Monday, 8 December 2014

வன்னி -(அதிகாரம் 7) - கதிர் பாலசுந்தரம்

சுனாமி கருக்கட்டுகிறது

காலை பத்து மணி. வீதியில் என்ன வித்தியாசமான மனித நடமாட்டம்? கூடாரத்து வாசலில் நின்றபடி அவதானித்தேன்.

வளவு வாயிலில் இரண்டு புதிய வாகனங்கள். கொழும்பு மாநகர இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக வாகனம். வெள்ளை வண்ணம். இன்னும் கறுப்பு ஒன்று. ஐவர் வாகனங்களால் இறங்கி என் வளவுக்குள் கால் வைத்தனர்.
கண்கவரும் மேலை நாட்டு உடைகள். கறுப்பு சப்பாத்துக் கால்களை வேமாகத் தூக்கி வைத்து விரைந்து உள்ளே வந்தனர். ஏதோ அவசர காரியத்துக்குப் போகிறவர்களைப் போல முகங்கள் உசார் நிலையில் காட்சி தந்தன.

கூடாரத்துக்கு மேற்கே புதிதாக எழுந்து கொண்டிருக்கும் வீட்டுப் பக்கம் போனார்கள். அத்திபாரத்தைப் பார்த்தனர். ஒருவர் ஏதோ குறிப்புகள் எழுதினார்.

ஆயிலடி கிராமத்தில் இந்திய பண உதவியில் ஐம்பது வீடுகள் எழுந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றுதான் என்னுடையது. அதனைப் பார்க்கவே வந்திருந்தனர்.

அத்திபாரவேலைமுடிந்திருந்தது.

இந்தியா 13,000 கோடி ரூபாவில் 43,000 வீடுகளை வடமாகாணத்தில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கட்டிக்கொடுக்க முன்வந்தது. மகாத்மா காந்தியின் 142வது பிறந்த தினத்தன்று, ஏனைய பகுதிகளில் ஆரம்பித்த அந்தத் திட்டம், கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் கழித்தே ஆயிலடிக்கு வந்தது. வவுனியா, புதுக்குடியிருப்புப் பகுதிகளில்வீடு கட்டும் பணி பூர்த்தியாகி மக்கள் குடியேறி விட்டனர். ஒவ்வொரு வீடும் இலங்கைப் பணத்தில் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியானது.

வீடு பார்க்க வந்தவர்கள் திரும்பிப் போகும் பொழுது என்னை மிகவும் அக்கறையோடு அவதானித்தனர். இமைகள் வெட்டாமல் கூர்ந்து நோக்கினார்கள். ஒருவர் வந்து என்னோடு பேச எத்தனித்தவர் போலப் பட்டது. வரவில்லை.
யாரோ அவர்களை அழைத்து வந்தவர், நான் முன்னாள் போராளி மேஜர் சிவகாமி என்று வீட்டைப் பார்த்த சமயம் சொல்லியிருக்க வேண்டும். வீட்டைப் பார்க்கப் போகும் பொழுது கூடார வாசலில்தான் நின்றேன். உற்றுக் கவனித்தேன். அப்பொழுது எதுவித சிரத்தையும் காட்டவில்லை.
வாகனத்தில் ஏறுவதைப் பார்த்தேன். எல்லோர் கண்களும் என்மீதுதான் படிந்திருந்தன. வாகனம் நகரத் தொடங்கியது.

வாகனத்துள் இருந்த ஒருவர் கையை வெளியே நீட்டி அசைத்தபடி மறைந்தார். யார் அவர்? என் மனம் விசாரணை செய்தது. அவராக இருக்குமோ என்று அறிய மனம் ஆவலுற்றது. இருக்க முடியாது. எட்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சுமந்து திரியும் மனச் சுமை.

சில நிமிடங்கள் மௌனமாக நின்றேன். மௌனம் கலைந்து பாடசாலையை நோக்கினேன். கட்டிட வேலை, கூரை வேலை முடிந்து ஓடும் போட்டு முடிந்திருந்தது. வெள்ளை அடித்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த கிழமை திறப்பு விழா. கேனல் ரணவீர தான் பிரதம விருந்தினர். இப்பொழுதெல்லாம் வடமாகாணத்தில், போர் நடந்த பிரதேசங்களில், இராணுவத்தினரே பெரிய மனிதர்கள். அவர்கள் விருப்பப்படியே சகலதும் நிகழ்கின்றன. நூல் வெளியீடு, நடன அரங்கேற்றம், திறப்பு விழா என்றாலும் அவர்களது பிரசன்னம் தவிர்க்க முடியாத சூழ்நிலையை எட்டியிருக்கிறது. சிலரது திருமண வைபவங்களில்கூட அவர்களைத் தரிசிக்க முடிகிறது.

எதிரே பாயில் கதை கேட்கும் பிள்ளைகள். முன்னர் எல்லாம் கோமதி வாய் திறந்தாலே ஓவென்று சிரித்தபடிதான் பேசுவாள். அடிக்கடி ஒலிக்கும் அவள் பேச்சும் சிரிப்பொலியும் உற்சாகம் தரும். இப்பொழுது பேசுவதும் இல்லை சிரிப்பதும் இல்லை. இழவு வீட்டில் இருப்பது போல் படும்.
நான் கதையைத் தொடர ஆரம்பித்தேன்.

கறுப்பு யூலை இனக் கலவரத்தை அடுத்துப் பூட்டிய பாடசாலைகள்ஆகஸ்ட் நடுப்பகுதியில் திறந்தன.

யாழ்ப்பாணக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படித்த சகோதரங்கள் நால்வரில்---வீரக்கோன், யோகன், சங்கிலி, நான்---எவரும் இன்னும் கல்லூரிக்குத் திரும்பவில்லை. சித்தப்பா குடும்பத்தின் அகோர மரணம் எங்கள் எல்லோரையும் படு மோசமாய்ப் பாதித்திருந்தது. அப்பா எவ்வளவோ புத்திமதி சொல்லியும், அதட்டியும் மூன்று அண்ணர்களும் இனிமேல் கல்லூரி போவதில்லை என்று அடம்பிடித்தனர்.
நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன்.

அப்பாவும் அந்தப் பேரிடியிலிருந்து மீளவில்லை. வழமையில் ஒன்றவிட்ட ஒரு நாளைக்கு முகச் சவரம் செய்பவர். தாடி வளர்ந்திருந்தது. தலைமுடி தன்பாட்டில் வளர்ந்து  அவலட்சணமாய்க் காட்சி கொடுத்தது. அம்மா சொல்லிக் களைத்து விட்டார்.

அண்ணன்மார் சிங்களவனைப் பழிக்குப்பழி வாங்கத் துடித்தனர்.

ஆயுத இயக்கங்களின் ஆரம்பகாலம். எங்கே அவை இருக்கின்றன ஏன் இருக்கின்றன என்பது அப்போது தெரியாது. பலருக்கும் தெரியாது. தமிழர் அரசியல் கட்சிகளுடன் தொற்றிக் கொண்டு திரிபவர்களுக்கே கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருந்தது.

நான் மீண்டும் சித்தப்பா குடும்பக் கதைக்கு வருகிறேன். அவர்களின் மறைவையடுத்து அண்ணன்மார் அடிக்கடி, எங்கள் வளவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாட்டுத் தொழுவத்தில் கூடி சிங்கள விரோத வன்முறைச் சிந்தனைகளில் ஈடுபட்டனர். அது ஒரு நீண்ட தகரக் கொட்டில். எண்பது மாடுகள் படுத்து உறங்கும் இடம். சீமெந்தினால் ஆன நிலம். கிழமைக்கு ஒரு தடவை பைப்பால் நீரடித்துச் சுத்தப்படுத்துகிறவர்கள்.

நான் போனால் அண்ணன்மார் ஏசித் துரத்துவார்கள்.
'எடியே பெட்டைகளுக்கு என்னடி இங்கே வேலை?"
ஆளுக்கு ஐம்பது சிங்களவனைக் கொல்வதே அவர்களது நோக்கமாகத் தெரிந்தது. இயக்கங்களை தேடிப் போகும் மனோதைரியத்தை அப்பொழுதுஅடையவில்லை.
மூத்தண்ணருக்கு வயது பதினைந்து. 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். அகோர சோகத்தின் கொடுமை அவர்களை வயதுக்கு மீறிய சிந்தனைகளில் ஈடுபடுத்தியது. அவர்கள் பேசுவதை கேட்டுக்கேட்டு நானும் சிங்களவர்களைக் கொல்ல வேண்டும் என்று எண்ணத் தலைப்பட்டேன்.

பன்னிரண்டு வயதுப் பருவமெய்தாத பெண், நான். கற்பனையிலும் சந்திக்க முடியாத பயங்கரத் துடிப்பு. வாகனத்தோடு இலக்கியா உயிர் துடித்துப் பதைபதைக்க எரிந்து மாண்ட நினைவு என் மனதில் சதா துயரத்தை வளர்த்தது. எரியும் போது இலக்கியா எவ்வாறு துடிதுடித் திருப்பாள் என்று கற்பனை பண்ணுவேன். என் நரம்புகள் கொதிக்கும். குருதி துடிக்கும். கண்கள் நெருப்பைக்கக்கும். நாலு காடைச் சிங்களவனைக் குத்திக் கொல்லத் துடிப்பேன்.

மூத்தண்ணாஒருநாள் நெடுங்கேணிக்குப் போய் வந்ததும், தம்பி அண்ணா யோகனையும் ஆசை அண்ணா சங்கிலியையும் சைகை மூலம் அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்துக்குப் போனார். அதனைப் பார்த்த எனக்கு சந்தேகம். நானும் போனேன்.

'கொழும்பு அகதி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாக் கல்லூரிகளிலும் நிரம்பி வழிகின்றனர். இயக்கங்கள் ஆட் சேர்க்கிறார்களாம். அப்படிச் சேர்த்தவர்களை பயிற்சிக்கு இந்தியாவுக்கு அனுப்புகிறார்களாம்." மூத் தண்ணர்வீரக்கோன் கூறினார்.
'அண்ணா, நாங்களும் இயக்கத்துக்குப் போவம்?" யோகன்.
'பிரச்சினை இருக்குது."
'என்ன?"
'இப்ப சேருகிற பெடியள் பெரும்பாலும் படிப்பைக் கைவிட்டவர்கள். படிக்கமாட்டாமல் ஒதுங்கினவர்கள்."
'படிப்புக்கும் சுதந்திர தாகத்துக்கும் என்ன தொடர்பு? வகுப்பிலே மொக்காக இருப்பவன், கெட்டிக்காரப் பையனிலும் கூடிய இனப்பற்று சுதந்திரப்பற்று உள்ளவனாக இருக்கலாம் அல்லவா? படிப்பிலே விண்ணன் எல்லாம் மற்றவர்களைவிட சுதந்திரப்பற்று, இனப்பற்று உள்ளவன் என்று நினைக்கிறீர்களா?"

இரட்டையர்களில் இளையவரான சங்கிலியன் அண்ணா எப்பொழுதும் தர்க்கத்தில் விருப்பமுள்ளவர். அவரது தர்க்கத்தில் நியாயமிருக்கும்.
பெரும்பாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள். எனக்கே பதினைந்து. உங்களுக்கு பதினாலு."

'மூத்தண்ணை எனக்கு பன்னிரண்டு." நான் கையை உயர்த்திச் சொன்னேன்.
'பெட்டைகளை இயக்கத்திலே சேர்க்கிறதில்லை."
'பெட்டைகளையும் இயக்கங்கள் சேர்க்கப் போகுதாம்."

அண்ணாமார் மூவரும் வாயை ஆவென்று வைத்துக் கொண்டு, விரித்த கண் மடல்கள் மூடாமல் என்னைப் பார்த்தனர்.
'உனக்கு எப்படித் தெரியும்?" சங்கிலி.
'நான் வேம்படி மாணவி. அங்கு எல்லாப் புதினமும் தேடி வரும். எனக்கு சிநேகிதி எழுதினவள்."

'அண்ணா, இந்தியா பயிற்சி கொடுக்க ஒருப்படுமா?" ஆசை அண்ணர் சங்கிலி கேட்டார்.
'ஆடி மாத கலவரத்தை அடுத்துப் பிரதமர் கனம் இந்திராகாந்தி அம்மையார் புது டெல்லி பாராளுமன்றத்தில், இனக் கலவரத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர். ஆகஸ்ட் 14, 1983 அன்று பாராளுமன்றத்தில் அதனை இன அழிப்பு என்று நீண்ட உரை நிகழ்த்தி உலகம் பூராவும் தெரிந்து கொள்ளச் செய்தவர். அவர்தான் சிங்கள ஸ்ரீலங்கா அரசு இன அழிப்பில் ஈடுபடுகிறது என்று முதன் முதலில் உலகம் அறிய வைத்தவர்."

'அவ அந்தளவுக்குப் போகக் காரணமென்ன?" சங்கிலி.
'கலவரம் ஆரம்பித்ததும் எதிர் கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை தனது உத்தியோக வாசஸ்தலமான புதுடில்லி 'ராஸ்திரபதி பவனுக்கு" இரகசியமாக அழைத்து கலகம் பற்றி விபரமாக அறிந்து கொண்டார். கலகவேளை மன்னாரில் நின்ற அமிர்தலிங்கம் மாறு வேடம் தரித்து இலங்கையைவிட்டு வெளியேறி சென்னை வழியாக டெல்லி போய்ச் சேர்ந்தார். அமிர்தலிங்கத்துடன் நல்ல ஒட்டு. அடுத்த தினம் நடந்த, ரசிய ஜனாதிபதி பிரதம அதிதியாய்ப் பங்கு கொண்ட குடியரசு வ்pழாவுக்கு அழைத்து மேடையில் தனக்குப் பக்கத்தில் அமர வைக்கும் அளவுக்கு நட்பு." வீரக்கோன்.

'அவர்தான் இந்திரா காந்திக்குச் சொல்லி உந்த ஏற் பாட்டைச் செய்திருக்கிறார். அப்படித்தானே?"
'இல்லை. இது றோ தலைமையில் இரகசியமாக நடக்குதாம்."
'இந்தியாவிலே எங்கே பயிற்சி?'
'உத்தர பிரதேச மலைப் பகுதியில், டீராடன் என்ற ஊரில்தான் முதல் பயிற்சி நிலையமாம். றோவைச் சேர்ந்த சாமி, ரவிவர்மன் என்ற இருவரும் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வழியாக, பெடியளைப் பயிற்சிக்கு எடுக்கிறார்களாம்."
அவ்வேளை அப்பா அங்கு வந்தார். 'என்ன நாலு பேரும் கோட்டை கட்டுறியள்? யாழ்ப்பாணக் கல்லூரிகள் எல்லாம் கொழும்பு அகதிப் பிள்ளைகள் நிறைந்திருக்காம். போனால் நிரம்ப விசயம் அறியலாம் எல்லே. பாடசாலைகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இரண்டு மாதமாகப் போகிறது. பின்னேரம் கொண்டு போய் விடட்டே. படியுங்கள். படிப்புத்தான் வாழ்க்கைக்கு முக்கியம். கௌரவமாகச் சீவிக்கலாம். நீங்களும் என்னைப் போல இந்தக் காட்டுக்குள் வயலை நம்பிச் சீவிக்கப் போறியளோ?"
அண்ணன்மார்ஒருவரைஒருவர் பார்த்தனர்.

'நான் றெடி அப்பா." எழுந்து நின்று சொன்னேன்.
அப்பா நீண்ட நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். ஏதோ அவர் மனதில் உறைத்திருக்க வேண்டும். பன்னிரண்டு வருடம் கண்ணாக வளர்த்த சொந்த இரத்தமல்லவா? சற்று நேரத்தில் அதை மறந்து போனார்.
'அப்பா நீங்கள் நெடுகக் கரைச்சல். சரி நாங்கள் போகிறோம்." மூத்தண்ணா.

அன்று மாலை நால்வரையும் அவரவர் கல்லூரிகளில் இறக்கிவிட்டார். அப்பொழுது அப்பாவுக்குத் தெரியாது ராச நாச்சியார் வம்சக் கதைசூறாவளியாகமாறக் கருக் கட்டியுள்ளமை.

*** தொடரும்.....

No comments:

Post a Comment