Wednesday, 3 December 2014

இனி ஒரு விதி செய்வோம்! - சிறுகதை              

 ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
  கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
  கோடி என்றால் அது பெரிதாமோ?’
-              பாரதியார்

அவர்கள் சூனிய வெளியையே நித்தமும் தரிசனம் செய்பவர்கள். நாளைய பொழுதை ஒருபோதுமே நினைத்துப் பார்க்காதவர்கள். இருட்டு உலகிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் மனம் - உறுதி கொண்டது, தெளிவானது, சலனமற்றது, ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்கியது.

 பகலிலே அலைந்து திரிவார்கள். இரவிலே உறக்கவலையில் சிக்குண்டு, கடை களுக்கு முன்பாகக் கூடுவார்கள். சீமெந்துத்தரை - இரவு அவர்களின் கட்டில். அதற்காக அவர்கள் கடை முதலாழிமாருக்கு பணம் ஒன்றுமே கொடுப்பதில்லை. மாறாக நிறைய வாங்கிக் கட்டுவார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை. வழக்கம் போல பூமி தனது இருட்போர்வையை இழுத்துப் போர்த்தி, நிர்வாணத்தை மூடத் தொடங்கும் நேரம். கடைகளுக்கு முன்பாகவுள்ள பாடசாலையில் பாட்டுப்புலவன் பாரதிக்கு விழா. மறைந்து, மறந்து போயிருக்கும் அவரது கருத்துக்கள், சிந்தனைகள், பாடல்களை மீள நினைவிற்குக் கொண்டு வரும் இன்ப நன்நாள்.

விடுதலைக்காகப்  பாடுபட்ட பாரதியார் ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்திர ண்டாம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக...அரங்கத்தைச் சொற்கள் ஆட்சி புரிகின்றன.

இங்கே ஒற்றைக் கையின் அரைப்பகுதியை இழந்த கைராசி, காலொன்றினைக் காணாத சரவணன், விழிகளிலே நிரந்தர இருளைத் தேக்கி வைத்திருக்கும் கண்ணப்பன் இவர்கள் மூவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்கள்தான் சீமெந்து அரங்கத்தின்கதாநாயகர்கள். மூவரும் இன்று நடந்த நிகழ்வுகளைப் பகிரப் போகின்றார்கள்.

“.. .. எனவே முப்பத்தொன்பது வருடங்கள் இவ்வுலகிலே தங்கியிருந்து இறந்தும் இறவாத மனிதராக எம்முடன் தங்கியிருக்கும் கவிமணிக்கு விழா எடுப்பது சாலவும் பொருத்தமானதே!

கை தட்டல்களும், சீழ்க்கை ஒலிகளும் வானில் முழக்கமிட்டன.

வண்டில் வந்து விட்டது. வண்டில் வந்து விட்டது. எங்கே கைராசி?”
அதோ! அந்தப் பள்ளத்துக்குள்ளை இறங்கி பழைய பாண் எடுக்கிறான்.

எடேய், ஒற்றைக் கையா! இங்கே வாடா. மூட்டையைத் தூக்கி எறியன்ரா!

குப்பைக்குள் கிளறி எடுத்த புதைபொருளை, ஒற்றைக் கைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு கால்களை விசுக்கி விசுக்கிப் பாய்ந்து வருகின்றான் கைராசி. இன்னொருவன் வந்து மூட்டையைச் சுமக்க முன்னர், தான் அந்த வேலையைச் செய்து விடவேண்டுமென்ற துடிப்பு அவனுக்கு. கைராசியின் ஓட்டத்தைப் பார்த்தவிட்ட முதலாழியின் எட்டு வயது மகன் நிலத்தை விட்டு எழுந்து துள்ளிக் துள்ளிக் குதித்துச் சிரித்தான்.

பாணைத் திண்டிட்டு ..
இல்லை முதலிலை தூக்கு.

வாய் எல்லாம் எச்சில் ஒழுகப் பாண் துண்டைக் கதவடியில் வைத்துவிட்டு சுமக்கத் தொடங்கிவிட்டான்.

இப்பொழுது அவனது ஊனம்உடைந்து இரத்தம் உடைபெடுத்து ஓடியது.

தம்பி, தூசு பறக்கும் எட்ட நில்தன் மகனைப் பார்த்து முதலாழி கூறியவாறே  தொடர்ந்து மனதிற்குள் மூடைகளை எண்ணத் தொடங்கினார்.

எடேய் கைராசி, உனக்கு எண்ணத் தெரியுந்தானே? எத்தினை போட்டிட்டாய், எங்கை சொல்லு பாப்பம்?”
எட்டு ஐயா.
, பிறகென்ன. உனக்கு இது ஒரு தூசுதானே! கெதியிலை மிச்சத்தையும் போடு பாப்பம்.

கைராசி களைத்து விட்டான். முதுகு வியர்வை வெள்ளத்தில் திளைத்து மூடையை நனைத்தது. கையில் குருதி வழிந்தது. ஒன்பதாவது மூடையைக் கைராசி கொண்டு போகும்போது அந்தப் பாழும் குட்டை பிடிச்ச நாய் குறுக்கே வர, மூடை விழுந்தது. நிலத்தின் மேல் அல்ல - சிறுவனின் மேல்.

அங்கே பாருங்கோ முதலாழி, மூடையைக் குழந்தைக்கு மேலை எறிஞ்சு போட்டுது.

கடைக்குள் பொருட்களை  வாங்க வந்த  அனைவரும் ஒருவரோடு ஒருவர் மோதியபடியே வந்து, வந்த விசையிலேயே செப்பமாகக் கைராசிக்குச் சாத்தினார்கள். ஒரு கை உடலைப் பல கைகள் பதம் பார்த்தன. மல்லாந்து விழுந்த கைராசி, முதலாளியின் காலைக் கட்டிப் பிடித்துக் கும்பிடக் கும்பிட, குதறி இழுத்து அமுக்கிக் கொண்டே போனார் முதலாளி.

ஐயா, நான் சத்தியமா வேணுமெண்டு செய்யேல்லை ஐயா!
குட்டை நாயொன்று இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்க மாட்டாமலோ என்னவோ அது அந்தப் பாண் துண்டையும் தூக்கிக் கொண்டு குடலற ஓட்டம் பிடித்தது.

உனக்கு இண்டைக்குக் கூலி இல்லை. நீ போகலாம்மகனைத் தூக்கித் தோளிலே வைத்துக் கொஞ்சியபடியே, துண்டு வெட்டி கைராசியை வெளியே அனுப்பினார் முதலாளி.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு மூடையளைச் சுமக்கிறம். ஒரு மூடை, அதுவும் கை தவறி விழுந்ததுக்காக இப்படியெல்லாம் என்னை உதைத்தது சரியா? கண்ணு நீ சொல்லு.

காலை அவனுக்கு விழுந்த அடிகள் இன்னமும் மறையாத வடுக்களாக் நின்று, ஈர்ப்பு வலிச் சுண்டல் சுண்டி வலிப்பது போல கைராசிக்கு இருந்தது. கண்ணப்பன் மெல்ல அட்டை ஊருதல்ஊர்ந்து கைராசிக்கு அருகில் அமர்ந்தான். கைராசியின் உடல் மேலே கைகளை ஊன்றித் தடவி, முதுகுத் தோட்ட தழும்புகளின் மேல் அங்கும் இங்கும் அசைந்து ஊனக்கை இருக்குமிடத்தைப் பிடித்துக் கொண்டான்.

பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
 எண்ணிலா நோயுடையார் - இவர்
 எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
 கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர்
 காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்

                அதற்குள் நெஞ்சை அள்ளும் பாக்கள் இரண்டு நிறைவுற்று மூன்றாவது ஆரம்பி ப்பதற்குத் தாள ஒத்திகை ஆரம்பித்தது. புண்ணிலிருந்து வடியும் குருதியை கண்ணப்பனின் கைகள் தடவிக் கொடுத்தன.

உனக்கு முதலாளி அடித்ததை சரவணன் எனக்குச் சொன்ன போது நான் எவ்வளவு துடிதுடிச்சுப் போனன் தெரியுமா?

இரண்டு பற்றுக்கோடுகள் ஒன்றுடன் ஒன்று தழுவி அழுதன. அந்தக் காட்சியைப் பார்க்க உறங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது ஜீவனைத் தவிர, வேறொருவரும் அங்கிருக்கவில்லை. எல்லோருக்கும் விழா - பாரதி விழா. விழா இல்லாவிட்டால் பார்த்துத்தான் விடுவார்களா? வெள்ளைத்திரையில் இப்படி வரும் காட்சிகளைப் பார்த்து அழவும் அனுதாபப்படவுமல்லவா அவர்கள் பிறந்துள்ளார்கள்.

மூன்றாவது ஜீவன் - அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாவது தூண் மறைவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சரவணன். வரும்போது கொண்டு வந்த ஓட்டை விழுந்த காக்கிக் காற்சட்டையும் மேல் சட்டையையும் தனது எதிர்காலச் சொத்தாகக் கொண்டு உறங்குகின்றான். கைகளைக் கோலிஅப்படி நிம்மதியாக அவனைப் போல உறங்குவதற்கு இந்த உலகில் யார் இருக்கின்றனர்?

சரவணன் இந்த இடத்திற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. அன்றிருந்த சூழல் வேறு, இன்றிருப்பது வேறு. ஆனால் எங்கும் ஒரே மனிதர்கள்தான். வீதியொ ன்றில், உடம்பெல்லாம் பஞ்சுக் கொப்பளங்களுடன் முனகிக் கொண்டு இருக்கையில் தான் சரவணனைக் கைராசி கண்டுபிடித்தான்.

வழக்கம்போல பால் கொடுக்கச் செல்கையில், கல் தடுக்கி ஊன்றுகோல் சறுக்கி விடவே பால் போத்தல்களுடன் சரவணன் விழுந்து விட்டான். பயந்து பயந்து வீடு சென்ற அவனுக்குப்  போத்தல்களை உடைத்த குற்றத்திற்காக வீட்டுக்காரி ஊழித் தாண்டவம் ஆடி, ஆவி பழூக்கும் கொதிநீரைப் பன்னீர் தெளிப்பது போல உடம்பெல்லாம் தெளித்திருந்தாள். இதுதான் அவனை ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு எடுத்துச் சென்ற ஏவுகணைப்படலம்.

ஏய். ஏய். சர்ர்... சர்ர்இரண்டுவிதமான ஒலிபேதங்கள் பாட்டு முழக்கத்தையும் மீறிக் கொண்டு கைராசிக்கும் கண்ணப்பனுக்கும் கேட்டது. திரும்பி இருவரும் பார்த்தனர்.

மேல் மாடியிலிருந்து ஒரு கூடை குப்பையானது மூன்றாவது பாவச் சின்னத்தின் மேல் விழுவது அந்த இருட்டிலும் கைராசிக்குத் தெரிந்தது. கண்ணப்பனுக்கு எப்பொழுட்ம் தெரியும் அமாவாசை தெரிந்தது.

குப்பை விழுவதால் ஏற்பட்ட ஒலியல்ல என்பதைப் புரிந்து கொண்ட கைராசி, தேநீர்க் கடைப்பக்கமாகச் செல்லும் ஒருங்கிய பாதை வழியாகப் பின் வளவிற்குள் சென்றான். பரக்கப்பரக்க விழித்த சரவணன் ஊன்றுகோலை எடுத்து தோள்பட்டைக்குள் செருகியவாறே தள்ளாடித் தள்ளாடி பின் தொடர்ந்தான்.

எடேய் விடுங்கடா, யாரோ வருகிற சத்தம் கேட்குதுஅலரிப்பக்கமாக மூவர் ஓடிக்கொண்டிருப்பதைச் சரவணன் கண்டுகொண்டான். அலரிமரத்தின் கீழே, விசர்ப் பொன்னி நினைவிழந்து கிடந்தாள். இற்றைவரைப்ம் வசரிஎன அங்குள்ளவர்களால் சொல்லப்படும் பொன்னி, இன்று இரவு நான்கு வெறியர்களுக்கு விருந்தானாள். பாரதி விழா, ரதி விழாவாகி விட்டது.

கைராசிக்கு ஒரே அதிர்ச்சி. அவன் மூளையைப் போட்டு உடைத்துக் கொண்டான். ஓடிய அந்த நாலு பேரில் நம்ம முதலாளி....

நினைவிழந்த விசரியாக நாதியற்றுக் கிடக்கின்றாள் பொன்னி. எனக் கதறி இருவரும் அழுகின்றனர்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்

இன்றைய கூட்டம் இந்தப் பெண் விடுதலை கீதத்துடன் நிறைவுறுகின்றது. நாளை பாரதியார் நூல்கள் பற்றிய ஆய்வு தொடரும். வணக்கம்.

ஒருமித்த கை தட்டல்கள். இவற்றுடன் அந்த அழுகுரல்கள் சங்கமிக்கின்றன.

இப்பொழுது காய்ந்த சருகு ஒலி மிகைபடக் கேட்கின்றது. கைராசியும் சரவணனும்  நினைவிழந்த பொன்னியின் உடலைச் சுமந்து வந்தனர். பாரதிவிழாவிற்கு ஒட்டிய சுவரொட்டியைக் கிழித்துக் கீழே போட்டார்கள். கண்ணப்பனுக்கு அருகில் அவளைக் கிடத்தினார்கள். இனி ஒரு விதி செய்வோம் - நாடகம்மூடி மறைக்கப்பட்டது.

கூட்டம் முடிவடைந்து புற்றீசல்கள் போல மக்கள் வெள்ளம் வெளியேறியது. கைராசி அறிவும் தெளிவும் பெற்ற அக்கூட்டத்தினிடையே நெளிந்து சுழியோடி ஒருவாறு கார் ஒன்று வருவதைக் கண்டான். ஒரே ஒரு கையால் அதனை மறித்து, அதற்குள் இருந்த சொற்பொழிவாளரிடம் மன்றாடினான். சொற்பொழிவாளர் சிரித்தார்.

ஐயாவுக்கு இன்னும் நாலு கூட்டம் இருக்குதுங்க. வேறை யாரைப்ம் பாருங்கசொற்பொழிவாளருக்குக் காற்று வீசிக் கொண்டிருந்தவர் கூறினார். விர்எனக் கிளம்பியது கார். படீர்எனக் கண்ணாடி நொருங்கிய சத்தம். குனிந்து கல்லொன்றை எடுத்துக் கார் மீது எறிந்துவிட்டுத் திரும்பி ஓடினான் கைராசி.

இப்ப என்ன செய்யிறது? ஆசுப்பத்திரிக்குப் போக வேணும். சரவணன் உன்னட்டை ஏதாவது காசு இருக்குதா?”

சரவணனின் காற்சட்டைப் பொக்கற் கிழிந்து உரித்த கோழி போலத் தொங்கியது.

கண்ணு உன்னட்டை?”
என்ரை காசுப் பேணியை யாரோ விழாவுக்குக் காட்டிறதுக்காகத் தூக்கிக் கொண்டு போய் விட்டாங்கள்காசுடன் பேணியையும் இழந்ததையிட்டு அவனுக்குப் பெரும் துக்கம்.

என்னட்டை இருபது சதமிருக்குஇது சரவணன்.

ஒரு ரூபாவிற்கு ஒரு போர் நிகழுகையில்,

உங்கை பாரடா இண்டைக்கு விசர்ப்பொன்னியை, கண்ணப்பனுக்குப் பக்கத்திலை படுத்திருக்கிறாளடா! அவனுக்கு அடிச்ச யோகம்!!

இரண்டு பேர்உலகம் புரிந்தவர்கள் சொல்ல விசிலடி தொடர்ந்தது.

The Eelanadu - ஈழநாடு வாரமலர், ஞாயிற்றுக்கிழமை (20 – 11 – 1983)


1 comment: