Monday 6 April 2015

தெ.நித்தியகீர்த்தி

"மெளனமாகக் கண்ணீர் வடிக்கும் சிலரின் மன ஓலங்கள் வலியைத் தரும் வரிகள் ஆகின்றன. அந்த வரிகளுக்குள் உங்கள் வாழ்வின் சில கீறல்களும்....!  கீறல்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டுமா? தூண்டல்கள் உலகின் மனச்சாட்சியைத் தீண்டுமா?" - இந்த வரிகளைத் தாங்கிக் கொண்டு வெளிவர இருந்த நாவல் 'தொப்புள் கொடி'.

'தொப்புள் கொடி' என்ற தனது நாவலை வெளியிடுவதற்கு மூன்று நாட்கள் முன்பதாக தெ.நித்தியகீர்த்தி அவர்கள் 15-10-2009 அன்று மாரடைப்பால் காலமானார்.
1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த இவர், 'கடவுள்  கதைப்பாரா?' என்ற சிறுகதை மூலம் இலக்கிய அறிமுகம் ஆனார். தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் எழுதிய இவர்,  ஞானம், யுகமாயினி சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் நீண்ட காலமாக எழுதி வருபவர். இவரது முதல் நாவலான 'மீட்டாத வீணை' வீரகேசரிப் பிரசுரமாக 1974 இல் வெளியானது. இதனை நூலகத்திட்டத்தில் (http://noolaham.net/project/11/1020/1020.htm) பார்க்கலாம்.  தங்கப்பதக்கம், தங்கம் என் தங்கை, நீதி பிறக்குமா?, கூடு தேடும் பறவைகள், பறந்து செல்லும் பறவைகள் போன்ற பதினைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றியுள்ளார்.


ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்காக அயராது குரல் கொடுத்தவர். கருணை உள்ளம் கொண்ட ஒரு மனிதநேயப் படைப்பாளியான இவர் நியூசிலாந்தில் இருந்த காலங்களில் - வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராகவும், அவுஸ்திரேலியாவில் - விக்றோரியா ஈழத் தமிழ்ச்சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலச்சங்கத்தின் செய்ற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய மாநாடுகளிலும் கருத்துரைகள் சமர்ப்பித்துள்ளார். இவரது ஆங்கிலச் சிறுகதை ஒன்றிற்கும் (Code of conduct) அவுஸ்திரேலியாவில் பரிசு கிடைத்துள்ளது. ஞானம் சஞ்சிகையில் வெளியான இவரது 'போர்வைகள் மறைக்காத பார்வைகள்; என்ற சிறுகதை தமிழ்க் கதைஞர் வட்டத்தின் 2007 ஆம் ஆண்டின் நாலாம் காலாண்டிற்கான முதற்பரிசைப் பெற்றுக் கொண்டது. இவரது திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

No comments:

Post a Comment