Tuesday, 25 February 2020

நான் பிள்ளைத்தாச்சி - சிசு.நாகேந்திரன்நான் தலைப்பிள்ளைத்தாச்சி.

நான் திருமணமாகினவள்.  ஆதலால் நான் பிள்ளைத்தாச்சி எண்டு சொல்லுறதிலை வெக்கமில்லை.  ஆனால் எனக்குக் கலியாணமாகி (ஆறு) வருசம்.  இப்பதான் பிள்ளைப்பாக்கியம் கிடைச்சிருக்குது.  அதுவும் பிள்ளைவேண்டி நாங்கள் வேண்டாத தெய்வம் ல்லை. என்ரை புருசன் ஒஸ்ரேலியாவிலை (8) வருசமாயிருந்தவர்.  என்னைக் கலியாணங்கட்டி கொண்டு வரேக்கையே சொன்னவர், “வெளிநாடுகளிலை மனிசன்ரை வாழ்க்கை யந்திர வாழ்க்கை.  நாள் முழுவதும் பிசியாயிருக்கவேணும் எண்டது ஒரு கட்டாயம்.   விடிய எழும்பி வேலைக்கு ஓடுறது.  வேலை முடிஞ்சு வீட்டைவாற வழியிலை கடைத் தெருவிலை சொப்பிங் செய்து கொண்டு வரவேணும்.  வந்த களைப்போடை தேத்தண்ணி போட்டுக் குடிச்சுப்போட்டு உடனை சமையல் துவங்கவேணும்.  இடைக்கிடை Take away எடுக்கலாம் தான். நாக்குக்கு ருசியாயிருக்கும்,  ஆனால் அடிக்கடி அது வாங்கக் கட்டுபடியாகாது.  சுகாத்தியத்துக்கும் நல்லதல்ல.   சனி ஞாயிறுகளிலும் வேலைதான்.  வேலையெண்டால், பெரிய சமையல் செய்யிறது அப்பதான்.  அதோடை உடுப்புகள் தோய்ச்சுக் காயவிடுகிறது, வீடு வாசல் சுத்தப் படுத்துகிறது, சிநேகிதரைக் காணப்போறது, கூட்டங்களுக்குப் போறது, படம் பாக்கிறது - இப்பிடி பல சோலியளும் சனி ஞாயிறிலைதான் நடக்கும். அப்ப, தினமும் இடைவிடாத வேலைதான்.

                இப்படியாய் சீவியம் நடத்தேக்கை பிள்ளையளையும் பெத்து வைச்சுக் கொண்டு அதுகளைப் பராமரிக்கவும், உடுப்புகள் வாங்கவும், ஆசுப்பத்திரிக்குக் கொண்டுபோகவும் - எல்லாத்துக்கும் நேரமும் இல்லை, பணமும் போதாதுவெள்ளையளைப் போலை நாங்களும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம்நாலைஞ்சு வருசத்துக்குப் பிறகு பிள்ளைகளைப் பெறுவம்  எண்டு என்னைக் கூப்பிட்டு வைச்சுக் கொண்டு லெக்சர் பண்ணுவார்.

                அவற்றை சொல்லின்படிதான் நாங்கள் செய்துகொண்டு வந்தனாங்கள்.  அவர் என்னைத்தான் மருந்துக்குளிசை தினமும் போடச்சொல்லுவார். அவர் தானாக வேறை விதமான தடைகளைக் கையாளமாட்டார். சோம்பல்.  அதோடை பொறுமையும் இல்லை.   நான் ஒழுங்காய் குளிசை போட்டுக் கொண்டுதான் வந்தனான். எனக்கெண்டால் பிள்ளைகள் நல்ல விருப்பம்.  ஆனால் அவற்றை சொற்படி கொஞ்சக்காலம் இருப்பம் எண்டு இருந்திட்டம்.  போன வருசம் நாங்கள் சுற்றுலா போய் வந்தம் தானே.  அந்த நாட்களிலை இரண்டு நாள் நான் குளிசை போடத் தவறிவிட்டென்.  அதனாலை மூண்டு மாதம் தலைமுழுகாமல் இருந்தென்.  எனக்கெண்டால் வலு புளுகம்.  இவருக்குத்தான் விருப்பமில்லாட்டிலும் எனக்கு நல்ல சந்தோம். ஆனால் என்னைச் சந்தோசமாய் வைத்திருக்கிறதுக்காக, பரவாயில்லை பிள்ளை பிறக்கட்டுமெண்டு இருந்தார்.  ஆனால் விதி வேறைவிதமாய் விளையாடி விட்டிட்டுது.  மூண்டாவது மாதம் கர்ப்பம் கலைஞ்சு போச்சுது.  காரணம் சரியாய்த் தெரியேல்லை.  அங்கை ஊரிலை, சண்டை மும்மரமாகி தமிழ்ச்சனம் ஆயிரக்கணக்கிலை அழிஞ்சு போச்சுதாம்.  அதுக்குள்ளை என்ரை மாமியும்  மச்சானும் மோசம் போட்டினமாம் எண்டு செய்தி வந்த நாள் தொடக்கம் எனக்கு உடம்புக்கு என்னவோ செய்து படுக்கையிலே போட்டிட்டுது.  அதோடை கருவும் அழிஞ்சுபோச்சுது.

                இந்தமுறை நாங்கள் கவனம்.  இந்தப் பிள்ளையையாவது காப்பாற்ற வேணுமெண்டு வலு பத்திரமாக நடந்து கொள்ளுறென்.  அடிக்கடி ஆசுப்பத்திரிக்குப் போவம். அங்கை scan பண்ணிப் பாப்பினம்.  பிள்ளை என்ன மாதிரி இருக்குது எண்டு சொல்லுவினம்.  இந்த வசதிகளொண்டும் ஊரிலை இருக்கேல்லை. அங்கை பிள்ளைத்தாய்ச்சியை அவவின்றை தாயும் பாட்டியும் பாத்துக் கொள்ளுவினம்.  இடைக்கிடை தேவையெண்டால் மருத்துவிச்சி வந்து பாத்துக்கொண்டு போவா. இப்ப நாங்கள் உற்றார் உறவினர் வீடுகளுக்கும் போறேல்லை.  ஏனெண்டால் அவை ஏதும் பிடிக்காத கதை சொன்னால் நான் அதை மனதிலை வைச்சு கவலைப்பட்டால் அல்லது ஏங்கினால் அது பிள்ளையைத் தாக்கும் எண்டு ஆக்கள் சொல்லுறபடியாலை விசிற்றுகளை தவிர்த்துக்கொண்டம்.  ஆனால் கோவிலுக்கு மட்டும் பிரார்த்தனைக்கு ஒழுங்காய்ப் போவம். 

                நான் பிள்ளைத்தாய்ச்சி எண்டவுடனை எனக்கு ராசமரியாதை.  நான் விரும்பியது எல்லாம் கிடைக்கும்.  என்னென்ன சாப்பாடுகள்  என்ரை வாய்க்கு ருசியாயிருக்குமோ அதெல்லாம் என்ரை புருசன் செய்து அல்லது வாங்கித் தருவார்.  என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டார். ஏதும் பிழை செய்தாலும் என்னை ஒருநாளும் கோபிச்சுப் பேசமாட்டார்.  ஒண்டும் பாரமானது தூக்கப் பறிக்க விடமாட்டார்.  இப்பிடி அடிக்கடி பிள்ளைத்தாய்ச்சியாகிற சான்ஸ் வாழ்க்கையிலை அடிக்கடி வரக்கூடாதோ என்றுகூட நான் நினைப்பென்.  வயித்திலை பிள்ளை வளர வளர அடிக்கடி ஆசுப்பத்திரிக்குப் போய் செக ;பண்ணிக் கொண்டு வருவம்.  பிள்ளையின்ரை இதயத்துடிப்பு, வளர்த்தி, எப்படி இருக்குதெண்டு எங்களுக்குச் சொல்லுவினம்.  எங்களுக்கெண்டால் ஒரே சந்தோசம்.
என்ரை மனிசன் இடைக்கிடை பகிடிவிடுவார்.  பிள்ளைத்தாய்ச்சியெண்டால் விரும்பின சாப்பாடு சாப்பிடலாம், தேவையான அலுவல்கள் செய்து தருவினம்.  இதெல்லாம் ஆம்பிளையளுக்குக் கிடைக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கடவுள் தரேல்லையே எண்டு.
இவர் எங்கெயென் கடன்பட்டாவது அல்லது ஆரையும் முறிச்சாவது நான் ஆசைப்பட்ட சாமான்கள் எல்லாம் வாங்கித்தருவார்.  அதுக்காக அவரைப் போற்றவேணும்.
                அங்கை நாட்டிலையெண்டால் பிள்ளை பிறந்தபிறகுதான் ஆண்குழந்தையோ பெண் குழந்தையோ எண்டு தெரியும்.  ஆனால், இங்கை 3 மாதத்திலேயே சொல்லிப் போடுவினம். பிறக்கப்போறது ஆணோ பெண்ணோ எண்டு.  என்னிலும்பாக்க என்ரை மனிசனுக்குத்தான் பெம்பிளைப்பிள்ளை வரவேணுமெண்டு ஆசை.  பிள்ளைக்குத் தாயாகப் போறேனே எண்டு ஆசைதான்.   ஆனால் பிள்ளைப்பேறு பாக்கிறதுக்கு ஒரு பெண் துணைக்கு என்ன செய்யிறதெண்டு மனதிலை ஒரு இனம்தெரியாத ஏக்கம்.  ஊரிலையிருந்து அம்மாவைக் கூப்பிட முடியாது.  ஏனென்டால் அம்மாச்சி வயதான நேரத்திலை படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாவாம்.  அவவை அப்பிடியே விட்டிட்டு வரேலாதாம்.  இவருக்கெண்டால் தாய் இல்லை.  இரண்டு வருசத்துக்கு முந்திச் செத்துப்போனா.  மாமா தனியத்தான்.  மனம் அதிர்ந்து போயிருக்கிறார்.

                எண்டாலும் இங்கை வெள்ளையளுக்கு நடக்கிறது போலை அரசாங்கம் எல்லாப் பிள்ளைத் தாய்ச்சிகளையும் பாரபட்சமில்லாமல் கவனமாய்ப் பாக்கும்தான்.  தேவையான உதவிகளையும் செய்து புத்திமதியும் சொல்லுவினம்.  பிள்ளை பிறக்கிற மூட்டத்திலை ஆசுப்பத்திரியிலை சேர்த்துப்போட்டால் மிச்சமெல்லாம் அவையின்றை பொறுப்பு.  பிள்ளை பிறந்தபிறகு சில நாட்களுக்கு வைச்சுப் பாத்திட்டுத்தான் வீட்டுக்கு அனுப்புவினம்.  தாயையும் பிள்ளையையும் வீட்டுக்கு அனுப்பினபிறகும் நேர்ஸ்மார் வந்து அடிக்கடி வீட்டுக்கு வந்துபாத்து தாய்க்கோ பிள்ளைக்கோ தேவையான பரிகாரம் செய்து மருந்துகளும் குடுப்பினம்.  அதனாலை, மனதுக்கு ஒரு நிம்மதி.  ஆனால் என்ரை மனிசனுக்குத்தான் அலைச்சலும் செலவும்.  அந்த நாட்களிலை அவற்றை வேலைத்தலத்திலை அவருக்கு லீவு கிடைக்க வேணுமெண்டு கடவுளை நான் வேண்டிக் கொள்ளுகிறென்.  பிள்ளைப்பேத்துச் சிலவுகளுக்கும் ஏதாவது ஒழுங்கு பண்ணத்தானே வேணும்.  எங்கையெண்டாலும் கடன்தான் எடுக்கவேணும். 
                பிள்ளை பெறுகிறது நல்ல விசயம்தான்.  அது விருப்பமும் சந்தோசமும்தான். ஆனால் பிரசவ வேதனையைப்பற்றி மற்றவர்கள் அடிக்கடி சொல்லேக்கை எனக்கு மனதிலை ஒருவிதமாய் பயமாயிருக்குது.  ஆனால் பிள்ளை வேணுமெண்டால் அதைத் தாங்கித்தானே ஆகவேணும் எண்டு இன்னுமொரு மனம் சொல்லும்.  இன்னுமொரு பயம். தலைப்பிள்ளைத் தாய்ச்சி பிள்ளையைப் பெத்து உருப்படியாய் வீட்டுக்கு வருமட்டும் நம்பிக்கையில்லையாம்.  அவளுக்கு எதுவும் நடக்கலாம் எண்டு வயதான சனங்கள் கதைக்கிறது என்றை காதிலை கேட்டிருக்கிறென்.  ஆனால் அது அந்தக் காலத்திலைதான் எண்டு மனசைத் திறுத்தி பண்ணிக்கொண்டென்.
                பத்துமாதம் முடியமுன்னர் பிள்ளைக்கு ஏதும் இசக்குப் பிசக்காயிருந்து அதைக் கவனிக்காமலிருந்தால் பிள்ளை வயித்துக்குள்ளையே செத்துப்போகக்கூடும் எண்டும் கதைக்கினம்.  அப்பிடிக் குறைமாதத்திலை பிள்ளைக்கு ஏதும் நடந்திட்டுதெண்டால் உடனை வயித்தைக் கீறி பிள்ளையை வெளியிலை எடுத்துப் போடவேணுமாம். தாமதிச்சால் தாயின்ரை உயிருக்கு ஆபத்து வருமெண்டும் சொல்லுகினம். நான் பிள்ளை பெறபோறெனெண்ட சந்தோசத்திலை இருக்கேக்கை இப்பிடிக் கதைகளைக் கேள்விப்பட என்னமாதிரி இருக்கும்.  மனம் அங்கலாய்க்குமெல்லே!

                எங்கடை வீட்டுக்கு ஒரு வயதானவர் அடிக்கடி வருவார்.  அவர் என்னைக் கூப்பிட்டுவைச்சு புத்திமதிகள் சொல்லுவார்.  பிள்ளை வயித்திலை இருக்கிறபோது தாயின்ரை மனதிலை நல்ல எண்ணங்கள் நினைக்கவேணும்.  நல்ல புத்தகங்கள் வாசிக்கவேணும்.  மனதிலை ஏக்கம், கவலை, பயம், கோவம் ஏற்படக்கூடிய விசயங்களைத் தவிர்க்கவேணும்.  அப்படியான கதைகளைக் காதாலை கேக்கிறதும் பிள்ளைக்கு நல்லதல்ல.  மனம் எப்பொழுதும் நிம்மதியாகவும் அமைதியாகவும் சந்தோ~மாகவும் இருக்கவேணும்.  வன்முறைகள், விபத்துக்கள், திடீர்மரணம், சித்திரவதை, கொலை, ஆக்கள் வறுமையிலை வாடுறது போன்ற விடயங்கள் மனதுக்கு எட்டாமல் பாத்துக் கொள்ளவேணும் எண்டெல்லாம் அறிவுரை சொல்லுவார்.  மனம் எப்போதும் திறுத்தியடைந்த நிலையிலை இருக்கவேணும்.  எந்த விசயத்திலும் அங்கலாய்ப்பு ஆகாது.  எதிலும் அவா இருக்கக்கூடாது.  சாப்பாட்டு விசயத்திலும் விரும்பினதை கேட்டுவாங்கிச் சாப்பிட்டிடவேணும்.  எல்லாரோடையும் நட்பாய்ப் பழக வேணும்.  ஆக்களிலை வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, வஞ்சந் தீர்க்கிறது இந்தமாதிரி எண்ணங்கள் மனதிலை உதிக்கவிடக்கூடாது எண்டு வாறவேளையெல்லாம் சொல்லுவார்.
                இன்னுமொரு விசயம் என்ரை மனதிலை அடிக்கடி தோன்றும்.  குழந்தை பிறக்க முன்னரும் பிறந்து சில மாதங்கள்வரையும் என்ரை மனிசன் என்னட்டை நெருங்கக்கூடாது. இவர் நல்லவர் அப்படியெல்லாம் பிழைவிடமாட்டார்.  ஆனால் வெள்ளையள் நிறைந்த இந்த நாட்டிலை அவர் தற்காலிகமாக வழிதவறிப் போகாமல் பாத்துக் கொள்ளுவது என்ரை கடமைதானே!  எண்டாலும் சொல்லேலாது.  வெளிநாட்டிலையிருக்கிற வெள்ளையளுக்கு எதையும் செய்யக்கூடிய துணிவிருக்குது.  நல்ல இனிப்பாய் பேசி ஆம்பிளையளை வளைச்சுப் போடுவாளவை.  இவற்றை கந்தோரிலை நிறைய வெள்ளையள் வேலை செய்யுதுகளாம்.  ஆம்பிளை படலை தாண்டி வெளிக்கிட்டால் எங்கையெங்கை போய் வாறாரெண்டு ஆருக்குத் தெரியும்? 
                இஞ்சை வைத்திலை பிள்ளையைக் காவிக்கொண்டு ஒவ்வொரு கிழமையும் கழியக்கழிய எங்கள் இரண்டுபேற்றை மனதிலும் ஒரு அங்கலாய்ப்பும் பொறுப்புணர்ச்சியும் தென்படுகுது.  வயித்துக்குள்ளை குழந்தை அசையிற நேரத்திலை இவர் வந்து அடிக்கடி வயித்தைத் தொட்டுப்பாத்திட்டு ஆனந்தத்திலை துள்ளிக்கொண்டு ஓடித்திரிவார்.

                அங்கை ஊரிலை, கலியாணமாகி அடுத்த மாதமே ஆக்கள் கேக்கத் துவங்கி விடுவினம்.  தீட்டு இன்னும் தொடர்ந்து வருகுதோ பிள்ளை, அல்லது நிண்டிட்டுதோ எண்டு. ஆனால் வெளிநாடுகளிலை நிலைமை வேறை.  நாலைஞ்சு வருசம் டைம் குடுத்துத்தான் பிள்ளையளைப் பெறுவினம்.  ஆருக்குத் தெரியும் இங்கத்தைய குடும்ப வாழ்க்கை இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு?  நான் ஒஸ்ரேலியாவுக்கு வந்த அடுத்த மாதம் தொடக்கமே அம்மா போனிலை கேட்கத் துவங்கிவிட்டா என்ன பிள்ளை முழுகாமலிருக்கிறியா? வயித்திலை ஏதாவது புழு பிடிச்சிருக்குதா? எண்டெல்லாம் கேப்பா.  எங்கடை கதையளை என்னெண்டு அவவுக்குச் சொல்லுறது?  நான் சுருக்கமாய்கடவுள் இன்னும் தரேல்லை அம்மாஎண்டு பொய்யைச் சொல்லிச் சமாளிச்சுப் போடுறனான். வெள்ளையளின்ரை மூண்டு நாலு வருசம் பொறுக்கிற கதையளை அவையளுக்கு என்னெண்டு சொல்லுறது?
                சரி!  இனி இந்தக் கதையை இதோடை நிப்பாட்டுவம்.  இனி அடுத்த வருசம் சந்திக்கேக்கை பிள்ளை என்னென்ன குழப்படிகள் செய்யுது எண்டு சொல்லுறென்.  அதுவரைக்கும்பாய்.
எங்கடை எதிர்பார்ப்புகள் நிறைவேறவேணுமென்கிற உங்கடை வாழ்த்துக்களுக்கு நன்றி!

இது - அன்புடன் -  கிறுக்கி எழுதியது   

2 comments:

 1. நல்ல பதிவு. நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்துகள்....

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது நான் பிள்ளைத்தாச்சி – சிசு.நாகேந்திரன் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
 2. நன்றி https://valaioalai.com/

  ReplyDelete