Monday, 13 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 25 -
ஆனந்தபுரம் ஆடுகளம்

வழமையில் மாலையில் வரும் பிள்ளைகள் இன்று காலையில் வருகிறார்கள் என்று மனதுள் எண்ணியபடி கிணற்றடியில் நின்று கேற்றைப் பார்த்தேன்.

'அன்ரி உங்கள் கூடாரத்தைச் சுற்றி புல்பூண்டு முளைத்திருக்குது. நுளம்பு நிரம்ப குடிகொண்டு விட்டது. பார்க்கவும் நல்லாயில்லை. பாம்பு பூச்சி வரும். துப்பரவாக்கப் போகிறோம்." கோமதி.
'உங்களுக்கு ஏன் பிள்ளைகள் சிரமம். நான் இரவில் புகைப்போடுகிறனான்."
'எங்களுக்கு இது பெரிய வேலை இல்லை, அன்ரி. விளையாட்டு மாதிரி." தங்கன்.

அவர்கள் தேவையான ஆயுதங்கள் கொண்டு வந்திருந்தனர். இரண்டு மணி நேரம் வேலை செய்தார்கள். ஒரு புல்பூண்டும் இல்லாமல் அழகாய் துப்பரவாக்கினார்கள். குப்பைகூளங்கள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்து தீமூட்டினர்.

இராணுவ வீரன் ஒருவன் போட்டிக்கோவில் நின்றான்
நோநா உங்களை நாளைக்கு இராணுவ முகாமுக்கு வரட்டாம்
யார்
கேணல்ரணவீர
நச்சுப்புடையன் - உள் மனம் உறமியது. வருகிறேன் என்று சொல்
அன்று மாலை நேரம்.
'பிள்ளைகள், இன்றைக்கு எனது இறுதிப் போர்க்கள அநுபவம் பற்றிய கதை கேட்கப் போகிறீர்கள்."

கண்மடல்களை அகல விரித்து ஆளை ஆள் பார்த்தனர். புலிகள் வரலாற்றின் பெருஞ் சோகம் மண்டிய காவியம், புலிகளின் உயிர்நாடி விழுந்த காவியம் சொல்லப் போவது அவர்களுக்குத் தெரியாது.
'முடமாகிப் போன என்தன் காலின் கண்ணீர்க் கதை ஆனந்தபுரம் போர்க்களத்தில் முளைத்து எழுந்தது."
பிள்ளைகள் வதனங்களில் இன்னும் ஆச்சரிய ரேகைகள் தெளிவாகத் தெரிந்தன.

புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைந்த ஆனந்தபுரம்ஆறுநாள் போர்க்களம் தென்னைகளும் பனைகளும் நிறைந்த சதுர மைல் இரண்டு கொண்டது. விடுதலைப் புலிகள் ஆயிரத்து அறுநூறு பேரிலும் அதிகமானவர்கள் களத்தில் நின்றனர். அண்ணை, பொட்டர், சூசை, யோகி, தமிழினி தவிர்ந்த அனைத்துஆண், பெண் தளபதிகளும், போர்க்களத்தில். சுற்றி வளைத்து 50,000 சிங்களராணுவம். வானத்தில் வல்லூறுகளாக யுத்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள். கடலில் நீலக் கழுகுகள்.
உணவுமருந்து வெடிபொருள் விநியோக பாதையை சிங்களஇராணுவம் மறைந்திருந்து தாக்கியது. விநியோக வழி வீழ்ந்தது.கொம்மான்டர் தீபன், தளபதி விதுசா - பொட்டரிடம் அவசர மருந்து ஆயுத, உணவு உதவி கோரினர். உணவுப் பொருட்கள் தீர்ந்து போயின. ஒட்டுக்கேட்ட இராணுவம் உக்கிரம் கொண்டது.

ஆனந்தபுரம் போர்க்களத்தின் வடபுலத்தில் ஒரு மைல் தூரத்தில் அண்ணை, பொட்டர் இருவரும் பற்றைகள் சூழ்ந்த பரந்த ஆலமரத்தின் கீழ் நின்றனர். நண்பகல் கடந்துவிட்டது. 'சிவகாமி, உன்னுடைய'பேக் அப்" குழுவுடன் புறப்படு. லோறன்ஸ் தனது 'பேக்அப்'  குழுவுடன் நகரப் போகிறார். அவரோடு சேர்ந்துகொள். பொலபொலவென விடிகிற வேளை அவர்களுக்கு உணவு, மருந்து கிடைக்க வேணும். உணவு தண்ணி மருந்து இல்லாமல் போராடுகிறார்கள்.
சிவகாமி, மனித உயிர் புனிதமானது. அதற்கு விலை பேச முடியாது. போர்க்களத்தில் நிற்கின்ற எமது போராளியின் உயிரும் அடங்கும். எனினும் அவனது வாழ்வும் தாழ்வும் வித்தியாசமானது. அவன் உயிரைதியாக பணயமாக வைக்கிறான். அவனது அறைகூவல்: உயிரை எடு. அல்லது உரிமையைக் கொடு. அதனை மனதில் வைத்துக்கொள்." சொல்லி விட்டு அண்ணை என்னை பார்த்தார்.
சரிஅண்ணை.வெற்றியுடன் வருவோம்."
வாழ்த்துக்கள். சென்று வா சிவகாமி. வெற்றியுடன் திரும்பி வா."

நான் மாலதி அணியின் ஒரு பிரிவுப் பொறுப்பாளர். தொண்ணூறு போராளிகள் எனது கிளைக் குழுவில். பலர் மிக அண்மையில் திரட்டப்பட்டவர்கள். பூரண விருப்ப மின்றிச் சேர்த்தவர்களும் புதியவர்களும் அடங்கும். லோறன்ஸ் அண்ணையின் கீழ் 210 போராளிகள். அவரது அணியிலும் அரைவாசிப் பேர் புதியவர்கள்.

போர்க் களத்தின் வட எல்லையில் முன்னூறு மீட்டர் அகலத்தில் புலிகளின் விநியோக பாதை. எமது அணிகள் அங்கு தயாராக நின்றன.

நாம் அதிகாலை இரண்டு மணிக்கு வட எல்லையுள் தவழ்ந்து தவழ்ந்து புகுந்தோம். எதிரே பனைகள். அப்பால் தென்னைகள். பனைகளைச் சுற்றி சுற்றி முட்புதர்கள். ஈச்சம் பற்றைகள். மெல்லிதாக நிலவு. வெளிச்சம் போதாது. காரிருளை ஊடறுத்துக் காட்டும் லோப் வைத்திருந்தோம். எல்லோரிடமும் இல்லை. நான் பெண்கள் அணியின் முன்னே நகர்ந்தேன். லோறன்ஸ் எல்லோரையும் கண்காணிக்கக் கூடியதாக மையத்தில் நகர்ந்தார். அடிக்கடி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். நாலு மணியாகப் போகிறது. மேலும் நானூறுமீட்டர் போகவேணும்.

'சிவகாமி, இராணுவத்தின் அசுகை எதுவும் தெரியவில்லை. கனதூரம் வந்து விட்டோம். எனக்கு சந்தேகமாய் இருக்கிறது. தாமதித்துப் போவமா?"
வேண்டாம் லோறன்ஸ் அண்ணை. விடிந்து விடும். பின்னர் நகர முடியாது."

முன்னே போராளிகள் நகர்ந்து கொண்டிருக்க, விநியோக பிரிவினர் பின்னே வந்து கொண்டிருந்தனர். கறுப்பு பிளாஸ்டிப்பெட்டிகளுள் பொருட்களை வைத்து கயிறு கட்டி இழுத்தபடி தவழ்ந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தவழ்ந்திருப்போம். இன்னும் அரை மணி நேரத்துள் சேர்ந்து விடுவோம். மிக உற்சாகமாகினோம்.
திடீரென சரமாரியாகத் துப்பாக்கிகள் வெடித்தன. தொடர்ந்து வெடித்து இருபது நிமிடங்கள் ஓயாமல் வெடித்தன.
எனக்குப் புரிந்தது. இரு பக்கத்திலும் இராணுவம். நாங்கள் நகர்வதை ஆரம்பத்தில் கண்டுகொண்டார்களா அல்லது அப்பொழுதுதான் கண்டார்களா என்பது புரியாதிருந்தது.

வாக்கி டோக்கியில் 'எப்படி?"
'எனக்கு ஒன்றும் இல்லை சிவகாமி. இருபக்கமும் நிற்கிறார்கள்." 'ஓம் அண்ணை." 'சிவகாமி, என்ன அனுங்குகிறாய்?" 'காலில் வலியாக இருக்கிறது.ஒருமுறைதேகம் மின்னல் போல திகைத்தது."
புல்லெற் பட்டிருக்கு. மற்றவர்களுக்கு என்ன நடந்திருக்கிறதோ தெரியவில்லை. பலரும் புதியவர்கள். எங்களை முன்நகர விடார்கள். ஒருவர் தன்னும் மிச்சம் இல்லாமல் முடிப்பார்கள். விடிந்தால் யாரும் எஞ்ச மாட்டார்கள். பின்வாங்குவோம். உடனடியாக வேண்டாம். நான் சைகை தருவேன்."

பலரும் முதல் வெடி ஓசையுடன் பனைகளின் பின்னே பதுங்கிக்கொண்டனர். பனைப் பாதுகாப்பு தேட முடியாதவர்கள் சிக்கிக்கொண்டனர். பற்றைகளின் மறைவில் பதுங்கியவர்களும் சிக்கிக்கொண்டனர்.

பின்வாங்கியவர்கள் தவழ்ந்து தவழ்ந்து காலையில் பொலபொலவென விடியும் வேளை வட எல்லையை மீண்டும் அடைந்தனர். பலர் வரவில்லை. பத்து நிமிடம், பதினைந்து நிமிடத்துக்கு ஒருவராக வந்து கொண்டிருந்தனர். அரைவாசிப் பேர் வந்து சேரவில்லை. நானும் போய்ச் சேரவில்லை. லோறள்ஸ் அண்ணை பதைபதைத்துக்கொண்டு நின்றார். பகல் எட்டு மணியாகிவிட்டது.

துணிந்த இரு பதினைந்து வயதுப் புதியவர்கள் மீண்டும் உள்நோக்கி நகர்ந்தனர். ஆங்காங்கு பலர் காயங்களுடன் நகரமுடியாமல் படுத்திருந்தனர். சிலர் மயங்கிய நிலையில். சிலர் சடலமாக. இராணுவக் கண்களில் படாத தொலைவில் இருப்பதை உணர்ந்தனர்.
எனது கால்களை ஒருவர் பிடிக்க, கைகளை மற்றவர் பிடித்தார். மயக்கம் தெளிந்தேன். தலையைத் திருப்பிப் பார்த்தேன். கைப் பாசையில், என்னருகே அனுங்கியபடி கிடந்த போராளி வெண்ணிலாவைகாவும் படி சொன்னேன்.
பன்னிரண்டு மணி அளவில் கணக்குப் பார்த்தோம் ஆண்கள் 32 பேரும் பெண்கள் 28 பேரும் கணக்கில் இல்லை.
என்னை மாலையில் அண்ணை நின்ற ஆலமரத்தின் கீழ்தரையில், கால்களையும் கைகளையும் பக்கவாட்டில் நீட்டிய படி மல்லாக்காக வளர்த்தியிருந்தனர்.மீண்டும் மயங்கிப் போனேன்.

போர்க்களத்துக்கு விநியோகப் பொருட்கள் போய்ச் சேரவில்லை.உணவு,மருந்து தீர்ந்த நிலையில், வெடி பொருட்கள் கொஞ்சம் எஞ்சியிருந்தது. அது தீரும் வரை போர் புரிந்தனர். அவர்களைச் சுற்றி 50,000 சிங்கள ராணுவம்:

நாற்பது யுத்த ராங்கிகள் தடைகளைத் தகர்த்து மெசீன்கண்கள் கொண்டு சரமாரியாக ஓய்வு ஒழிச்சலின்றிச் சுட்டன.ஸ்ரேல்காரனின் பதினாறு கிபீர் விமானங்கள், சீனனின் கொங்டு கே.பி. ஜெற் ஆறு, சோவியத் யூனியனின் விமானங்கள் பன்னிரண்டு, அமெரிக்காவின் பெல் 212, பெல் 208 பதினைந்து, பாகிஸ்தான் காரனின் காரகோரம் ஜெற் இரண்டு குண்டுகள் வீசின. 1000 கிலோ ராட்சத குண்டுகள், மனிதநாச குண்டுகள், குலைக்குண்டுகள், நச்சுவாயு குண்டுகளை அள்ளி அள்ளி வீசின. போராளிகள் கருகிக்கருகி மாண்டனர்.

விடுதலைப் புலிகளின் தளபதிகள் அனைவரையும்---ஓரிருவர் தவிர---ஆனந்தபுரம் போர்க்களம் காவுகொண்டது. மாலதி அணியின் விசேட கொம்மான்டர் விதுசா அக்கா, கொம்மான்டர்கள் கமலினி, துர்க்கா, சோதியா அணி விசேட கொம்மான்டர் மோகனா, மாங்குயில், இசையருவி, அஜந்தி, வார்தா உட்பட அனைவரும் வீரமரணம் எய்தினர். ஆண்கள் தரப்பில் வடபிராந்திய இராணுவ தளபதி, கண்டாவளையைச் சேர்ந்த கேணல் தீபன் உட்பட---ஓரிருவர் தவிர---சகல தளபதிகளும் வீரமரணம் எய்தினர். சிலரின் நாமங்கள் சொல்கிறேன்: வதிரியைச் சேர்ந்த கடாபி, நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன், சாள்ஸ் அந்தனி, கொம்மாண்டர் அமுதாப், விசேட கொம்மான்டர் கோபித், கபில் அம்மான், ரத்தினம் மாஸ்டர், சசிகுமார் மாஸ்டர், சிலம்பரசன், பன்சன், ரூபன், நேரு,ஜெயம், இனியவன், சித்திராங்கன், கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் அணி கொம்மான்டர்கள் அரசடித்தீவு கீர்த்தி, பெரியபோரதீவு நாகேஸ். இன்னொரு போர்க்களத்தில் போராட தளபதிகள் எவரும் எஞ்சவில்லை.

களத்திலிருந்த இரண்டொருவர் சுற்றி வளைப்பை ஊடறுத்துத் தப்பிச் சென்றனர். கேணல் பானு தப்பிச் செல்லும் வேளை, கொம்மாண்டர் தீபனையும் அழைத்தார். தீபன் தான்தனதுபோராளிகளை களத்தில் விட்டு வர முடியாது என்று முற்றாக மறுத்துவிட்டார். பானு தப்பிச் செல்ல இராணுவம் அரை மணி நேர அவகாசம் ஒதுக்கியது.
ஆனந்தபுரம் பேர்க்களத்தில் விடுதலைப் புலிகள் 1635 பேர் வீரமரணம் எய்தினர். ஸ்ரீலங்கா ராணுவதரப்பில், 2006 மாவிலாறு போர்க்களம் தொடக்கம் 2009 முள்ளி வாய்க்கால் போர்க்களம் வரை 6261 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், 29,551 பேர் படுகாயம் அடைந்தனர்---அப்படி விக்கிபீடியா பேசுகிறது. இந்தப்பதிவு யார் உதவியுமின்றித் தனித்து நின்று தாக்குப் பிடித்த அண்ணையின் வீரம், விவேகம், யுத்த சாதுரியம் என்பன எனக்குப் புகழ் வாய்ந்த யுத்த வீரர்களான யூலிய சீசர், மகா அலெக்சாந்தர், சேரன் செங்குட்டுவன், முதலாவது ராசராச சோழன், முதலாவது மஹேந்திரவர்மனை ஞாபகமூட்டுகின்றன.

ஈழ வரலாற்றில் இராமருக்கும் இராவணனுக்கும் மிடையில் நடந்த லக்கல போர்க்களத்தில், இராமர் பிரம்மாஸ்திரத்தை ஏவி இராவணனைக் கொன்றார். வரலாறு பேசும் மாபெரும் போர்க்களம். லக்கல போர்க்களத்தை அடுத்த இரண்டாம் இடத்தில் உயர்ந்து நிற்கின்றது ஆனந்தபுரம் போர்க்களம். இலங்கை வரலாற்றில் பேசப்படுகிற சீதவாக்கை மன்னன் மாய துன்னை போர்த்துக்கீசரைத் துவசம் செய்த முல்லேரியா போர்க்களம், யானை மீது ஏறியிருந்து புரிந்த போரில், சிங்கள வாலிபன் துட்டகாமினி, தமிழ் மன்னன் எல்லாளனை வெற்றி கொண்ட அனுராதபுர போர்க்களம் இரண்டையும் பார்க்கிலும் ஆனந்தபுரம் போர்க்களம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அண்ணை ஒற்றை விருட்சமாக நின்று தமிழ் ஈழவிடுதலைப் போரை முன்னெடுத்தார். இனத்துவேசம் வெறிக்கேறிய சிங்கள அரசு, இருபத்தைந்து நாடுகளின் பக்கபலத்தோடு முப்பது ஆண்டுகள் போரிட வேண்டியிருந்தது. ஏறக்குறைய முப்பதாயிரம் இராணுவத்தினரைக் காவுகொடுக்க வேண்டியிருந்தது. நாற்பதினாயிரம் இராணுவத்தினர் ஊனம் அடைந்தனர். அத்தனை பெரும்பலி கொடுத்த பரிதாபத்தின் பின்னரே ஆனந்தபுரம் போர்க்களத்தில் அண்ணையின் தளபதிகளையும், போராளிகளையும் பூண்டோடு அழித்து சிங்கக் கொடியை ஏற்ற முடிந்தது. அதுவே விடுதலைப்புலிகள் களமாடிய இறுதிப் போர்க்களம். உலகவரலாற்றில் தன்னின விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் வரிசையில் அண்ணை ஈடிணையற்று உயர்ந்து வளர்ந்து பிரகாசிக்கின்றார். அவர் நாமம் அது கேட்டு வங்கத்துச் சிங்கங்கள் மூன்று பத்து ஆண்டுகள் பயந்து ஒளிந்து மறைந்து நடுங்கிய பதிவு ஒன்று ஈழ வரலாற்றில்---மஹாவம்ச நீள் தொடரில்---இருப்புக் கொண்டுள்ளது. அதுவே அண்ணையின் மகத்துவம். அதற்கு எந்த வரலாற்றாசிரியனும் இரும்புத் திரை போட முடியாது.

ஆனந்தபுரம் போர்க்களத் தோல்வியோடு, அண்ணைக்கு மேலும் போரை நடத்தமுடியாது என்பது புரிந்தது.

அண்ணையச்  சரணாகதி அடையும்படி வெளிநாடுகளிலிருந்து ஆலோசனைகள்  வந்தன. இரண்டொரு தளபதிகள் மட்டும் எஞ்சியிருந்தனர். அவர்களும் அதனையே ஒப்புவித்தனர்.

அண்ணை இருபத்திநாலு மணி நேரத்தில் தான் முடிவு கூறுவதாகத் தெரிவித்தார்.

இரவு பத்து மணி. மயக்கம் தெளிந்து பார்த்தேன். இடம்மாறும் புதுமாத்தளன் வைத்தியசாலையில் தரையில் கிடந்தேன்.
டாக்டர் சண்முகராசா 'மருந்து முடிந்துவிட்டது. பயமில்லை. கனக்க நடக்காதீர்கள்" என்று சொல்லி நாலு சீவிய பனை மட்டை துண்டுகளை வைத்துக் கட்டினார். யாரோ கமக்கட்டுள் வைத்து நடக்கும் இரண்டுஊன்றுகோல்கள் தந்து உதவினார்.
காயப்பட்டவர்கள் பலர் அனுங்கிக் கொண்டிருந்தனர். மருந்து இல்லை. படுக்கைக்குக் கட்டில்கள் போதாது. சரியான உணவில்லை. போதிய டாக்டர்கள், தாதிகள் இல்லை. பரிதாபக் காட்சி உள்ளத்தை உருக்கியது.கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
ஆனந்தபுரம் போர்க்களம் முடிந்தும் விமானங்கள் குண்டுகள் பொழிந்தன. செல்கள் விழுந்து உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதமுண்டாக்கின.

நீண்ட காலத்தின் பின்னர் என் எண்ணங்களில் அம்மா, அப்பா தோற்றங்கள் அடிக்கடி காட்சி தந்தன. யுத்தக் கொடுமைக்குள் சிக்கினரோ என்ற ஏக்கம். எறிகணைகள் குண்டுகளுள் அகப்பட்டனரோ என்ற பயம்.

வன்னி மக்கள் யாவரும் முல்லைத்தீவை அண்டிய அரசபாதுகாப்பு வலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். ஓடுபவர்கள் குண்டு, செல்வீச்சு களில் அகப்பட்டு மரணித்துக் கொண்டிருந்தனர். காயப்பட்டு நடக்க முடியாதவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் அழும் பெற்றார். தூக்கிச் செல்ல முடியாதுவீதியோரத்தில் கிடக்கும் வயோதிபர். பிரேதத்தை புதைக்க முடியாமல் அவத்தைப்படும் மகள். அறுந்த கையில் இருந்து இரத்தம் ஒழுகஒழுகக் கதறும் பையன். வீதியோரங்களில் கிடக்கும் தேடுவாரற்ற சடலங்கள். அந்த அவலக் காட்சிகள் பற்றிய செய்திகள் என் காதுகளில் விழுந்தன.

ஏன் என்றும் இல்லாதவாறு அம்மா, அப்பா அடிக்கடி மனக்கண்ணில் தரிசனம் தருகிறார்கள். அவர்கள் உயிர்களுக்கு ஏதன் ஆபத்தோ? என் மனம் அழுதது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்னும் வரும்...


No comments:

Post a Comment