Wednesday, 1 April 2015

ஊர் மணம் - தெல்லிப்பழை

ஊர் தெல்லிப்பழை என்றாலும், இதில் வரும் பல அம்சங்கள் தெல்லிப்பழையையும் அதனைச் சூழ்ந்துள்ள கிராமங்களையும் சார்ந்ததாகவே இருக்கும்.

மல்லாகம், அளவெட்டி, அம்பனை, கொல்லங்கலட்டி, மாத்தனை, வீமன்காமம், கட்டுவன், வறுத்தலைவிளான், மாவிட்டரம் என்பன தெல்லிப்பழையைச் சூழ்ந்துள்ள கிராமங்களாகும்.கிராமங்களின் இயற்கை எழில் மிகவும் ரம்மியமானது. ஒவ்வொரு கிராமங்களிலும் வீட்டிற்கு ஒரு கிணறு இருக்கும். கோடை காலங்களில் இவை வற்றிப் போனாலும் நீரிற்குப் பஞ்சம் இருப்பதில்லை. துலாக்கொடியில் வாளியைக் கட்டி தண்ணீரை அள்ளி விடுவோம். குடிப்பது, குளிப்பது, சமையல் செய்வது, தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது எல்லாமே இந்தக் கிணற்று நீரில்தான்.

அனேகமாக ஒவ்வொரு வீடுகளிலும் தென்னை, மா, பலா, வாழை போன்ற மரங்கள் இருக்கும். சில வீடுகளில் கமுகு (இதைப் பாக்கு மரம் எண்டு சொல்லுவோம்), கருவேப்பிலை மரங்களும் இருக்கும்.  தவிர கிராமங்களில் வேம்பு, இலுப்பை, நாவல் போன்ற மரங்களும் செழித்து நிற்கும். ஆடு, மாடு, கோழி, தாரா, வாத்து, வான்கோழி, முயல் போன்றவற்றை வீட்டில் வளர்போம். பாலைப் பெற்றுக் கொள்ளப் பசுவும், கலப்பை பூட்டி உழவும் வேலை வாங்குவதற்கும் காளை மாடும் பயன்படும். கிராமங்களில் காகம், மைனா, கிளி, குயில், புலுணி, செண்பகம் போன்ற பறவைகளைக் காணலாம்.

ஒவ்வொரு வளவையும் சுற்றி அனேகமாக வேலிகள் போடப்பட்டிருக்கும். இதற்கு பனை ஓலை அல்லது தென்னை ஓலையிலிருந்து பின்னப்பட்ட கிடுகுகளை பாவிப்பார்கள்.

 பனை மரம். இதை கற்பகதரு என்று சொல்லுவோம். அனேகமான பனை மரங்கள் சோலை சோலையாக நிற்கும். இதன் பயன்கள் ஏராளம். மரம் வீடு கட்டுவதற்கு பயன்படும். பனை ஓலை - வேலி அடைப்பதற்கும், படுப்பதற்கு பாய் செய்யவும் பயன்படும். பனம்பழம் - பினாட்டு, பனங்காய்ப் பணியாரம் செய்ய உதவும். இங்கே பள்ளிப்பிள்ளைகள் 'roll up' என்று சொல்லி ஏதோ ஒன்றை இழுத்து இழுத்து சாப்பிடுகிறார்களே, அதே போல எமது 'roll up' இந்தப் பனாட்டுத்தான். மற்றும் நொங்கு, பூரான், பனங்கள், பனங்கிழங்கு, புளுக்கொடியல், ஒடியல் மா போன்றவையும் பனையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒடியல் மா என்றவுடன் எல்லோருக்கும் கூழ் ஞாபகம் வரும். பனை மரத்தை ' நட்டாயிரம். பட்டாயிரம்' என்று சொல்லுவார்கள்.

அனிச்சம்பழம், கொய்யாப்பழம், இலந்தைப்பழம், அன்னமுன்னா, விசும்புளிக்காய், , மாதுளம்பழம், விளாம்பளம் - இவை எல்லாம் என்ன என்கின்றீர்களா? இவை அரிதாக எமது ஊரில் கிடைக்கும் பழங்கள்.

பிரயாணம் செய்வதற்கும், சாமான்களை ஏற்றி இறக்குவதற்கும் ( சமயங்களில் மனிதரைக் கூட) கூடுதலானவரை துவிச்சக்கர வண்டிகளையே பாவிக்கின்றோம். முந்தைய காலங்களில் தூரப் பயணங்களுக்கு மாட்டு வண்டில்களைப் பாவித்தார்களாம். ஒற்றை மாட்டுவண்டி, இரட்டை மாட்டுவண்டி என அப்போது இருந்தன. இப்போது மாட்டு வண்டில்கள் அருகி விட்டன. கார் பாவனையும் குறைவு. நாலைந்து கார்களை சந்திகளில் நிற்பாட்டி வைத்திருப்பார்கள். அவசரமாக வைத்தியசாலை போவதற்கும், வேறும் அவசரத் தேவைகளுக்கும் இவற்றைப் பாவிப்பார்கள். போக்குவரத்திற்காக அரச பஸ்களும் மற்றும் மினிவான்களும்தான் கூடுதலாக பாவனையில் உள்ளன. கிராமத்து வீதிகளை அனேகமாக சிரமதானம் மூலம் செப்பனிடுவார்கள்.


தெல்லிப்பழையில் அரசாங்க வைத்தியசாலை ஒன்றும் தனியார் வைத்தியசாலை ஒன்றும் இயங்கி வந்தன. இந்த அரசாங்க வைத்திய சாலையில் மனநோயாளர் பிரிவும் அப்போது இயங்கி வந்தது. மற்றைய வைத்தியசாலைகளில் மனநோயாளர் பிரிவு இல்லாததால், இங்கே அதிகளவான நோயாளிகள் வந்து சேருவார்கள்.
செத்தவீடுகளின்போது ஒப்பாரி வைத்து அழும் பழக்கம் இன்றும் உண்டு. சில மரண ஊர்வலங்களில் பறை மேளம் கூட அடித்துச் செல்வார்கள். இந்தப் பறை மேளம் சுடலை வரை போகும். பெண்கள் குழந்தைகள் சுடலைக்குப் போகும் வழக்கம் கிடையாது.
கலியாணத் தம்பதிகளை, இரண்டு வெள்ளைக்குதிரைகள் பூட்டிய வண்டில்களில் தெருத் தெருவாக கூட்டிச் சென்றதை, எனது தந்தையார் தனது சிறு வயதில் பார்த்ததாக கூறுவார். சாதி வேறுபாடுகள் எமது ஊரிலும்தான் இருந்தன. இதனால் கோவில்களில் ஒரு காலத்தில் சண்டை சச்சரவுகளும் நடந்துள்ளன. தற்போது இவை அருகிக் கொண்டு வருகின்றன.

சீமெந்து தொழிற்சாலை, ஈழத்தின் பிரசித்தி பெற்ற மிகப் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்று. இது தெல்லிப்பழையிலிருந்து ஏறக்குறைய 2Km தொலைவில் இருக்கிறது. மாவிட்டபுரத்தில் அலுமினியம் தொழிற்சாலை, வாளி செய்யும் தொழிற்சாலைகள் இருந்தன.

கொழும்பிலிருந்து புறப்படும் புகையிரதம், பல கிராமங்களை ஊடறுத்துக் கொண்டு காங்கேசந்துறையை  வந்தடையும். காங்கேசந்துறையை சுருக்கமாக K.K.S என்போம். K.K.S இலிருந்து பார்க்கும்போது தெல்லிப்பழை மூன்றாவது புகையிர நிலையமாகும். யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து காங்கேசந்துறையில் முடிவடையும் பெருவீதியை காங்கேசந்துறைவீதி அல்லது K.K.S Road என்போம். இதுவும் தெல்லிபழையை ஊடறுத்துச் செல்கிறது.

ஆரம்ப காலங்களில் கலப்பையையும் உழவு மாடுகளையும் விவசாயத்திற்கு பயன்படுத்தினாலும், காலப்போக்கில் ' டிரக்டக்டர்கள் - அதாவது உழவு இயந்திரங்கள்' ஆக்கிரமித்துக் கொண்டன. மக்களின் பிரதான தொழில் விவசாயமாக இருந்த போதிலும் - தச்சு வேலை, பானை சட்டி செய்தல், சுருட்டுத் தொழில், தறியில் நெசவு செய்தல் போன்ற தொழில்களும் நடைமுறையில் இருந்து வந்தன. நெல்லு, குரக்கன், சோளம் போன்ற தானியங்கள் பயிரிடப்படும். வெற்றிலை, புகையிலையும் பயிரிடுவார்கள். எனது சின்ன வயதில் சூத்திரத்தைப் பார்த்திருக்கின்றேன். எங்கள் ஊரில் அப்போது நாலைந்து சூத்திரங்கள் இருந்தன. சூத்திரம் என்பது கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு பாவிக்கப்படும் ஒரு இயந்திர அமைப்புமுறை. இதை காளை மாடுகள் இழுத்துச் செல்லும். மறுபுறத்தில் தண்ணீர் பாயும்.


ஊர் மக்கள் ஏதோ ஒரு மத வழிபாட்டைக் கைக்கொண்டு அதில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் இந்து மக்கள் வாழ்கிறார்கள். கிறிஸ்தவர்களும் இருக்கின்றார்கள். துர்க்கை அம்மன் கோவில் எமது ஊரிற்குள் அமைந்துள்ள மிகப்பிரசித்தி பெற்ற ஆலயம். திடீரென எழுச்சி பெற்று வடக்கில் இது பிரபலமானது. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இந்தக் கோவிலைக் கட்டி நிர்வகித்ததில் பெரும் பங்கு வகிக்தார். பயங்கரமான கோர உருவம் கொண்ட துர்க்கை அம்மன், நவராத்திரி விழாவில் வரும் மூன்று நாட்களும் சாந்த குணம் கொண்டதாக மாறும். அயலிலே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை சிவன் கோவில், அளவெட்டி குப்பிளாவளைப் பிள்ளையார் கோவில் என்பவை உள்ளன. விஷேசமான நாட்களில் 'லவுட் ஸ்பீக்கர்' மூலம் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். நாதஸ்வர இசை முழங்கும். இரவுகளில் கதாப்பிரசங்கம் நடக்கும். வெள்ளிக்கிழமைகளில் கூடுதலான மக்கள் திரண்டு கோவிலிற்குப் போவார்கள். தெல்லிப்பழையும் அதைச் சுற்றிய கிராமங்களிலுமாக ஏறக்குறைய 75 கோவில்கள் உள்ளன.

ஒவ்வொரு வருஷமும் தைப்பொங்கல், சிவராத்திரி, சித்திரா பெளர்ணமி, தீபாவளி, நவராத்திரி, திருவெம்பாவை, கிறிஸ்மஸ் பண்டிகை என வந்து போகும். திருவெம்பாவைக் காலங்களில் சுவாமியையும் தூக்கிக் கொண்டு, பக்திப் பாடல்களைப் பாடியபடியே ஊர் ஊராக செல்வோம். புக்கை, அவல், வடை, சுண்டல் என வீடுகளில் கிடைக்கும். நவராத்திரியில் வாளை வெட்டு விசேஷம். தீபாவளிக் காலங்களில் விசேடமாக போர்த்தேங்காய் உடைத்தல், மாட்டுசவாரி, கோழிச்சண்டை நடக்கும். கீரிமலைக்குப் போகும் பாதையில் கவுணாவத்தையில் வேள்வி நடக்கும். ஆடு, கோழிகளின் தலைகள் அங்கே உருளும்.

சாதாரண்மாக சீசனுக்குத் தகுந்தமாதிரி பட்டம் விடுதல் எட்டுப்பாத்தி, போளை அடித்தல், கிட்டி, கிரிக்கெட், உதைபந்தாடம் என்று விளையாடுவோம். பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் கிரிக்கெட், உதைபந்தாட்டப் போட்டிகள் சிலவேளைகளில் அடிதடியில் முடிவடையும்.

திருவிழாக்காலங்களில் வீடுகள் களை கட்டும். தூரத்தே இருக்கும் உறவினர்கள் எல்லாம் வந்து வீடுகளில் தங்கி விடுவார்கள். ஆக முந்தி வண்டில் மாடு பூட்டி வருவார்கள் எண்டு கேள்விப் பட்டிருக்கின்றேன். பிறகெல்லாம் அப்பிடி இல்லை. ஊரெல்லாம் தண்ணீர்ப்பந்தல்கள் போட்டிருப்பார்கள். சக்கரைத்தண்ணி, மோர் என்பவை கிடைக்கும். பக்தர்கள் - காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி எடுத்துக் கொண்டு போவார்கள். வேட்டைத்திருவிழா, தேர், சப்பறத் திருவிழா, தீர்த்தம் என்பவை பார்க்க சனம் முண்டி அடிக்கும். 'சுவாமி வருகுது தெரியுதா?' என்பார்கள். 'கடலைக்காரி தெரியுறாள்' என்போம்.


சில சிறு கோவில்களில் தீ மிதிப்பதைப் பார்த்திருக்கின்றேன். நிலத்தை சிறிது பள்ளமாக்கி மரங்களைப் போட்டு எரிப்பார்கள். தணல், தங்கம் போல் ஜொலிக்கும் போது அதன் மேலால் நடப்பார்கள். அவர்கள் பாதங்களுக்கு ஒன்றுமே நடப்பதில்லை. எனது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் வீரபத்திரர் கோவிலில் சித்திரா பெளர்ணமியன்று தீ மிதிப்பார்கள். அன்று அரசமரத்தில் லவுட் ஸ்பீக்கர் கட்டி கிராமபோன் கருவி மூலம் பக்திப்பாடல்கள் போடுவார்கள். தீ மிதிப்பில் கிறிஸ்தவர்களும் கலந்து கொள்வார்கள். அவர்களின் பாதங்களுக்கும் ஒன்றும் நேருவதில்லை.

துர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்றதன் பின்புசந்தியில் 'துர்க்கா' என்றொரு சினிமாத் திஜேட்டரும் கட்டப்பட்டது. இது நூல் நிலையத்தின் ஒரு பக்கமாக இருந்தது.

தமிழரசுக் கட்சியின் தந்தையாகிய S.J.V. செல்வநாயகமும் எமது ஊரிலேதான் வசித்து வந்தார். மலாயா நாட்டில் அவர் பிறந்தாலும், தனது சிறுவயதிலேயே தெல்லிப்பழைக்கு வந்து விட்டார். தெல்லிப்பழையின் இரு பிரசித்தி பெற்ற பாடசாலைகள் யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி. செல்வநாயகம் அவர்கள் யூனியன் கல்லூரியிலேயே தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். 1944 இல் அரசியலில் ஈடுபட்டு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக 1947 இல் காங்கேசந்துறை உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார். அதன் பின்பு 1949 இல் தமிழரசுக் கட்சியைத் தொடக்கினார். சமஷ்டி அமைப்பு என்ற கருத்தை முன் வைத்தவரும் அவர்தான்.

19 ஆம் நூற்றாண்டில் மிஷனரிகளின்(missionary) வருகை யாழ்ப்பாணக் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1831 ஆம் ஆண்டளவில் அமெரிக்கன் மிஷன் - வட்டுக்கோட்டை, தெல்லிப்பழை, உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு என்ற ஐந்து இடங்களைத் தெரிவு செய்து தேவாலயங்களை அமைத்தார்கள். ஏறக்குறைய 100 ஆரம்ப பாடசாலைகளையும்(primary schools), ஒரு சில இரண்டாம் நிலைப் பாடசாலைகளையும்(secondary schools) நிறுவினார்கள். அப்படி தெல்லிப்பழையில் நிறுவப்பட்ட அமெரிக்கன் மிஷன் பாடசாலையே பின்னாளில் யூனியன் கல்லூரியாகியது. திரு. ஐ. பி. துரைரட்ணம் அவர்கள் 1935 ஆம் ஆண்டளவில், தெல்லிப்பழையிலிருந்த மிஷனரிகளின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மிஷனரியை பொறுப்பெடுத்த முதல் இலங்கைப் பிரஜை இவர் ஆவார். 

தெல்லிப்பழை அமெரிக்கன் மிஷன் பாடசாலையின் தலைமை ஆசிரியராகவிருந்த தெ.அ.துரையப்பாபிள்ளைஅவர்கள், தமது பதவியைத் துறந்து 1910 ஆம் ஆண்டளவில் மகாஜன ஆங்கில உயர் பாடசாலையை நிறுவினார். இது அம்பனை என்ற பகுதியில் உள்ளது.

கூத்து இரவிரவாக நடக்கும். நடிகமணி வைரமுத்து அரிச்சந்திர மயான காண்டம் போடுவார். வடக்கும் தெற்கும் அப்போது போடப்பட்ட நாடகங்களில் பிரபலமான நாடகம். ஒருமுறை காத்தான் கூத்து பார்க்கப் போயிருந்தேன். தபாற்கந்தோரின் பின்புறமும் மீன் சந்தைக்கு பக்கமாகவுமிருந்த காணிக்குள் அது நடந்தது. அவர்களின் உடுப்புகள் பளிச்சிட்டு மினுங்கி கண்ணைக் கவர்ந்தன. அந்த ஒப்பனையின் இரகசியத்தைப் பார்ப்பதற்காக பின்புறமிருந்த ஒப்பனை அறைக்குப் போனேன். நாலு பக்கமும் துணிகளால் கட்டிய ஒரு தற்காலிக அறை அது. பொட்டுப் பிரித்து உள்ளே என்ன நடக்கின்றது என்று பார்க்க, உள்ளேயிருந்து ஒருவர் தூஷனை வார்த்தைகளுடன் கத்திக் கொண்டு வந்தார். அத்துடன் காத்தான் கூத்துக்கு முழுக்குப் போட்டு விட்டு வீட்டிற்கு ஓடி விட்டேன்.

எங்கள் ஊரிலும் ஒரு ஆறு இருக்கின்றது. 'வழுக்கை ஆறு' என்று பெயர். யூனியன் கல்லூரிக்கு பக்கத்தால் மருவிக் கொண்டு செல்லும் வாய்க்கால்தான் அது. எப்போதாவது மாரி காலங்களில் தண்ணீர் போவதுண்டு. இது எங்கு தொடங்கி - எங்கு முடிவடைகிறது என்பது ஞாபகம் இல்லை. ஆனால் பல கிராமங்களினூடு செல்கின்றது. செங்கை ஆழியானின் ஒரு கதையில் மாடு ஒன்றை தேடிக் கொண்டு இதனூடு  போவார்கள். கதை நெடுகிலும் இந்த வழுக்கை ஆறு வரும். ' நடந்தாய் வாழி' என்ற குறுநாவல் என நினைக்கின்றேன்.

உலகத்தில் ஒவ்வொரு ஊரும் காலத்தின் பரிணாம வளர்ச்சியில் மாறுதல்களைக் கண்டு கொண்டு வருகின்றன. விஞ்ஞான தொழில் நுட்பத்தால் நாடுகள் ஒருபுறம் முன்னேறிச் செல்ல, அதன் எதிர் விழைவால் போரின் உக்கிரம் கொண்டு எமது பிரதேசங்கள் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கின்றன.

எல்லாம் இருந்தது - அன்று. ஆனால் இன்று எதுமே இல்லை.

முப்பது வருடங்கள் நடந்த போரின் உக்கிரத்தால், பல பல 'ஆமிக் காம்ப்'கள் முளைத்தன. அதி உச்ச பாதுகாப்பு வலயம் என்று சொல்லிக் கொண்டு  ஊரெல்லாம் கந்தக மணத்தைப் பரப்பின. பலாலி விமானத் தளத்திலிருக்கும் 'ஆமிக் காம்ப்' நாளொரு வண்ணம் கொழுத்து பூச்சாண்டி காட்டி நிற்கின்றது.

கனவு கண்டோம். கனவும் கலைந்தது, நிஜமும் கலைந்தது.

வடக்குக் கிழக்கில் இப்படி எத்தனையோ கிராமங்கள் உருக்குலைந்து போய் விட்டன.No comments:

Post a Comment