Monday, 1 June 2015

"சுப்பர்...!" - குறும் கதை


 வான் மான் நூஜ்ஜின் என்னுடன் வேலை செய்பவன். வியட்நாமியன். ஐம்பத்தைந்து வயது நிரம்பிய அவன் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவன். வேடிக்கையானவன். அவனுக்கு ஆங்கிலம் எழுத வாசிக்க அவ்வளவாகத் தெரியாது. கொஞ்சம் கதைப்பான். ஒரு சில ஆங்கிலச்சொற்களை மாத்திரம் தெரிந்து வைத்துக் கொண்டு 'மாடாக' உழைத்துவிடுவான். காதலுக்கு எப்படி மொழி தேவையில்லையோ 'மாடாக' உழைப்பதற்கும் மொழி தேவையில்லை என்பான். சிலவேளைகளில் படிவங்களை நிரப்புவதற்காக என்னிடம் உதவி கேட்டு வருவான்.

 ஒருமுறை அவனது superannuation படிவத்தை நிரப்பவேண்டி வந்தது. மனைவிக்கும் மகனுக்கும் சரிபாதியாகப் போட்டிருந்ததை, மனைவிக்கே முழுவதையும் (100 வீதம்) போட்டுத்தரும்படி கேட்டான். நான் அவனை நிமிர்ந்து வியப்புடன் பார்த்தேன்.
"அவன் ஒரு தறுதலை. சொல்வழி கேட்கின்றான் இல்லை. தன்னைவிட ஆறு வயது கூடிய ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான்என்றான் நூஜ்ஜின்.
"அதனால் என்ன?" என்றேன் நான்.

"அவனுக்கு அந்தப்பெண்ணை செய்து குடுக்க எங்களுக்கு விரும்பம் இல்லை. எனக்கொண்டு நடந்தா என்ரை மனிசியைப் பார்ப்பான் என்று சொல்ல முடியாது" சொல்லிக் கொண்டே தனது போனைத் (I phone) திறந்தான். சுட்டுவிரலால் படங்களைத் தட்டினான். குறிப்பிட்ட போட்டோ வந்ததும் என்னிடம் நீட்டினான். அதில் அவனது மகனும் காதலியும் நெருக்கமாக நின்றார்கள். காதலி மிகவும் கொள்ளை கொள்பவளாக வசீகரத்துடன் நின்றாள். அவள் வயதை என்னால் நம்ப முடியவில்லை.

"வவ்... லைக்" என்றேன் நான்.
" லைக் ரூ" என்றான் நூஜ்ஜின். இரண்டு பேரும் சிரித்தோம்.

உணவருந்தும்போது எல்லாரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவோம். தராதரம் பார்ப்பதில்லை. நூஜ்ஜின் தூக்குச்சட்டியுடன் வருவான். அவனுடைய தூக்குச்சட்டி நான்கு அடுக்குகள் கொண்டது. தூக்குச்சட்டியை அவுஸ்திரேலியா வருவதற்கு முன்னர் சினிமாவில் பார்த்திருக்கின்றேன். நாகேஷ் சாப்பிடுவதற்காக தூக்குச்சட்டியைத் திறக்க உயிர் நண்டுகள் எழுந்தோடும் காட்சி. நிஜத்தில் இப்பொழுதுதான் பார்க்கின்றேன். மான் வத்தல், பண்றி இறைச்சி, சலாட் என்று நூஜ்ஜினின் சாப்பாடு தினமும் தடப்புடலாக இருந்தது.. மனைவிக்கு சுப்பரை (superannuation) நூறுசதவிகிதம் மாற்றியதால்தான் இந்தச் சாப்பாடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

சில தினங்களாக இந்த வாசனையை நுகர்ந்தபடியே எனது சாப்பாட்டை உண்டு (ளி)ழித்திருக்கின்றேன். அன்று இராசவள்ளிக்கிழங்கு நல்லாச் சீனி போட்டு டிசேற் ஆகக் கொண்டு வந்திருந்தான்.
"என்ன சாப்பாடு ரொம்ப பிரமாதமாக இருக்கு?"

நூஜ்ஜின் முகத்தை உம்மென்று வைத்திருந்தான். அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டுபோய் வேஸ்ற் பின்னுக்குள் போட்டுவிட்டு வந்தான். அவனின் மூச்சுப் பலமாக இரைந்தது.
"உமக்குத் தெரியுந்தானே! எனக்கு கொலஸ்ரோல், சுகர் எல்லாம் இருக்குதெண்டு. நல்லாச் சாப்பிட்டு சீக்கிரமாச் செத்துப் போ எண்டு இவ்வளவத்தையும் கட்டித் தந்திருக்கின்றாள் என் மனைவி.

நான் மாஞ்சு மாஞ்சு இஞ்சை வேலை செய்யிறன். அவள் தன்ரை போய் ·பிறண்டோடை சினிமாத்தியேட்டரிலை இருந்து கோல்ட்கிளாசிலை படம் பாக்கிறாள்!" தன்பாட்டில் புறுபுறுத்தான். எனக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு அவனைத் தேற்றினேன்.

அடுத்தநாள் வரும்போது புதியதொரு superannuation படிவத்துடன் வந்தான் நூஜ்ஜின். தனக்கே முழுவதையும் (நூறு வீதம்) வரச்செய்யுமாறு படிவத்தை திரும்ப நிரப்பித் தரும்படி கேட்டான். மண்டை கழன்றுவிட்டது என்பது உறுதியாயிற்று.


No comments:

Post a comment