Sunday, 26 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்


அதிகாரம் 27 - சின்னக் கணக்கு

குட்டிப் போட்டிக்கோவில் நின்றுவீதியைப் பார்த்தேன்.

வீதியை அகலமாக்கி, கல்லடுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. காலையில் தொடக்கம் இரண்டு பெரிய கல்நெரிக்கும் எந்திரங்கள் பகல் முழுவதும் இரைந்து கொண்டிருந்தன. வேலை ஆட்கள் எல்லாம் புது முகங்கள். சீன தேச நன்கொடையில் அமைக்கும்வீதி.
வேலையாட்கள் வேலை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.

பிள்ளைகளே, சென்ற வகுப்பில் நாவல் மரத்தின் கீழ் கண்ணயர்ந்து போனேன் என்று கூறி முடித்தேன். இன்று அதன் தொடர்ச்சி.

கண்விழித்த பொழுது இருவர் ஸ்ரெச்சரில் என்னை வளர்த்துவது தெரிந்தது. செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் செல்லவில்லை.

கப்பலில் பிரயாணம் செய்தேன்.
திருகோணமலை வைத்திசாலையில் சிகிச்சை. நோய் முற்றியதால் முழங்காலுக்கு ஆறு அங்குலம் கீழே கால் துண்டாடப்பட்டுவிட்டது. அதிட்டம் கொஞ்சம் என் பக்கம் இருந்தது. 'கவனம். இராணுவத்தினர் புலியா? என்று அறிய வருவர்" என்று எச்சரித்து விட்டுப் போனார் எலும்பு முறிவு டாக்டர் சித்திரவேல்.

சிந்திக்க நேரம் இருந்தது. எனது லட்சணங்கள் காரணமாக  ஒருமுறை என்னைப் பார்த்தவரும், நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பர். யாராவது தாம் தப்ப என்னைப் பணயம் வைக்கலாம். எப்படியும் இராணுவம் நான் யார் என்று கண்டுபிடிக்கும்.

சொல்லி வைத்தது போல அன்று மாலை மூன்று ராணுவத்தினர் பூரண சீருடையில் தோன்றினர். ஒருவர் கேணல் தரத்தில் உள்ளவர். கறுப்பு பிரேம்போட்ட பெரிய வட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். என்னை உற்றுப் பார்த்தார். திகைப்பு முகத்தில் தெரிந்தது. வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

'என்னுடைய பெயர் செனிவரத்தின. கேணல் செனிவரத்தின. உள்ளது சொல்லு. புலி இயக்கத்தில் இருந்ததா?"
வாய் பேசாது தலையை மேலும் கீழும் மெல்லிதாக ஆட்டினேன். ஆம் என்று சைகை செய்தது விளங்கியது. சின்னச் சந்தேகம். திரும்பவும் கேட்டார்.
'புலி இயக்கத்தில் இருந்ததா?"
'ஆம். புலிகள் இயக்கத்தில் உரிமைக்காகப் போராடினேன்."
அந்த வயோதிப மனிதனுக்கு மேலும் ஆச்சரியம். சுற்றிவர மென்பச்சை ஸ்கிறீன் மறைப்பு. கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி ஏனைய சிப்பாய்களுக்கு சைகை காட்டினார். வெளியேறி வாசலில் நின்றனர்.

நோட் கொப்பியை எடுத்தார்.
'பெயர் சொல்லு?"
'சிவகாமி ராசா ராம்."
வயசு?"
முப்பத்தெட்டு."
பிறந்த தினம்?"
'மாச் 24 1971"
ஊர்."
வன்னி, ஆயிலடி."
எந்த வருசம் புலி சேர்ந்தது?"
‘1984."
'புலி பிடித்துப் போனான்."
இல்லை."
அப்போ ஏன் சேர்ந்தது?"

'சித்தப்பா, சித்தி, பிள்ளைகள் இலக்கியா, சீராளன் நால்வரையும், கொழும்பில் சிங்களவர் கறுப்பு யூலை கலவர சமயம் உயிரோடு காருடன் கொளுத்தி சாகடித்தார்கள். உலகத்தை மறந்தேன். சிங்களவன் மட்டுந்தான் என் கண்களில் தெரிந்தான். எண்ணங்களில் வந்தான். பழிக்குபு; பழி வாங்க புலிகள் அமைப்பில் சேர்ந்தேன்."
இலக்கியாவை நினைத்ததும் சிங்களக் கேணல் செனிவரத்ன முன்னே இருக்கிறான் என்பதை மறந்தே போனேன்.

அந்த தலை நரைத்த மனிதன் மௌனமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். வாட்டசாட்டமான உயரமான பெரிய உடம்பு. இராணுவ உடை. நெஞ்சில் மின்னுகிற பட்டிகள். தொடர்ந்தும் விபரம் திரட்டினார். நான் ஒன்றையும் மறைக்கவில்லை.

முகட்டைப் பார்த்து நீண்ட நேரம் யோசித்தார். ஒன்றும் பேசவில்லை. நோட் கொப்பியில் ஆறுதலாக ஏதோ நிரம்ப நேரம் எழுதினார். இடையிடையே கேள்விகள் கேட்டார். போக ஆயத்தமாகியதும் சொன்னார்,
மேஜர் சிவகாமி நோநா, எல்லா சிங்களவனும் பொல்லாதவன் அல்ல. சிங்களவன் பொதுவாய் நல்லவன். உங்கள் தமிழ் ராசாக்கள் ராசேந்திரன், கலிங்க மாகன் அநுரதபுர நகரிலும், பொலனறுவை நகரிலும் சிங்கள சாதிக்குச் செய்த கொடுமை---உடுத்த உடுப்போடு தெற்கே துரத்திப் போட்டான்கள். கொட்டியாவும் அவங்க மாதிரிதானே? நாங்கள் சிங்கள சாதி யாழ்ப்பாணத்திலே அப்படி அநியாயம் பண்ணலே."

'ஏன் பண்ணலே. கோவில்கள் தேவாலயங்கள் பாடசாலைகள் மீது குண்டு வீசி பக்தர்கள், மாணவர்களைக் கொன்றீர்கள்.1800 கோவில்களை தகர்த்துள்ளீர்கள். நவாலி தேவாலயம்மீது குண்டு வீசி 125 பேரைப் பலியெடுத்தீர்கள். வற்றாப்பளை அம்மன்கோவிலில் 26 பேர் பலி. நாகர்கோவில் மகாவித்தியாலம் மீது குண்டு வீசி 71 மாணவர்கள் பலி. மடுவில் பஸ்வண்டியோடு சேர்த்து மாணவர்கள் 17 பேர் உயிர்களைப் பறித்தீர்கள். முல்லைத்தீவில் செஞ்சோலையில் நித்திரையில் வைத்து 67 மாணவிகளைக் குண்டு வீசிக் கொன்றீர்கள்."
பேச்சை நிறுத்தி அவரை உற்றுப் பார்த்தேன். தலை அசைத்தார்.மீண்டும் தொடர்ந்தேன்.
'உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வேளை 9 பேரை சுட்டுப் பொசுக்கினீர்கள். குமுதுனிப் படகில் பிரயாணித்த ஆண் பெண் குழந்தைகள் 23 பேரை வெட்டித் துண்டாடினீங்கள். கிளாலி  கடனீரேரியில் பிரயாணிகள் 100 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டீர்கள். ஏறக்குறைய தொண்ணூறு சதவீத பாடசாலைகளை சேதமாக்கி உள்ளீர்கள். வன்னியில் இராணுவம் வசிக்கிற வீடுகள் தவிர, சகலதையும் நாசம் பண்ணியுள்ளீர்கள். வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்து வீடுகளின் நிலை கதவுகளைக் கழற்றி எடுத்து சிங்கள தேசம் கடத்திப் போயுள்ளீர்கள். கூட்டம் கூட்டமாய்க் கற்பழித்தீர்கள். கதறகதறச் சித்திரவதை செய்தீர்கள். கண்களைத் தோண்டினீங்கள், கண்களைக் கட்டி பிடரியில் சுட்டீர்கள். அடிக்கடி இனக் கலவரம் செய்து உடைமைகளை சூறையாடி எரித்தீங்கள். தமிழர்களைக் கொன்றீர்கள். கர்ப்பிணித் தாயின் வயிற்றைக் கீறிச் சிசுவை எடுத்து இரண்டாய்த் துண்டாடி பைலா ஆடினீர்கள். சரணாகதி அடைந்த பன்னிரண்டு வயதுப் பையனைச் சுட்டுக்கொன்றீர்கள்.இவைஅநியாயம் இல்லையா,"
என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆத்திரம் அடங்கிய பின்னர்தான் பின்விளைவை யோசியாமல் உளறிவிட்டேன் என்பது மனத்தில் பட்டது. அச்சத்தை கொண்டு வந்தது.

கேணல் செனிவரத்தினவின் முகத்தில் எரிச்சல் புகைச்சல் தெரியவில்லை. சாந்தமாக என்னை நோக்கினார். பின்னர் பேசினார்.
'சிவகாமி நோநா, கொட்டியா லொக்கா (பெரியவர் - தலைவர்) மாதிரி நாங்கள் பெரிதாய்க் கொலை செய்ய வில்லை. அநுராதபுர ஸ்ரீமஹாபோதி விகாரையில் 146 பேர், ஹபறனையில் பஸ்வண்டி மறித்து 127 பேர், கொழும்பு மத்திய பஸ் நிலைய தாக்குதல் 118 பேர்,பல்லியக் கொடல-பொலனறுவை 109 பேர், மாத்தளை திகம்பதன குண்டுத் தாக்குதல் 92 பேர், மத்திய வங்கி குண்டு வெடிப்பு 91 பேர், கெப்பிற்றிகொலாவ தாக்குதல் 66, அரந்தலாவ குழந்தைகள் கர்ப்பினிகள் 35, தலதா மாளிகை 12 பேர். தெகிவல குண்டு தாக்குதல் 64 பேர், இன்னும் இருக்குது. நிரம்ப இருக்குது சிவகாமி." சொல்லுங்கள் கேணல் செனிவரத்தின மாத்தையா."
கொன்ற தொகை: மந்திரிகள் 9, பாராமன்ற உறுப்பினர்கள், எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ அமிர்தலிங்கம் உட்பட 27;, உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் 19, அரசியல்வாதிகள் 22;, இராணுவதளபதிகள் 11. பொலிஸ் உத்தியோகத்தர்கள் 8, சிவில் சேவையாளர்கள் 14, ஊடக வியலாளர்கள் 18, கல்விமான்கள் 7;, மதபோதகர்கள் 12, உலகில் கொட்டியா மாதிரி கொடியவன் எவனும் இல்லை. வரலாற்றில் பெரும் கொலைஞன் கொட்டியா லொக்கா."
 ‘மாத்தையா, நீங்கள் வரலாற்றைச் சரியாய்ப் படிக்கவில்லை போலும்."
'நமக்கு வரலாறு பாடஞ் சொல்லாதே, நோநா. கொட்டியாலொக்கா உலகிலேயே மகா கொலைஞன்."
'ஐயா, நான் நியாயம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீங்களே?"
இல்லை. உண்மை பேசியபடியால் உன்னில் எனக்கு நல்ல அபிப்பிராயம். நீ உண்மையான போராளி. அதுதான் உன்னை மிச்சம் பிடிக்கும். அதுதான் பூசா அனுப்பாமல். புனர்வாழ்வுக்குபூந்தோட்டத்துக்கு அனுப்பப்போகிறன். பயப்படாமல் பேசு. தமிழர் அஞ்சி நடுங்கும் பூசாவுக்கு அனுப்ப மாட்டேன்."

'ஐயா, சிங்களவர்கள் காலத்துக்குக் காலம் இனக் கலவரம் செய்தார்கள். குத்து, வெட்டு, கொள்ளை, கொலை. அண்ணை---லொக்கா---போட்ட அடிக்குப் பிறகுதான் இனக்கலவரம் செய்வதை நினைத்தும் பார்க்க வில்லை.."
என் வார்த்தைகளைக் கேட்டதும் கேணல் செனிவரத்தினவின் முகத்தில் கேள்விக்குறிகள் ஓடி ஒடி நெளிந்தன.உண்மையா என்று வரலாற்றைப் புரட்டினார் போலும். நான் தொடர்ந்தேன்.

'ஐயா, உலக வரலாற்றில், பெருந்தலைவர்கள் செய்த கொலைக்கு கணக்குச் சொல்கிறேன். அதன் பிறகு அண்ணையின் கொலைகளை கணக்குப் பார்ப்போம்."
சொல்லு சிவகாமி நோநா."
'சிலர் மட்டுமே கொன்ற கணக்கு சொல்கிறேன்:

சீனாவில் மாசே துங் 400,00,000
வியற்நாமில் பொல் பொற் 16,70,000
ரசியாவில் ஸ்ராலின் 200,00,000
யூகோசிலேவியாவில் ரிற்ரோ 10,72,000
ஜேர்மனியில் ஹிட்லர் 50,00,000
வடகொரியாவில் கிம்ஐஐசங 150,00,000
உகன்டாஇடிஅமின் 3,00,000
பெல்ஜியம் லியோபோல்ட்
கொங்கோவில் 80,00,000

இவர்களும், இவர்களைப் போன்று விடுலைப் போர்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஏனைய தலைவர்களும் பல லட்சக்கணக்கில் கொலை செய்துள்ளனர். சிலர் கோடிக் கணக்கில்.விடுதலைப் போராட்டத்தில் கொலை தவிர்க்க முடியாத அம்சமாகக் காணப்படுகின்றது. அவ்வாறான சூழ்நிலையிலேதான் அண்ணை நீண்ட முப்பது ஆண்டு காலப் பகுதியில் மிகமிகக் குறைந்தளவு கொலைகள் செய்துள்ளார். ஏனைய பலருடன் ஒப்பிடுகையில் அண்ணையின் கொலை ஒரு சதவீதம்கூட இல்லை. மாசேதுங்குடன் ஒப்பிடுகையில் .05 சதவீதம். ஸ்ராலினுடன் .1 சதவீதம்.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக அண்ணை கொன்ற இராணுவம் 29,000 இருக்கலாம். யுத்தகளத்துக்கு வெளியே கொன்ற சிவிலியன்கள்ஈராயிரத்தைத் தாண்டாது."
அந்த ஈராயிரத்தைத்தான் நான் போக்கிரித்தனமான கொலை என்று பேசுகிறேன். அதை நீ, மேஜர் சிவகாமி சரி என்று சொல்கிறாயா?"
'அது பற்றி நான் பேச வரவில்லை, ஐயா. நீங்கள் அண்ணை உலகின் மிகப் பெரும் கொலைஞன் என்று கூறியதால் சின்னக்கணக்குச் சொன்னேன்."
உன்னுடைய கணக்கு தர்க்கப்படி சரி. சட்டப்படியும், தர்மபபடியும் தவறு. நான் வருகிறேன், மேஜர் சிவகாமி, நல்ல சிங்களவனையும்சந்திப்பாய். குட் பை."
'ஐயா, நீங்கள் சொன்ன நல்ல சிங்களவனை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறிவிட்டு பலத்துச் சிரித்தேன். கேணல் செனிவிரத்தினவும் ஓவென்று உரத்துச் சிரித்தபடி புறப்பட்டார்.

வைத்திசாலையில் மேலும் மூன்று கிழமைகள் டாக்டர் சித்திரவேல் வைத்திருந்தார். இராணுவம் வந்து வந்து திரும்பியது. பின்னர் ஒரு நாள் கேணல் செனிவரத்தின வந்து வாகனத்தில் ஏற்றி வவுனியா அருகில் உள்ள பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் சென்றார்.

முகாம் வாசலில் ஜீப் நின்றது. பின்பக்கத்தில் இருந்த நான் இறங்கினேன். மற்றும் இரு இராணுவத்தினர். அவர்களும் இறங்கினர். சுற்றிப்பார்த்தேன்.

இரண்டு நீண்ட கட்டிடங்கள் எதிரே காட்சி தந்தன. பாடசாலைக் கட்டிடங்கள் போன்றவை. மாலை வேளை. பெண்கள் நெற்போல் விளையாடினர். இன்னொரு புறத்தில் உதைபந்தாட்டம் விளையாடினர். காக்கி கட்டை காற்சட்டை, மஞ்சல் ரி சேட் அணிந்திருந்தனர்.
புனர்வாழ்வு நிலைய வாசலில் இருபுறமும் நன்கு வளர்ந்த அலரி மரங்கள். வெள்ளைப் பூக்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்கின. ஏராளம் நிலத்தில் விழுந்து கிடந்தன. எல்லை ஓரமாய்ப் பெரிய பெரிய காட்டு மரங்கள்.
நாய்கள் பத்து வரையில் நாக்கைத் தொங்கப் போட்டபடி அலைந்தன.ஒருபெட்டை நாயின் பின்னே குட்டிகள் ஓடின.

கேணல் செனிவரத்தின அலுவலகத்தினுள் சென்று பத்திரங்களைக் கொடுத்து என்னை ஒப்படைத்தார்.

புறப்படும் வேளை தனது ஜீப்புக்கு அருகில் என்னை அழைத்து பேசினார்,
மேஜர் சிவகாமி நோநா, உங்கள் குடும்பத்தை எரித்ததற்கு
நான் மன்னிப்பு கேட்கிறேன். கவனம். கொட்டியா பற்றி மூச்சுவிடாம வாழப்பழகுங்கள். உங்களுக்கு நல்லது. குட் லக் அன்ட் குட் பை."
தாங்யூ

அவருடைய ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதனைப் பார்த்தபடி சற்று நேரம் நின்றேன். கண்கள்கண்ணீர் சொட்டின.

'சிவகாமி, வா. ஹொஸ்டலுக்கு போகலாம்."

திரும்பிப் பார்த்தேன். லெப். ஐராங்கனி. பெண் பொறுப்பாளர். குளுகுளுவென்று விளைந்திருந்தார். பெரிய கொண்டை, ஆழ வெட்டிய சட்டையின் முன்பக்கம் வெள்ளை நிற பெரிய மார்பகத்தை விளம்பரம் செய்தது.

இன்னொருவர் ஐம்பது வயதிருக்கும் கேணல் தரத்தில் உள்ளவர் போலப்பட்டது. என்னை விழுங்கிவிடுவது போல பார்த்துக்கொண்டு நின்றார். நெஞ்சு படக்படக் என அடித்தது. தூரச் சென்று விட்டேன். கடைக் கண்ணால் பார்த்தேன். மனிதன் அப்போதும் என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். பார்வை மட்டுமல்ல முகம் முழுவதையும் மூக்கு ஆக்கிரமித்த மூஞ்சையும் அச்சுறுத்தியது. எனக்கு அவர்தான் புனர்வாழ்வு முகாம் அதிகாரி கேணல் ரணவீர என்பது அப்போது தெரியாது.

~~~~~~~~~~~~~~~~~~இன்னமும் வரும்...

No comments:

Post a Comment