Monday, 29 December 2014

வன்னி / அதிகாரம் 10 / கதிர் பாலசுந்தரம்


வீரத் தலைமுறை
அப்பாவுக்கு உள்@ரப் பிள்ளைகள் எல்லோரிலும் சிறிய சந்தேகம். ஒரு நாள். 'நான் றெடி" என்று சொன்ன தொனியிலேயே அவருக்குச் சந்தேகம். அப்படியிராது என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அரசியலில் ஊறிப் போன ராச நாச்சியார்வம்சம்.


சித்தப்பா குடும்ப பேரழிவின் இரண்டு தலை முறைகளுக்கு முன்னரே தாத்தாவையும், பெரிய தாத்தாவையும் தமிழர் விடுதலைப் போர்க்களத்தில் தியாகம் செய்த வம்சம்.

தாத்தா துரோணர் கதை: கொழும்பு கால்பேஸ் திடலில் நடந்த தமிழ் மொழி உரிமைக்காக தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தில்---1956---தாத்தா கலந்து கொண்டார். அன்று மாலை வெள்ள வத்தையில் சவோய் தியேட்டர் முன் நடந்து கொண்டிருந்தார். சத்தியாக் கிரகத்தின் வேளை அவரை உதைத்த ஒற்றைக்கண் சிங்களக் காடையன் கண்டு விட்டான். 'உவன் கால்பேஸ் திடலில் காலையில் சத்தியாக்கிரகம் செய்த பறத் தெமில,திராவிடயோ. அடித்துக் கொல்லுங்கள்" என்று கர்ச்சித்தான்.

சிங்களக் கும்பல் ஓநாய்களாக உறுமிப் பாய்ந்தது. தூஷண வார்த்தைகளால் திட்டித் திட்டித் தாக்கியது.

புதுக் கூட்டம் கத்தி கோடரிகளுடன் ஓடிவந்தது. வெறிகொண்டு வேள்வி நடாத்தியது---வெட்டு, கொத்து, அடி, உதை, குத்து. அரைமணிநேரம்.

'ஜயவேவா! அப்பே ஆண்டுவ! அப்பே ஆண்டுவ---எங்கள் அரசாங்கம்" கோசம் பேய்க் காற்றாக அச்சமூட்டும் ஓலம் எழுப்பியது. 
தாத்தா துரோணரின் அவயவங்கள்---கைகள் கால்கள் உடல் குடல்---சாக்கடையில் கிடந்தன. பஸ் தரிப்பு நிலைய தகரக்கொட்டில் வளையில் கட்டிய நைலோன் கயிற்றில் தொங்கி ஆடியது தாத்தாவின் தலை. அதன் மீது சிங்கங்கள் காறித் துப்பித் திட்டித்தீர்த்தன.
கிழவி ஒருத்தி சாக்கடையில் சேறு அள்ளி வந்து முகத்தில் வீசி ஆபாச வார்த்தைகளால்ஆலாபனைசெய்தாள்.

பெரிய தாத்தா தாமோதரன் தமிழ் அரசுக் கட்சியின் தூண். வவுனியா மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்துக் கொண்டு மட்டக்களப்பிலிருந்து புகையிரதத்தில் பிரயாணம் செய்தார். 1958 இனக் கலவரம் வெடித்தது. பொலனறுவை புகையிரத நிலையத்தில் நெல் மூட்டைகளுக்கிடையில் மறைந்திருந்தார். கலகக் கும்பலிடம் அகப்பட்டுக் கொண்டார்.
சில மைல்கள் அப்பால் அமைந்த ஹிங்கிராங்கொட. வட்டப் பச்சைப்புல் மைதானத்துக்கு அடி போட்டு இழுத்துச் சென்றனர். மைதானத்தைச் சூழ்ந்து மூவாயிரம் வரையிலான கலகக்காரர்கள். ஆண் பெண், சிறியவர், மாணவர், பெரியவர். முதியவர், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், பிக்குகள். பெண்கள் பலர் இடுப்புகளில் குழந்தைகள் வைத்திருந்தனர். கைகளில் கத்தி, வாள்,பொல்லு, கிறிஸ், கோடரி.
பெரிய தாத்தா தாமோதரனின் தலைமுடியில் பிடித்து மைதான மையத்துக்கு இழுத்து வந்தனர்.

சூழ்ந்து நின்ற கலகக் கும்பல் முழங்கியது. 'மண்டையைப் பிளவெடா. காலை வெட்டடா. கண்களைத் தோண்டடா. கொல்லெடா. குடலை உருவெடா."

மையத்தில் பெரிய மின்னும் கூரிய வாள்களுடன் இருவர். இடுப்பைச் சுற்றி பெல்ற். சாரம்---கையிலி---கட்டியவர்கள். மடித்து முழங்கால் தெரியக் கட்டியிருந்தனர். ஆம் கடகறுப்பு பனியன். எண்ணெய் காணாத பறட்டைத் தலைகள்.
பெரிய தாத்தாவின் இரு பக்கத்திலும் இருவர். கைகளை நீட்டி இழுத்துப் பிடித்தனர். சிலுவையில் அறையப் பட்டவர் போல நின்றார். கண்கள் நீரைக் கொட்டின. உதடுகள் துடித்தன. வானத்தைப் பார்த்தபடி நின்றார்.

வாளோடு ஆயத்தமாக நின்ற தடியன் வாளை வீசினான். இடதுகை நிலத்தில் விழுந்து துடித்தது.
மற்றவன் வாளை வீசினான். முழங்காலுக்குக் கீழே வலது கால் தொங்கி ஆடியது.
பெரிய தாத்தா தரையில் சரிந்து கிடந்தார்.

ஜயவேவ!---வெற்றி!ஒலிஅதிர்ந்தது.

வரிசையில் சென்று ஒவ்வொருவனும் அடித்தான். குத்தினான், வெட்டினான். கால், கை, குடல் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. நாலடி உயர கூரிய கம்பில்தலையைக் குத்தி மையத்தில் நட்டிருந்தனர். அது பத்தாவது தலை.

சுதந்திரத்துக்காகப் பலிபீடம் ஏறுவதை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டது ராச நாச்சியார் வம்சம். போத்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் படைகளோடு போராடியவீரவம்ச வழியில் வந்த அவர்களை யாரும் போர்க்களம் இழுத்து செல்லத் தேவை இல்லை. அப்பாவுக்கு அது புரியும். இருந்தும் பிள்ளைகள் ஆறும் மொத்தமாய்க் களத்தில் குதித்துவிடுமோ என்ற சஞ்சலத்தில் உழன்றார்.

அப்பாவுக்கு என் திட்டம் தெரியாது. சாட்டுக்குத்தான் வேம்படி விடுதியில் தங்கியிருக்கிறேன். படிப்புக்கு எப்பவோ குட்பைசொல்லிவிட்டேன். என்னைப் போல அங்கு ஏராளம் பேர். சிவதலம் ஆவரங்கால் மாதவம் தம்பதிகளுக்கு ஓரே மகள். வாணி. அவளும் எங்களோடு வருகிறாள். நாங்கள் பன்னிரண்டு பேர். இரண்டு கிழமைகளாக எப்போ இயக்கத்துக்குப் போவது என்பது பற்றி விவாதிக்கிறோம். எங்கள் உணர்வுகள் அப்பாவுக்குப் புரிவதாயில்லை. அம்மாவுக்குந் தான். பெரிதாக வன்னி மண்ணும் மக்களுந்தான் தங்கள் மூச்சு என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள்.
மூத்தண்ணை சைகை செய்து விட்டு மாட்டுத் தொழுவம் போனார். ஏதோ புதினம் என்று பின் தொடர்ந்தேன். முதிரை மரக்குத்தியில் இருந்தபடி வினாவினார்.
'சிவகாமி, உனக்கு இயக்கத்துக்குப் போற நோக்கம்? அப்படி ஏதன்?"
'மூத்தண்ணை. ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆள். நாங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு எங்கள் பங்கைச் செலுத்தி விட்டோம். தம்பி அண்ணை யோகன்.அது போதுந்தானே?"
'ஓ. சும்மா கேட்டனான். அப்பா அம்மா உடைந்து போவினம். யார் போனாலும் நீமட்டும் போகாதை."
'அப்ப நீங்கள் போக ஆயத்தமோ?"
'அப்படிச் சொன்னனானே?"
'அப்படிப் பட்டது" என்று சொல்லிவிட்டு கடகடவெனச் சிரித்த படிவீட்டுக்கு ஓடினேன்.

மூத்தண்ணன் விடுதிக்குச் செல்வதாகச் சொல்லி நண்பகல் அளவில் புறப்பட்டார். அப்பா காரில் ஏற்றிக் கொண்டு போய் புளியங்குள புகையிரத நிலையத்தில் விட்டார். ஒன்றரை மணிக்கு வருகிற கொழும்பு குட்ஸ் புகையிரதம் வரும் மட்டும் நின்று புகையிரதத்தில் ஏற்றிவிட்டார். அவர் தொடர்ந்து பிரயாணித்து கொடி காமத்தில் இறங்கி தட்டி வானில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்குப் போவார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அப்பாவுந்தான்.

மூத்தண்ணன் அடுத்த புகையிரத நிலையம் கனகராயன்குளத்தில் இறங்கியிருக்கிறார்.

அம்மா சொல்கின்றா 'நான் செத்துப் போவேன் என்று பயந்து மூத்தவன் கடைசிவரை இயக்கத்துக்குப் போக மாட்டான்," என்று. அவவுக்கு தன்னுடைய மூத்த பிள்ளையில் அப்படி ஒரு பெரிய பாரிய நம்பிக்கை.

அப்பா மூத்தண்ணையை புளியங்குளத்தில் விட்ட பிறகு, நெடுங்கேணி போய் அலுவல் முடித்துக்கொண்டு வர மாலை ஆறுமணியாகிவிட்டது. அப்பா வந்த கையோடு ஒரு சின்னப் பையன் சைக்கிலில் வந்தான். பன்னிரண்டு வயது பார்க்கலாம். அப்பாவிடம் கடிதக் கவரைநீட்டினான். 'ஐயா, உங்கள் மகன் வீரக்கோன் அண்ணை தந்தது." கறுப்புக் கட்டைக் காற்சட்டை சிவப்பு ரி-சேட் அணிந்த பையன், சைக்கிலை சிறிது உருட்டி, துள்ளிப் பாய்ந்து, ஆசனத்தில் அமர்ந்து பறந்து கொண்டிருந்தான்.
எங்களுக்குத் தெரியாது அவன் புளியங்குளக் காட்டுள் அமைந்த புலிகளின் முகாமிலிருந்து வந்தவன் என்று. மகன் பெயரை அந்தச் சின்னப் பெடியன் உச்சரித்ததும் அப்பா ஒன்றும் புரியாமல் அவனை உற்றுப் பார்த்தார். நெஞ்சில் பாறாங்கல் விழுந்தது போல விருந்தது. தைரியத்தை வரவழைத்து கடிதஉறையைக் கிழித்து சிறு துண்டு ஒன்றை எடுத்து அவசரமாய்ப் மனதுள் வாசித்தார். 'நான் புலிகள் இயக்கத்துக்குப் போகிறேன். தேட  வேண்டாம்."; சிலந்திவலையாக முகபாவம் தெரிந்தது. கண்களிலிருந்து கண்ணீர் படபடவெனச் சொரிந்தது.
'என்னப்பா?" நான் வினாவினேன். கைச்சைகை காட்டினார். குழப்பாதே என்பது போலப் பட்டது.

வழமைக்கு மாறாக அப்பா கொஞ்சம் தைரியமாக இருப்பதாக உணர்ந்தேன். அந்தத் தைரியத்துக்கு காரணம் வேறு. தான் கவலையைக் காட்டினால் அம்மாவின் கவலை அதிகரித்துத் தலையில் அடித்துக் கத்துவா என்ற சஞ்சலம், பயம். சமயலறைக்குப் போனார். அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு நெஞ்சடைத்தது. சஞ்சலமனோநிலையைஅம்மாவுக்குக் காட்டாமல் திரும்பிவிட்டார். அம்மா அவரை உற்றுப் பார்த்தார். பின்னர் கேட்டார்.
'ஏதோ சொல்ல வந்தீங்கள். பிறகேன் திரும்பிப் போறீங்கள்?" பதினேழு ஆண்டுகளாக கைக்குள் பொத்தி வைத்திருக்கிற கணவன். மெல்லிய அசைவுகூட உள்ளத்தில் துல்லியமாக கதைகள் பேசின.
'ஒன்று மில்லை."
'என்ன ஒன்றுமில்லை என்கிறீங்கள். முகத்தில் நூறு எழுதியிருக்கு."
'தலையிடிக்குது. ரண்டு பனடோல் தாறியோணை?"
'பனடோலுக்கு நிற்குமோ? உதென்ன ஒளிச்சு விளையாடுறீங்கள்?"

அம்மா எழுந்து போனார். தமிழ் அரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையை விரித்தார். அந்தக் கடிதத் துண்டை எடுத்தார். நான்கூட அப்பா ஒளித்ததைக் கவனிக்கவில்லை. வீட்டில் பிரளயம் வெடிக்கப் போகிறது என்று எண்ணினேன். அப்பாவும் அப்படித்தான் நினைத்தார்.

அம்மா பேசினார்.
'எனக்கு மூத்தவன் ஏதோ எக்கச்சக்கமாய்ச் செய்யப் போறான் என்று தெரியும். அவரின் பேச்சு நடத்தை எல்லாம்  அம்மாவை சாந்தப்படுத்துவதாக இருந்தது. இந்தக் காலத்திலே பெடியள் செய்யுற கூத்து என்ன? இயக்கத்துக்கு ஓடுறதுதானே. அவரின் கதை தெரிந்து கொண்டுதான் நானும் சும்மா 'செத்துப்போவன்" என்று வெருட்டினனான். கவலை தான். கண்ணீர் வருகுதுதான். நாங்கள் ராச நாச்சியார் வம்சம். நாங்கள் போராடப்  போகாவிட்டால் யார் போவினம்?"
அப்பா விறைத்துப் போனார்.
'அவன் சொல்லிப் போட்டு போயிருக்கலாம் எல்லே."
'போர்க்களத்துக்கு எல்லே போறான்." அம்மா.

அப்பா தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி அஹிம்சை அரசியலில் ஊறிப்போனவர். இயக்க வன்முறை நடவடிக்கைகள் ஆச்சரியம் அளித்தன. இந்திய ஆயுதப் பயிற்சிகள் பெரும் வியப்பளித்தன. மகன் புலி அமைப்பிற்குப் போனதால், புலிகள் பற்றி அறிய ஆவல் எழுந்து செய்திகள் திரட்டினார். அவரே பேசுகிறார்.

'தமிழ் ஈழ போராளிக் குளுக்களுக்கு இந்தியாவில் முப்பத்திரண்டு முகாம்கள். புலிகளுக்கும் ஏயை இயக்கங்களைப் போலவே 1983 தொடக்கம் றோ இராணுவ பயிற்சி வழங்கிப் பணவுதவியும் செய்கிறது. இந்திரா காந்தி அம்மையாரின் ஏற்பாட்டில் நடக்கிறது. வெளி உலகிற்கு மறுக்கிறார். அரசியல் சூழ்நிலை அப்படி.
விடுதலைப் புலிகளின் முதலாவது தொகுதிக்கு உத்தரகாண்டத்தில் உள்ள சக்ரட்டவில் வைத்து றோ பயிற்சி வழங்குகிறது. இரண்டாவது தொகுதிக்கு ஹிமசால் பிரதேசத்தில் வைத்து பயிற்சி வழங்குகிறது. பொட்டம்மான் இரண்டாவது தொகுதியில் பயிற்சி பெறுகிறார்.
தனு என்ற தேன்மொழி இராசரத்தினம்---பிற்காலத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றவள்---ஒற்றைக் கண் சிவராசன் இருவரும் வட இந்திய நைநிதல் என்ற ஊரில் அமைந்த புலிகள் முகாமில் பயிற்சி பெறுகிறார்கள். மொத்தம் 495 பேர். அவர்களுள் 90 பேர் பெண்கள். அவர்கள் அண்ணா மாவட்டம் சிருமலையில் அமைந்த பெண்களுக்கான முகாமில் பயிற்சி பெறு கின்றனர்.
தமிழ் நாட்டில் புலிகளுக்கு எட்டு முகாம்கள். அண்ணா, தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் கிழக்கு, மதுரை, சேலம், ராமநாதபுரம்  மாவட்டங்களில் தலா ஒவ்வொரு பயிற்சி முகாம். சேலத்தில் கும்பரபட்டியில் அமைந்த முகாமே மிகப் பெரியது.
வேறு எந்த இயக்கத்துக்கும் கிடைக்காத பேருதவி விடுதலைப் புலிகளுக்குக் கிடைக்கிறது. தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்ரீமான் எம்.ஜி. ராமசந்திரன் அவர்கள் காலத்துக்கு காலம் புலிகளுக்குக் கோடிக் கணக்கில்பணஉதவி செய்கிறார். புலிகள் இயக்கத் தலைவர் மீது அத்தனை அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார்."

'அன்ரிஒருகேள்வி." கோமதி.
'என்ன கேள்வி?"
'அன்ரி, நீங்கள் இயக்கத்தில் சேர்ந்தது பற்றிய கதை கேட்க ஆவலாய் உள்ளது."
'உனது ஆவல் அடுத்த தடவை நிறைவேறும். அதைக் கேட்க மனதில் நிரம்ப, மிக நிரம்பத் துணிச்சல் வேண்டும்.

கதை கேட்ட பிள்ளைகள் கேற்றைத் தாண்டி வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் வரமுன்னர் என்னைப் பற்றிப்பிடித்து உலுக்கி வதக்கிக் கொண்டிருந்த அந்த அந்தகாரக் கொடிய ஞாபகம் மீண்டும் வந்து வாட்டிவதைக்கத் தொடங்கியது. வாய்விட்டுக் கத்தினால் கொஞ்சம் வேதனை குறையும். தார்ப்பாய்க் கூடாரத்துள் நின்று அழுது கத்தினால் வீதிக்குக் கேட்கும். மாட்டுத்தொழுவத்துக்குச் சென்றேன்.

கடவுளே, என்னை ஏன் பெண்ணாய்ப் படைத்தாய்? ஏன் அழகாய்ப் படைத்தாய்? ஏன் கொள்ளிக் கண்களை ஏவி வதைக்கிறாய்? ஐயா, நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன். தினம் தினம் உன்னைப் பூசிக்கிறேன். மலர் சாத்துகிறேன். அதற்குப் பரிசு நித்தம் நித்தம் கொடும் சித்திரவதையா? துருபதன் படலம் முடிந்து துடித்துப் பதைத்து அழுது ஓய்ந்த எனக்கு இன்னும் இன்னும் சோதனையும் வேதனையுமா? அழுகையும் கண்ணீருந்தான் என் வாழ்வா? அதற்கு ஒரு முடிவு வேண்டும். கண்விழித்தால் குமுறியழும் வாழ்க்கைக்குமுடிவுவேண்டும்.

அண்ணை இருந்தால் அந்த நயவஞ்சகனை கொல்ல மனிதகிளைமோர் குண்டு அனுப்பியிருப்பார். அந்த கேடுகெட்ட ஈனப்பிறவி சனியன் குட்டை நாயை உயிர் வாழவிடக்கூடாது. கொதித்துத் துள்ளிதுள்ளி ஆர்ப்பரிக்கின்ற இலுப்பெண்ணெய் அண்டாவுள் போட்டு கதறகதற வதைக்கவேணும். அவன் கத்திக்குழறுவதை நான் பார்க்க வேண்டும். பொரிந்து முறுகிய இறைச்சித் துண்டங்களை வெட்டி வெட்டி தெரு நாய்களுக்கும் அண்டங் காகங்களுக்கும் வீசவேணும். அது விசப் புடையன்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
கோமதி தார்ப்பாய்க் கூடார வாசலில் நின்று என்னை ஏக்கமுடன் அவதானிப்பது எனக்குத் தெரியாது. தற்செயலாகக் கண்டதும்,அவளைநோக்கி நகர்ந்தேன்.

என்ன கோமதி திரும்பி வந்திருக்கிறாய்?”
இன்றைக்கு வீட்டில் மான் இறைச்சி காச்சினது. உங்களுக்கு கொஞ்சம் கொண்டு வந்தனான். உள்ளே அலுமினியச் சட்டிக்குள் மூடி வைத்திருக்கிறேன்.
நீ பிள்ளை கோமதி பொழுதுபட்ட மைம்மலுக்கை தனிய வந்திருக்கிறாய். ஆமிக்காரன் பக்கத்திலே புதிதாய் வாடி போட்டிருக்கிறான். எங்கே கழுகுமாதிரி இறாஞ்சிக்கொண்டு போகலாம் என்று பேயாய் அலையிறான்கள். கவனம்.
நான் தனிய வரவில்லை. அம்மா றோட்டிலே நிற்கிறார்.

எல்லாருக்கும் புரியுது. பெட்டைப் பிள்ளைகளைப் பெத்தவர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். சரி. கோமதி. கறி அனுப்பியதற்கு அம்மாவுக்கு எனது நன்றியைச் சொல்லுங்கள்.
நான் வாறன் அன்ரி.
இராணுவ கொடுமை இல்லாமல் என்றும் நலமே வாழ என் வாழ்த்துக்கள்.

கோமதி ஓடிஓடிச் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றேன். என் வாய் முணுமுணுத்தது: சின்னப் பிள்ளை என்றாலும் எவ்வளவு புத்திசாதுரியமான பிள்ளை. நான் தலையில் அடித்து கத்திக் குளறியதை பார்த்துக்கொண்டு நின்ற கோமதி அது பற்றி வாய் திறக்கவில்லை. தவிர்க்க முடியாத மனித வாழ்வின் அவலங்கள் கோமதிக்கும் புரிகிறது.

*** தொடரும்... ***

No comments:

Post a comment