Sunday, 21 December 2014

அந்நிய - உறவுகள்


 சிவநாதன் குடும்பத்தினர் இன்னும் மூண்றுமணி நேரத்தில் மெல்பர்ண் மாநகரில் கால் பதித்துவிடுவார்கள்.  அவர் மனம் 'எயர்போட்டில்' தனக்கு நடக்கப்போகும் வரவேற்பை எண்ணி மகிழ்கிறது. மகிழ்ச்சி வாய்வழியே வந்து இதழோரம் புன்முறுவல் பூத்து நிற்கின்றது. மனைவியும் பிள்ளைகளும் வரவேற்பில் திக்குமுக்காடித் திணறப்போகின்றார்கள். இருக்காதா பின்னே! சிவநாதனுக்கு மெல்பர்ணில் இரண்டு அண்ணன்மாரும் ஒரு தங்கையும் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்களின் அன்புத்தொல்லைக்கு அணை போட முடியாதல்லவா? 'என் வீட்டில் நில்; உன் வீட்டில் நில்' என்று  போட்டி போட்டுக் கொண்டு இவர்களின் காலைக் கையைப் பிடிச்சுக் கெஞ்சப் போகின்றார்கள்.

'எயர் நியூசிலாண்ட்' தனது சில்லுகளை உரசி 'ரன்வேயிலிருந்து' மேலெழும்புகிறது. சிவநாதன் இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்கு வந்தபோது 'எயர்போட்டில்' நடந்த கலாட்டாவை நினைத்துப் பார்த்தார். வாய்விட்டே சிரித்துவிட்டார்.

 அவரது நண்பன் குமார், அவர்கள் நியூசிலாந்திற்கு வருவதற்கு மூன்று கிழமைகள் முன்பதாக வந்துவிட்டான். தங்களுக்கு ஒரு வீடு பாக்கும்படியும் 'எயர்போட்டிற்கு' தங்களைக் கூட்ட வரும்போது இரண்டு கார்களுடன் வரும்படியும் ரெலிபோனில் சொல்லியிருந்தான். குமார் அதைக் காதில் போட்டுக் கொண்டானோ இல்லையோ, 'இஞ்சை நல்ல குளிர். வரேக்கை நல்ல தடிச்ச ஜம்பராப் பார்த்து வாங்கிக் கொண்டு வாங்கோ' என்றான். சிவநாதன் தம்பதியினர் கொழும்பில் எல்லாக் குறுக்குத் தெருக்களிலும் விழுந்தெழும்பி, கடைசியில் முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் சந்திரமண்டலத்திற்குப் போகின்றவர்கள் அணிவது போல ஒரு குளிர் உடுப்பைக் கண்டுபிடித்தார்கள். அதையும் போட்டுக் கொண்டு யானை அசைவது போல அசைந்து பிளேனிலிருந்து இறங்கினார்கள்.

கொண்டுவந்த சாமான்களில் எல்லாம் தப்பிவிட சுளகிற்கு விளக்கம் சொன்னதில் சிவநாதன் களைத்துப் போனார். மனைவி சுளகை எடுத்து சிவநாதனுக்கு விசுக்கிக்காட்டி சுளகைத் தப்ப வைத்தாள். 'மனுவல் ஃபான்' என்றாள் வெள்ளைக்காரப்பெண்மணி. வெளியே வந்து எந்தப்பக்கம் போவது என்று திண்டாடிக் கொண்டிருக்கையில், "சிவநாதன்! சிவநாதன்!!" என்று ஒருவர் அவசர அவசரமாகக் கூப்பிட்டார். சிவநாதன் நாலாபுறமும் பார்க்கின்றார். ஒருவரையும் அடையாளம் தெரியவில்லை. ஏராளமான ஆக்கள். "அது நான் தான்" திரும்பவும் அவரே சொல்கின்றார். அவர்களுக்கு அந்த 'நான் தானை'யும் தெரியவில்லை. அவருக்குப் பக்கத்தில் குமாரின் தலைக்கறுப்பு தெரிந்தது. ஏறக்குறைய முப்பதுபேர் மட்டில் இவர்களைக் கூட்டிச் செல்வதற்காக வந்திருந்தார்கள். கொண்டுவந்த 'பாக்'குகள் எல்லாத்தையும் பறித்து தூக்கினார்கள். 'கார் பார்க்'குக்குள் பத்துக் கார்கள் மட்டில் நின்றன. 'அந்தமாதிரி' வரவேற்பு நடந்தது.

அதன்பிறகு நியூசிலாந்து வாழ்க்கை - வேலையில்லா திண்டாட்டம் - விலைவாசி உயர்வு - சிவநாதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இரண்டு பிள்ளைகளையும் பெற்று வளர்த்துக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்குப் போகின்றார்கள். பக்கத்து வீட்டு வெள்ளை இனத்தவர் பிரிவைத் தாங்கமாட்டாமல் கண்ணீர் விட்டார். முதன் முதலாக ஒரு வெள்ளை கண்ணீர் விட்டது சிவநாதனுக்கும் மனைவிக்கும் அதிசயமாக இருந்தது. நீண்டநாள் நட்பு. வீட்டுக்கார எஜமான் - அவரும் ஒரு வெள்ளைதான், "அவுஸ்திரேலியா போகின்றீர்களா? நன்றாகப் போங்கள். ஆனால் அங்கிருப்பவர்கள் எல்லாம் எங்களைப் போல இருக்கமாட்டார்கள். முரடானவர்கள்" என்றார். "இருக்காதா பின்னே! இங்கிலாந்தில் சிறைக்கைதிகளாக இருந்து அங்கு போனவர்கள்தானே அவர்கள். நாங்கள் சொந்தபந்தங்களைத் தேடித்தான் போகின்றோம். வேரையும் விழுதுகளையும் காண்பதற்குப் போகின்றோம்" என்றார் பெருமிதமாக சிவநாதன்.

இதோ அவுஸ்திரேலியா!

'எயர்ப்போட்டில்' எந்தவித கெடுபிடிகளும் இருக்கவில்லை. நாலு பேரினதும் 'பாக்'குகளை 'கொன்வேயரில்' இருந்து இழுத்தெடுத்து 'றொலி'க்குள் போட்டார் சிவநாதன். 'றொலி' நிரம்பி வழிந்தது. 'றொலி'யையும் தள்ளிக் கொண்டு கைகளிலும் பொதிகள் சகிதம் நாலுபேரும் வெளியே வந்து எட்டிப் பார்க்கின்றனர். எக்கச்சக்கமான சனக்கூட்டம். எப்படித் தனது சொந்தபந்தங்களை அவர்களின் மத்தியில் கண்டுபிடிப்பது? "ஒரு பக்கமா கரையிலை நில்லுங்கோ" எல்லாரிற்கும் ஓடர் போட்டார் சிவநாதன். சொந்தங்களைக் காணப்போகின்றார் எண்ட புளுகத்தில் மனிசி பிள்ளையளுக்குக் 'கெப்பம்' காட்டினார். கரையில் ஒரு ஒதுக்குப் புறமாக நிண்டவர்கள் நிண்டதுதான். நேரம் போகின்றது. ஒருவரையும் காணவில்லை. சனம் மெல்ல மெல்ல விலக 'எயர்ப்போட்' சுவர்தான் தெரிந்தது. "ஒருவேளை வெளியிலை நிண்டு தேடினமோ?" சொல்லிவிட்டு வெளிப்புறமாகச் சென்று தேடுதல் வேட்டை போட்டார். வாகனங்கள் ஒவ்வொன்றாக வந்து நிற்பதும், பிளேனில் வந்தவர்கள் அதில் ஏறுவதுமாக இருந்தார்கள். 'ஏதோ நடந்திருக்க வேணும்' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு திரும்பவும் உள்ளே போய் மனைவி பிள்ளைகளையும் 'றொலி'யையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்.


காத்திருந்ததில் சலிச்சுப் போனார் சிவநாதன். தூரத்தில் மூத்த அண்ணியும் மகளும் வேர்த்து விறுவிறுக்க நடையில் வருவது தெரிந்தது. "என்ன நடந்தது? எங்கை எல்லாரும்?" அவர்களைப் பார்த்துக் கேட்டார். வந்தவர்கள் தங்களைச் சுற்றி ஒருமுறை பார்த்துக் கொண்டார்கள். "நாங்கள் ரண்டு தரம் எயாப்போட்டைச் சுத்திச் சுத்தி ரவுண் அடிச்சுப் பாத்தம். உங்களைக் காணேல்லை. மருமகனும் சாந்தியுமா கொஞ்சத்தூரத்திலை தள்ளிக் காரை நிப்பாட்டி வைச்சிருக்கினம்" அண்ணி மூச்சுவிடாமல் சொன்னா. சாந்தி எண்டு அவா சொன்னது சிவநாதனின் இரண்டாவது அண்ணியைத்தான். "ஏன் கார்ப் பாக்கிலை இஞ்சை கார் விடேலாதோ" வஞ்சகம் இல்லாமல் சிவநாதனின் மனைவி கேட்டாள். "ஒரு கார் பாக் பண்ண ஒன்பது டொலர். இரண்டு காருக்கும் பதினெட்டு டொலர். வேறை வேலை இல்லை. ஒரு ரெலிபோன் கோல் போட்டாக் காணும். 'டக்'கெண்டு ரண்டு பேரும் காரைக் கொண்டு வந்திடுவினம்" என்ற அண்ணியின் புத்திசாலித்தனமான பதிலை, சிவநாதனின் மூத்த மகள் கேட்டுவிட்டு, "அப்ப உங்கடை 'மொபைல்' போனுக்கு காசு வராதோ' என்றாள். "இல்லையே! நாங்கள் ரெலிபோன் செய்யேக்கை அங்கை எங்கடை நம்பர் விழும். எங்கடை நம்பர் விழுந்தா நீங்கள் இஞ்சை வந்திட்டியள் எண்டு அர்த்தம். அவை ரெலிபோனை ரிசீவ் பண்ண மாட்டினம். உடனை இஞ்சை வந்துவிடுவினம்". சிவநாதன் ஒருவிதமான மயக்கத்தில் திகைத்துக் கிடந்தார். மனைவியும் பிள்ளைகளும் வரவேற்பில் திக்குமுக்காடிப் போய் நின்றார்கள்.

No comments:

Post a Comment