Friday, 28 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்
பகுதி (3)

க் தி வழிபாடு
சக்திஎன்றால் (ஆங்கிலத்தில்) Energy
Potential energy - அடங்கியிருக்கும் சக்தி
Kinetic energy -  வெளிப்பட்ட சக்தி
சக்தியில்லாமல் உலகமோ, உலகிலுள்ள எந்த சீவராசிகளோ, பஞ்சபூதங்களோ எதுவும்  இயங்கமாட்டா.  ஒலி, ஒளி, வெப்பம், குளிர், மின்சாரம், மின்னணு, காந்தம்,  இணையம், சுழற்சி, இறுக்கநிலை  இவைகளெல்லாம் சக்தியின் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளேயாம். 
சிவபெருமான்கூட தனது சக்தியின் மூலமாகத்தான் படைத்தல், காத்தல், அருளல்,  மறைத்தல், அழித்தல் என்னும் ஐந்தொழிலையும் செய்கின்றார் என்கிறது சமயம். 

எந்தவொரு அசைவை எடுத்துக்கொண்டாலும் அது சக்தியில்லாமல் தொழிற்படாது  என்பது யாவரும் அறிந்ததே.
சக்தி என்பதை எமது வாழ்க்கையில் நாம் தினமும் கண்கூடாக  உணரக்கூடியதாக இருக்கிறது.
மனிதனின் ஒவ்வொரு அசைவும், மனத்திலெழும் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு  செயலும் சக்தியினால்தான் இயக்கப்படுகிறது. 
இதை எவரும் மறுக்கமுடியாது.

எல்லாவித அசைவுகளையும் இயக்குவதுசக்தி
நாம் எமது மனத்திற் கொள்ளவேண்டிய விடயம் ஒன்றுண்டு.
நாம் வணங்கும் தெய்வங்களுக்கு அப்பால், அவைகள் எல்லாவற்றிக்கும் மேலாக, இந்த உலகத்தையும் மற்றும் அண்டங்களையும், மனித கற்பனைக்கு எட்டாத ஆகாயப் பரந்தவெளியில் தோன்றும் நட்சத்திரங்கள், கோள்கள் முதலிய யாவைற்றையும் படைத்தது யார்? என்று கேட்டால், -
அவற்றைக் கடவுள்தான் படைத்தார் என்று உடனே பதில் வரும்.
சரி!  அப்படியானால், அந்தக் கடவுளை நாம் காணமுடியுமா?  என்ற கேள்வி எழுகிறது.

இல்லை! முடியாது! அப்படியாயின்,  கடவுளை உணர்வது எப்படி? 
காற்று வீசுகிறதுஅதை நாம் காண்பதில்லை, ஆனால் உணருகிறோம்.
நெருப்பு சுடுகிறதுகண்ணுக்குத் தெரியாது, அதன் வெப்பம் எமக்கு அனுபவமுண்டு.

நீர் - மனிதனுக்கு இன்றியமையாத பொருள், தினமும் பாவிக்கிறோம்.
மண் - பூமியில் நாமும் சகல சீவராசிகளும் வாழ்கிறோம்.
ஆகாயம் - வெளிஎம்முன்னே பரந்து கிடக்கிறது.
அதாவது, இந்தப் பஞ்சபூதங்கள் அத்தனையும் சடப்பொருள்கள். 
அப்படியானால், ஏதோ ஒரு புறவிசைதானே அவற்றை இயக்கவேணும்,
ஆம் இயக்குகின்றது!  அந்த விசைதான் சக்தி !

மனிதனுக்கு தன் வலுவில் நம்பிக்கையில்லாமல், தனது இயலுமைக்கு அப்பாற்பட்ட  விடயங்களைச் செய்துமுடிப்பதற்கு புறத்தேயிருந்து ஒரு பலத்தைத் தேடுகிறான்.

அந்தப் பலத்தை கடவுள், தெய்வம் என்று அழைக்கிறான். ஒவ்வொருவனும் தனக்கு  இஸ்டமான தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து அவரைக் கடவுளென்று ஆராதித்து வணங்குகிறான்.

மனிதன் தன் நம்பிக்கையில் தானே உருவாக்கிய தெய்வத்தைக் கும்பிட்டு
வந்தனைபண்ணி வணங்குகிறான்.

ஆகவே மனிதனுடைய வலுவிற்கு மீறின வலு ஒன்று இருக்கிறது என்பதில் அவனுக்கு சிறிது ஐயப்பாடுகூட இல்லை.
அந்த வலுதான்  சக்தி !

அந்த சக்தியை மனிதன் பலவிதமான பெயர்கள் கொண்டு அழைக்கிறான். 
அதை ஆராதிக்கிறான், போற்றுகிறான். அதற்கு விசுவாசமாக இருக்கிறான்.
பலபேர், பல இனத்தவர்கள், தங்கள் தங்கள் இஸ்டதெய்வங்களைக் கடவுள் என்று கொண்டாடிவந்தாலும் எல்லாத் தெய்வங்களும், எல்லாக் கடவுள்களும் ஒன்றே !

அவை சக்தியின் வெவ்வேறு வடிவங்களே! 
பல பெரியார்களும் அதையே சொல்லியிருக்கிறார்கள்.
கடவுள் மனிதனைப் படைக்கவில்லை, 
மனிதன்தான் கடவுளைப் படைத்தான்.  

மனிதருக்கு ஏற்படும் பல குணாதிசயங்கள் கடவுளுக்கும் உண்டு என்று நினைத்து அவற்றிற்கேற்ப கடவுளையும் செயலில் இறங்கச் செய்கிறான்.
 மனிதனைப்போலவே கடவுளுக்கும் கருணை, கோபம், இரக்கம், ஆசை, காமம், அருவருப்பு, சகிப்பின்மை, பொறுமையின்மை, அழிக்கும் தன்மை, முதலிய விருப்பு வெறுப்புகளும் உணர்ச்சிகளும் உண்டு, அவர் அவற்றில் எதையாவது தேவைக்கேற்றபடி பிரயோகிப்பார் என்று தப்புக்கணக்குப் போட்டுக்கொண்டு மனிதன் அவரை வணங்குகிறான்.

உலகில் வாழும் அனந்தகோடி சீவராசிகள் ஒவ்வொன்றும் எங்கும் நிறைந்த
சோதி (சக்தி)யாகிய கடவுளிலிருந்து தெறித்த பொறியாகும். 
ஒவ்வொரு பொறியும் (உயிரும்) கடவுளைத் திரும்ப அடைவதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, ஆனால் வழி தெரியவில்லை.  இப்பொறிகள் உடம்பெடுத்து உலகில் வாழும்பொழுது பாவச்செயல்கள், புண்ணியச் யல்கள் ஆகிய இருவினைகளைச் செய்துகொண்டேயிருப்பதனால் மீண்டும் கடவுளைப் போய்ச்சேரமுடியாமல் மாறிமாறிப் பலவிதமான பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கவேண்டிய நியதி..நற்கருமங்கள் செய்தால் அவற்றின் நற்பலனை அனுபவிக்க பிறவிகள் எடுத்தே ஆகவேண்டும்.

அதேபோல, தீயகருமங்கள் செய்தவரும் அவற்றின் பலனான கஸ்டங்களை
அனுபவிப்பதற்காக அதற்கேற்ற பிறவிகளை எடுத்தே தீரவேண்டும். 
ஆகவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளை அடையவேண்டும் என்று எவ்வளவு விரும்பினாலும் அவன் ஆற்றும் வினைகளினால் பிறவிகள் மாறிமாறி  வந்துகொண்டேயிருக்கும்போது பாவம் அவன் என்ன செய்வான்?!  கடவுளை அடையமுடியாது.

நாம் எந்த வினையும் செய்யாமல் சும்மா இருந்தால் அதனால் பலனும் இருக்காது,

 பிறவியும் இருக்காது.  ஆமாம், உண்மைதான்.

ஆனால் வினை ஏதும் செய்யாமல் இருக்கமுடியுமோ? இல்லை.  இல்லவேயில்லை!

 இயற்கை இயங்கவேண்டுமென்பதற்காக ஒவ்வொரு மனிதனுக்கும் எதோ ஒரு வினையைச்   செய்துமுடிக்கவேண்டும் என்ற நியதியிருக்கின்றது.  அதைச் செய்து முடிக்கவேண்டியது அவனது கடமையாகும்,  தப்பமுடியாது.  ஆனால், அவன் அந்தச் செயலைநான் செய்கிறேன்என்று நினைக்கவும் கூடாது, அதன் பலனை எதிர்பார்க்கவும் அவனுக்கு உரித்தில்லை.
உடம்புதான் செய்கிறது, உயிரல்ல.

உயிரானது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சாட்சியாகமட்டும் நிற்கிறது.
கடவுளால் நியமிக்கப்பட்ட வேலையை இந்த உடல்தான் செய்கிறது. 
கடவுளின் கட்டளை நிறைவேற்றுப்படுகிறது என்று நினைத்துக்கொண்டு நாம் வாளாவிருக்க வேண்டியது, அவ்வளவுதான்.
அதனால் வரும் நற்பலன், தீயபலன்களை கடவுளுக்கே அர்ப்பணித்து விடவேண்டியது.

மேலே எழுதியிருப்பது ஒரு பெரியவிடயம், பாரதூரமானவிடயம், சர்ச்சைக்குரியவிடயம். 

வாழ்நாளில் நான் பார்த்தறிந்த, கேட்டறிந்த, படித்தறிந்த பட்டறிந்த, அனுபவங்களிலிருந்து கிரகித்தவற்றை எழுத்தில் வடித்திருக்கிறேன், அவ்வளவுதான்.

ஆகவே இவை எனது சொந்த அபிப்பிராயம். 
சமயங்களையோ, சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ வேத இதிகாசங்களையோ இதில் சம்பந்தப்படுத்தப்படவில்லை.

                                   கலைவளன்சிசு நாகேந்திரன்

No comments:

Post a Comment