Wednesday, 3 December 2014

தந்தையின் வழியில் - சிறுகதைஅது ஒரு காலைப் பொழுது. வெறுமை என்னும் சுமையைச் சுமக்க மாட்டாமல் குஞ்சு நடந்து கொண்டிருந்தாள். நடை என்னும் பதத்திற்கு அர்த்தத்தைக் கற்பிக் காமல் இயங்க மறுத்த கால்கள் முன்னும் பின்னும் கோணி நெளிந்தன.

                காலை இரை குஞ்சுவிற்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவள் வயிறு வெறுமை அடைந்திருக்காது. இப்பொழுது ஒரே பசி!

                 கோவிலுக்குச் சற்றுச் சமீபத்தில் இருந்த சுமை தாங்கிக் கல் மீது, தனது புத்தகப் பொதியை பொத்எனப் போட்டாள். பொதியின் மேல் இருந்த சமய பாடப் புத்தகத்தை அதனின்றும் பிரித்தெடுத்தாள். பென்சிலினால் புத்தகம் மீதிருந்த நீ.குஞ்சு வகுப்பு 8’ இற்கு ஒரு பாரிய வெட்டு. இரண்டுமே மரணித்து விட்டன. அதனைத் தூக்கிக் கொண்டு நேரே - கடைவாய் இரண்டும் சுண்ணாம்பினால் அவிந்த - கடலைக்காரக் கிழவியிடம் சென்றாள். இப்பொழுது கால்கள் நெளியவில்லை. நடை - அசல் நடைதான்.

                “ஆச்சீ! இந்தப் பழம் புத்தகத்தை வைச்சுக் கொண்டு கொஞ்சம் கடலை தாணை!பசிக்கு முன்னே புதுசு, பழசாகி விட்டது.

                கிழவியிடம் கடலையை வங்கியவுடன் ஒன்றினை வெளிக் கோதுடனே வாயிற்குள் போட்டுக் கொண்டாள். மெல்லாமல் அதனை விழுங்கிக் கொண்டாள். மிகுதியை விரல் விட்டு எண்ணத் தொடங்கினாள்.

                “ஒன்று, இரண்டு, மூன்று..... பதினாறுஆறு அம்மாவிற்கு, பத்து எனக்கு. மடியில் ஆறினையும் திணித்துக் கொண்டாள்.

                “குஞ்சு, இஞ்சையாடி நிக்கிறாய்?” தோழி செல்வி பங்கு கேட்டு ஒட்டுண்ணி போலானாள்.

                “ஆச்சீ! உந்தக் காதிலை இருக்கிற பித்தளைத் தோடு எத்தினை இறாத்தல் இருக்கும்?” குறும்புக்காரி போடு போட்டாள்.

                கிழவி இருப்பிடத்தை விட்டு எழுந்து கொள்ளவே, இருவரும் காற்றிற்குள் கைகளைப் புதைத்து, மரதன் ஓட்டப் போட்டியைத் தொடங்கினர். குஞ்சுவிற்கு உடம்பு விட்டுக் குடுக்கவில்லை. பசி கடித்தது. அது பச்சைக் குடலையெல்லாம் நெருடி வருத்தியது. புத்தகக் கட்டையும் எடுத்துக் கொண்டே குஞ்சு அழுகையுடன் ஓட்டத்தைத் தொடர்ந்தாள். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத பசிப் பொக்கிஷங்கள், போட்டியில் பங்கு பெறாமல் நழுவிக் கீழே விழுந்து நசிந்தன.

                                                                                xxx

                நண்பகல் குஞ்சு பசியுடன் வருகிறாள். கடலைக்காரக் கிழவியின் பெட்டிக் கடை வந்தது. பற்றை போல் அடர்ந்திருந்த தலைமயிர் அடவிக்குள் கை விரல்களைச் செருகி விறாண்டினாள். பூனையாட்டம் அடி எடுத்து வைத்த அவள், உடம்பை இடுப்புடன் முறித்து எட்டிப் பார்த்தாள். நல்ல காலம்! கிழவி உள்ளே இருக்கவில்லை. கிடுகு வேலிப் பொந்தல் வழியாகப் பார்த்தாள். கிணற்றடியிலே, தண்ணீரைக் கொட்டிச் சிந்திக் குளித்துக் கொண்டிருந்தாள் அவள்.

                மெல்ல மெல்ல உள்ளே சென்றாள். கடலைச் சுளகிற்குப் பக்கத்திலே இருந்த பெட்டி மீது கூட்டாளிகளுடன் நிர்வாணமாக வீற்றிருந்தது அவளுடைய புத்தகம். கொலுவிருந்த அதனைப் பக்குவமாக எடுத்தாள். நாலைந்து பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தன. பசிக்காக நாலைந்து பக்கங்களை இழந்ததையிட்டு அழுகை அழுகையாக வந்தது. புத்தகக் கட்டின் நடுவில் அதனைச் செருகிக் கொண்டாள். பரம திருப்தி.

                அப்போதுதான் பெட்டிக்குப் பக்கத்தில் இருந்த குறைப்பாண் துண்டு ஒன்று அவள் கண்களை மெல்ல ஈர்த்தது. அதனை ஆயாசத்தோடு எடுத்து முகர்ந்தாள்.

                நாக்கில் எச்சில் ஊறிக் கேட்பாரற்று வழிந்தது. சாப்பிடும் நிலை அவளுக்கு அப்பொழுது இருக்கவில்லை. விரல் ஒன்றினை அதன் மென்மையான பாகத்தினுள் நுழைத்து பஞ்சு போல வந்த துண்டத்தை வாயிற்குள் போட்டாள். வயிற்றிற்கு ஒரே கொண்டாட்டம்.

                திரும்பினாள். மேலே இருந்த சரஸ்வதி படமொன்றினைக் கண்டு கொண்டாள். கைகள் தாமாகவே கூப்பின. தொண்டை வரைப்ம் சென்ற பாண் பொருக்கு, களம் வரையிலும் எழுந்த சத்த ஒலிகளினால்மீண்டும் தன் பழைய பாதையின் வழியே விரைந்தேறி வெளியே வந்து விழுந்தது.

                “நாளைக்கு சமய பாடம் சோதினை எண்டு வாத்தியார் சொன்னவர். அதாலை தான் இந்தப் புத்தகத்தை , அதுவும் என்னுடையதை, களவு எடுக்கிறேன். இண்டைக்கு இரவு முழுதும் படிச்சுப் போட்டு சத்தியமா நாளைக்குக் கொண்டு வந்து வைச்சுடுவன்.மனதிற்குள் மன்னிப்பு வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டாள்.

                கிழவி வாளித் தண்ணீருடன் வந்து கொண்டிருந்தாள். நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. குஞ்சு ஓடத் தொடங்கினாள்.

                                                                                xxx

                                இரவு குடிசையினுள் குப்பி விளக்கின் முன் கைகளை நாடிக்கு முண்டு கொடுத்தவாறே அமர்ந்திருந்த இரண்டுங்கெட்டான் சிறுமியைத் தாய்க்காரி அமைதியாகப் பார்த்தாள். அவள் - நீலவனின் மனைவி - குஞ்சுவின் தாய். பகல் முழுவதும் அயராது உழைத்திருந்த அவள் முகம் களை பறூந்து தொய்ந்து சுருங்கி இருந்தது.

                “அம்மா, அம்மா!ஒன்றுடன் ஒன்று ஒட்டினாற் போலவிருந்த உதடுகளை கணப் பிரளயப் பிளப்பினால் பிரித்தபோது எழுந்த ஈனஸ்வர வார்த்தை.

                ஒன்றையுமே கவனியாது இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள் முடுக்கிவிட்ட இயந்திரம் போலத் திரும்பினாள்.

                “பசிக்குது அம்மா!

                சுருக்கங்கள் விழுந்த தடிக்குச்சிக் கைகளினால் வெற்றிட வயிற்றைத் தடவுகின்ற குஞ்சுவின் வாய் கெஞ்சுகின்றது.

                குஞ்சு நன்றாகப் படிப்பாள். அவளுக்குப் பசி என்றால் என்ன என்று தெரியாமல் தான் வளர்க்க ஆசைப்பட்டாள் அவள். ஆனால், நடைமுறையில்தான் சாத்தியப் படவில்லை.

                “குஞ்சு! நன்றாக உற்றுக் கேள். இன்னும் கொஞ்ச நேரம் இருப்பாயானால் உன் பசிக்கு மருந்து கிடைத்து விடும். சாக்கு விரிச்சிருக்கிறேன். சீக்கிரமாய்ப் போய்ப்படுசொல்லி விட்டு விரைவாக எழுந்து உள்ளே சென்றாள் தாய்.

                “எணை நீ எப்பவும் அப்புவைக் காரணங்காட்டி என்னை மழுங்கடிச்சுப் போடுவாயெணை, நிறையப் படிக்க வேணுமம்மா!சிணுங்கினாள் குஞ்சு.

                அப்பொழுது வெறியினால் அப்பு நீலவன், ‘நாமார்க்கும் குடியல்லோம்’, வீட்டிலிருந்து நாலாவது மூலையிலே திக்கெட்டும் திசைகளிற்கும் கேட்கக்கூடியவாறு ஒலித்துக் கொண்டிருந்தது.

                ‘ஓம்என்ற பரிசுத்தமான குரல், இழுவைக் குரலாகி, முற்றுப் பெறாமல் நீலாம்பரி இராகமாக ஒலித்துக் கொண்டே வீடு வரைக்கும் வந்தது.

                குடிசை வீட்டின் முன் கதவுகள் அடித்துச் சாத்தப்பட்டன.

                ‘படார், படார்

                பயம் குஞ்சுவைப் பற்றிக் கொண்டது. கால்கள் இரண்டும் நிலத்துடன் உதறி பூமி அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. மறுகணம் அகோரப் பசி அதனை முற்றுகையிட்டு குலைத்து விட்டது.

                பசி வந்தால் வயிற்றின் மேல் பலமாக கைகளினால் அடிப்பாள். கொட்டாவி விடுவாள். சோம்புவாள். தூங்கி விடுவாள்.

                ஆனால் இன்று படித்தாக வேண்டும். நாளைக்குப் பரீட்சை. புத்தகத்தை எடுத்துப் பிரித்தால், பசி புத்தக மூலைகளை எல்லாம் கிழித்து தின்று விட்டது.

                பசி..... பசி..... பசி. பாழாய்ப்போன பசி. காலையில் உதயமாகி தொடரும் நிழல் போலத் தொடர்ந்து இரவு வரை வந்து விட்டது.

                “அம்மா, அம்மா! அப்பு சொல்லுவார் மனிதன் பிறந்த நாள் தொட்டு சாகும் வரையும் பசிக்குமாம். மெய்தானே அம்மா.

                சத்தம் வருவதற்கு குறைந்தது சதமாவது இருக்க வேண்டும். அவளிடம் சதமும் இல்லை. அதனால் சத்தமும் இல்லை. அவள் படுத்து விட்டாள்.

                சிறிது நேர பவனியில்.... குடிசையை ஒருமுறை சுற்றிப் பவனி வந்தன குஞ்சுவின் கண்கள். திடீரென எழுந்து நின்றாள். பலகை ஒன்றை எடுத்து வைத்து அதன் மேல் ஏறிக் கூரையினுள் கைகளைப் புதைத்தாள். கையில் ஒரு நெருப்புப் பெட்டி அகப்பட்டது. அதற்குள் மூன்று பீடிகள், நான்கு ஐந்து நெருப்புக் குச்சுகள். அப்புவின் அரிய சொத்து மகள் கையில்.

                அப்புவும் நேரத்துக்குச் சாப்பிடுவது இல்லை. ஆனால் இப்படியே பீடிப் புகையை ஊதி வயிற்றுப் புகைச்சலைத் தணித்துக் கொள்கிறார். அந்த வழியைப் பின்பற்றினால் என்ன?

                தன் வேலையைத் தொடங்கினாள் குஞ்சு. புகை வளையங்கள் கணப்பொழுது தோன்றி மறைந்தன. முதல் இழுவையில் புகைமண்டலம் எழுந்து தொண்டையை ஒரு தாக்குத் தாக்கிற்று. காரமான ஏதோ ஒரு பொருள் தொண்டையை அரிக்கத் தொடங்கியது.

                “க்கும், க்கும்தொடர்ந்து மூன்று தடவைகள் இதே க்கும்’. சற்று நேரத்தின் பின் இந்த ஒலிக்கு ஒரு குடமுழுக்கு.

                ‘ஓம்என்ற இழுவையுடன் வந்து சேர்ந்த நீலவன் உறுமத் தொடங்கினான்.

எடியே பாக்கியம், பாக்கியம். கதவைத் திறக்கிறியா, அல்லது திறக்க வைக்கட்டுமா?”

பாக்கியத்திற்கும் அதே பசி. பஞ்சு மெத்தையாகிய வைக்கோற்  போரிலே பொய்யாக பாதித் தூக்கத்தை முறூத்து விட்டாள்.

பாக்கியம், பாக்கியம்சற்று நேரம் இதே உறுமல்.

இறுதிப் புகையை குஞ்சு வெளியிட்டபோது கண் விழித்த பாக்கியம் அதைக் கண்டு விட்டாள். பத்திரகாளியாகி அவளை அடிப்பதற்காக ஓடிவந்தாள். அதே நேரம் டமார் டமார்என்று  ஒரு அதிர்வு. கதவு திறந்து கொண்டது.

வாசலில் கோபாவேசத்துடன் நின்றான் நீலவன். மதுவெறியில் சிவந்திருந்த அவன் கண்களில் விளக்குச் சுடரின் பிரதிபலிப்பைக் காணப் பயங்கரமாக இருந்தது.

தனது ஒரே பிள்ளை, அதுவும் பெண்பிள்ளை பீடி புகைக்கிறாளா? எந்தத் தந்தையும் தான் செய்யும் தவறுகளைத் தனது பிள்ளைகள் செய்யக்கூடாது என்றே விரும்புவான்.

ஆனால் ஒரே மகள் குஞ்சு செய்து விட்டாளே. அவளை வெட்டிப் புதைத்தால் என்ன?” கோபாவேஷம் ஏற்பட்டது நீலவனுக்கு.

அதே நேரம் மகளை மொத்து மொத்துஎன்று அடித்து நொருக்கினாள் பாக்கியம்.

முளைச்சு மூன்று இலை விடலை. அதுக்குள்ளை அப்பனையே மிஞ்சி விட்டாயேடி பாவிஎன்று பிலாக்கணம் பாடினாள்.

மகளை மனைவி அடிக்கும் ஒவ்வொரு வேளைப்ம் தனது இதயத்தில் அடி விழுவதைப் போல உணர்ந்தான் நீலவன்.

வேண்டாம் பாக்கியம், வேண்டாம். பிள்ளையை அடிக்காதே! எல்லாம் நான் செய்ஞ்ச தவறுதான். பிள்ளையை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கு. இனி நான் குடிக்க மாட்டேன். ஒழுங்காக உழைச்சு உங்களுக்குச் சாப்பாடு போடுவேன்என்று கதறினான் நீலவன்.

நாளை முதல் குடிக்கமாட்டேன்என்று இதற்கு முன் நீலவன் எத்தனையோ தடவைகள் கூறியிருக்கிறாள். ஆயினும் இப்போது அவன் குரலில் தொனிக்கும் உறுதி அவனைப் புது மனிதனாக்கி விடும் என்ற நம்பிக்கை பாக்கியத்திற்கு ஏற்படுகிறது. நம்பிக்கையில்தானே உலகமே இயங்குகிறது.

சிந்தாமணி (18 – 12 – 1983)


No comments:

Post a Comment