Wednesday, 15 April 2015

வர்ணபேதம் - சிறுகதை


ஒவ்வொரு நாட்களையும் எண்ணிக் கொண்டிருந்த சிவி இன்று அதிகாலை ஆறுமணிக்கே எழும்பி விட்டாள். ஞாயிற்றுக்கிழமைகளில் வழமையாக பத்துமணி மட்டில்தான் சிவி நித்திரை விட்டு எழும்புவாள். இன்று சிவிக்குப் பரிசளிப்பு விழா. 'ஹரிப்பொட்டர் கலறிங் கொம்பிற்றிசனில்' எட்டுவயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் சிவிக்கு முதலிடம் கிடைத்திருந்தது. பரிசு பெறும் உற்சாகம் அவளை நித்திரையிலிருந்து எழுப்பியிருக்க வேண்டும். பதினொரு மணி மட்டில் 'ஆக்லாந்து' பிரதான நகரத்தினுள்ள நூல் நிலையத்திற்கு வந்து சேரும்படி விழா நடத்துபவர்கள் கேட்டிருந்தார்கள்.

                இந்த வர்ணம் தீட்டும் போட்டியில் சிவி கலந்து கொண்டதே ஒரு தற்செயலான நிகழ்ச்சிதான். ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு அருகாமையிலுள்ள கடைக்கு போய்விட்டு வரும்போதுதான் அந்த பஸ்சைக் கண்டேன். அது ஒரு நடமாடும் நூல் நிலையம். வயது முதிர்ந்தவர்களுக்கும் இயதாவர்களுக்குமாகத்தான் அந்தச் சேவையை அவர்கள் அரம்பித்திருக்க வேண்டும். ஒருதடவை அதை எட்டிப் பார்க்கலாம் என்று போனேன். சொற்ப அளவு புத்தகங்களே அதற்குள் இருந்தன. வயதில் முதிர்ந்த இரண்டு பெண்கள் தாங்கள் வாசித்து முடித்த புத்தகங்களைத் திருப்பிக் குடுத்துக் கொண்டு நின்றார்கள். அதற்குள்ளிருந்த பெண் கனிவுடன் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

 "உங்களுக்குக் குழந்தைகள் உண்டா?" என்று கேட்டபடியே வர்ணம் தீட்டும் அந்தப் பேப்பரை நீட்டினாள். அதைக் கொண்டு வந்து இவருக்குக் காட்டிய போது,
                "ஐந்து வயதுப் பிள்ளைக்கு உது என்னத்திற்கு?" என்று ஏச்சுக் கேட்க வேண்டி வந்தது.

                பிறகு சிவிக்குப் பரிசு கிடைத்த போது அவருக்கும் அது பெருமையாகத்தான் இருந்தது.
                "என்னுடைய மூளைதான் பிள்ளைக்கும!" என்று வீரம் பேசினார்.

                போன ஞாயிற்றுக்கிழமை காரில் 'சிற்றிக்குப்' போய் ஒரு வெள்ளோட்டம் பார்த்து விட்டு வந்தோம். காரை எங்கே நிற்பாட்டுவது? எப்படி நூல் நிலையத்திற்கு 'சோற் கட்டில்' போகலாம் என்பதுபற்றியெல்லாம்  ஒரு அலசு அலசிவிட்டு வந்தோம். அன்று ஒரு ஐம்பது டொலருக்குத் துண்டு வைத்தோம்.

                அப்படிப் பார்த்து வைத்ததால் இன்று எல்லாமே இலகுவாகிவிட்டது. காரை இலவச தரிப்பிடத்தில் நிற்பாட்டிவிட்டு மூவருமாக நடந்து சென்றோம். சிவிதான் முதலில் அதை அவதானித்து விட்டுக் கையைக் காட்டினாள். நூல் நிலையத்து முன் கண்ணாடியில் வெற்றி பெற்றவர்களின் ஓவியங்களை ஒட்டியிருந்தார்கள். எட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கான பட்டியலில் சிவியின் ஓவியம் முதலாவதாக இருந்தது. சிவிக்கு தான் வர்ணம் தீட்டிய ஓவியத்தைப் பார்த்ததில் உற்சாகம் பொங்கியது.

                'ஹரிப்பொட்டர்' புத்தக விற்பனையில் பெரும் சாதனை படைக்கின்றது. J.K.றோலிங்கின் புகழ் எங்கும் பரவியிருக்கின்றது. எங்குமே ஹரிப்பொட்டர் பற்றிய பேச்சுத்தான்.

                நூல் நிலையம் களை கட்டியிருந்தது. உள்ளே ஏறக்குறைய நூறு பேர் மட்டில் இருந்தார்கள். அவர்களும் அங்கும் இங்குமாக ஓடித் திரிந்தார்கள். பெரிய ஆரவாரம். கறுப்பு நிற உடுப்புகளில் இரண்டு பெண்கள் தலையிலே பெரிய குல்லாய் வைத்து நடந்து திரிந்தார்கள்.

                எங்களிடம் 'வீடியோ' இருக்கவில்லை. 'கமரா' மாத்திரம்தான். கமராவினுள் 'பிலிம்' சுருளைப் போட்டு முன் எச்சரிக்கையாக இரண்டு காட்சிகளை 'க்ளிக்' செய்தோம். விழா ஆரம்பிப்பதற்கான கட்டியமாக மேசைக்கு பரிசுப் பொருட்கள் வரத் தொடங்கின. இதோ எட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கான பெயர் விபரங்கள். ஸ்ரிபானி முதலிடம். ஜெனிபர் இரண்டாமிடம். ஸ்ரீபன் மூன்றாமிடம்.

                எங்கே சிவி? சிவி இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். குழந்தையின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

                ஏறக்குறைய பரிசளிப்பு விழா முடியும் தறுவாய்க்கு வந்து விட்டது. இவர் எண்ணெய்ச் சட்டிக்குள் காலை நுழைத்தது போல அங்கும் இங்குமாக ஓடித் திரிந்தார்..

                "பொறுங்கோ. எல்லாம் முடியட்டும். கேட்பம்" சமாதானம் சொன்னேன்.
                "விழா முடிய மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் விடுவினம். உள்ளே போய்க் கேள். நீர்தானே அண்டைக்கு ரெலிபோன் றிசீவ் பண்ணினனிர்."

                "அப்ப எனக்கு இங்கிலிஸ் விளங்கேல்லையெண்டு சொல்ல வாறியளோ? அப்பிடியெண்டா முன்னுக்கு கண்ணாடியிலை ஒட்டியிருக்கிறது என்ன பனங்காய்ப் பணியாரமா?"
               
                உள்ளே போய் நடந்தவற்றை விலாவாரியாக எடுத்துச் சொன்னோம்.

                "சிலவேளை உங்கடை 'லோகல் லைபிறரியிலை' உங்கடை பிள்ளைக்கு முதல் பரிசாக இருக்கலாம். அப்படியெண்டா 'றெமூரா லைபிரரியிலைபோய் விசாரித்தால்தான் தெரியும்" என்றாள் அந்தக் கறுப்பு அங்கி அணிந்திருந்த பெண். அவளை அழைத்துச் சென்று நூல் நிலைய முகப்பிலே ஒட்டியிருந்த  சித்திரங்களைக் காட்டினேன். சிவியின் சித்திரத்தை அங்கே கண்டதும், அவளின் முகம் கறுப்பானது. உள்ளே விறுவிறென்டு நடந்து சென்றாள். பத்து நிமிடங்களாக அவளைக் காணவில்லை. பின்பு அவசர அவசரமாகச் சுற்றிய ஒரு பொதியுடன் வந்தாள்.

                "ஏதோ தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றபடியே சிவியிடம் அதனை நீட்டினாள். தெரிந்தே செய்வது எப்படித் தவறாகும்?
                "என்னுடன் நின்று ஒரு 'போட்டோ' எடுத்துக் கொள்ளுங்களேன்" என்றாள் விடாப்பிடியாக அவள். குழந்தையின் திருப்திக்காக  இரண்டு படங்கள் அவளுடன் எடுத்துக் கொண்டோம்.

                காரிற்குள் ஏறியதும் சிவி பார்சலைப் பிரித்தாள். எல்லாரிற்கும் குடுத்து எஞ்சியது போக மிச்சம் மீதியைக் கட்டி ஒரு பார்சல் பண்ணியிருந்தார்கள்.

                "ஐய! கலறிங் புக், கலர்ப்பென்சில்!" துள்ளிக் குதித்தாள் சிவி.

                'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' கார் சினிமாப் பாட்டுப் பாடியது.

                "இஞ்சாருங்கோ! இப்பதான் எனக்கு ஒண்டு ஞாபகத்துக்கு வருகுது"
                "இப்பவெண்டாலும் வந்துதே!"

                "அண்டைக்கு அந்த வெள்ளைக்காரப்பெண் சிவிக்குப் பரிசு கிடைச்சிருக்கு எண்டு எனக்குச் சொல்லிப் போட்டு, சிவியோடை  கொஞ்ச நேரம் கதைக்கவேணுமெண்டு சொல்லி சிவியோடை கதைச்சவா. நல்லாச் செல்லம் பொழிஞ்சு, ஒண்டுமே தெரியாத எங்கட பிள்ளைக்கு ஆசையை விதைச்சாள். பிறகு என்னோடை கதைக்கேக்கை பிள்ளையின்ர 'சேர் நேம்' என்னெண்டு கேட்டவ. நானும் அழுத்தம் திருத்தமா செல்வகுமாரன் எண்டு சொன்னன். கொஞ்ச நேரமா அவவின்ர சத்தத்தைக் காணேல்ல. பிறகு, 'பாய்எண்டு சொல்லிப் போட்டு அடிச்சு வைச்ச மாதிரிக் கிடந்தது. அப்பவே யோசிச்சனான். ஒருவேளை இந்தச் செல்வகுமாரன்தான் வில்லங்கத்தைக் கொண்டு வந்துதோ. ஏனப்பா உங்கடை அப்பா அம்மாவுக்கு வேறை பெயர் ஒண்டும் கிடைக்கேல்லையோ?"

                "நீர் பெரிய 'மொனிக்கா'. எனக்கு வாற கோபத்துக்கு."

                வாயில் நுழையாதபடிக்கு பிள்ளைகளுக்குப் பெயர் வைத்து, வெள்ளைக்காரர்களுக்கே தண்ணி காட்டலாம். பிள்ளைகள் இவ்விடத்து சூழ்நிலையில் வளருவதால், வார்த்தைகளும் ஸ்ரைலும் சரளமாக வந்து வர்ணஞாலமும் காட்டலாம். ஆனால் இந்த பாழாய்ப்போன நிறத்தை என்ன செய்வது? 'fair & lovely'யும் 'ponds'உம் 'நீ - வாறியா?'க் கிறீமும் எப்பிடித்தான் பூசினாலும் நிறம் கொஞ்சம் தன்னும் மாறுவதாகக் காணோம். இந்தக் 'கலறிங் கொம்பிற்றிசனில்' எப்பிடித்தான் நாம் வெற்றி பெறலாம்?

                சில சமயங்களில் உண்மைகள்கூட மனதிற்கு சுகமாக இருப்பதில்லை.

                "பிள்ளையை ஒருக்கால் திரும்பிப் பாரும். என்ன செய்யுறாள் எண்டு"

                சிவியைத் திரும்பிப் பார்த்தேன். எவ்வளவோ நாட்களாகக் காத்திருந்து, அதிகாலை ஆறுமணியிலிருந்தே விழித்திருந்து, பரிசு பெற்ற பூரிப்பில் உறங்கிப் போயிருந்தாள் அவள்.


ஞானம் (சித்திரை, 2006)


3 comments:

 1. நல்ல பல செய்திகளை வெளியிட்டு வரும் ஐயா கெ.எஸ்.சுதாகர் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். மேலும் பல சிறுகதைகளை எழுதி வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சிறுகதைக்கு என்று தனியாக வலைப்பதிவு இல்லை. இதைத் தொடர்ந்து சிறுகதை வலைப்பதிவாக இதனை கொண்டுவரவேண்டும்.

  ReplyDelete
 2. சுதாகரின் சுருதி சுகமெலாம் தரட்டும்
  அனைவரின் கவனம் அதனிடம் இருக்கும்
  நினைவினில் இருந்திட சுவைபல தரட்டும்
  நித்தமும் சுருதி நிலைத்திட வேண்டும் !

  அன்புடன்
  எம் . ஜெயராமசர்மா.

  ReplyDelete
 3. Nilakili Balamanoharan19 April 2015 at 00:30

  அருமையான சிறுகதை! இப்படியான பல சங்கடங்ளைக் கடந்துதான் நாம் வாழவேண்டும் என்பதுதான் யதார்த்தம் போலிருக்கின்றது! (எமது சொந்த நாட்டில்கூட இப்படியான காரியங்கள் நடைபெற்றதை நான் கண்டிருக்கின்றேன்.)

  ReplyDelete