம்கொடுத்து அதை வழிபடத்தொடங்கினான்.
இன்றும் உலகமக்களிடையே இப்படியான முயற்சிகள் இருப்பதை நாம் காண்கிறோம்.

காலத்துக்குக் காலம் புதுப்புதுத் தெய்வங்களை உருவாக்கி மக்கள் வழிபடுகிறார்கள். 

தெய்வ நம்பிக்கை
மனிதனுக்கு தன் கருமங்களை ஆற்றுவதற்கு தன் வலிமையில் நம்பிக்கையில்லை.

அதனால் ஏதாவது தன்னைவிட உயர்ந்த ஒரு சக்தியைத் தெய்வமாக ஆராதிக்கிறான்.

அத்தெய்வம் தனது ஸ்டங்களைக் களையவேணும் என்றும், தன்னால் முடியாததை  தனக்குப் புறத்தியிலிருந்து வரக்கூடிய தெய்வம்தான் - அதாவது ஒரு சக்திதான் - முடித்துத் தரமுடியும், முடித்துத் தரவேணும் என்றும் எண்ணுகிறான். அதற்காக,  வெவ்வேறு நாடுகளிலுள்ளோர் தாங்களே தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு  தெய்வங்களைச் சிருட்டித்து அவற்றை ஆராதித்து பூஜைகள் பண்ணுகிறார்கள்.

ஓரோர் நாடுகளில் உற்பத்தியாகும் தெய்வவழிபாடு மற்றைய நாடுகளுக்கும் பரவி அங்குள்ளவர்களையும் அவ்வாழிபாட்டில் ஈடுபடச்செய்கின்றது.
உதாரணமாக, யேசுநாதர் அவதரித்தார், அவரின் புத்திமதிகளைச் சிரமேற்கொண்டு பன்னாட்டிலும் மக்கள் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவி தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறார்கள்.

புத்தபிரான் சொல்லிப்போன போதனைகளை உண்மையாகப் பின்பற்றும் புத்தசமயிகள் அதற்கேற்ப தமது வாழ்க்கைநெறிகளைச் செம்மைப்படுத்துகிறார்கள்.

இந்துமதத்தின் சைவப்பிரிவை எடுத்துக்கொண்டால், சிவபெருமானையும், அதற்கு அடுத்தபடியாக பற்பல தெய்வங்களையும் பக்தர்கள் தங்கள் இஸ்டப்படி சிருட்டித்து வழிபடுகிறார்கள்.

ஆகவே, மனிதனானவன் தனது வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கு தெய்வ வழிபாட்டை  நாடினான். 

இங்கு நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இந்தத் தெய்வங்கள் எல்லாம்  மனிதனின் நம்பிக்கையிலும் கற்பனையிலும் எழுந்த சிந்தனையிலிருந்தே உருவெடுத்தவையாகும். அது தலைமுறை தலைமுறையாகதெய்வ வழிபாடுஎன்னும் அகன்ற தலைப்பின்கீழ்  மக்களின் வாழ்க்கையை ஆட்சிசெய்து வந்திருக்கிறது.
இன்றும் அதுவே நடக்கிறது.

காலங்காலமாக மனிதர்கள் பல்வேறு தெய்வங்களை அவரவர் நம்பிக்கைக்கேற்ப உருவகப்படுத்தி வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
ஆதிகாலத்தில் அவர்கள் தம்முடைய வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்கு இன்றியமையாதிருந்த இயற்கை வளங்களைப் பாவித்தும், அத்துடன் மனுக்குலத்துக்கு மிகவும் உபயோகமாயிருந்ததும் வலிமைமிகுந்ததுமான எருது, பசு, யானை முதலிய விலங்கினங்களை ஆதரித்ததுடன், தத்தமக்குப் பரிச்சியமான சிறு தெய்வங்களை வழிபட்டு அவற்றிற்கு நன்றிக்கடன் செலுத்தியும் வந்தார்கள். அக்காலத்து ஆன்றோர்கள் மக்களை உளவளரீதியாக ஒழுங்கமைக்கும் நோக்கோடு தங்கள் கற்பனையில் உதித்தவாறு சில தெய்வங்களைச் சிருட்டித்தார்கள்.  தெய்வ வழிபாட்டை நெறிப்படுத்துவதற்காக சில ஒழுங்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் வகுத்தார்கள்.  அத்தெய்வங்களைக் கும்பிடும்போது அவர்கள் மனதில் பக்தியையும் அத்துடன் ஒருவிதபயத்தையும் தாங்கள் வகுத்த ஒழுங்குமுறைகளுக்குள் புகுத்தினார்கள். கட்டாக்காலி மாடுகளை ஒழுங்காகப் போய் மேய்வதற்குச் சாய்த்துவிடுவதுபோல மனிதர்களையும் தாம் வகுத்த வழிபாட்டுமுறைகளைக் கடைப்பிடித்து வாழும்வண்ணம் பணித்தார்கள்.

கடவுள் அன்பே உருவாயுள்ளவர் என்னும் உண்மையைப் புறந்தள்ளி, அவருக்கும் மனிதனைப் போலவே கை, கால், மூளை, வயிறு, முதலிய உறுப்புகளும், இரக்கம், பரிவு, கோபம், கடமை, நன்;றி, முதலிய குணாதிசயங்களும் இருக்கும் என்றும், அவரும் மனிதனைப்போலவே செயற்படுவார் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் விதைத்து வளர்த்துவிட்டார்கள். அதற்கிசைவாகவே தெய்வங்களைப் படைத்து, அவைகளை வழிபடும்படி பாமரமக்களைப் பணித்தார்கள். இதற்கு அனுகூலமாக இருப்பதற்காக வருணாசிரம தர்மத்தை உண்டாக்கி, மக்களின் தினசரி வாழ்க்கைக்கும் தெய்வ வழிபாட்டிற்கும் தொடர்பை உண்டாக்கி, மனித குலத்தில் பிரிவினையைப் புகுத்திவிட்டார்கள். வெவ்வேறு தொழில் புரிந்துவந்தவர்களை அந்தந்தத் தொழில்ரீதியாகப் பிரித்து,  அடையாளப்படுத்தி வைத்தார்கள். இந்தப் பிரிவினையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்த ஒரு சாரார் அவர்களுள் சாதிபேதத்தையும் திணித்து, அதனால் பிரிவினர்களிடையே சாதி ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணி வைத்தார்கள். அவ்வாறு பிரிவுகளுக்குள் சாதிபேதத்தை வகுத்தவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தி, தங்களை உயர்ந்தசாதியான மேற்தட்டில் வைத்துக்கொண்டார்கள்.  

இந்த அவசியமற்ற பிரிவினைக் கோட்பாடுகளின் பெறுபேறாக அன்றுதொடக்கம் இன்றுவரை தென்பிராந்திய நாடுகளிலுள்ள மனித சமுதாயம் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சுதந்திரமாகத் திரிந்துவந்த மனிதனை சாதிசமயபேதங்களுக்கு உட்படுத்தியதுடன் தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மேம்படுத்திக்கொண்டது அந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தவர் தாங்களே தெய்வங்களின் முகவர்களென்றும் தங்கள்மூலம்தான் கடவுளை வழிபடமுடியும் என்றும் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் மக்களை ஆழ்த்திவிட்டார்கள்.

மக்கள் தத்தம் இஸ்டதெய்வங்களைச் சுதந்திரமாக வழிபடவிடாமல் தங்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சில கட்டுப்பாடுகளை இவர்கள் விதித்துவிட்டார்கள்.

வழிபடுபவர்களின் மனதில் தெய்வவழிபாடுபற்றி வரையறுக்கப்பட்ட நடைமுறைகளையும் பொறுப்பையும் உண்டுபண்ணிவிட்டார்கள்.
தாங்கள் வகுத்த வழியில்தான் கடவுளைக் கும்பிடவேணும், இல்லாவிடில் தெய்வம் பக்தர்களைத் தண்டிக்கும் என்று ஒரு பீதியை மக்கள் மனதில் பதியவைத்து, அவர்களுக்குப் பயம்காட்டியே சில கிரியைகளைச் செய்யும் வழக்கங்களை உருவாக்கிவிட்டிருந்தார்கள்.

மக்களைச் சிறுபராயத்திலிருந்தே சமயக்கட்டுப்பாட்டுக்குள் அடைத்து வைத்து அவர்களின் மனதில் நம்பிக்கைகளை ஊட்டிவிட்டு தமக்கு அனுகூலமான விதத்தில் மனிதகுலத்தின் வாழ்க்கைமுறைகளை அமைத்துவிட்டார்கள்.

தற்போது உலகில் நடைபெறும் சமயசம்பந்தமான நிகழ்ச்சிகளை விழிப்போடு அவதானித்தால் மக்கள் எவ்வளவு கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணரமுடியும்.

கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நிராகரித்து, கோவிலுக்குப் போய்த்தான் கடவுளைவழிபடலாம் என்ற தப்பபிப்பிராயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடவுளை எங்கிருந்தும், எந்த நேரத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் வழிபடலாம் என்ற உண்மை நம் மனத்தைவிட்டு மறைந்து நிற்கிறது. அதற்குக் காரணம் அனைவரையும் ஆட்டிவைக்கும் அன்றாட உலக அலுவல்களாகும்.

நாம் தெய்வத்தின் சிலைக்கு சோடனைகள் செய்தல், கொண்டாட்டங்கள், அபிஷேகம், கிரியைகள் முதலியனவெல்லாம் எமது மனங்களைத் திருப்திப்படுத்தி அந்த தெய்வத்தின் மாட்சிமையை மனதில் வைத்துப் போற்றுவதற்கேயாம்.

தொடரும்...

No comments:

Post a Comment